Sunday, June 6, 2010

தென்னையும் தென்னவனும்!!!




இயம்புகிறேன் சிவமே
ஓங்கி வளர்வதுண்டு
உச்சியிலே சலசலக்கும் மடலுமுண்டு
தாங்கிய நீருமுண்டு
கட்டி வைத்த விடமும் கண்டத்திலுண்டு
உடலெல்லாம் வரிகளுண்டு
இருக்குமிடம் குளிர்வதுண்டு
விரிசடையுண்டு முக்கண்ணுண்டு
ஓடுமுண்டு உள்ளே வெண்மையுண்டு
காயுலர்த்தாட்டியெடுத்து ஜோதியெரிதலுண்டு
நாரியொருபாதி ஆதலுமுண்டு
நல்குருத்து கண்வழியே பிறத்தலுமுண்டு
நீறுபூசி தொல்லை நீங்குதல் உண்டு
தாள் பணிந்து நீர் வார்த்தார்
பொறுத்திருந்தால் பலனுமுண்டு
தென்னாட்டில் சீருடனே
தென்னையும் தென்னவனும்
ஒன்றெனவே ஒப்பாரே இப்பாரில்.






விளக்கம்


சிவனுக்கும் தென்னைக்கும் என்ன ஒற்றுமைகள் காண்கிறேன்.. சொல்கிறேன் சிவனே

அவனும் ஓங்கி வளர்ந்தவன் அடி முடி காணைவியலாமல்.. தென்னையும்தான்

அவன் தலையில் இருந்தது தாழை மடல்.. அது பிரம்மன் தூண்டலில் சிவனிடமே சலசலத்தது.. தென்னையில் தலையிலும் மடல்.. இது தென்றல் தூண்டலில் சலசலக்கிறது,..

தென்னையின் தலையின் தேன்+காயின் உள்ளே நீருண்டு. தென்னவனின் தலையிலும் கங்கை நீருண்டு

அவன் கழுத்தில் அம்மை கட்டியது விடம்.. தென்னையின் கழுத்தில் நாம் கலயம் கட்டி பெறும் விடம் கள்..

அவன் உடலெங்கும் எத்தனை வரிகள்.. பிரம்படி பட்ட வரி, காலனின் கயிறிறுக்கிய வரி, அரவங்கள் நெளிந்தாட அதனாலும் வரி, அம்மை கழுத்தை நெருக்கிய வரி.. தென்னையின் உடலெங்கும் வரிகள் தான்..

அவனிருக்குமிடம் கைலாயம்,, பனி சூழ்ந்து குளிர்ந்த இடம்.. தென்னையிருக்குமிடமும் குளிர்ச்சியாக தனிருக்கும்.. சில்லென்ற தென்றலுடன்..


அவனுக்கும் சடைகளுண்டு.. தென்னையிலும் சடைகளுண்டு,, தென்னம்பூக்களாய்..

அவனுக்கும் முக்கண்.. தேங்காய் (தேன்+காய்) முக்கண்ணனே

அவன் கையில் கபால ஓடு.. தென்னையிலோ தேங்காய் ஓடு


சிவனை போலேநாத், குழந்தை உள்ளம் படைத்தவன் வெகுளி என்பார்கள்.. தேங்காய் அவன் போல் வெள்ளை உள்ளம் கொண்டது.. உள்ளுக்குள் இனிய கருணையாய் இளநீர்..

தேங்காயை உலர வைத்து எண்ணெயெடுத்து தீபமேற்றி ஒளிபெறலாம்.. 
அவன் திருநீறு பூசி வெண்மையாகிய உடலையும் அவன் பெயர் சொல்லி தூய்மையாகிய மனதையும் தவம் என்னும் வெய்யிலில் உலரவைத்து சிவ சிந்தனைச் செக்காட்டி அதில் பெரும் ரசத்தில் ஞான ஒளிபெறலாம்.

அவனும் நாரிக்கு பாகம் கொடுத்தான்.. தேங்காயில் பாதி நார்தானே

அவன் கண்ணில் குமரன் அவனம்சம் தாங்கிப் பிறந்தான்.. தேங்காயின் கண்ணின் வழியே புது தென்னங்கன்று பிறக்கிறது..

அவனின் திருநீறு பூசி பலநோய்கள் தீர்ந்ததுண்டு.. தென்னைக்கு சாம்பல் பூசி பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறோம்.

தென்னையின் வேரில் நீர் வார்த்தால் அந்நீர் தென்னையின் பண்பு சுமந்து இனிய இளநீராய் நமக்குத் திரும்பக் கிடைக்கிறது.. நாம் சுகமடைகிறோம்..
இறைவனின் காலில் கண்ணீர் வார்த்தால் அக்கண்ணீரே அவுனுள் விரவி, கங்கையாய் அவன் பண்பு ஏற்று வந்து நம் பாவம் கரைத்து சுகமளிக்கிறது..

தென்னை மரங்கள் தென்னிந்தியாவில் அதிகம். அதனாலேயே தென் + நெய் மரங்கள்.. கடலோரப்பகுதியில் பெருமளவு பயிராகின்றன. 

சிவனும் தென்னாடுடையவன் தானே

எனவே தென்னையும் சிவனும் ஒன்று போலத்தான் என ஒப்புக்கொள்வர் இப்புவி மக்கள்.

சிவனே உன் பண்புகளை எங்கெங்கெல்லாம் பதித்து வைத்திருக்கிறாய்.. 

உனை மறக்கும் பாவத்தில் இருந்து எனைத் தடுத்தாட்கொள்ள...!!!

No comments:

Post a Comment