Monday, December 7, 2009

மொய்ப்பொருள் காண்பதறிவு!!!

ஒரு கல்யாணப் பத்திரிக்கை, ஒரு பிறந்த நாள் விழா அழைப்பு இல்லை வேற எதோ பாராட்டு விழா.. இதில என்ன மிகப்பெரிய டென்ஷன்னு கேட்டீங்கன்னா, மொய்தான்.

மொய்ல மூணு வகை உண்டு

1. முதல் மொய் (அவங்களுக்கும் நமக்கும் மொய்யுறவே இல்லாம இருக்கறது. இதுதான் அச்சாரம்)

2. திரும்பச் செய்யும் மொய்.

3. அனாமத்து மொய். (இது சும்மா ஒரு கெத்துக்கு செய்ய வேண்டியது. அவங்க கெபாசிடிக்கு (வயறுதான் வேறென்ன) நம்ம வீட்டுக்கு கூப்பிட்டா தொலைஞ்சோம்..)

இதுல ஈஸி அனாமத்து மொய்தான். ஆனால் அதை கடைசியா பார்ப்போம்.

முதல்ல முதல் மொய்க்கு வருவோம்.

முதல் மொய் ;

இது நம்மோட உறவுக்கே அச்சாரம் அப்படிங்கும்போது கொஞ்சம் மூளையைச் செலவு பண்ணித்தான் ஆகணும். சில கேள்விகள் டிப்ஸ்கள் இதற்கு ரொம்ப உதவும்

1. அவங்க நம்ம சைடு உறவா? வீட்டுக்காரம்மா சைடு உறவா?

நம்ம சைடு உறவுன்னா வீட்டுக்காரம்மாவையும், வீட்டுக்காரம்மா சைடு உறவுன்னா வீட்டுக்காரம்மாவையும் என்ன மதிப்பு அப்படின்னு கேட்டுக்கலாம்.

2. அவர்களோட மொய்பழக்கம் எப்படி? திரும்பச் செய்வாங்களா மாட்டாங்களா?

3. திரும்பச் செய்யும் போது அவங்க லெவலுக்குச் செய்வாங்களா? நம்ம லெவலுக்குச் செய்வாங்களா இல்லை மொய் லெவலுக்குச் செய்வாங்களா?

4. இப்பொ வீட்ல இருக்கற வேற யாராவது கொடுத்த மொய்ப்பொருளை இவங்க தலையில கட்ட முடியுமா?

முதல் மூணும் மைண்ட் கேம். நாலாவது விஷயத்திற்கு நாம எப்பவுமே பிரிப்பேர்டா இருக்கறது நல்லது.

அதெப்படின்னா, வரும் மொய்ப்பொருளை பிரிச்செடுத்து அதில் நமக்கு உபயோகமில்லாத விஷயங்களை யார் கொடுத்தது மாதிரி விவரங்களோட பத்திரமா அட்டைப் பெட்டியோட வச்சுக்கணும். நீங்க சாமர்த்திய சாலின்னா கிஃப்ட் ரேப் பிரிச்ச அடையாளம் தெரியாம ரீபேக் செஞ்சு அதோட வேல்யூ, யார் கொடுத்தாங்க அப்படிங்கற விவரங்களோட சேமிச்சு வச்சுக்கணும்.

இந்த கிஃப்டை இதைக் கொடுத்தவருக்கு சம்பந்தமில்லாத இன்னொருத்தருக்கு பெருமையா கொடுக்கலாம்.

கீதையின் சாராம்சம் இதுக்கு எவ்வளவு அழகா பொருந்துது பாருங்க..

