Saturday, June 5, 2010

தாமரை பதில்கள் : 114

கேள்வி எண் 114:


கேட்டவர் : daks


மனித வாழ்க்கையை மாற்றும் சக்தி நிறத்திற்கு இருக்கிறது என்கிறார்களே, அதாவது ராசி கல் மோதிரம் பல வகையில், பல நிறத்தில், பல ராசிக்கு ஏற்றார் போல விற்கிறார்களே, நல்ல வியாபாரமும் ஆகிறதே. கற்களின் நிறத்தில் வெளிச்சம் பட்டு, அந்த கதிர்கள் நம் உடம்பில் பட்டால் நல்லது நடக்குமாமே உண்மையா?, பலர் அப்படி அணிந்ததினால் நல்லது நடக்கிறது என்கிறார்கள், சிலர் விற்றவனுக்கு தான் நல்லது நடக்கிறது என்று சொல்கிறார்கள்?. எது உண்மை? தெளிவான, உரிய பதிலை எதிர்பார்த்து..........?




மனித வாழ்க்கையை மாற்றும் சக்தி நிறத்திற்கு கண்டிப்பாக உண்டு. அதை கடைசியாக விளக்குகிறேன். 

ராசிக்கல் மோதிரம் என்பது மனோரீதியான பலன்களை ஏற்படுத்துகிறது. மனம் நம்பிக்கையுடன் இருக்கும்பொழுது தெளிவும் தைரியமும் இருக்கிறது. இதனால் தெளிவாகச் சிந்திக்க முடிகிறது, தெளிவான சிந்தனை பல அனாவசியக் குழப்பங்களை அண்டவிடாமல் தடுப்பதால் இந்திய அணி போல் வெற்றி சாத்தியமாகிறது. .

முழுமையாக நம்புவதானால் மூட நம்பிக்கையும் நல்லதுதான். சந்தேகத்துடன் பார்ப்பதானால் அறிவியலும் பொய்கள்தான்.

மனம் தெளிவாய் இருக்கிறதா என்பதே முக்கியம்.

நிறம் என்பது என்ன? அது ஒளி. ஒளியின் பிரதிபலிப்பு.. அவ்வளவுதான். ஆக நிறம் இல்லாவிட்டால் ஒளி இல்லை என அர்த்தம். ஒளி இல்லாமல் நாம் வாழ முடியுமா? அதனால் நிறம் என்பது வாழ்க்கைக்கு மிக மிக அவசியம்.

நிறங்கள் நம் மனதை கவருவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் மாற்றவும் செய்கின்றன. பச்சை, நீலம் போன்ற நிறங்கள் மனதில அமைதியையும், சிவப்பு, கருப்பு போன்ற நிறங்கள் வேகத்தையும் வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் மகிழ்ச்சியையும் பலரிடம் உண்டாக்குகின்றன. 

இப்படிப்பட்ட மனநிலைகளில் எதாவது ஒரு மனநிலையில் நாம் வெகு வசதியாக உணர்கிறோம். அந்த வண்ணம் நமக்கு பிடிக்கவும் செய்கிறது. விரும்பும் வண்ணங்fகளில் உடை உடுத்தினால் மனம் உற்சாகமாக இருக்கிறது. இது உளவியல் ரீதியானது. 

இதே நுட்பம்தான் ராசிக்கல் விஷயத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் மனிதனை ஆராயமல் வானத்தைப் பார்ப்பதனால் இதில் பலவிதமான முரண்கள் வந்து விடுகின்றன,

மற்றபடி ஒளி ராசிக்கல் வழியாக உடம்பில் பாய்கிறது என்பது நமது தியானத்திற்கு உரிய செய்தி.. அதாவது அப்படிக் கற்பனை செய்துகொண்டு தியானம் செய்தல் வேண்டும். அதனால் மனத்தளர்ச்சி நீங்கி உற்சாகம் வரும்.

உங்களுக்கு பிடித்த வண்ணத்தில் ஒரு கல்மோதிரம் வாங்கி, இவ்வொளி என்னுள் பரவுகிறது என தினம் பத்து நிமிடம் தியானம் செய்து பாருங்கள். வித்தியாசம் புரியும். இது மனபயிற்சி மட்டுமே. உடற்பயிற்சி மாதிரி.

சும்மா சும்மா யாரோ சொல்வதைக் கேட்டு ஏதோ ஒரு கல்மோதிரம் போட்டு கூரையைப் பிச்சுகிட்டு கொட்டும் என எண்ணினால் தலையில் உள்ளது மட்டுமே கொட்டும்.

வியாபாரிகள் நமக்குத் தேவையானதை நமக்குக் கிடைக்காமல் செய்து விலை ஏற்றுவார்கள். நமக்குத் தேவையில்லாததை மலிவு விலைக்கு கொடுத்து தலையில் கட்டுவார்கள்.. இது எல்லாவிஷயத்திலும் நடப்பது.

கண்டுக்காதீங்க.
 

No comments:

Post a Comment