Tuesday, December 8, 2009

ஆத்திகம் - நாத்திகம் ஒரு தெளிவு

நாகரா : புதியதோர் உலகம் செய்ய விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமா?

அவசியமா என்ற கேள்வியே தவறுன்னு நினைக்கிறேன். விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைந்துதான் இருக்கின்றன, இரண்டும் ஒரே இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

விஞ்ஞானத்தினால் கண்டுபிடிக்க முடிந்ததை மெய்ஞானத்தினால்தான் பக்குவமாகச் சமுதாயத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்.

எந்த ஒரு கண்டுபிடிப்பையும் சரியாகப் பயன்படுத்த பக்குவப்பட்ட மனம் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட மனதைத் தரவல்லது மெய்ஞானமே!!!

விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் பிரித்துப் பார்ப்பதற்குக் காரணம், மக்களுக்கு ஆரம்பமும் புரியவில்லை, முடிவும் தெரியவில்லை.. பூமி தட்டையானது என்று சொல்கிறோமே. அதைப் போன்ற ஒரு தோற்றப் பிறழ்வு..

எப்படி விஞ்ஞானத்தில் குறுகியகால நோக்குடைய ஆராய்ட்சிகள், நீண்டகால நோக்குடைய ஆராய்ட்சிகள் உண்டோ, மெய்ஞானத்திலும் அது உண்டு அல்லவா?

ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒரு காலத்தில் கை கோர்த்துக் கொண்டிருந்தன என்று பின்வரும் விவாதம் விளக்கும், இன்றைய நிலைக்கு முக்கியக் காரணம் தொலைநோக்கு இல்லா மனித மனம்தான்.

மனங்கள் குறுகிப் போய்விட்டன. மதங்கள் மூடியக் கதவுகளுக்குப் பின் மூச்சு முட்டிக் கிடக்கின்றன, விஞ்ஞானம் பித்துப் பிடித்து தெருக்களில் தலைவிரி கோலமாக அலைந்து கொண்டிருக்கின்றது,

இப்படி 99.99 மனிதர்கள் இருந்தாலும், மிச்சமிருக்கும் சில விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் இலக்கை நோக்கிப் பயணித்தபடியே இருக்கிறார்கள்..

புதியதோர் உலகம் செய்ய


விஞ்ஞானமும் மெய்ஞானமும் இப்பொழுதும் கைகோர்த்துக் கொண்டுதான் இருக்கிறது,..

விஞ்ஞானிகள் மெய்ஞானிகள் என்று தங்களைப் பிரித்துக் கொண்டு வரித்துக் கொண்டு வறுத்திக் கொள்பவர்கள் கொஞ்சம் உண்மையை உணர்ந்து தங்களை மாற்றிக் கொண்டால் போதும்.

=======================================================================
ஆத்திகம் - நாத்திகம் ஒரு தெளிவு 


மதம் தோன்றியது ஏன்? வளர்ந்தது ஏன்? எல்லா மதமும் ஏன் பிறப்பையும் இறப்பையும் மரணத்திற்கு முன் பின் வாழ்க்கைகளையும் காரணிகளையும் பற்றிப் பேசுகின்றன?

ஒரு மதம் எல்லா பதில்களையும் அளிக்க இயன்றிருந்தால் ஏன் அதிலிருந்து இன்னொரு மதம் தோன்றுகிறது?

ஒவ்வொரு நாளும் புதிதாய் மனிதகுலம் சிலவற்றை அறிந்து கொள்ளுகிறது. அறிந்துகொண்ட அவற்ரை இணைத்து மதம் வளருகிறது. அப்படி வளரமறுக்கும்பொழுது புதிதாய் கிளைவிட்டு புதுமதம் வேர்விடுகிறது. நாத்திகமும் அவ்வாறு கிளைவிட்ட ஒரு மதம்தான்.

இவற்றையெல்லாம் தாண்டி உண்மை அறிய சிலர் இன்னும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

மதம் தேவைதான். தினம் உயிர் பயத்தில் வாடாமல் நம்பிக்கையோடு மனித குலத்தை இப்புவியில் நீண்ட காலம் அழியாமல் காக்க..

நம் விரல் நகத்தில் உள்ள ஒரு அணுவை நாமாய் கற்பனை செய்து கொள்வோம். அதற்கு உலகைப் பற்றி என்ன தெரியும்? அதன் பார்வையில் உலகம் எப்படி இருக்கும்?

நமக்கும் பேரண்டத்தைப் பற்றி அதை விட மிக மிகக் குறைவாகவே தெரிந்திருக்கிறது. இன்னும் எத்தனைக் கேள்விகள் இருக்கின்றன என்பதே தெரியவில்லை.. அத்தனைக்கும் ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய் பதில் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இவ்வளவுதான் என்று உரைத்திட நீ யார்? நான் யார்?

உன்னுள் நாடாப்புழுவும் கொக்கிப்புழுவும் அதனுள் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் இருப்பது போல்.. பேரண்டம் பல உயிர்களை உள்ளடக்கிய மிகப் பெரிய ஒரு உயிர் என்ற கருத்துகளும் உண்டு.

அணுவின் அமைப்புதான் சூரியக் குடும்ப அமைப்பும்.. அதேதான் நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பும்.. இந்த அமைப்புகள் அடங்கிய இன்னும் சில அமைப்புகளும் இருக்கலாமல்லவா?

கேள்விகள் பிறக்கின்றன. பதில்களும் பிறக்கின்றன. இந்த சின்ன விவாதங்களுக்குச் செவி கொடுக்காமல் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தேடல்களுடன் பலர் ஆராய்வதினால்தானே இந்த வளர்ச்சிகள்?

கடவுள் இல்லை என்று சொல்லியோ உண்டு என்று சொல்லியோ நின்றுவிடுவதில்லை மனிதப் பயணம்..

