கேள்வி எண் 113:
கேட்டவர் : samuthraselvam
மேலை நாட்டு கலாச்சாரம் நம் பண்பாட்டை நிறம் மாற்றுகிறதே?
எல்லாப் பணாடுகளும் தொடர்ச்சியா மாறுபாட்டுக்கு ஆட்பட்டுக் கொண்டேதான் வருகின்றன. மாறாதது என்பது உயிரில்லாதது ஆகும்.
நாம் நம்மைச் சுத்தி இருக்கறவங்க மேல அதிக அக்கறை காட்டுவதால் அதிகம் கவலைப்படறோம் அவ்வளவுதான்.
அதாவது இது எங்கள் பண்பாடு நான் கடைபிடிக்கிறேன் என பார்க்காமல், இது நம்முடைய பண்பாடு நாம் எல்லோரும் கடைபிடிக்கணும் அப்படின்னு டபக்குன்னு நமக்கு நாமே பிரமோஷன் கொடுத்துக்கறோம்.. கூடவே டென்ஷனையும் ஏத்திக்கறோம்.
நாம் எதை வலியுறுத்தறமோ, அடுத்த தலைமுறைக்கு அதைக் கண்டாலே வெறுப்பு வர ஆரம்பிக்குது, காரணம் என்னன்னா அவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் வரமாட்டேங்குது.
இன்றைய தலைமுறைக்கு தெளிவும் அதிகம். பாரமும் அதிகம். அதனால் அர்த்தமில்லாதது என்று தோன்றுவதை அவர்கள் சுமையா நினைச்சு தூக்கிப் போட்டுட்டு போறாங்க. இது காலத்தினால் ஏற்படும் மாற்றம்.
இப்போ மேலை நாட்டுக் கலாச்சாரத்தின் பாதிப்பு எதனால்? இதற்கு முதல் காரணம் தாழ்வு மனப்பான்மை. அவன் ஆளப்பிறந்தவன், புத்திசாலி, வலிமையானவன், சாதிப்பவன் என்று அவர்களைப் பற்றி உயர்வாய் ஆழ்மனசில் நினைப்பதினால் அந்த கலாச்சாரத்தை அறிந்து அதன் படி நடந்தால் தனக்கும் நல்ல மதிப்பு கிடைக்கும் என எண்ணுவது.
இரண்டாவது காரணம் பொருள்பற்று,, உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம் என எளிமையாக இருந்த காலம் போய், பொருள் உலகத்தின் மேல் ஏற்பட்டு விட்ட பற்று. செல்ஃபோனோ, மோட்டார் வாகனமோ, மின்சாரமோ தடைபட்டுப் போனால் பதறும் மனது. பொருள்கள் சகவாசத்தால் கிடைத்த சுகவாசத்தால் சோம்பல் பட்டுப் போன உடல்..
மூணாவதா வருவது நமது பண்பாட்டின் அடிப்படையையும், பெருமையையும், அதன் நலன்களையும் குறைகளையும் நாமே அறியாமல் அடுத்த தலைமுறைக்கு போதிக்க நினைப்பது. இது நல்லது, இது கெட்டதுன்னு சொன்னாப் போதுமா? ஏன் நல்லது? என்ன நல்லது? இல்லாட்டி என்ன? அப்படி என்னக் கெட்டுப் போயிடும் என எழும் எல்லாக் கேள்விகளுக்கும் அதிகப் பிரசங்கித்தனமா பேசாத.. சொன்னதைச் செய் என்று அடக்கும் நமது அடிப்படைப் பண்பாடு.




புரிந்து கடைபிடிப்பது பண்பாடு..
புரியாமல் கடைபிடிப்பது மூட நம்பிக்கை.
உதாரணமா
வாசல் தெளித்து கோலமிடுவது.
1. வாசல் தெளித்தால் தூசி அடங்கும். அதனால், அதிகம் சுவாசக் கோளாறுகள் வராது.
2. கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. வீட்டுக்கு வருபவர் கோபத்துடன் வந்தாலோ, குழப்பத்துடன் வந்தாலோ, கோலத்தின் அழகில் சற்று இலயித்தால் கொஞ்சம் தெளிவு பிறக்கும்.
3. கோலம் போடுவதற்கு குனிவதால் தொப்பை கட்டுப்படும். முதுகிற்கும் நல்ல உடற்பயிற்சி,,
இப்படி பல காரணங்கள் பின்னால் இருக்க,
எறும்புக்குத் தீனி போடக் கோலம் என்று சொன்னால் உடனே இரண்டு கைப்பிடி அரிசியை அள்ளிப் போட்டுட்டு போகிற அவசரக் காலம் இது. குறிக்கோள் நிறைவேறியாச்சில்ல போய்கிட்டே இருங்க என்று சொல்லி விட்டுப் போகும் அவசரத்தில் இளைய தலைமுறை இருக்கிறது. மாற்றங்களின் வேகம் வர வர அதிகரித்துக் கொண்டே போகிறது,
சொல்றதைச் செய். இதான் நம்ம பண்பாடு என்பதால்தான் நம்ம பண்பாடு மறுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது.
முதலிரண்டு காரணங்களினால் மறக்கப்படவும் ஆனது.
நம்முடைய பண்பாடும் பல பண்பாடுகளை மாற்றி இருக்கிறது,
இறுதியாக...
MOVE : Mankind always on constant move. Every move is towards comfort.
நாம் எப்பொழுதும் நிலைமாறிக் கொண்டே இருக்கிறோம். நம்முடைய மாற்றங்கள் நம்மை மேலும் மேலும் வசதியாக இருக்க வைப்பதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் நமக்கு தொந்தரவாக இருப்பதாகக் கருதுவதை விட்டுவிட்டு, நமக்கு வசதியாகத் தெரிவதை, நம்மை சொகுசாக இருக்க வைப்பதை நோக்கி நமது மாற்றம் இருக்கிறது,
தலைமுறை இடைவெளியால் இந்த மாற்றங்களை மற்றவரிடம் காணும்பொழுது அதை நம்மால் ஒப்புக்கொள்ள இயல்வதில்லை. அவசியங்களாக கருதப்படுபவை அனாவசியங்கள் ஆகும் பொழுதும், அனாவசியங்கள் எனக் கருதப்படுபவை அவசியங்களாகும் பொழுதும் மனம் ஒப்புக் கொள்ள மறுப்பது இந்த நெருக்கடிகளால்தான். மனம் ஒவ்வாமையினால அவதிப்படுகிறது.
ஆக வெளிப்பண்பாடுகளின் தாக்கம் என்பது ஒருகோணம் தானே தவிர அதற்கு அடிப்படைக்காரணம் இதுதான். வேறு பண்பாடே அறியாமல் இருந்தாலும் இந்த மாற்றங்கள் உருவாகத்தான் செய்யும். அது காலத்தின் கட்டாயம். ஏற்கனவே உதாரணமாய் சில பண்பாடுகள் இருக்கும் பொழுது மாற்றம் விரைவு ஆகிறதே தவிர, மாற்றம் ஆவதே வெளிப் பண்பாடுகளினால்தான் என்பது தவறு,
அதனால்தான் தொல்காப்பியர் கூட பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்.
நமது பண்பாடு மன நிம்மதியைக் காக்கும் வரை அழியாது.




No comments:
Post a Comment