Friday, June 4, 2010

தாமரை பதில்கள் : 110


கேள்வி எண் 110: 


கேட்டவர் : ஆதி


அண்ணா, திருக்குறள் கடைசங்கத்திற்கு மூத்த நூல் என்றே கணிக்கப்படுகிறது, சங்க இலக்கியத்தில் பாரி மனை எங்கென்றறிய வேண்டுமானால், எங்கே கறி சமைக்கும் நறுமணமும், தள்ளாடி தாள்ளாடி மாந்தர்களும் நடக்கிறார்களோ அங்கே அவன் மனை உள்ளது என்றொரு பாட்டுண்டு, குடிப்பதையும் புலால் அருந்துவதையும் மக்கள் பெரிதாக கொண்டாடி இருக்கிறார்கள், அப்படி இருக்க கள்ளுண்ணாமை புலான்மறுத்தல் போன்ற அதிகாரங்கள் இடை செருகலாக இருக்க ஏதும் வாய்ப்புள்ளதோ என்று நினைக்க தோன்றுகிறது, கொஞ்சம் தெளிவாய் விளக்குங்களேன், கூடவே ஒரு குட்டி கேள்வி அண்ணா, இந்த "பகவன்" எனும் வார்த்தையை ஐயன் வேறெந்த குறளிலும் பயன்படுத்தவில்லை, அதே போல ஐயனுக்கு பிறகு இளங்கோவே சிலம்பில் அந்த வார்த்தையை பயன்படுத்தியதாக தெரிகிறது, அதனால் "பகவன்" என்பதும் இடை செருகலோ என்று எண்ண தோன்றுகிறது, இதையும் கொஞ்சம் விளக்குங்களேன்..



கள்ளுண்ணாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை போன்றவை பின்னால் சேர்க்கப்பட்டிருக்குமோ என்று உங்களுக்குச் சந்தேகம் தோன்றியதில் பிழையில்லை. ஆனால் ஏன் அந்தச் சந்தேகம் என்பதில்தான் பிழை.

தாமரையை வள்ளுவனாக கற்பனைச் செய்து பாருங்கள். நான் எழுதுபவை சமுதாயத்தில் இன்று இருப்பதை மட்டும்தானா? இது நல்லது என்பது தவறு என்று புதுக் கொள்கைகளைப் பற்றி எழுதுவதில்லையா?

வள்ளுவர் மட்டுமல்ல, சைவத் திருமறை திருமந்திரத்திலும் இவை போன்றக் கோட்பாடுகள் உண்டு. 

மது சுகமென அரசனும் மக்களும் கருதலாம். அது தவறென சில புலவர்களும் சரியென சில புலவர்களும் கருதலாம்.

பகவன் இடைச் செருகலா? இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

சங்க நூல்கள் பலவற்றிலும் முழுமையான பாடல்கள் கிடைக்கவில்லை, திருக்குறள் 1330 குறட்பாக்கள் மட்டுமல்ல. இன்னும் பல உண்டு, ஜெர்மானிய தொல்பொருள் ஆராய்ட்சி கூடத்திலே இன்னும் பல குறள்களின் பதிவோலைகள் உண்டு என்று நான் சிறுவயதில் படித்திருக்கிறேன்.

எழுத்துக்கள் அரிக்கப்பட்டு வார்த்தைகள் புலனாகாத பொழுது இலக்கணத்தின் உதவியுடன் வார்த்தைகள் இட்டு நிரப்பியே இன்று நம்மிடம் உள்ள சங்கப் பாடல்களைப் பெற்றுள்ளோம். அதே போல் திருக்குறளிலும் பல வார்த்தைகள், செவிவழியாகவும், இப்படி இலக்கணம் மூலம் மற்றவரால் நுழைக்கப்பட்டதும் உண்டு.


இது கணிணியில் சிங்கிள் பிட் எர்ரர் கரெக்ஷன் என்பதைப் போல் சரியாக புலனாகாத அரிக்கப்பட்ட வார்த்தைகளை இலக்கணத்தின் உதவியால், எதுகை, மோனை, தளை போன்றவை கொண்டு ஊகித்து எழுதல் ஆகும். தமிழ் தாத்தா இதுபோல பல பாடல்களை சரி செய்துள்ளார்,

உதாரணத்திற்கு

அன்பே வா படத்தில்

உதய சூரியனின் பாதையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே 

என்பது உண்மைப் பாடல், ஆனால் தி.மு.கவை விட்டு எம்.ஜி.ஆர் பிரிந்து விட்டதால் வரிகள் மாற்றப்பட்டு

புதிய சூரியனின் பாதையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே

எனக் காலங்காலமாக பாடப்பட்டு வருகிறது, ஆனால் எது சரி என்பது பார்த்தவுடன் புலப்படுகிறது அல்லவா?