மன்னிக்கவும் .. இந்தக் கருத்தை இங்கே பகிர்வதற்கு.

" ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால் மரணம் சபிக்கப்பட்டது மனித குலத்திற்கு..

ஒரு நன் தீர்ப்பு நாள் வரும். அன்று இறந்த அனைத்து மனிதர்களும் ஆவியெழுப்பப்பட்டு அவரவர் வினைக்கேற்ப பலன் பெறுவார் என்பது கிருத்துவம்"


அந்த நண்பரிடம் கேட்டேன்..

நீங்கள் கடவுள் பாவம் என்று சொன்னதை ஏன் செய்கிறீர்கள்... இனப்பெருக்கத்தை நிறுத்திவிடுங்கள்.. பூமியில் மனித இனம் அற்றுப் போய்விட்டால் அந்த நாள் எளிதில் வந்து விடுமே!..

நான் ஏன் கேட்டேன் என்பதைப் புரிந்து கொண்டதால் சிந்திக்க ஆரம்பித்தார் அவர். புரிந்து கொள்ளாதவர் நான் மத நம்பிக்கையில் குறுக்கிடுவதாக எண்னக்கூடும்..

கடவுள் உயிரைப் படைத்து, உருவாக்கி, உயிரைப் படைத்து துன்புறுத்தி, உயிரைப் படைத்து துன்பத்தை நீக்கி உயிரைப் படைத்து தன்னைப் போற்றச் சொல்லி....

சுழலுக்குள் சிக்குவது போல கேள்விகளுக்கு சமாளிப்பு சொல்லுவதால் பலர் நிம்மதியாக தமது பணிகளைச் செய்ய முடிகிறது.. அவரவர் பணியினை அவரவர் செய்வதினால் மனித குலத்தின் ஆயுள் நீட்டிக்கப் படுகிறது.. மனிதர்களின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது..

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆய்வினால் நம்மிடம் அறிவு குவிந்து கிடக்கிறது.. இன்னும் புதுப் புதுக் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.. இன்னும் பலகோடி ஆண்டுகள் ஆகலாம்.. உண்மை உணர்வதற்கு.. அதுவரை மனிதம் வாழவேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவதுதான் மனிதனின் கடமையே தவிர என் கடவுள் உன் கடவுள் இல்லாக்கடவுள் எனப் பேசிக் கழிக்க அல்ல.
மதம் தேவைதான்.. சற்று சிந்தித்துப் பாருங்கள்... நம் குடும்பத்தில் ஏற்படும் ஒவ்வொரு இழப்புகளையும் தாங்கும் வலிமையைத் தருவது மதம். படித்தவரிடமே மனப் பிறழ்வுகள் அதிகம் இருக்கின்றன. ஏனென்றால் அவர்களிடம் நம்பிக்கை இல்லாக் காரணத்தினால் பலப் பல கேள்விகள் அவர்களின் மனத்தை வாட்டுகிறது..

மதங்கள் மக்களின் மனதிலிருந்து மரணபயத்தை நீக்குகின்றன. அவனது வாழ்க்கைக்கு அர்த்தம் தருகின்றன. இதனால் மனிதனால் தன் வாழ்வை அமைதியாகவும், திருப்தியாகவும் அமைத்துக் கொள்ள உதவுகின்றன.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பார்கள். அதேதான் மதங்களின் கதையிலும் நடந்து கொண்டிருக்கிறது.. மன ஆறுதல் தரவேண்டிய மதம் போதையாகி வெறியினைத் தரும்பொழுது சச்சரவுகள், சண்டைகள், போர்கள் என பலப்பல கொடிய சம்பவங்கள் நடந்தேறுகின்றன.

ஏன் ஒவ்வொரு மனிதனும் மற்றவனைத் திருத்துவது தனது கடமை என்று நினைக்கிறான்?

ஒவ்வொருவருக்கும் தான் செய்வது சரி என்ற ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. அடுத்தவர் ஏன் நான் செய்வதை தவறு என்று நினைக்கிறார் என்று எண்ணிப் பார்க்க மனமிருப்பதில்லை. உங்கள் கோணத்திலிருந்து வெளியே வந்து அடுத்தவர் கோணத்தில் உள்நோக்குங்கள்.. அவரது கண்கள் வழியே உங்களை நோக்கி அவரது மனதில் சிந்தியுங்கள். புரியலாம்.


எல்லா மதமும் ஏன் பிறப்பையும் இறப்பையும் மரணத்திற்கு முன் பின் வாழ்க்கைகளையும் காரணிகளையும் பற்றிப் பேசுகின்றன?


லொள்ளு வாத்தியார் : அது விஞ்ஞானத்துக்கு இன்னும் புரியாத ஒரு செயல், ஆராய்சி செய்து கண்டுபிடிக்கும் வரை மூட நம்பிக்கை
ஆதாரத்துடன் கண்டுபித்து விட்டால், அது அறிவியல். ஏதோ ஒரு பயத்தால் அதை விஞ்ஞானம் அதை ஆராய்சி செய்ய பயபடுகிறது

விஞ்ஞானம் பயப்படவில்லை. அது ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது. காரியத்தின் பரிமாணம் மிகப்பெரிதாய் இருத்தலால் உமக்கும் எனக்கும் யார் செய்கிறார்கள் எனப் புரிவதில்லை,

மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கும் முயற்சி, வயதாகும் வேகத்தைக் குறைத்தல், அண்டவெளிகளை நுண்ணோக்கி மூலம் கவனித்தல், நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பை கூர்ந்து நோக்குதல் என எத்தனையோ ஆய்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த ஆய்வுகளை மேற்கொள்வோரில் பலரும் ஆத்திகர்களே. மத நம்பிக்கை உள்ளவர்களே! அதனால் ஆத்திகவாதிகள் விஞ்ஞானத்தை எதிர்ப்போர்கள் என்ற வாதம் தவறு.

