Monday, December 21, 2009

தாமரை பதில்கள்


புனைபெயரில் எழுதுபவர்கள் குறித்த உங்களது கருத்து என்ன?


புனைப்பெயரில் எழுதுபவர்கள் அவரவர்களுக்கு மனதிற்குத் திருப்தியான ஒரு காரணத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. புனைப்பெயர் மட்டுமல்ல, மனிதன் தன்னுடைய ஒவ்வொருச் செயலுக்குமே ஒரு காரணம் கற்பித்து வைத்துதான் இருக்கிறான். காரணமில்லாமல் காரியமில்லை...

ஏன் புனைப்பெயர்? பலர் சொல்லும் பலக் காரணங்களைப் பார்ப்போம்

என்னை மற்றவர்கள் அடையாளம் தெரிந்துகொண்டு என் மீதான அனுமானத்தை என் எழுத்துக்களின் மேல் பதியாமல் இருக்க

என்னுடைய தனிமை பாதிக்கப்படலாம்

அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்

மனைவிக்கு மரியாதை.. அவள் தான் இதற்குக் காரணம்

எல்லோரும் புனைப் பெயரில் எழுதுகிறார்கள் நானும் எழுதுகிறேன்

என் பெயர் என் எழுத்துக்களின் மீதான ஒரு அணுகுமுறையைத் தருவதாக இருக்க வேண்டுமென்பதால்

பெயரில் ஒரு ஈர்ப்பு இருக்கு.. சொல்லும் பொழுது வித்தியாசம் இருக்குமானால் நினைவில் நிற்கும்

அவர் எழுத்துக்களின் வழி கற்று நான் எழுதுகிறேன். அதனால் அவர் பெயரை என் பெயரில் இணைத்திருக்கிறேன்

நியூமராலஜிப்படி கூட்டு எண் ஆறு வந்தா நல்லது,, அதனால் பேரை மாத்தினேன்

நான் எழுதறேன்னு தெரிஞ்சா என் வீட்டில் ஒப்புக் கொள்ள மாட்டாங்க..

நான் எழுதும் கருத்துக்கள் பலருக்கு உணர்ச்சிகளைத் தூண்டி அதனால் எனக்கு பக்கவிளைவுகள் நேரலாம். ஒரு பாதுகாப்புக்காக

அதுதானே இப்போ பேஷன்

இந்த விதமானத் தலைப்புகளுக்கு இதுதான் பஞ்ச் லைன்.. (ஆந்தையார், பூனையார்.. இத்யாதி, இத்யாதி)

இந்தப் பாத்திரப் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்..

என் இலட்சியத்தை இந்தப் பெயர் சரியாக அடையாளம் காட்ட உதவுகிறது...

எனக்கு எழுத இன்ஸ்பிரேஷனே இவங்கதாங்க

என்னுடைய அன்புக்குரிய மகன்/ மகள் / காதலி / காதலன் பெயர்
இப்படி விதவிதமானக் காரணங்கள் உண்டு.. நானும் சில புனைப் பெயர்களில் எழுதி இருக்கிறேன்.. அவற்றிற்கும் தனித்தனிக் காரணங்கள் உண்டு.. (இந்த லிஸ்ட்ல இல்லாதக் காரணங்கள் ஹி ஹி)

எழுதுபவர்களைப் பற்றி நான் கருத்துகளை வளர்த்துக் கொள்வதில்லை, எழுத்துக்களை மட்டுமேப் பார்க்கிறேன்.. கருத்துக்களை மட்டுமேப் பார்க்கிறேன், அதுவும் இவர் இன்னக் கோணத்தில்தான் சொல்லி இருப்பார் என என் பார்வையைக் குறுக்கிக் கொள்ளாமல் படித்து அர்த்தப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறேன்,,

என்னுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குப் பழகிப் போன விஷயம் இது..

புனைப்பெயரில் இருப்பவர்களை நான் புனைப்பெயர் கொண்டே அழைக்கிறேன், பழகுகிறேன். நிஜப்பெயரை நானாக அறிந்து கொள்ள முயன்றதில்லை.. அறிந்து கொள்ள ஆசையும் இல்லை,, என்னைப் பொருத்த வரை பூமகள்தான், யவனிகாதான், ஆதவாதான், ஆதிதான், ஓவியன் தான், அமரந்தான், அக்னிதான் அவர்களின் நிஜப்பெயர்களை நான் உபயோகப்படுத்துவதில்லை,..

அவர்கள் எப்படி உலகால் அறியப்பட வேண்டுகிறர்களோ அப்படியே அறியப்பட வேண்டும். அதுதான் எனது ஆசை. எழுத்துலகில் யாருக்கும் ஒரு முகம் கொடுக்க எனக்கு ஆசை வருவதில்லை.. ஆனால் நான்தான் தற்பொழுது அதிக நண்பர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.. அதுதான் வேடிக்கையான ஒன்று..

ஆக உங்கள் கேள்விக்கு நீங்கள் எதிர்பார்த்த பதிலைத் தந்தேனோ தெரியாது, என்னைப் பொறுத்தவரை சொந்தப் பெயரில் எழுதுபவர்கள், புனைப்பெயரில் எழுதுபவர்கள் என்றப் பிரிவினை கிடையாது.. எழுதுகிறவர்கள் அவ்வளவுதான்..


No comments:

Post a Comment