Friday, June 4, 2010

தாமரை பதில்கள் : 107


கேள்வி எண் 107: 


கேட்டவர் : mathu



இன்றய நிலையில் விடுதலை புலிகள் அவர்களை நம்பி இருக்கும் மக்களை காக்க என்ன என்ன செய்ய வேண்டும், எவை எவை செய்ய கூடாது?

(ஈழத் தமிழர்களின் பூர்விகம் ஈழம் தான் அல்லது குமரிக்கண்டம், தேயிலை தோட்டத் தொழிலுக்கு 1815 இல் வந்த ஆங்கிலேயர் கூட்டிவந்தவர்கள் அல்ல)




இன்றைய நிலையில் புலிகளின் முன்னே சில வழிகள் உண்டு.

1. புத்திசாலித்தனமான போராட்டம். அதாவது ஒருமுனையில் இன்று நடத்திக் கொண்டிருக்கும் போர். இரண்டாவது முனையில் இலங்கைத் தமிழர் நிலை பற்றி உலகின் கண்களை திறக்கும் வகையில் பிரச்சார உத்தி

2. சமாதான அழைப்புக்கு இணங்குதல். அதற்கான முனைப்புகளில் சிலரை மட்டும் ஈடுபட வைத்தல்.

3. தனிநாடு கோரிக்கையை கைவிடுதல். 

இப்படி சில வழிகள் இருந்தாலும் எது நன்மை பயக்கக் கூடும் என்று சொல்வது மிகக் கடினமான ஒன்று. ஏனெனில் எதிர்பக்கமாய் நின்று போராடுபவரை நம்ப முடிவதில்லை. 

போர் என்று வந்துவிட்டால், என்னத்தான் தர்மத்தின் தலைவனாக இருந்தாலும் சரி, என்னதான் கடவுளே உன் பக்கம் இருந்தாலும் சரி...

இழப்புகளை தவிர்க்க இயலாது, நல்லவனாக வாழவும் முடியாது.. மஹாபாரதம் மிகப்பெரிய பாடம். புலிகள் இதை உள்வாங்கிக் கவனமாகக் கையாள வேண்டும். உறவினர்களுடன், உடன்பிறந்தோருடன் போராடும் போர் மிகக் கொடுமையான ஒன்று. 

இதையெல்லாம் செய்யுங்கள் என்று வெற்றியின் வழி தெரிந்திருந்தால் அதை முதலில் எழுதுபவனாக நான் இருந்திருப்பேன். ஆனால் இது மிக முக்கியமாக இன உணர்வு, கௌரவம், போன்ற பல உணர்வுகள் கூடிய பிரச்சனை என்பதால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு என்னவென்ற அடையாளம் புரியாததால் வழி சொல்ல மிகவும் கடினமாக இருக்கிறது. இருவரும் விட்டுக் கொடுப்பதால் மட்டுமே ஒரு பிரச்சனை தீருமே அன்றி ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்து பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.

இதுதான் பிரச்சனை என்பதை இருதரப்பினரும் ஒப்புக் கொண்ட ஒரு வரையறை இல்லை, சொல்லப் போனால் பிரச்சனை இருப்பதையே ஒப்புக் கொள்ள அரசு தயங்குகிறது. இந்த வரையறையை அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் அளவிற்கு தயாரிக்க ஒரு மதியூக இராஜதந்திர மூளை தேவை,

முதலில் பிரச்சனை இதுதான் என அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் தீர்வு எளிது. பிரச்சனைகளை விட்டு விட்டு நிகழ்ச்சிகளை மட்டுமே ஊடகங்களில் காண்கிறோம். 