அக்னி: அப்படியானால், விஞ்ஞானத்தின் வளர்ச்சிப்போக்கில் உலகம் பிறப்பு, இறப்பு ரகசியத்தை கண்டறிந்து, கட்டுப்படுத்த தொடங்கிவிட்டால், அந்நிலையில், மத நம்பிக்கைகள் அற்றுப் போய்விடுமா?

அப்படி அல்ல. அப்படி ஒரு பதில் கிடைத்துவிட்டால் ஒரு மதம் இருக்கும். ஓராயிரம் இருக்காது. ஏனெனில் மதம் என்பது வாழ்க்கை முறை. நம்பிக்கை.

உண்மை உணர்ந்தபின் பொய் இருக்காது. ஆனால் உண்மை இருக்குமல்லவா?

உண்மை அறிந்த பின், மரணம் மரித்த பின் மதங்களின் போர்கள் பிசுபிசுத்துவிடும். வேறு வகையான போர்களே இருக்கும். மதச்சாயம் பூசப்ப்டல் வேறுவகையாய் மாறலாம். அன்றும் வேறு வகையில் அப்பாவிகள் ஏமாற்றப்படலாம்.

பொய்யான மதங்கள் போய் உண்மையான மதம் இருக்கும் என்று சொன்னேன்.

வானத்தை தினம் கழுத்து வலிக்க உற்று நோக்கி இது நட்சத்திரம் இது கோள் என அறிந்து கோள்களின் நகர்தலை, வானத்தின் அமைப்பைக் கணிக்க குறைந்த பட்சம் 225 ஆண்டுகள் ஆகி இருக்கும். அன்றைய காலகட்டத்திலே, தினம் தினம் வயிற்றிற்கும், உணவுக்கும் போராடையிலே ஒருவர் அல்ல பலபேர் இணைந்து பணியாற்றினாலும் 1000 ஆண்டுகளாவது ஆகி இருக்கும் ஆடிகளற்ற அக்காலத்திலே!.

சாத்திரங்களின் பிண்ணனியில் இருப்பன இது போன்ற பல தகவல்களின் சேகரிப்புகள்தான். இன்றைய விஞ்ஞான ஆராய்ட்சிகளின் முன்னோடியே இவ்வகை ஆராய்ட்சிகளும் தகவல் சேகரிப்பும் தான். அவற்றை குறைத்து எடைபோடக் கூடாது.

மதங்கள் பொய் சொல்கின்றன என்பது ஒரு கருத்து. மதங்களைத் திரித்து பொய்யாக்கினர் என்பது ஒரு கருத்து.. மதமே பொய் என்பது ஒரு கருத்து.

என்னைப் பொருத்தவரை, மதங்கள் மனிதனின் ஆராய்ட்சிகளின் தொகுப்பு. பலர் அவற்றைத் திரித்து விட்டனர். இருந்தாலும் அவற்றில் இழையோடிக் கிடக்கும் தகவல் களஞ்சியங்களை நான் அறிவேன். நான் மதங்களை மதிக்கும் காரணிகளே இதுதான்.

அல்லிராணி : அதாவது மதங்களில் பல விஞ்ஞான உண்மைகளின் திரட்டு உள்ளது என்கிறிர். விஞ்ஞானம் வளர்த்த மதங்கள், விஞ்ஞானத்துடன் இன்று மல்லுக்கு நிற்கின்றனவே! ஏன்? எப்படி நடந்தது இந்த முரண்பாடு?

இன்றும் மதங்கள் விஞ்ஞான ஆராய்ட்சிகளைத் செய்து கொண்டுதான் உள்ளன. ஆனால், செய்து கொண்டிருக்கும் அந்த ஆராய்ட்சிகளின் விளைவுகள் அவை நிரூபிக்கப்பட்ட பின்னரே பொது மக்களுக்குத் தெரிய வரும். ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கைகளின் பின் புலத்தைப் பாருங்கள்.

உலகம் சக்தியால் ஆனது. நாம் கான்பதெல்லாம் சக்தியின் வடிவம். (சக்தி என நான் இங்கு குறிப்பிடுவது energy.) சக்தியே பல வடிவங்களாய் இருக்கிறது. உனக்குள்ளும் எனக்குள்ளும் காணும் எல்லாவற்றிலும் வியாபித்துக் கிடப்பது சக்தியே!..

விஞ்ஞானத்திற்கு வருவோம். இதுவரை நிரூபிக்கப்பட்டது என்ன? அனைத்தும் அணுக்களால் ஆனவை. அணுக்களுக்குள்ளே ஒரு கருவும் (புரோட்டான், நியூட்ரான் கொண்டது) அவற்றைச் சுற்றி எலக்ட்ரான்களும் உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து மூலக்கூறுகளாகி மூலக்கூறுகள் இணைந்து செல்களாகி செல்கள் இணைந்து உருவங்களாகி நாம் காட்சி அளிக்கிறோம்.

நம் வயிற்றின் உள்ளே உள்ள ஒரு அணுவிற்கு தெரிவதெல்லாம் அதைச் சுற்றி உள்ள அணுக்கூட்டங்கள் தான்.

சூரியக் குடும்பத்தைப் பாருங்கள். அவையும் அதே கட்டமைப்புதான்..

கருவாய் சூரியன்.. எலக்ட்ரான்களாய் கோள்கள்.. அதையும் தாண்டி நட்சத்திரக் கூட்டத்திற்கு செல்லுங்கள்.. அங்கும் கருவாய் கருந்துளைகள்.. எலக்ட்ரான்களாய் விண்மீன்கள்..

