Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 21

சிஸ் இண்டியா, வலை நண்பர்கள் பகுதியில் இரு பெயரில் நுழைந்தேன்

1. என்னுடைய சுயமுகம் 
2. பெண்முகம்

என்னுடைய சுயமுகத்துக்கு மவுசு இருக்கத்தான் செஞ்சது. செல்வி, பிரேமா, சுஜாதா, குணசுந்தரி போன்ற மலேசியத் தோழிகளும், ஆனந்தி, அருணா தேவி போன்ற அமெரிக்கத் தோழிகளும் கிடைத்தார்கள்.

பெண் முகத்துக்கு ராசியே இல்லை. ஒரே ஒரு பையன் சிவா, தினம் அவன் ஒரு கவிதை எழுதி அனுப்ப நான் அதுக்கு பதிலா கவிதை எழுத கொஞ்ச நாள் ஓடிச்சு, ஆனா பாருங்க நம்ம அருணாதேவிக்கும் சிவா ஃபிரண்டு. 

அருணாதேவியோட வீடு எங்க வீட்ல இருந்து அஞ்சு நிமிஷம் தான். பார்த்து பேசி பழகி இருக்கோம். அவன் அருணா கிட்ட உங்க ஊர்ல இன்னொரு பொண்ணு இருக்கான்னு சொல்ல, என் கவிதையை அருணா எனக்கே காட்டினாங்க.

சிரிசிரின்னு சிரிச்சோம். அப்புறம் சிவாவுக்கு உண்மையைச் சொல்ல பையன் சொல்லாம கொள்ளாம எஸ்கேப் ஆயிட்டான்.

சுஜாதாவிற்கு கல்யாணம் ஆகும் வரை அவங்களோட நட்பு இருந்தது. குணசுந்தரியும் அப்படித்தான். ஆனால் செல்வி கல்யாணம் பண்ணிகிட்டு எங்க வீட்டுப் பக்கத்திலயே வந்தாங்க. ஒரு அண்ணனா இருந்து அவங்களுக்கு தாலிக்கொடி மாற்றும் விழாவெல்லாம் செய்யும் பாக்கியம் கிடைச்சது. ஒரு வருஷத்துக்குப் பின்னால அவங்க மறுபடி மலேசியா போயிட்டாங்க.

பிரேமா, ஆனந்தி நட்பு இன்னும் இருக்கு. என்னைப் பொருத்தவரை இணையத்தில் இணைந்த அத்தனை பேருமே ரொம்ப அன்பாய் இருந்தாங்க.

1999, ஜூன் 16, பொண்ணு பாக்கப் போனேன். அப்ப நடந்த உரையாடல்தான்

அப்பா : என்னடா, 7:00 மணிக்கு கிளம்பனும், இன்னுமா ரெடியாகலை?
செல்வன் : இருப்பா இப்பதான் குளிச்சிருக்கேன் இன்னும் கிளம்ப ஒருமணி நேரமாவது ஆகும்..
அப்பா : டேய் சீக்கிரம்டா
செல்வன் : எப்ப கிளம்பினாலும் ஏண்டா இப்படி லேட் பண்றீங்க, நாம என்ன பொண்ணு பார்க்கவா போறோம் அப்படீம்பிங்க.. இப்ப நிஜமாவே பொண்ணு பார்க்கப் போறோம் லேட் ஆகுமா ஆகாதா???

அப்பா:

பார்த்த முதல் பெண்ணே அண்ணிதான். அன்றே ஓ.கே சொல்லிவிட நவம்பர் 14 க்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது.

உங்களை மாதிரிதான் தம்பிகளா, என் ஃபோனும் பிஸியாவே இருக்கும். ஆனா அதைவிட என்ன விஷேசம்னா அண்ணியும் நானும் கடிதங்கள் எழுதிக்குவோம்.. ஒரு 50 கடிதங்கள் இருக்கும். எல்லாம் சேர்த்து வைத்திருக்கோம். ஓவியன் மாதிரி போட்டோ ஷாப்ல வெட்டி ஒட்டி ஜிகினா வேலை பண்ணி என்னென்னமோ..கவிதைகள், பெரிய பெரிய கடிதங்கள் தான்.. பத்து A4 ஷீட் மினிமம். நமக்கே நமக்குன்னு கவிதைகள் எழூதும் பொழுது அதில் இருக்கும் சுகமே அலாதி. அதுவும் இந்தச் சந்தர்ப்பத்தில். இன்னிக்கும் அந்தக் கடிதங்கள் பத்திரமா இருக்கு. அதுதானே மிகப் பெரிய சொத்து..

என் கல்யாணத்திற்கு அழைப்பிதழ் நானே வடிவமைத்து பிரிண்ட் செய்தேன். அதை எடுத்துகிட்டு அழைக்கப் போனப்ப தான் அது நடந்தது.

என்னோட தமிழாசிரியர் பிள்ளார் செட்டி, ஓவிய ஆசிரியர் கூட நின்னுகிட்டு இருந்தார்.. கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்து விட்டு அழைப்பிதழைக் குடுத்தா,

சாம்பவி மாதிரி, என்னடா தாமரை செல்வன் னு போட்டிருக்க "ச்" எங்கடான்னு கேட்டாரு..


தேமலரின் உள்ளிருக்கும் தெள்ளமுதம் போல்பொழிவான்
தாமரைச் செல்வன் கவி


என்று எனக்கு வாழ்த்துக் கவி கொடுத்தவராச்சே! அவர் மானத்தைக் காப்பாத்த வேணாமா? சட்டுன்னு ஒரு பிட்டு எடுத்து விட்டேன்

ஐயா, தாமரை என்பது பெண்பால் பெயர். செல்வன் என்பது ஆண்பால் பெயர். ஒரு ஆணும் பெண்ணும் புணரும் பொழுது "இச்" என்ற சத்தம் எழுமானால் அது நாலு பேருக்கு கேக்கக் கூடாது.....

ஓவிய ஆசிரியர் வாயடைச்சு போயிட்டார்..

பிள்ளார் செட்டி கிச்சு கிச்சு மூட்டறியேன்னு சமாளிச்சார்.

கல்யாணம் நல்ல படியா முடிந்து அண்னியும் நானும் அமெரிக்கா வந்தாச்சு. இணைய தோழிகள் அண்ணிக்கு முதல்லயே நன்கு அறிமுகம் ஆகி இருந்ததால் ஜாலியா வாழ்க்கை போனது..

2000 வருடம் மார்ச் மாதம் ஒரு பழைய நண்பன் (தட்சிணா மூர்த்தி- கல்லூரி நண்பர்) கிட்ட இருந்து ஒரு ஃபோன் வந்தது. என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தந்தது.

தொடரும்

.

No comments:

Post a Comment