Friday, December 18, 2009

சுனாமி!

என்ன தாகத்தில்
எந்தக் காக்கா
எத்தனைக் கல்போட்டதோ
இந்தப் பானை
இப்படி வழிந்ததே!!!

தண்ணீரிலும் கண்ணீரிலுமாய்
தம்மையழுத்திச் சுமந்தவர்கள்
தண்ணீரில் போக
இடிந்து போனவைகளுக்கு மத்தியில்
இடிந்த இவன்

போன நான்கு கைகளுக்கு பதில்
நான்காயிரம் கைகள் அணைக்க
வந்தப் பேரலைக்கெதிராய்
அன்புப் பேரலை

கடலே உனக்கு
ஆறுகளில் தண்ணீர் வற்றிப் போனதால்
எங்கள் கண்ணீர் தேடி வந்தாயோ

கடலே இன்றுனக்கு
கண்ணீர் உப்பிட்டோம்
உன்
உயிர் உள்ள வரை
மறக்காதிரு..

அத்தனை நீரிருந்தும்
ஈரமில்லாக் கடல்

தாயின் இதயத் துடிப்பைத்
தட்டிப் பார்த்து தேடுகிறேன்
அன்பிற்கான தாகத்துடன்.. 

கரை சேர்ந்த நான் (கண்ணீர்க்) கடலில்
கடல் சேர்ந்த அவர்கள் உடல்
எந்தக் கரையில்?

சிலிர்த்த பூமியே
குத்திக் குத்திக் கொல்லுவேன்
இன்னுமொருமுறை சிலிர்த்து
என்னையும் சேர்த்துக் கொல்(ள்)!

பொங்கி அடங்கிய கடல்
பொங்கி எழுகிற மனம்
அது அழித்தது
இது ஆக்கட்டும்..

உறவில்லாமல் கிடந்த அனாதைச் சிறுவன் சுனாமியினால் உள்ளம் இளகிய பலபேரினால் உறவுகள் கிடைக்கப் பெற்றான் என மாறுபாடாகவும் சிந்திக்க

இத்தனை நாள் என்னருகில் இருந்த நீ
இன்று மட்டும் ஏன் போனாய்?
கடல் திரும்பக் கேட்டால?

என்ன இருந்தது
எதை நான் இழந்தது
அன்று அனாதை,
இன்று சுனாமிக் குழந்தை
ஒற்றை வேலைச் சோறில்லை அன்று
தத்தெடுக்க ஆயிரம் பேர் இன்று
இருந்தாலும்
இது நல்லதா கெட்டதா
புரியாமல் நான்.


.

No comments:

Post a Comment