அணுவின் கருவை பிளந்தாலோ சேர்த்தாலோ ஆற்றல் வெளிப்படுகிறது. சூரியனின் வெப்பமும் ஒளியும் இம்மாற்றங்களினால் என நிரூபிக்கப் பட்டுள்ளது..

கருந்துளைக்குள் விழும் நட்சத்திரங்கள் ஆற்றலாக பகுக்கப்படுகின்றன. கதிரியக்கமாய் சிதறடிக்கப்படுகின்றன. இவை கருந்துகள்களாய் அண்டமெங்கும் வியாபித்துக் கிடக்கின்றன.. மீண்டும் இணைந்து இன்னொரு நட்சத்திரமண்டலம் உண்டாகிறது. ஒளியின் வேகமும், ஆற்றல் அழியாமை விதிகளும் கருந்துளைக்குள் பிய்த்தெரியப்பட்டு விடுகின்றன.

அனிமா என்பது அணுவாவது...
கரிமா என்பது அண்டமாவது..
எடையிழப்பது (காஸ்மிக் ரேஸ்)
எடைகூடுவது (ஸ்டார் பிளேனட் ஃபார்மேஸன்)

அஷ்ட சித்துகளும் வானியலில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஏன் விஞ்ஞானமும் மதமும் பிரிய ஆரம்பித்தன?

இதன் காரணம் மமதை, கர்வம் என்று கொள்ளலாம். தாழ்வு மனப்பான்மை என்றும் கொள்ளலாம். அறியாமை என்றும் கொள்ளலாம். ஆனால் மிகமுக்கியக் காரணம் மதங்களின் வாசல்கள் பூட்டப்பட்டன.


பயணம் தகவல் தொடர்பு கடினமாயிருந்த காலத்தில் முரண்பட்ட கருத்துக்களிலிருந்து தமது நம்பிக்கையைக் காத்துக் கொள்ளவேண்டிய அவசியம் பலருக்கு இல்லை. ஆனால் தகவல்தொடர்பு அதிகரிக்க அதிகரிக்க வேற்று நம்பிக்கைகள் எதிர்ப்பட தொடங்க, மதங்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டி வாசல்களைப் பூட்டிக் கொண்டன.

மதங்களைச் செறிவூட்டவேண்டிய ஆராய்ச்சிகள், மதங்களில் குறை காணத் தொடங்கும் நாத்திகவாதமாக பலரால் பயன்படுத்தப் படுகின்றன. அதுவும் மேலோட்டமாய் மதங்களை அறிந்து கொண்ட சிலரால்.

மதங்களும் விஞ்ஞானமும் கைகோர்த்தால் மட்டுமே, மனிதனால் இந்த முடிச்சுகளை அவிழ்க்க இயலும். இல்லாவிட்டால்..

தமக்குள் சண்டையிட்டு பல்கிப் பெருகி ஒரு செல்லைத் தாக்கிய பாக்டீரியா போல் மனித குலம் ஒரு நோய் பரப்பியாய் கோள்களைப் பாழாக்கி.....சக்திவேல் : எனக்கு ஒரு சந்தேகம். விஞ்ஞானம் என்பது இயல்பாய் இருக்கக்கூடியது. மதங்கள் என்பது ஒருசில சுயநல மனிதர்களால் உருவாக்கப்பட்டது.

மதங்கள் மனிதர்களுக்கு மதம் பிடிக்க வைப்பதை தவிற உருப்படியா ஏது செய்யலை. விஞ்ஞானத்துக்கு இனையான நிலையில் மதங்களை வைக்க தேவை இல்லைன்னு நினைக்கிறேன்.

என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள். விஞ்ஞானமும் மதமும் பல சமயங்களில் இணைந்தே வளர்ந்திருக்கின்றன். விஞ்ஞானத்தின் சாரங்களை எளிமையாக்கி தன்னுள் வைத்திருக்கிறது,.. வானியல், புவியியல், பௌதீகம், வேதியியல், என பலப் பல அறிவியல் துறைகளை வளர்த்ததும் காத்ததும் மதங்களே. மதங்களே கல்விதனை மக்களிடம் வளர்த்தன. இன்றும் அவற்றின் பங்கு மிக முக்கியமானது.

இப்படி மத அமைப்புகளால் நடத்தப்படும் கல்விக்கூடங்களும் விஞ்ஞானம் படிப்பதையோ ஆராய்வதையோ தடுப்பதில்லை. தங்களை மூடிக் கொண்டுவிட்ட சில மதவாதிகளே எதிர்க்கிறார்கள்.

மனிதருக்குள் ஒழுக்கம், ஒற்றுமை, திருப்தியான வாழ்க்கை, அமைதி, சகோதரத்துவம் இன்னும் பலப் பல குணங்களை வளர்ப்பதில் மதங்களுக்கு அளப்பரிய பணி உண்டு. மத என்பது கடவுள் மட்டுமல்ல. பிறப்பு இறப்பு மட்டுமல்ல. அதனாலே இறப்பை வென்றாலும் சில மதங்கள் வாழும் என்று சொல்லி இருக்கிறேன்.

இது ஆப்டிமிஸம். இப்படி இருக்கவே இயலாது என நீங்கள் வாதிடலாம். ஆனால் குறைகளின்றி எதுவும் இல்லை என் அனைவருக்கும் தெரியும். ஆனால் மைல்கற்களின் வண்ணத்திலோ, பாதையின் குழிகளிலோ பயணங்கள் தொலைந்து விடக் கூடாதல்லவா. அதை போல்தான் குறைகள் உள்ள பாதையை சரி செய்ய வேண்டுமே தவிர பாதையை மூடி விடக் கூடாது.

