Friday, June 11, 2010

தாமரை பதில்கள் : 132

கேள்வி எண் 132:

கேட்டவர் : நேசம்


தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை தவிர்த்து கட்சிகள் ஒட்டு வாங்கும் சதவித அடிப்படையில் பதவி கொடுக்கலாமே(அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நியமன எம்பி பதிலாக)




ராஜ்ய சபா மாநிலங்கவை சட்ட மேலவை உறுப்பினர் தேர்தலைப் பற்றிச் சொல்கிறீர்கள் எனக் கருதுகிறேன். 

ஒரு சபை பிரதேசத்தைப் பொறுத்தது. இன்னொரு சபை துறையைப் பொறுத்தது.

பல துறை வல்லுனர்கள் சட்ட மேல் சபையிலும், மாநிலங்கள் அவையிலும் இருக்க வேண்டும் என்பதே பொது நோக்கம். ஆனால் இன்றைய முறையில் அது ஈடேறவில்லை என்பதே உண்மை. அச்சபையையும் அரசியல்வாதிகள்தான் ஆக்ரமித்து இருக்கிறார்கள். கொல்லை(ள்ளை)ப்புற வழியாகவும், ஆறுதல் பரிசுகளாகவும் மேலவை உறுப்பினர் பதவிகள் மாறிவிட்டன என்பது உண்மை.

கட்சிகளின் ஓட்டுச் சதவீதத்திற்கேற்ப உறுப்பினர் பதவி அளிப்பதால் சிறு கட்சிகள் நன்மை அடையும் என்பது உண்மையே.

ஆனால் மேல்-சபைக்கான நோக்கம் நிறைவேறுகிறதா என்றல்லவா பார்க்க வேண்டும். 

மேல்சபை உறுப்பினர் எண்ணிக்கையை முதலில் துறை வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது மிக மிக முக்கியம். 

மாநிலங்கள் அவையில் கட்சி பிரதிநிதித்துவம் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு உணடு. அதற்கான விதிகளைச் செம்மைப்படுத்தி முறைகளைச் செம்மைப் படுத்தினால் இந்தியாவின் ஜனநாயகம் வலுப்பெறும். 

இதிலிருக்கும் ஒரே ஒரு பிரச்சனை, மேலவை, சட்டசபை இரண்டிலும் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை கிடைப்பது என்பது மிக மிகக் கடினமாகும். எந்த ஒரு வலுவான நடவடிக்கை எடுப்பது என்றாலும் ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். ஏனென்றால் நாட்டுநலனில் அக்கறை என்பது தற்போதைய அரசியலில் குறைந்துகொண்டே போக காழ்ப்புணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. இதனால் அரசினால் பயனுள்ளதாக எதுவும் செய்ய முடியாமல் போகலாம்.

No comments:

Post a Comment