Saturday, December 12, 2009

நானும் தமிழும் - பாகம் 8

மெல்லத் திறந்தது கதவு!!


அந்தப் போட்டி, கடி போட்டி.. மொத்தம் 64 பேர் ஹாஸ்டலில் மாலை 5:00 மணியிலிருந்து நடுராத்திரி வரைக்குமே போட்டி தொடரும்..

எதற்கெடுத்தாலும் கடி.. மாறி மாறிக் கடி, ஆரம்பத்தலியே நிறையபேர் அவுட் என்றாலும் மூணு பேர் கடைசி நாள் வரைத் தாங்கினோம்.. நான் சிவா, (எலே பென்ஸூ உங்க ஊருக்கார பயமக்கா, பேசும் போது திக்கும், பாடும் போது திக்காது மைக் மோகன் பாட்டா பாடுவான் (அவனுக்கும் ஒரு காதல் கதை இருக்கு மக்கா))அப்புறம் டிஎஸ் ஆர்..
இதுவரை சாதா எஞ்ஜினில் ஓடிக் கொண்டிருந்த என் கடி எஞ்ஜின், இப்போ ஜெட் எஞ்ஜினாகி ராக்கெட் எஞ்ஜினாகவும் மாறிடிச்சி..

கடிக்கு கடி.. கடியையே கடி... மத்தவங்க சரக்கு தேடி மூளையைக் கசக்க, நான் கூலாக அவர்கள் சொல்வதிலே இருந்தே புது கடிக்கான கருவை எடுத்துக் கடித்துக் கொண்டே இருக்க, டிஎஸ் ஆர் அம்பேல்,.. நானும் சிவாவும் மட்டும்தான் அந்தக் கடைசி அரைமணி நேரம்..

சிவா திணறினான்.. இதுவரை என் நேரடிக் கடியிலிருந்து தப்பி வந்துகொண்டிருந்த அவனுக்கு பதிலடிக் கடி பயங்கர நெருக்கடி கொடுக்க சரண்டரானான்..

இப்படி பலகடிகளை தாங்கி போராடி பெற்ற அந்த நாலெட்ஜ் தான் எந்த ஒரு பிளேடுக்கும் அதைவிட மொக்கையான இன்னொரு பிளேடு உண்டு என்பது. இதில் தீவிரமாய் நம்புபவன் நான்.. மொக்கைகள் மூளையைச் செலவிட்ட பிளேடுகள்.. மொக்கையாய் பேசத் தனித் திறமை வேண்டும்..

கடிமன்னனாக கிரீடம் சூட்டப்பட்ட நாங்கள் விரைவிலேயே கட்டப் பட்டுக்கொண்டிருந்த உண்மையான ஹாஸ்டலுக்குப் போனோம்..

தமிழ் மன்றத்தில் முதன் முதலாக இரு மாத இதழ் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கினோம்..

நமக்கு படிக்கற ஆசையோ போயிருச்சிங்க.. பின்ன, உயிரைக் கொடுத்து எல்லாத்துக்கும் நான் சொல்லிக் கொடுத்த கெமிஸ்ட்ரிலேயே அரியர் வச்சா, அதுவும் ரொம்ப நல்லா எழுதி இருக்கன்னு திருப்தியா எழுதியிருந்த பரிட்சை அது.. 75 க்கு 70 க்கு மேல எதிர் பார்த்தவனுக்கு 17 மார்க்கு கிடைச்சா என்ன செய்யறது? ரீ வேல்யூவேஷன் கேட்டா முதல் வருஷத்துக்கு அது கிடையாதுன்னு சொன்னாங்க. ரீ டோட்டலிங் பண்ணுங்கப்பா பேப்பர் மிஸ்ஸாகி இருக்கப் போகுதுண்ணு சொன்னா அதுக்கும் முடியாதுண்ணுட்டானுங்க.. மனுஷனுக்குக் கோவம் வராதா? வந்துச்சு, மனசு நிறையக் கோபம்,.

இதனாலயே பாடத்தில என் கவனம் குறைஞ்சிருச்சி,, தமிழ் எனக்குள்ளே இருந்து ததிங்கண்தோம் ஆடிச்சு.. முன்னால சும்மா கவிதை எழுதின நான் இப்ப டேய் எதாவது ஒரு வார்த்தை சொல்லுன்னு சொல்லி அந்த வார்த்தையில இருந்து ஆரம்பிச்சு கவிச்சமர் எழுத ஆரம்பிச்சேன்.. மலை மலையாய் எழுதினேன்..

முதல் தமிழ் மன்ற இதழ் கவிநிலவு, சைக்ளோஸ்டைல் காபி, 200 ப்ரிண்டுகள் போட்டோம்.. மன்றத்து உறுப்பினர்களே நிறைய எழுத வேண்டியதாய் இருந்தாலும்.. முதலாண்டு மாணவர்கள் மாணவிகள் எல்லாம் கலந்துகிட்டாங்க...

இந்த இதழுக்காக நானும் பழனியப்பனும் கி,ஆ,பெ. விசுவநாதன் அவர்களை பேட்டி எடுத்தோம்..