இதயம் :
தெரியாத, ஆதாரமற்ற ஒன்றை ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் விளக்கவோ, நிரூபிக்கவோ முடியாது. ஆன்மீகம் என்ற கட்டிடத்தின் அஸ்திவாரமே நம்பிக்கைகள் தான். அங்கு கேள்விகளுக்கும், ஆதாரங்களுக்கும் அவசியம் இல்லை. ஆத்திகர் நம்புகிற மதமும், கடவுளும், அவை இரண்டையும் நம்பாத நாத்திகர்களும் விரும்புவது மனிதர்களின் அமைதியான வாழ்க்கை என்கிற போது ஏன் மனிதர்களுக்குள் இத்தனை முரண்பாடுகள், பிரிவினைகள்.? கேள்விகள் மட்டும் தொடர்கின்றன
.

"assume" என்று தொடங்கும் விஞ்ஞானக் கோட்பாடுகள் எவ்வளவு தெரியுமா? விஞ்ஞானத்தின் அஸ்திவாரமும் அதுதான். கொள்கைகளைக் கோட்பாடுகளை உருவாக்கிப் பின் நிரூபிப்பதும் தானே விஞ்ஞானம்.

எல்லாம் தெரிந்துதான் பயணம் தொடங்க வேண்டும் என்பது இல்லை. அது இலக்கறியாப் பயணம் என்னும் பொழுது. பாதையிலே பயணத்தை அறிந்து கொள்கிற விசித்திரப் பயணம் இது.

மதம் - என்றாலே கடவுள் என்ற பார்வையை மறந்து பாருங்கள்.

மனிதர்கள் அனைவரும் தனித்துவம் பெற்றவர்கள். ஒரு மனிதன் போல் இன்னொரு மனிதன் இல்லை. அப்புறம் முரண்பாடுகள் இல்லாமலா இருக்கும். தேடலை வேகப்படுத்துவதே வேறுபாடுகள்தான்.

அமரன் : இத்திரியில் அணிலாக ஒரு செய்தி. ஜோசியம் கூறுபவர் பஞ்சாங்கத்தைப் பார்த்து இக்கிரகம் இந்நேரத்தில் இங்கே இருந்திருக்கின்றது. எதிர்காலத்தில் அது எங்கே இருக்கலாம் எனக் கணிக்கின்றனராம். கணிப்பு சரியாகும் போது ஜோதிடம் உண்மையாகின்றது. தவறாகும்போது பொய்யாகின்றது.

விஞ்ஞானத்திலும் கோள்களை வேகத்தின் அடிப்படையிலும் பாதையின் அடிப்படையிலும் கணிக்கின்றனர். அதுகூட சரியாக் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். ஆன்மிகமும் விஞ்ஞானமும் ஒத்துப்போகின்றதல்லவா?

ஜோதிடத்தில் பலன் சொல்லும் பகுதியை மட்டும் விட்டு விடுங்கள். கணிக்கும் முறையை எடுத்துக் கொள்ளுங்கள். வானவியல் எந்த அளவு அதில் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்று தெரியும். கிரஹணம் உண்டாகுமா எனக் கணிப்பது வரை மட்டுமல்ல், சூரியன் பூமி சுற்றுவதால் மற்ற கிரகங்கள் சுற்றுவதில் ஏற்படும் தோற்ற மாறுதல்கள் கூட கணக்கிடப் படுகிறது. நட்சத்திரக் கூட்டங்களுக்குப் பெயர் கொடுத்ததும் ஜோதிடமே!.

பலன்கள் சொல்லுவது என்ற பகுதி வெறும் டேடா கலெக்ஷன் (தகவல் சேகரிப்பு) என்ற அடிப்படையில் இருந்தது. ரிலையபிளிட்டி வல்லுனர் மதி அதை விவரிக்க இயலும் என நினைக்கிறேன். ஏனென்றால் அதுவும் ஜோதிடமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.சக்திவேல் :
மன்னிக்கவும் மதங்களுக்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பு எனக்கு விளங்கவே இல்லை. விளக்குவீர்களா?

சில நூற்றாண்டுகளுக்கு முன்னம் வரை கல்வியை போதித்தது மதங்களே எனத் தாங்கள் அறியாதது ஆச்சர்யத்தைத் தருகிறது. குருகுலங்கள், நாளந்தா பல்கலைக் கழகம், காஞ்சி, காசி போன்ற இடங்களில் இருந்த கல்விநிலையங்கள், பாடலிபுத்திரத்துக் கல்வி நிலையங்கள் என பலப் பல கல்வி நிலையங்களை நடத்தியது யார்? மதங்களைச் சார்ந்தவர்களே!

இங்கே பூஜைகளும் பிரார்த்தனைகளும் மட்டுமா பயிற்றுவிக்கப் பட்டது? வான சாஸ்திரம், மருத்துவம் (ஆயுர் வேதம், சித்தமருத்துவம், யுனானி, அக்குபஞ்சர் ) போன்ற மருத்துவ முறைகளைக் கண்டறிந்தவர் யார்? அனைவரும் மதம் சார்ந்தவர்களே. இவற்றை தோற்றுவித்து வளர்த்து மக்களுக்கு உபயோகிக்கத் தந்தது யார்? மதங்களே!.

பலப் பல கணித சூத்திரங்களை மதங்கள் நமக்குத் தந்துள்ளன.

உலகின் பல நாடுகள் இந்தியாவின் மீது படையெடுக்கக் காரணம் என்ன? இங்கு மிகுந்து கிடந்த தங்கம்தானே? எங்கே அந்தச் சுரங்கங்கள்? சரித்திர காலத் தங்கச் சுரங்கங்கள் ஒன்றாவது அறிவோமா நாம்?

கலைகள், மருத்துவம், வான சாத்திரம் தர்க்க சாத்திரம் முதலிட்ட சாத்திரங்கள், உலோகவியல் என பலவற்றை வளர்த்தது ரிஷிகள். அவர்கள் மதம் சார்ந்தவர்களே!.

