Friday, June 4, 2010

தாமரை பதில்கள் : 109

கேள்வி எண் 109:


கேட்டவர் : செழியன்



புலம் பெயர் நாடுகளில் வாழும் ஒரு காதலி காதலனின் உறவுகலோடு(இரு வீட்டிலும் தெரியும் போது) எப்படி இருக்க வேண்டும்?காதலன் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு மனைவி கணவனின் உறவுகலோடு எப்படி இருக்க வேண்டும்? கணவன் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு இணையில் ஆண் பெண் உரிமைகளின் அளவு(இருப்பின்) என்ன(பெண்ணாதிக்கம், ஆணாதிக்கம்)? ஏன் எனில் நம்முடைய சமூகத்தில் பெண் ஆணுக்கு சில விடயங்களில் கீழே என்பது போல்தான் உள்ளதே?

ஒரு சம்பவம்.ஒரு ஜோடி. அதில் ஆண் ஏதாவது கடுமையாக பெண்ணிடம் சொன்னால், அதை ஆணாதிக்கமாக பார்க்கும் பெண். இவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன? சில விடயங்கள் நடைமுறையில் பொருந்தவில்லையே?(நவீன நாரதர் படித்த பின்புதான் இந்த கேள்வி)



1. உலகில் பிறந்த ஒரு ஆண்மகனின் கடமைகள் யாவை? அவ்வாறே ஒரு பெண்மகளின் கடமைகள் யாவை?

- ஆண் என்றால் தன் குடும்பதிற்காக (மகனாக, கனவனான, அப்பாவாக, மாமனாராக)என்னென்ன விசயங்களை அவசியம் செய்தல் வேண்டும்.

- அதுபோல் ஒரு பெண் என்றால் ஒரு மகளாக, மனைவியாக, அம்மாவாக, மாமியாராக. என்னென்ன விசயங்களை அவசியம் செய்தல் வேண்டும்

பிறந்த குழந்தைகளை இனம் பிரிச்சு பாக்குறது நீங்கதான். பொக்கைவாய்ச் சிரிப்பும் ங்கா ன்னு கத்தி பால்குடித்து விட்டு கண்மூடி உறங்கதலும் புத்தாடை அணிந்தவர் மேல் மூச்சா போதலும் இரவில் தாய் தந்தையரை தூங்காமல் பார்த்துக் கொள்ளுதலும் அவர்களின் கடன்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

மகனாக : அன்னை தந்தையரை ஆராதிக்கிறேன் என்ற பெயரில் அவர்களை துதித்துக் கொண்டே இருக்காமல், அதே சமயம் துரத்தியும் அடிக்காமலும் அவர்களுக்குரிய இடத்தை தருதல் நலம். அன்னை தந்தையருடன் பேசுதல் என்பது மிக அவசியமானது. மகனாக இருப்பவன் தாய் தந்தையரை மேற்கண்ட இரு விதத்திலும் முடக்கலாம். அவர்களுக்குத் தேவை தங்களுடைய அடையாளங்களை காட்டிக் கொள்ளுகின்ற வாய்ப்பு. அன்புள்ளவராய் இருங்கள். அவர்கள் செய்ய இஷ்டப் படுவதை செய்ய விடுங்கள். உங்கள் உலகத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கவிச்சமரில் இதைப் பற்றி எழுதிய கவிதை


மகனே விளையாடு
உடலை உறுதியாக்கு
கலைகள் பயில்
மனதை நேராக்கு
புத்தியை கூராக்கு
நிமிர்ந்து நில்
உன் நிழல்போதும் எனக்கு.


கணவனாக : கணவன் என்பவன் மனைவிக்கு தோழனாய் இருப்பவன். இதைப் பற்றி நவீன நாரதர் தொடரில் நிறையவே எழுதி இருக்கிறேன். கணவன் மனைவி தனி உலகம். அவர்களுக்கு வெளியே இன்னொரு உலகம். மனைவியை விட்டுத்தராத பாங்கும், எந்த நிலையிலும் மாறாத அன்பும், பொறுமையும் மிக முக்கியமானத் தேவைகள்,

கணவன் மனைவியற்கிடையில் மற்றவரை நுழைப்பது கூடவே கூடாது.

உன் உலகத்தில் உள்ள இன்பங்களை நண்பர்களுடனேயே அனுபவித்திருக்கிறாய்.

24 மணி நேரமும் உடனிருக்கும் மனைவி சிறந்த தோழியெனில் இன்பத்திற்கு அளவேது. எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்.

அப்பாவாக :

இதற்கு கவிச் சமரல் நான் எழுதிய நான் எழுதிய பதில்


மகனையும் மகளையும்
பொத்தி வளர்க்காதே
போற்றி வளர்
உனக்குத் தெரியாதது
அவர்களுக்குத் தெரிந்தால்
கேட்டு தெரிந்து கொள்
அவர்களின் தோழனாயிரு
அவர்களிடம் பேசு.
கதைகள் சொல்
கதைகள் கேள்


மாமனாராக : மருமகளுக்கு / மகனுக்கு மரியாதை, அன்பு பாசம் எல்லாம் சேர்த்துக் கொடு. அவர்களைப் புரிந்துகொள். உதவியாய் இரு. நடப்பது ஆட்சியல்ல குடும்பம். அதனால் குடு - இன்பம். மாமனாரக இருந்து பிரயோசனம் இல்லை. தந்தை பொஸ்டிற்கு தகுதியானவனாய் ஆக்கிக் கொள்.