என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு
என்ன கொண்டு செல்லப் போகிறோம் காப்பதற்கு
இருப்பவை எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டன
இழப்பவை எல்லாம் இங்கேயே கொடுக்கப்படுகின்றன

யாருக்கு மொய் செய்கிறோமோ அவர்

3 வது கேள்வியின் படி

1. அவர் லெவலுக்குச் செய்வார் என்றால் - நாம நம்ம லெவலுக்கு பணமோ, பொருளோ கொடுக்கலாம்

2. நம்ம லெவலுக்குச் செய்வார் என்றால் - நாம நம்ம லெவலுக்கு பணமோ, பொருளோ கொடுக்கலாம்

3. அவர் மொய்க்கு மொய் என்னும் வண்டினமா இருந்தா பணம் தருவது சரிப்படாது, ஏன்னா பணத்தோட மதிப்பு குறைஞ்சுகிட்டே போகுது. அதனால டக்குன்னு விலை யோசிக்க முடியாத, பார்க்க காஸ்ட்லியா தெரியற, யூஸ் பண்ண முடியாத (அதாவது குவாலிட்டி கண்டு பிடிக்க முடியாத) ஐட்டத்தை பேக் பண்ணிடறது நல்லது. மொய் வாங்குறவருக்கு ஒரு டைலமா இருக்கணும். காஸ்ட்லி ஐட்டமா இல்லையான்னு. திரும்ப அவர் மொய் செய்யும் போது பேரைக் காப்பாத்திக்க வாவது காஸ்ட்லியா வாங்கிக் கொடுப்பார்.

இப்போ முதல் மொய் பார்த்தாச்சி..

அடுத்தது

மறுமொய்..

முதல் மொய்ல இருக்கிற தகிடு தத்தம்தான் மேல இருக்கற விவரிப்பிலியே விளங்கிடுச்சே.. அதனால் மறுமொய் செய்யும் போது.. அடுத்து இந்த மொய்யுறவு தொடர வாய்ப்ப்பிருக்கான்னு பார்க்கணும். வாய்ப்பிருந்தா முதல் வகைப்படி செய்யணும். இல்லையின்னா அடுத்த வகைப்படி செய்யணும்.

அனாமத்து மொய்:


நமக்குன்னு ஒரு ட்ரெண்ட் செட் பண்ணிக்கிறது நல்லது. பல மதிப்புகளில் கிடைக்கக் கூடிய ஒரே பொருள். அந்தப் பொருளைப் பார்த்தாவே நம்ம நினைப்பு மட்டும்தான் வரணும். உதாரணமா கப் & சாஸர் செட் - இல்லைன்னா - ஒரு பெயிண்டிங் - இப்படி ஒரு ட்ரெண்ட் செட் பண்ணிக்கணும். இன்னார் வந்தா இன்ன மொய்தான் தரப்போறார்னு தெரிஞ்சா, மொய்யெல்லாம் கொண்டுவரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிடுவாங்க, என்ன கிடைக்கும்னு தெரியற வரைக்கும்தான் சஸ்பென்ஸ் ஆர்வம் எல்லாம். இதுதான் கிடைக்கும்னு தெரிஞ்சிட்டா உங்க மொய்யை முதல் வகை மொய் ஆப்ஷன் 4 க்கு பிரிக்காமயே யூஸ் பண்ணலாம். இந்த வகையில் நாம் பல மரங்களைக் காப்பாத்தலாம். (பின்ன கிஃப்ட் பேப்பர் செலவை மிச்சம் பண்ணினா எத்தனை மரங்களைக் காப்பாத்தலாம்??)

"அழியும் பொருள்களை (அதாவது பூக்கள், சாக்லெட்டுகள் இதுமாதிரி)" அழியா காதலுக்கு மட்டுமே மொய்யாய் வைப்பது நல்லது.


புத்தகங்கள்?

படிக்கிற பழக்கம் இருக்கறவங்களா இருந்து மூணாவது வகை மொய்யா இருந்தா ஓகே

மொய்ப்பொருள் ஞானம் பெற்று
மெய்ப்பொருள் நாளும் பெற்று
கைப்பொருள் நிலைக்கப் பெற்று
வைப்பொருள் வாழ்க்கையில் சற்று

No comments:

Post a Comment