சைவர், வைணவர் பௌத்தர், சமணர் கிருத்துவர் எனப் பலப்பல மதம் சார்ந்தவர்களே கல்வியினை வளர்த்தார்கள். மெகஸ்தனிஸ், யுவான் சுவாங் குறிப்புகளைப் பாருங்கள்.. மதங்கள் கல்வியை வளர்த்தனவா இல்லையா எனத் தெரியும்.

மலையே இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய கற்களை எப்படிக் கொண்டுவதார்கள்? எங்கிருந்து கொண்டு வந்தார்கள் என வியக்கிறோமே அந்த தஞ்சாவூர் பெரிய கோயில் அதைச் சாதித்ததும் மதம் தான்.

அறிவியலுக்கும் மதத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று மட்டுமல்ல, அறிவியலை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதிலும் மதங்களுக்கு பங்கு உண்டு.சக்திவேல் :
கன்டிப்பாக ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்துதான் இருப்பார்கள். அதுக்காக அந்த மதம்தான் அந்த அறிவியலை கன்டு பிடித்தது அந்த மதம்தான் அதை வளர்த்தது என்று சொல்ல முடியுமா?
இந்து மத நூல்கள், இஸ்லாம் மத நூல்கள், கிருத்துவ மத நூல்கள் என்று இருக்கின்றன.

இந்துமத வான சாஸ்திரம். இந்துமத உயிரியல், இஸ்லாம் மத வேதியல், கிருத்துவ மத மிண்ணியல் என்று ஏதாவது இருக்கின்றதா என்ன?

மதங்கள் மக்களை கவருவதற்காக கல்வி நிலையங்கள் என்ற வழியை பின்பற்றுகின்றன. அவ்வளவுதான்.

இதுதான் உண்மை! மதங்கள் தங்களுக்குள் அறிவியல் பரிமாற்றத்தை எப்படி பரிமாறிக் கொண்டிருக்கின்றன என நீங்களே சொல்லி விட்டீர்கள். வானியல் கிரேக்கத்திலும் வளர்ந்தது. இந்தியாவிலும் வளர்ந்தது. எண்ணியலும் அப்படியே. அறிவியலை மதங்கள் பங்கு போடவில்லை. இதுவே மதங்களின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் நம்பிக்கை.

மருத்துவச் சிகிச்சை முறைகூட மதங்களைத் தாண்டியல்லவா பயண்படுத்தப் படுகிறது.

கண்டுபிடிப்புகள் செய்தவர் தனியாளாய் இருந்திருக்கலாம். ஆனால் மதங்கள் அவற்றை உள்வாங்கிச் சேகரித்தன. பொதுவுடமை ஆக்கின.
இந்நிலை மாறி சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இன்று தகவல் சேகரித்து மக்களுக்கு ஊட்ட பல வழிகள் வந்துவிட்டன.

மதங்கள் தங்கள் கதவுகளை மூடிவிட்டன, இன்று அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவுத் திரட்டுகள், தகவல்கள் அனைவருக்கும் எட்டுவதாயுள்ளது. இதனால் நன்மைகள் பல. தீமைகள் சில.
அறிவியல் மதங்களிலிருந்து விலகி இருப்பதாக தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணம் வலுப்பெறுமாறு மதம் என்றால் கடவுள், பிறப்பு இறப்பு விளக்கம் என்று பார்க்கும் கண்ணோட்டம் ஏற்பட்டு விட்டது.


ஆனால் அன்று மதங்கள் ஆராய்ந்ததின் தொடர்ச்சியைத்தான் விஞ்ஞானம் இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. அன்று மதம் இன்று அரசாங்கங்கள் இவற்றிற்கு கை கொடுக்கின்றன.

மின் உபயோகப் பொருட்கள், வாகனங்கள் இத்யாதி மனித உபயோகப் பொருட்களின் கண்டு பிடிப்பிற்கும், அணுக்கருப் பிளவு, பிரபஞ்ச ஆராய்ச்சி போன்றவற்றிற்கும் வித்தியாசம் உண்டு. முதலாவது மனித வாழ்விற்காக. இரண்டாவது அதையும் தாண்டியது, ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கை மூலம் மனிதம் பயன் பெற்றது அதிகம். மனிதன் பெற்றது குறைவு.

ஆனால் விஞ்ஞானமும் மதங்களும் இரு எதிர் துருவங்கள் என்ற கருத்து பொய்யானது. அதைச் சொல்லத்தான் மதங்கள் அறிவியலுக்கு பணியாற்றி இருக்கின்றன எனச் சொன்னேனே தவிர மதங்கள் இன்றி விஞ்ஞானம் இல்லை என்று சொல்லவில்லை.

அடிப்படையாய் ஒன்று என்னவென்றால் எல்லா மதங்களுமே தாங்கள் சேர்த்து வைத்த அறிவுக் களஞ்சியத்தை ஒளித்து வைத்ததில்லை. மதங்களின் சில கட்டுப்பாடுகளில் எனக்கு ஒரு வருத்தமும் உண்டு. உதாரணத்திற்கு சில கோயில்களில் வேற்று மதத்தவர் வரக் கூடாது என்று தடுப்பது..

உண்மையில் அது அவர்களின் மதத்தை அவர்களே நம்பாதது போன்றது..

நான் என் கடவுள் இவ்வுலகை படைத்தவன் என எண்ணினால், என்னைப் படைத்த அதே கடவுள்தான் அந்த அந்நிய மதத்தவனையும் படைத்தவன் என உளமார நம்பவேண்டும். என் கடவுளிடம் எனக்கு என்ன உரிமையுள்ளதோ அதே உரிமை அவனுக்கும் உண்டு. ஏனென்றால் என் கடவுள்தானே என்னையும் படைத்தார் அவனையும் படைத்தார்.

