Monday, June 28, 2010

தமிழ் செம்மொழி மாநாடு!!!



செம்மொழி'  என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அது பிற மொழிகளைச் சாராதிருத்தலும் வேண்டும்

இதிலெல்லாம் சிறப்பு வாய்ந்த வாழும் செம்மொழி தமிழுக்கு அணி செய்யும் விதமாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்து புதுப் பொலிவுடன் திகழும் இந்த வேளையில், கோவை மாநகரத்தில் இந்த ஆண்டு ஜூன் 23 முதல் 27 வரையில் ஐந்து நாட்களுக்கு சிறப்பாக நடந்தது.


தமிழர் தலைவர் கலைஞர் செம்மொழி மாநாட்டில் பலப் புதுமைகளைப் புகுத்தி மாநாட்டை மிகப் பெரிய வெற்றி மாநாடாக்கினார். 500 கிலோமீட்டருக்கு அப்பாலிருக்கும் கடல் ஆர்ப்பத்து கோவைக்கு வந்து விட்டதோ என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம்.

புத்தம் புதிய இலச்சனை, சொம்மொழியான தமிழ் மொழியே என்னும் வாழ்த்துப் பாடல், தமிழர் பெருமையை விளக்கும் "இனியவை நாற்பது" என்ற பெயரில் 40 அலங்கார ஊர்திகளில் பழந்தமிழரின் வாழ்க்கையைக் காட்டிய ஊர்வலம் எனப் பலப்பல புதுமைகளுடன் மாநாடு சிறப்பாய் ஆரம்பித்தது. தமிழ் நாடெங்கும் செம்மொழியான தமிழ் மொழியே புதிய தமிழ் வாழ்த்துப் பாடலாய் ஒலிக்கத் தொடங்கியது.

குடும்பமாக வந்த பொதுமக்கள் பொது அரங்கத்தில் அமர்ந்து ஒவ்வொரு நிகழ்வுகளையும் ரசித்தனர். மொழி ஆய்வாளர்கள், தமிழ் அறிஞர்களுக்கு கொடிசியா உள்ளரங்கத்தில் தனியாக அரங்குகள் அமைத்து ஆய்வு கட்டுகரைகளை சமர்ப்பித்தனர்.

இணைய மாநாடு, தொல்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பொதுமக்கள் நாள் முழுவதும் பார்த்து ரசித்தனர்.


கருத்தரங்குகளில் பேசிய தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள்,

 "தமிழ் மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் வாரிசுகளுக்கும் தமிழ் சென்றடைய வேண்டும். அதற்காக தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களையும், தமிழையும் பாதுகாக்க தமிழர்கள் வாழும் நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தை அமைக்க வேண்டும்.

இணைய தளத்தில் தமிழ் மொழிக்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் அறிஞர்கள் மாநாட்டை ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்'

என்று வலியுத்தினர்.

ஆய்வரங்கத்தில் 198 அமர்வுகளில் 787 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் வரலாறு, சிறப்புகள், மொழி பெயர்ப்புகள், இணைய தளத்தில் தமிழின் வளர்ச்சிகள், தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். செம்மொழி மாநாட்டில் தமிழனின் கலாச்சாரம், பண்பாடு, தமிழ் புராணங்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் தினமும் அரங்கேறின

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்;

தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்;
மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.

போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் போடப்பட்டு அவற்றில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை உடனடியாக வழங்கப்பட்டது.

* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்பட்டது.

அதன் செயலாக்கங்கள் என்ன தெரியுமா?
.
* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.

* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.

* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.

* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.

* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.

* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது

* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.

* தமிழின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளில் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்ப்பது



வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.


செந்தமிழ்  முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ்.  அதைக்கண்டவர்களில்  அதை அனுபவிப்பர்கள் அதன் அமிழ்தான சுவையை உண்பதால் அமரத்துவம் பெறுகின்றனர். அதன் சுவையை பருக இயலாதவர்கள், உட்காரவியலாமல், தம்மொழி இப்படி இல்லையே என இருக்க முடியாமல் பரிதவிப்பர்.

அப்படி வண்டுகள் மொய்க்கும்படி இனிய தேனை தமிழ் வார்த்திடும் பொழுது வெண்தாமரைகள் தம்மில் அச்சுவைமிகு தேனில்லையே என வெட்கமடைந்து முகம் சிவந்து செந்தாமரையாகி மலரும்.



என்ற பாடலுக்கு ஏற்ப



இப்படித் தமிழின் பெருமையைப் போற்றி, சாதனைகளைப் பாராட்டி, எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து தமிழ் மொழி மாநாடு மிகச் சிறந்த வெற்றியை அடைந்தது..

வாழ்க செந்தமிழ்! வளர்க நற்றமிழர்!!


No comments:

Post a Comment