மகளாக : மகனுக்கும் மகளுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை மகளே. அவனுக்கிருக்கும் அத்தனைக் கடமைகளும் உனக்கும் உண்டு. குடும்ப மானம் காக்கும் கடமை அவனுக்கும் உண்டு.

அன்னையாக / மனைவியாக

அதிகம் வித்தியாசம் இல்லை.
இதற்கெனக் கவிதை கவிச்சமரில்:


இல்லை
தாய் சேய் பாசம்
அன்பு காதல் நட்பு
இவைகளுக்கு மத்தியில்
இன்னொன்று


மனைவி கணவனுக்கென செய்யும் சில கடமைகளைத் தவிர அத்தனை கடமைகளும் பொதுவானவை.

மாமியாரும் ஒரு அன்னையே! இவர்களுக்குள் அதிக வித்தியாசமே இல்லை. ஒவ்வொரு பெண்ணுமே அன்னைதான்.. உன்னைப் பெற்றாலும் உன் மகவைப் பெற்றாலும் உன் கணவனைப் பெற்றாலும் அதே வலிதான் அதே உணர்வுதான். சுயநலம் ஒழித்தால் அனைவரும் அன்னையே.

மொத்தமாய் மனிதர்களாய் இருங்கள். மனிதம் கடைபிடியுங்கள்.



ஏற்கனவே நாசூக்காக இதன் பதிலை சொல்லி இருக்கிறேன். கொஞ்சம் விவரமா சொல்றேன். இருவரும் மற்ற தாய்தந்தையரின் அன்பைப் பெறும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தங்கள் தாய் தந்தையரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் தேவையில்லை. தாய் தந்தையரிடம் எதிர்கால துணைக்காக வக்காலத்து வாங்குவதை விட தன்னைப் பற்றிய நம்பிக்கையை துணையின் பெற்றோர்களுக்கு அவர்களாக ஏற்படுத்துவது நல்லது.


நீங்க நவீன நாரதர் படிச்சீங்க ஒத்துக்கறேன். புரிஞ்சுகிட்டீங்க என்பதை ஒத்துக்க மாட்டேன். ஆதிக்கம் இருக்கு என்பதற்கு ஆதாரம் சொல்றேன்.

என்னுடைய கடமை என்ன? அதை நான் சரியாச் செய்யறனா? இது உண்மையான அக்கறை,

அவளோட கடமை என்ன? என்ற கேள்வி எதற்கு? அதை மதிப்பிட்டு பின்னூட்டம் கொடுக்கவா? ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமைகளில் வேறுபாடு கிடையாது. ஒரே கடமையை இருவரும் பங்கிட்டுக் கொள்கின்றனர். அவ்வளவுதான். நம்ம கடமையை நாம செய்யறதை விட அடுத்தவங்க அவங்களோட கடமையைச் செய்யறாங்களா அப்படின்னு ஏன் பார்க்கணும்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு கடமைகள் என நம்புவதற்கு பேருதான் ஆதிக்க உணர்வு.

அப்போ தமிழ் பண்பாடு? அப்படின்னு சத்தமா கேட்கணும் போல தோணுதா? கணவனுக்காக பெற்றதாயை மறந்துவிடு என்று சொல்லும் சமுதாயம் மனைவிக்காக பெற்ற தாயை மறந்திடு என்று சொல்லாதது பற்றி யோசிக்காமல் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் பண்பாடு அதைக் கேள்வி கேட்கக் கூடாது என்பது தவறு.

இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இன்றித் தானே கெடும் அப்படின்னார் வள்ளுவர். அதே மாதிரிதான். பண்பாடு என்பது நமது அறிவிற்கேற்ப வளரணும். மாறணும். வளராததும், மாறாததும் செத்துப் போச்சுன்னு அர்த்தம்.

அந்தந்த காலத்திற்கேற்ப பண்பாடு மாறித்தான் வந்திருக்கிறது. ஒருவன் எத்தனை திருமணம் செய்யலாம் என்ற பண்பாடு மாறி நூற்றாண்டுகள் ஓடிவிட்டன,

அதனால பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனிக் கடமை என்ற கொள்கையை தயவு செய்து குப்பையில் போட முயற்சிக்கவும்.

உறவோடு கூடி வாழ ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வது நலம். இரு வகை உறவுகளையும் ஒன்றாக்க வேண்டும். வித்தியாசம் காட்டாமல் பழகுது ஆரம்பத்தில் சற்று மனக்கசப்புகளை உறவினர் வகையில் தரும்தான், ஆனால் அதுதான் சரி. 

சம்மந்திகள் முதியோர் இல்லங்களில் தனித்தனியாக இருக்க வேண்டுமா இல்லை ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் எதிர்காலத்தில் இருக்க வேண்டுமா? எது சரியான பண்பாடு? இதை இப்போதே யோசிக்க ஆரம்பித்து விடுங்கள். ஏனென்றால் இன்றைய மக்கட்பெருக்கக் கட்டுப்பாடு, மற்றும் சமுதாய அழுத்தம் காரணமாக இந்த முடிவினை எடுக்கக் கூடிய கட்டாயம் வந்து கொண்டே இருக்கிறது.

பண்படு - என்பதுதான் பண்பாட்டின் ஆரம்பம். யாரோ சொன்னதாகச் சொல்லப்படுவதை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவது - மூடநம்பிக்கை.

No comments:

Post a Comment