அதே சமயம் கடவுளின் புனிதத்தை நாம் காத்திட வேண்டும் என்ற பொறுப்பினையும் கவனியுங்கள். சிறு பிள்ளைத்தனமாய் இல்லை? கடவுளின் பெருமையையும் புனிதத்தையும் நாம் எப்படிக் காப்பது? மற்றவர் அதை அழித்திடும் அளவிற்கு சிறியதா அது?

இவையெல்லாம் தோன்றக் காரணம் என்ன? ஏன் மதங்கள் தங்களை இப்படி குறுக்கிக் கொள்ள வேண்டும்? நம்பிக்கையில் ஏன் இப்படி ஒரு நம்பிக்கை இன்மை தலை தூக்கியது? இதை ஆராய்ந்தல் நாத்திகம் வளர்ந்த கதையும் விஞ்ஞானமும் ஆத்திகமும் பிரிந்த காரணமும் புரியும்.

அதையெல்லாம் எழுத வேண்டுமானால் ஒரிரு வருடங்கள் நான் பூரணமாக அந்த ஆராய்ட்சியில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அர்த்தம் தெரிந்து கொள்வது வேறு. அர்த்தப் படுத்திக் கொள்வது வேறு. இது இப்படித்தான் இருந்திருக்கும் என எழுத நான் விரும்புவது இல்லை. இது இப்படித்தான் என்று எழுதவே விரும்புகிறேன்..

சும்மா சில சடங்குகளைச் சொல்ல விரும்பவில்லை. திருமூலரையே எடுத்துக் கொள்வோம். அவரது திருமந்திரத்தில் சில பிரபஞ்ச விஞ்ஞானங்களைச் சொல்லி இருக்கிறார். சைவ நூலில்.

எனக்கு மிகவும் தெரிந்த விஷய்ம் ஜோதிடம் அதிலிருந்து வேண்டுமானால் உதாரணம் தருகிறேன். செவ்வாய் கிரகம் வெறும் கண்ணுக்கு எப்படித் தெரிகிறது? அதை சிவப்பு என்று ஆடிகளின் உதவியன்றி கண்டு பிடிக்க இயலாது? எப்படிக் கண்டாய்ந்தனர் ரிஷிகள். அறிவியலா இல்லை மதமா?

மிக மெல்ல நகரும் சனிக்கிரகம். அதன் சுற்றுவேகம் சரியாய் கணித்தது மதமா விஞ்ஞானமா?

வெள்ளிதான் பெரிதாய் தெரிகிறது வானில் ஆனால் வியாழன் மிகப் பெரிது எனச் சொன்னது மதமா விஞ்ஞானமா?

இவை விஞ்ஞானமெனில் எப்படி மதத்தில் வந்தன? ஏன் வந்தன?
மதம் விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டதாலேயே வந்தன. வந்த விஞ்ஞானத்தை மதம் மக்களுக்கு தொகுத்துக் கொடுத்ததா இல்லையா?

விஞ்ஞான வளர்ச்சி பூதாகரமாய் வளர்ந்ததற்குக் காரணம் ஆத்திகமுமல்லம் நாத்திகமுமல்ல. தேவைகள்.மனிதனின் வாழ்வுகளில் ஏற்பட்ட தேவைகள், சிந்தனைகளின் விரிவாக்கம், மக்களின் மனதில் ஏற்பட்ட தேடும் ஆர்வம், ஆதிக்க மனப்பான்மை. அடிப்படை வசதிகள், உபகரணங்களின் உதவிகள் என எவ்வளவோ இருக்கின்றன.

ஆதிகாலத்தில் மனிதன் உயிர் வாழ்வதே அரிதாக இருந்தது. 24 மணி நேரமும் ஆபத்து சூழ்ந்திருக்க, உணவுதேடலும் வாழ்தலும் இனப்பெருக்கமுமே பெரிய சவாலாக இருந்த காலம். அப்போது கண்டு பிடிப்புகள் எப்படி எளிதாக இருந்திருக்க முடியும்?

காடுகள் வயல்களாகி குடியிருப்புகள் உண்டாகிய பின் மனிதனுக்கு சிறிது ஓய்வு கிட்டியது. இருந்தாலும் உணவிற்காக மிகவும் பாடுபட வேண்டியது இருந்தது. நோய்கள் வாட்டின. அரசுகளின் போர்வெறி அதிகார மமதை போன்றவை துன்புறுத்தினாலும் உணவு, பாதுகாப்பு தவிர மிச்சமிருந்த நேரத்தில் கலை வளர்த்தான். அறிவியல் அறிந்தான்.

மனித சமுதாயம் மேலும் மேலும் அறிவியல் உண்மைகளை அறிய அறிய உபகரணங்கள் பெருகப் பெருக கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை சீராகப் பெருகத் தொடங்கியது. ஆடியைக் கண்டுபிடிக்க அதன் மூலம் ஆயிரக்கணக்கான கண்ட்பிடிப்புகள். மின்சாரம் கண்டுபிடிக்க அதன் மூலம் ஆயிரக் கணக்கான கண்டுபிடிப்புகள். ரேடியோ, தொலைபேசி கண்டுபிடிக்க அதன் மூலம் ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகள் என பல்கிப் பெருகின. இன்று உள்ள கட்டமைப்பு வசதியும் உபகரணங்களும் அன்று இல்லை என்று நினைவு கொள்ளுதல் வேண்டும்.

