Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 10

சங்கநாதம்

தாமரை நீ வரவேற்புரை வாசிக்கிறியா, அவர் குரல்ல சுரத்து இல்லை..

சார் நான் கவிதை

அதைச் சேர்மன் வாசிச்சுக் கொடுக்கிறாராம்.. சொன்னார்..

எனக்குக் கோபமாய் இருந்தது.. சரி சார் அதை அவர் படிக்கட்டும்.. நான் வேற கவிதை சொல்றேன்.. அஜெண்டாவில எனக்குப் பத்து நிமிஷம் கவிதைக்குக் குடுங்க அதுபோதும்..

டைரக்டர் யோசிச்சார், சரி நான் பாத்துக்கறேன்.. நல்ல கவிதையா ரெடிபண்ணு..

என் ஆவேசம் மண்டையில் ஏறி மனசு கனத்தது.. காலேஜ் மொட்டை மாடிக்குப் போனேன். எழுதினேன்.. கல்லூரியைப் பற்றி, கல்லூரி மாணவர்களைப் பற்றி, எங்கள் எதிர்காலக் கனவுகள் பற்றி, கூடவே இதுபோன்ற சில களவாணிகள் பற்றி.. வஞ்சப்புகழ்ச்சிதான் நம் கைவந்த கலையாயிற்றே! எழுதினேன்.

மாலை விழா ஆரம்பிக்க வரவேற்புரை முடிந்தவுடன் சேர்மன் எழுத்துகூட்டிப் படித்து என் கவிதையை ஆபரேஷன் செய்து நெடுஞ்செழியன் அவர்களுக்குப் பரிசளிக்க, மாணவர் கூட்டத்தில் பெரும் கைதட்டல்களைப் பெற்றிருக்க வேண்டிய அந்தக் கவிக்குழந்தை செத்துப் போயிருந்தது..

இரண்டு ஆட்கள் தள்ளி மேடையேறி மைக்கைப் பிடித்தேன்.. ஆரம்பித்தேன்.. வரிகள் வளர வளர மாணவர்கள் புரிந்து கொண்டார்கள்.. கைதட்டல்கள் வரிக்கு வரி முரசடிக்க சங்க நாதம் செய்தேன்.. மாணவர் துணைகொண்டு மடமையைக் கொளுத்துவேன் என முடித்த அந்தக் கவிதைக்குப் பிறகு மேடையில் இருந்த சிலரின் முகம் இருண்டது.. குத்தத்தானே செய்யும்..

நெடுஞ்செழியனும் புரிந்து கொண்டார் போலிருக்கிறது. தமிழுக்கு இக்கல்லூரியில் கிடைத்திருக்கும் சொத்துகள் கண்டு பூரிப்படைவதாய் சொன்னார். ஆங்கிலவழிக் கல்வி தமிழை அழிக்க முடியாது என்பதற்கு எங்கள் கல்லூரி ஒரு உதாரணம் என்றார்..

இந்த சங்கநாததிற்குப் பிறகு எனது அணுகுமுறை மாறியது.. என்னை சாதாரணமாய் நினைத்தவர்கள் என்னை மதிக்கத் தொடங்கினர்.. இன்னுமொரு புது நட்புக் குழுவும் கிடைத்தது. அ தில் சிகாமணி, தளபதி, அன்புச் செழியன், பாஸ்கர் போன்ற ஒதுக்கப்பட்ட இசை ஆர்வலர்கள்.

எங்கள் கல்லூரி ஆர்க்கெஸ்ட்ரா முழுவதும் பிராமண ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.. இதுபோன்ற சில பேர்களுக்கு இடமிருந்தும் சேர்ந்திசைக்க இசைய மறுத்தனர் முதல் கோஷ்டி.. என்னுடைய முழக்கம் இவர்களை என்னுடன் இணைத்தது..

நான்காம் செமஸ்டரில் இரண்டாவது புத்தக வேலை ஆரம்பித்தது.. இம்முறை 250 பிரதிகள் போட்டோம். தளபதி கதை எழுதித்தர இன்னொரு இயற்பியல் ஆசிரியர் (நாவலாசிரியர் விஜயநிலா, நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும், ராஜேஸ்குமார் போல பாக்கெட் நாவல் போன்ற மர்மக்கதைகளை எழுதுபவர்) தமது படைப்புகளைத் தந்தார். சில மாணவியரும் இம்முறை பங்கு கொண்டார்கள்.. இம்முறை அச்சுப்பிரதி..

இந்தப் புத்தகம் அடுத்த தகராறுக்கு வழிவகுத்தது..

தொடரும்
.

No comments:

Post a Comment