Friday, June 4, 2010

தாமரை பதில்கள் : 111

கேள்வி எண் 111:



கேட்டவர் : அமரன்


அகிம்சைப் போராட்டம் என்றால்....?????



நல்ல கேள்வி. அஹிம்சை என்றால் யாரையும் துன்புறுத்தக் கூடாது. அப்படியானால் தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளுதலும் ஹிம்சைதானே. அப்படியானால் உண்ணாவிரதம், மறியல், கடையடைப்பு, தீக்குளிப்பு, இத்யாதி இத்யாதி என கூறப்படுவது எல்லாம் ஹிமசைப் போராட்டங்கள் தானே.

அஹிம்சைப் போராட்டம் என்பதை வெகுத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் எந்த மனிதரையும் எதிர்ப்பதல்ல. அது வெறும் கொள்கைப் போராட்டம் ஆகும்.

இதன் அடிப்படை எந்த மனிதரும் ஒரு காரணமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்வதில்லை. அந்தக் காரணத்தை சரியில்லை என நிரூபித்து அம்மனிதரின் மனதை மாற்றுதல் ஆகும். இதனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது,

உதாரணமாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் எக்கச்சக்கமான லஞ்சம் தலை விரித்தாடுகிறது. அதை எதிர்க்க ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கடையடைப்பு இப்படி அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தும்.

ஆனால் இந்த குறிப்பிட்ட அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யமாட்டோம் என மக்கள் புறக்கணித்தால்???

அங்கு தேவைப்படுவது சத்தியம், உள்ளஉறுதி மற்றும் நேர்மை போன்றவை. இவை வெளிப்படும் போது அஹிம்சை போராட்டம் செய்பவரின் வலிமை மகத்தானதாகி விடுகிறது. நம்மை நோக்கித் தூற்றல்களையும் குற்றங்களையும் சுமத்துவதைக் கண்டு துவண்டு பாதை மாறாத உறுதி தரும் பலத்தை எதிர்க்க உலகில் ஆயுதம் கிடையாது. அதனால்தான் ஹிம்சாவாதிகள் இப்படிப் பட்டோரை அடையாளம் தெரியாதபடிக்கு முளையிலேயே அழிக்க முற்படுகின்றனர்.

ஆகவே திடீரென ஒருவர் அஹிம்சை போராட்டத்தை துவக்க முடியாது. அதற்கு முன் தன்பலத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்.

அதனால் எப்பொழுதுமே சத்தியம் உள்ள உறுதி நேர்மை போன்ற அடிப்படைக் குணங்களைக் கடைபிடித்து வந்தால் மட்டுமே அஹிம்சைப் போராட்டம் சாத்தியம்.

நாம் நேர்மையைக் கடைபிடிக்காமல் அடுத்தவரைக் கடைபிடிக்க வற்புறுத்த முடியாது, இதனாலேயே அஹிம்சை போராட்டங்கள் நடைபெறுவதே இல்லை.

No comments:

Post a Comment