பிரச்சனை அடையாளப்படுத்தப் பட்டதில் இருந்து தீர்வு ஆரம்பமாகிறது. எதை மாற்றினால் என்ன மாறும் என அடையாளப்படுத்தி மாற்றங்களை ஆரம்பிக்கலாம். இருபக்கமும் எந்த விஷயங்களில் உறுதிப்பாடுகளை மேற்கொண்டு எந்த விஷயங்களில் ஒத்துப் போகவேண்டும் என்பதை ஆராய இது மிக முக்கியம். தீர்வுகள் பிரச்சனைகளுக்கே அன்றி மனிதர்களுக்கு அல்ல,

சின்னச் சின்ன விஷயங்களை மறப்போம் மன்னிப்போம் என விட்டு விட்டு எதை முக்கியக் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்களோ அதை நோக்கி எதிர்காலத் திட்டமிட்டு அனைவரையும் ஒரு தீர்வு நோக்கி அழைத்துச் செல்லும் காரியதிடம் தேவை, இதற்கான இராஜதந்திரி யார்?



எவை எவை செய்யக்கூடாது?

தெளிவாய் சொல்வதானால், முன்காலத்தில் நடந்த மாதிரி நடப்பதைத் தவிர்த்து தங்களை விடுதலைப் போராட்ட வீரர்களாய் மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள தவறக் கூடாது.

மக்களின் நிம்மதியான வாழ்க்கைதான் குறிக்கோள் என்பதை மறக்கக் கூடாது.

தங்களுக்குள் உள்ள சில வேற்றுமைகளுக்காக ஒற்றுமையைத் தொலைத்துவிடக் கூடாது.

முக்கியமான ஒன்று

எதிர்காலச் சந்ததியினர்.. இவர்களுக்கான தெளிவான ஒரு பாதை.. இதை காட்ட மட்டும் மறக்கக் கூடாது.

ஏனென்றால் இன்று போராடிக்கொண்டிருப்பதே இவர்களுக்காகத்தானே.

1 comment:

  1. respected madam

    your advice really appreciable and practical one.india should paly a key role as mediator.
    genocide cannot be forgiven and forgotten.rehabilitation is the birth right and they are not with begging bowls.ceylaon govt cannot escape or elude from this humanitarian responsibility.i give below my poem.

    மனித நேயத்துடன்
    மீள்குடியேற்றம் செய்யுங்கள்
    =====================================================
    ஈழத் தமிழரைப் பாருங்கள்!
    இன்னல் வேதனை பாருங்கள்!
    உண்ணச் சரியாய் உணவில்லை!
    உடுக்க போதிய உடையில்லை!

    சொந்த நாட்டில் அகதிகளாய்
    சோகச் சித்திர மாகத்தான்
    நொந்து நைந்த விரக்தியுடன்
    நொறுங்கிப் போனார் நடைப்பிணமாய்!

    உறவைப் பிரிந்தே தவிக்கின்றார்!
    உறவைத் தேடி அலைகின்றார்!
    உறவைக் காண வில்லையடா!
    உலகம் இருளாய்த் தோன்றுதடா!

    தமிழின மக்களைக் கடத்துகின்றார்!
    தமிழ்க்குலக் கற்பை அழிக்கின்றார்!
    அமைதி, நிம்மதி கானலடா!
    அனுதினம் வாழ்க்கை அவலமடா!

    செய்தித் தாளைப் படித்தாலே
    திகைப்பும் கவலையும் பெருகுதடா!
    கைகள் எட்டும் தூரந்தான்!
    கண்ணீர் விழிகளின் ஓரந்தான்!

    குருவிகள் கூட மரங்களிலே
    கூடுகள் கட்ட உரிமையுண்டு!
    அருமைத் தமிழர் வாழ்வதற்கு
    அவர்தம் நாட்டில் உரிமையில்லை!


    மிச்சம் சொச்சம் இருப்போரை
    மீள்குடி யேற்றம் செய்யுங்கள்!
    அக்கறை யோடு செயல்பட்டு
    அவர்களை வாழ வைத்திடுங்கள்!

    --- மதுரை பாபாராஜ்

    ReplyDelete