Wednesday, June 23, 2010

கசாபுக்கு எதிராக சாட்சி சொன்ன சிறுமிக்கு பள்ளியில் அட்மிஷன் மறுப்பு !!!

செய்தி பிரசுரம் ஆன நாளிதழ், நன்றி - தினகரன்


பாந்த்ரா: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு எதிராக சாட்சி சொன்ன தேவிகா ரோத்வன் என்ற 11 வயது சிறுமியை பள்ளியில் சேர்த்துக்கொள்ள பாந்த்ரா கிழக்கில் உள்ள நியூ இங்லீஷ் ஸ்கூல் மறுத்து விட்டது. 


கசாபுக்கு எதிராக சாட்சி சொன்னதற்காகவே தன் குழந்தைக்கு அட்மிஷன் கொடுக்க அந்த பள்ளி மறுத்து விட்டதாக தேவிகா வின் தந்தை நட்வர்லால் ரோத்வன் கூறினார்.

“என் குழந்தைக்கு அட்மிஷன் கேட்டு இரண்டு மூன்று தடவை அந்த பள்ளிக்கு சென்றேன். ஆனால் இறுதியாக அவர்கள் என் குழந்தையை சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டனர்" என்று நட்வர்லால் கூறினார். 

ஆனால் இந்த பள்ளியை நடத்தி வரும் இந்தியன் எஜுகேஷன் சொசைட்டியின் கவுரவ செயலாளர் அமோல் தம்தாரே இந்த குற்றச்சாட்டை மறுத்து இருக்கிறார். 

“அந்த சிறுமி குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால் 1 ஆம் வகுப்பு வரை மட்டுமே அவள் படித்து இருக்கிறாள். இப்போது 5 ஆம் வகுப்பில் சேர விரும்புகிறாள். மேலும் அவளுக்கு ஆங்கிலம் சிறிது கூட தெரியாது" என்று அவர் கூறினார்.


இருந்தாலும் கூட மாநில அரசும் கல்வி இலாகாவும் உதவி செய்வதாக இருந்தால் அந்த சிறுமியை சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“அந்த குழந்தைக்கு கல்வி கற்றுத்தர எங்கள் ஆசிரியர்கள் கூடுதல் முயற்சிகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அரசும் கல்வி இலாகாவும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்Ó என்று தம்தாரே கூறினார். 


--------------------------------------------------------------------------

எனது சந்தேகங்கள் :

எந்த வகுப்பும் படிக்காமலேயே நேரிடையாக எட்டாம் வகுப்புத் தேர்வு எழுதலாம் என்ற அமைப்பு நம் கல்வித் திட்டங்களில் உள்ளது.

அப்படி இருக்க, ஒன்றாம் வகுப்பு படித்த ஒரு மாணவி 5 ஆம் வகுப்பு சேர கல்வி இலாகாவும், மாநில அரசும் எந்த வகையான உதவிகளை ஒரு பள்ளிக்குச் செய்ய வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை...

ஆங்கிலம் சிறிது கூடத் தெரியாதவருக்கு ஆங்கிலம் சொல்லித்தர ஒரு தனி ஆசிரியர் தேவைதான். ஆனால், நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கில் தைரியமாகச் சாட்சி சொன்ன ஒரு குழந்தைக்கு அரசு உதவியாகவேண்டும் என்பது ஒரு பக்கம். (கசாபுக்கு ஏறத்தாழ 50 கோடி செலவு செஞ்சாச்சு.. இந்தக் குழந்தைக்கு சில ஆயிரங்கள் சலுகை தரக் கூடாதா என்ன?

ஆனால் சமுதாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் "'வரி விலக்கு பெற்ற" பொது நல நிறுவனங்களால் ஒரு மாணவியின் கட்டணத்தை தள்ளுபடி செய்து கல்விக்கண் திறக்க இயலா விட்டால் அவற்றிற்கு வரிவிலக்கு ஏன் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஆக அரசு செய்ய வேண்டியது என்னவென்றால், அந்தப் பள்ளியின் அங்கீகாரத்தை உடனடியாக இரத்து செய்வதுதான் அல்லவா?

இல்லை இல்லை கட்டணத்தைப் பற்றிப் பேசலை, அந்தப் பொண்ணுக்கு ஆங்கில டியூசன் யார் எடுப்பது என்று கேட்கலாம். அதற்கு தேவை என்ன? தினம் 2 மணி நேர அதிகப்படியான ஒரு ஆசிரியரின் உழைப்பு அல்லவா?

ஒரே ஒரு ஆசிரியர் தினம் இரண்டு மணிநேரம் செலவிட்டால் அந்த மாணவி இன்னும் இரண்டு வருடங்களில் எட்டாவது தேர்ச்சி பெற முடியும். அப்படி இருக்க அரசும், கல்வி இலாகவும் இதில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தெளிவாகச் சொல்லி இருக்கலாம்.

எதைச் சிந்திக்கும் போதும், முதலில் இக்காரியத்தைச் செய்ய வேண்டும் என உறுதியாக முடிவு எடுக்க வேண்டும். பிறகு அதற்கான வழி முறைகளை ஆராய வேண்டும். அதற்கு தேவையானவற்றைச் சிந்திக்க வேண்டும். அதன் பிறகு திட்டமும் செயலாக்கமும் இருக்க வேண்டும்.

ஒரு வருட ஆங்கிலப் பயிற்சி, அடிப்படைக் கணித / அறிவியல் பயிற்சி கொடுத்தால் அந்த மாணவி அடுத்த வருடம் ஆறாவது பாடத்திட்டத்துக்கு தயாராக முடியும்.. (அதுதானே அவங்க முக்கியப் பிரச்சனையே...)

இப்படி பிரச்சனையை எப்படித் தீர்ப்பது என்று அணுகாமல், அதற்கு என்ன சாக்கு சொல்வது என்பது கல்வி நிலையங்களில் ஆரம்பித்து போபால் பிரச்சனை வரை இருக்கு... 

அப்படி எப்படிங்க நாம முன்னேற முடியும்? 

முடிஞ்ச வரை சுயநலத்திற்காவது நான் சொன்னதை கடை பிடிக்க ஆரம்பிங்க.. அதாவது உறுதியோட யோசனை செஞ்சி திட்டம் போட்டு வேலை செய்ங்க... இன்னிக்கு வாழ்க்கையில் உயருகிற அத்தனை பேரும், காரியத்தை முடிப்பதில் இப்படி உறுதி உள்ளவங்கதான்..


பொதுநலம்? நாம இப்படி உறுதியான முடிவெடுக்க பழகிட்டா பொதுநலத்தில் அதை நாமே மிக எளிதாகச் செய்யலாம். யாரையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

.

No comments:

Post a Comment