Thursday, December 24, 2009

தாமரை பதில்கள் : 1 to 4

கேள்வி எண் : 1
கேட்டவர் : tamilanbu


'உலகமயமாதல்' - தமிழர்களைப் பொறுத்தவரையில் நன்மையா? தீமையா? ஏன்?


கத்தியால் நன்மையா தீமையா? அதை உபயோகப்படுத்தும் விதத்தில்தானே இருக்கிறது.


ஒரு குடும்பத்திலேயே அதுவும் கணவன் மனைவி இருவர் இருக்கும்போதே விட்டுக் கொடுத்தல் மிக அவசியம். 

எல்லோரும் தன் நன்மையை மட்டுமே நோக்கினால் உலகமயமாக்கல் என்பது வீண். வளங்களைப் பகிர்ந்து கொள்வோம் என்ற நோக்கினில் மட்டும் அமைந்தால் உலகமயமாக்கல் பயன் தரும்.


=======================================================


கேள்வி எண் : 2
கேட்டவர் : ஓவியாதேய்ங்காய்ப்பால் உடலுக்கு நல்லதா? கெடுதியா? 

அதுவும் வேக வைத்த தேங்காய்ப்பாலில் கெடுதி மிக அதிகமா? 
கச்சான் எண்ணை, நல்ல எண்ணை இவைகளைவிட தேங்காய் எண்ணையில் கொழுப்பு குறைவு என்பது சரியா?

தேங்காய் 80-90 சதவிகிதம் நீரால் ஆனது. தேங்காயில் கொழுப்பு இருந்த போதிலும் அது நடுத்தர அளவிலானது. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி,சி.ஈ, சோடியம். மக்னீசியம், தாமிரம், கந்தகம், குளோரின், சர்க்கரை மற்றும் இரும்புச் சத்துக்கள் தேங்காயில் உள்ளன.


தேங்காய்பாலை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நல்லெண்ணையில் இருக்கும் கொழுப்பு வேறுவகையானது, நல்லெண்ணெய்யை விட தேங்காய் எண்ணெய் அதிகத் தீமை தரும்.


=======================================================


கேள்வி எண் : 3
கேட்டவர் : Aren


விலைவாசி அதிகம் என்று வேலை நிறுத்தம் செய்யும் கம்யூனிஸ்டு கட்சியினர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைப்பது அரசின் கடமைதான். அதைச் செய்யத் தவறும்பொழுது அதை எடுத்துரைப்பது அரசியலில் ஈடுபட்டோரின் கடமையும் கூட.


வேலை நிறுத்தங்கள் முதலாளித்துவ கம்பெனிகளில் நடத்தப்படும் ஒத்துழையாமைப் போராட்டம். அதை பொதுத்துறையில் செய்வது நல்லதல்ல. வேலை நிறுத்தம் செய்தால் விலைவாசி இன்னும் உயரத்தான் செய்யும்.

கம்யூனிஸ்ட் ஒரு அரசியல் கட்சி. எனவே என்ன செய்யவேண்டும் என்பதை திட்டமாய் வரையறுத்து அதை அரசின் பார்வைக்குத் தரவேண்டும். எப்படியாவது விலைவாசியை குறைக்க வேண்டும் என்று போராடுவது ஒரு அரசியல் கட்சிக்கு அழகல்ல. எங்களால் நல்லாட்சி தரமுடியும் என்பவர்கள் நல்ல திட்டங்களை எடுத்துரைத்தல் தானே அழகு.

எந்தத் திட்டங்கள் தவறாய்ப் போய்க்கொண்டிருக்கின்றன, எந்தத் திட்டங்கள் செய்யப்படவேண்டும் என பாராளுமன்றங்களிலும் சட்ட மன்றங்களிலும் விவாதம் நடைபெறாமல்... ஆளுங்கட்சியின் செயல்களை விமர்சித்தல் மாறவேண்டும்

அதே போல் ஆளுங்கட்சி, முந்தைய ஆட்சியின் மேல் பழிபோடுதலும் எதிர் கட்சிகள் சொன்னதைச் செய்தால் அவமானம் என்று நினைக்கும் எண்ணமும் இல்லாமல் இருத்தல்

இவை விலைவாசிக் கட்டுப்பாட்டுக்கு மட்டுமல்ல, நல்ல நாட்டிற்கு முக்கிய அரசியல் தேவைகள்.=======================================================

கேள்வி எண் : 4
கேட்டவர் : Aren


சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டுமா அல்லது இன்னும் தொடரலாமா? விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன்


சச்சின் டெண்டுல்கரின் உடல் தற்பொழுது ஒத்துழைக்க மறுக்கிறது. அதனால் அவர் தன்னுடைய பங்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.


என்னைப் பொருத்தவரை அவர் தற்போது தன்னுடைய ஆட்டத்தின் இறுதி இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அவற்றை அடைந்து, வெற்றித் திருப்தியுடன் ஓய்வு கொள்ள வேண்டும். அதற்காக அவர் தன்னைத் தயார் செய்து கொள்ளுதல் நன்று. (கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் சில கனிகளைப் பறித்தல் நல்லது. அவற்றை இன்னொரு இந்தியன் அடைய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ!!!)


எல்லாவற்றையும் அறிந்திருப்பது ஒருபகுதிதான். அறிந்தவற்றை மற்றவர்களுக்கு பயிற்றுவித்தல் மிகமுக்கியம். அது எல்லோருக்கும் கைவராது. ஆடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் ஒரு பயிற்சியாளராக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.
 

No comments:

Post a Comment