ஒரு தமிழ்கடலில் போய் என் கால்களை நனைத்து விட்டு வந்தேன்.. புதுக்கவிதையில் மொழியை எப்படி எல்லாம் கொல்கிறார்கள் என்ற ஆதங்கம் அவருக்கு.. எனக்கு மரபு தெரிந்திருந்தது அவருக்குப் பிடிச்சிருந்தது.. படுக்கையில் இருந்தவர், அவருடைய ஆதங்கங்களை நான் பகிர்ந்து கொண்டதும் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். கேள்வி பதிலாக பழனி ஆரம்பித்த பேட்டி நம்ம பென்ஸூ கூட பேசற பேச்சு மாதிரி வளர ஆரம்பித்தது.. எனக்கும் பேச்சை முடிக்கத் தெரியாது.. அவருக்கும் விருப்பமில்லை. மாலை 4 மணிக்குப் போனவர்கள் 8:00 மணி வரை பேசிக்கொண்டே இருந்தோம்.. நாலு பேப்பர் வச்சுகிட்டு ஆரம்பித்த பேட்டி எழுதப்படாமல் இருந்தது.. தமிழ்க்கடல் ஒரம் பீச்சில் (வீட்டில்) சுண்டலும்(சாப்பாடு) கிடைத்தது.

பிரிய மனசில்லாம வந்தேன்.. பழனியப்பனுக்கு பேட்டியை எப்படி எழுதறதுன்னு புரியலை.. என் மனசில பதிந்த உரையாடல்களை எல்லாம் வெட்டி ஒட்டி ஒரு பேட்டி தயார் பண்ணி கொடுத்தேன்..

இதழும் தயாரானது.. அதன் ஒரு காபியை கி,ஆ.பெ. விசுவநாதன் அவர்களுக்கு கொடுத்த போது அவர் கண்கலங்கிச் சொன்னார்.. மக்கள் தமிழை மறந்துகிட்டே வர்ராங்க.. நீங்களெல்லாம் முயற்சி எடுத்தால் தமிழ் நீண்ட நாள் நிற்கும்னு.. அவர் அவருக்கான சமாதியை தயார் செய்து, தயாராய் இருந்தார்.

முதல் இதழ் பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் ஆனது.. 200 இதழ்களும் விற்றுத் தீர்ந்தன...

என்.எஸ்.எஸ். ஆரம்பிச்சு ஒருவருஷம் ஆச்சு!.. பந்தா சக்திவேலுக்கு அதை சிறப்பா கொண்டாடணும்னு ஆசை. டைரக்டர் சேர்மன் கை கால்ல விழுந்து நடிகர் ஜெய்சங்கரை அழைச்சு ஒரு விழா அரேஞ்ச் பண்ணினான்...

எந்த விழான்னாலும் அந்த மேடையில் எனக்கென்று ஒரு தனி இடம் இருக்கும், இந்த விழாவில் மட்டும் கிடையாது.. சக்திவேலுக்கு தன்னை முன்னிறுத்திக்க ஆசை! என்னை அவாய்ட் செய்தான்..

நானும் விட்டுவிட்டேன்.. இந்த ஆண்டு கோபி, செல்வராஜ், நான் சுந்தர் நாலுபேரும் கோஷ்டி ஆயாச்சு.. எங்கள் கோணமே வேற.. கண்டுக்கலை..

விழா நடந்தது.. நாட்டுப் பற்று பற்றி நான் முதலாண்டு எழுதிய இரண்டு பக்க கவிதையை சக்திவேல் வாசிக்க, மேடைக்குக் கீழே என்னைப் பார்த்து பலர் பரிதாபப்பட்டார்கள்.. ஜெய்சங்கரும் அவர் உரையில் இது அருமையான கவிதை.. இந்தமாதிரி சரளமான வார்த்தைப் பிரயோகம் கண்ணதாசனுக்கு மட்டுமே வரும்ணு பாராட்டோ பாராட்டுன்னு பாராட்ட, இதயத்தில் எனக்கு ஊசி குத்தியது..

மனமுடைந்தேன்.. இப்படியும் செய்வாங்களா? இந்தப் போலி கௌரவத்தால என்ன லாபம்?

இதுக்குப் பின்னால எனக்கும் சக்திவேலுக்கும் தூரம் அதிகமாயிடுச்சி. உமாசங்கர் பேசிப்பார்த்தான்.. நான் சொன்னேன்.. அவன் அவனாக இருக்கட்டும் நான் நானா இருக்கேன்.. அவன் என் கவிதையைப் படித்தது என் வருத்தமில்லை. அவன் மட்டுமே மேடையில் பேசணும்னு நினைச்சானே அதுதான் வருத்தம்.. ஏன் நான் மேடையில் ஏறினால் அவன் தோற்றுவிடுவான் என்கிற பயமா? என் கவிதைக்கெதிரே என் கவிதைதானே போராடப் போகுது.. அப்ப எதுக்கு பயம்? ஒரு மனிதனுக்கு ஆசை இருக்கலாம். சுயநலம் இருக்கக் கூடாது. புகழ் தேவைதான் அதுக்காக அடுத்தவனை மிதிக்கக் கூடாது என என் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி விட்டேன்..

சக்திவேலிடமிருந்து நான் விலகியதில் மதுரை கோஷ்டிக்கு மகிழ்ச்சி. மதுரைக்கார பசங்க பாசக்கார பசங்க.. அவர்கள் என்னுடன் நெருங்க ஆரம்பித்தனர்,.. சென்னை கோஷ்டியும் மதுரை கோஷ்டியும் தனித்தனியே இருந்தாலும் இப்ப சண்டை கிடையாது...

அப்பதான் இரண்டாம் முறை மறுபடியும் என்னை பின்னுக்குத் தள்ள முயற்சி நடந்தது .. நம்ம நாவலர் நெடுஞ்செழியன் வந்த கல்லூரி திறப்பு விழா மேடையில்...

தொடரும் .

.

No comments:

Post a Comment