இன்று உங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உங்களின் உணவைச் சம்பாதிக்கச் செலவிடுகிறீர்கள்? எத்தனை மணிநேரம் உடல் நலம் பேண செலவிடுகிறீர்கள்? பொழுது போக்கு, மற்ற விதமான பணிகளைச் செய்ய செலவிடுகிறீர்கள் என எண்ணி பாருங்கள். இவையெல்லாம் சமூக அமைப்பு மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால் கிடைத்தது அன்றோ? அப்படி இருக்க சமூகத்தை நொந்து விஞ்ஞானத்தைப் போற்ற முடியுமா இல்லை விஞ்ஞானத்தைப் தூற்றி சமூகத்தை போற்ற முடியுமா?

அவரவர் கண்டுபிடித்தது அவரவர் மதத்தின் மூலம் சேகரிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு விஞ்ஞான வளர்ச்சி உயரத் தொடங்கியது. தொலைதொடர்பும், பயணநேரக் குறைவும் மக்களுக்கு மிகப் பெரிய தகவல் சுரங்கத்தைத் தந்தன. விஞ்ஞானம் இந்த விமானத்தில் ஏறிப் பறக்கத் தொடங்கியது. இன்று கல்வி என்பது அரசாங்கங்கள் மற்றும் பல அறிஞர்களால் பரப்பப் படுகிறது.. கல்வி ஒரு வியாபாரமாய் தொழிலாய் மாறி இருக்கிறது. லாப நோக்குடன் நடத்தப் படுகிறது.

இருந்தாலும் விஞ்ஞானம் மதத்திலிருந்து பிரிந்ததாய் இன்னும் நான் கருதவில்லை. அடிப்படையாய் மதம் தேடும் அதேபோன்ற கேள்விகளுக்கான விடைகளை விஞ்ஞானமும் தேடிக் கொண்டிருக்கிறது. அதாவது விஞ்ஞானம் இன்னொரு மதமாய் மாறிக்கொண்டிருக்கிறது.

1. பிரபஞ்ச உண்மைகளை அறிந்துகொள்ளல்
2. பிறப்பு இறப்பு மூலங்களை அறிந்து கொள்ளுதல், இறப்பை வெல்லுதல், தள்ளிப் போடுதல்,
3. நோயற்ற வாழ்வு

இவை அடிப்படை ஆராய்ச்சிகள்

4. நிம்மதியான, அமைதியான எளிதான(எளிமையான அல்ல) இன்பமான வாழ்க்கைகளை வாழ்தல்.
5. ஆசைகளை ஈடேற்றிக் கொள்ளல். மனதை களிப்புடன் வைத்துக் கொள்ளல்.
6. மனிதனின் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளல், இடையில் வரும் பேரழிவுகளிலிருந்து மனிதனை, மனித குலத்தைக் காப்பாற்றிக் கொள்ளல்
7. கண்டுபிடிப்புகள் தவறான கைகளுக்குச் சென்று அது பேரழிவை விளைவிக்காமல் காத்தல்.
8. கண்டுபிடிப்புகள் உலகில் பரப்பி உற்பத்தி திறன் அதிகரித்தல்

இவை உப ஆராய்ட்சிகள். இன்னும் சிறிது காலம் சென்றால் இன்னும் தெளிவான உருவம் கிட்டும்.

இதன் மத்தியில் அன்றாட வாழ்விற்காய் மனிதன் செய்யும் சிறு சிறு கண்டுபிடிப்புகள் ஏராளம்.

இப்படி இருக்க அடிப்படையில் மதம் என்ன கேள்விக்கு பதில் காண தேடுகிறதோ அதையே விஞ்ஞானமும் செய்கிறது என்கிறேன், தவறென்ன இருக்கிறது?

....

7 comments:

 1. உஷ்ஷ் அப்பாடா தாளமுடியலடா சாமி

  ReplyDelete
 2. முதன் முறையாக, எண்ணத்தில் தெளிவு கொண்ட ஒருவரின் படைப்பை படித்திருக்கிறேன்.
  உங்களின் ஒவ்வொரு வரியோடு ஒத்துபோவது மட்டுமன்றி, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒன்றேயன்றி வேறில்லை என்பதை மிகவும் உறுதியுடன் சொல்கிறேன். புரியாதவர்கள், துன்பக்கடலில் தவிக்க வேண்டியதுதான். புரிந்தவர்களுக்கு வாழ்வே வரம்தான்.
  இது வெறும் புரிதலுக்கு மட்டுமில்லை. இந்த புரிதல் வாழ்வையே வசமாக்கி விடுகிறது என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
  மிக்க மகிழ்ச்சி !!

  ReplyDelete
 3. நன்று நானும் என் கடவுளும்.. விஞ்ஞானம் பற்றியும், மெய்ஞ்ஞானம் பற்றியும் நிறைய எழுதி இருக்கிறேன். ஒவ்வொன்றாக பதிகிறேன்,

  தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்

  ReplyDelete
 4. படிக்குறதுக்கு நல்லாருக்கு. இவ்வளவு பெரிதாய் ஒரே இடுகையில் போடவேண்டாம். பிரித்துப் பிரித்துப் போட்டால் படிப்பதற்கு வசதியாய் இருக்கும்.

  ReplyDelete
 5. நன்றி உழவன் அவர்களே!..

  அப்படிச் செய்யலாம்தான். ஆனால் ஒரே ஒரு சின்னப் பிரச்சனை. இதைப் போல ஏறக்குறைய ஆயிரம் பதிவுகள் எழுதி இருக்கேன்,..

  முதல்ல அதைத் தொகுக்கணும்.. அதனால்தான் இப்படி,,,

  ReplyDelete
 6. மூச்சு முட்டுது!

  மரண பயம் போயிட்டா மக்கள் மகிழ்ச்சியா வாழ்வாங்களாக்கும்!?

  ReplyDelete
 7. மரண பயம் போயிட்டா மக்களுக்கு பயம் போயிடும், மகிழ்ச்சி வருவதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை.

  மதம் போயிடும்... அம்புட்டுதான்

  ReplyDelete