எரிகின்ற உச்சி வெயில்
கறுத்திளகிய தார்ச்சாலை
இலையுதிர்த்த புளிய மரம்
அசைந்தாடும் கானல் நீர்
அசையாத வெக்கைக் காற்று
சற்றுமுன் சென்ற லாரி விட்டுச் சென்ற
தூசியும் கரும்புகையும்
வடியத் துடிக்கும்
ஒரு துளிக் கண்ணீர்
அனைத்தும்
என்னிலும்
என்னைச் சுற்றிலும்
உனக்காக காத்திருக்கையில்!!!
--------------------------------------------------------------------------------------------------
சிச்சுவேஷன் இப்படி!
கணவன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருக்கிறான். பலப்பலக் கடமைச் சுமைகளை கடன் சுமைகளை இலேசாக்கி இல்லாமல் செய்ய.
அனுப்பிய பணமெல்லாம் ஆடம்பரமாய் செலவழிக்கப் பட்டுவிட்டது உறவினர்களால். வறுமை ஒழியவில்லை, வாழ்க்கையும் செழிக்கவில்லை.
உழைத்த உடல் உருகிப் போக, வெறும் சக்கையாய் நாடு திரும்பிக் கொண்டிருக்கும் கணவன். அவனுக்காய் காத்திருக்கும் மனைவி.
வெறுங்கையுடன் வருபவனை வரவேற்க உறவினர் கூட்டமா திரண்டு நிற்கும்?
வாழ்க்கைத் துணையானவள் வசந்தம் இழந்து வேனிற்காலத்தில் வெம்மையில் காத்திருக்கிறாள்..
அன்பு மழைக்காக. !!!
அந்த வருகைக்குப் பிறகு, புளிய மரம் தழைத்து நிழல் கொடுக்கலாம்?
தெரிந்த பாதையில் பயணம் தொடரலாம்.. புதுவாழ்க்கை அவளுக்கும் அவனுக்குமாய்!
வெளியே இருப்பவை எளிதில் தெரியும். உள்ளே உள்ளத்தில் உள்ளவைகள்?
எரிகின்ற உச்சி வெயில் - வறுமை
கறுத்திளகிய தார்ச்சாலை - எதிர்கால இலட்சியங்கள்
இலையுதிர்த்த புளிய மரம் - அன்பு நீரின்றி பசுமை தொலைத்தமனம்
அசைந்தாடும் கானல் நீர் - ஆசைகள் கனவுகள்
அசையாத வெக்கைக் காற்று - பொறாமைகள்
சற்றுமுன் சென்ற லாரி விட்டுச் சென்ற தூசியும் கரும்புகையும் - உறவினரின் கிண்டல்கள், கேலிகள், குத்திக்காட்டல்கள், தூற்றுதல்கள்
வடியத் துடிக்கும் ஒரு துளிக் கண்ணீர் - விரல் பட்டுத் துடைக்க ஆறுதல் தேடித் தவிக்கும் இதய மூலையில் தவித்துக் கிடக்கும் ஒரு சின்ன விசும்பல்
No comments:
Post a Comment