பகவன் என்பதி இறைவன் என்ற பொருள் தருகிறது என்பதாலேயே அது ஒப்புக் கொள்ளப்படுகிறதேயன்றி, அது ஒரு மதம் சார்ந்தது என்பதால் அல்ல...

இப்போது வித்தியாசமான இன்னொரு பார்வை..

திருக்குறள் என்பது ஒரு தனிமனிதனால் எழுதப் பட்டிருக்க முடியாது. பலர் இணைந்து எழுதி இருக்கலாம் என்ற வாதம் தற்போது வளர்ந்து வருகிறது.

பத்து பத்துப் பாடல்களாய் கட்டப் பட்டு இருப்பதால் பத்து பேர் இணைந்து எழுதி இருக்கலாம்.

அதில் பல சமயம் சார்ந்தவர் இருந்திருக்கலாம்,


நம்ம தமிழ்மன்றம் மின்னிதழ் போடுகிற மாதிரி பத்துப் புலவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பில் ஆளுக்கொரு குறள் எழுதி அதைத் தொகுத்து நூலாக்கி சமர்ப்பித்து இருக்கலாம்,

வள்ளுவர் எழுதியதாக இன்னும் சில நூல்களையும் அறிகிறோம். ஆனால் குறளின் நடைக்கும் அந்த நூல்களின் நடைக்கும் வித்தியாசம் நிறையவே இருக்கிறது.

வள்ளுவர் வாழ்ந்த இடங்களாக பல இடங்கள் சொல்லப் படுகின்றன, 

இதைப் பற்றியும் சில பேர் ஆராய்ந்து வருகின்றனர்.

இனிமேல் இதையும் சேர்த்துக் கவலைப்படுங்க.
 

3 comments:

  1. தாமரை அவர்களே,

    'அன்பே வா' வில் 'உதய சூரியனின் பார்வையிலே' என்ற வரிகள் 'புதிய சூரியனின் பார்வையிலே' என்று மாறியது அ .தி.மு.க. ஆரம்பிக்கப் பட்டதால் அல்ல! படம் வெளி வந்த போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் வானொலியிலும் திரையிலும் பாடல் வரிகள் மாற்றப் பட்டதால்!

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது நடந்தது எங்கள் வீட்டுப் பிள்ளை படத்திற்கு...

    ஒரு காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்
    காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்

    இந்த வரிகளில் காக்கை என்பது கருமை நிற காமராஜரைக் குறிப்பதால், காக்கைகள் என்பது காங்கிரஸார் என்பதால்

    இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்.. என மாற்றப்பட்டது.

    1972 வரை அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர். கறுப்பு பேண்ட், சிவப்பு சட்டை போட்டுகிட்டு இருந்தார். கருப்பு பெல்ட்டும் போட்டுகிட்டு இருந்தார்.

    1972 க்கு மேல் புதிய பிரிண்ட் போட்டப்ப, பெல்ட் மட்டும் வெள்ளை நிறத்துக்கு மாற்றப்பட்டது. (கவனிச்சிருக்கீங்களா?)

    அதே போல உதய சூரியன் புதிய சூரியன் ஆனது. நாங்க படம் பாத்தப்ப எல்லாம் உதய சூரியந்தானப்பா இருந்திச்சி!!!

    ReplyDelete
  3. தாமரை அவர்களே,

    இதே போல் இன்னும் ஒன்றிரண்டு சொல்வார்கள். 'பெற்றால்தான் பிள்ளையா ? வில் ' மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' என்பது ' மேடையில் முழங்கு திரு. வி .க . போல் ' என்று மாற்றப் பட்டது .(ரேடியோவில் பாடலில் உயிருடன் இருப்பவர் பெயர் வரக் கூடாதாம் !) 'காஞ்சித் தலைவன் ' இல் 'வெல்க காஞ்சி ! வெல்க காஞ்சி ! வெல்க காஞ்சி ! வெல்கவே !' என்பது 'வெல்க நாடு !' என்று மாற்றப் பட்டது . பின்னாளில் 'நேற்று இன்று நாளை'யில் 'தம்பீ! நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று ' ரேடியோவில் வைக்கப் படவே இல்லை!

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete