Wednesday, December 9, 2009

கவிதையை பிரித்து மேய்வது எப்படி? - பாகம் 1

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.


இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோமா தோழர்களே!..

ஆனால் விரிக்க விரிக்க இதில் எத்தனை பொருள்கள் உள்ளன எனப் பார்ப்போமா?.


இது இன்னிசை வெண்பா என்னும் பாவகையை சேர்ந்தது.



பொருள் 1.

வெள்ளைத் தாமரை வெட்கத்தில் சிவந்து செந்தாமரையாய் மொட்டவிழ்ந்து
வண்டுகளை மொய்க்க வைக்கும் இனிக்கும் தேன் போன்ற தமிழை தன் இதழில் கசியவிட

அந்த பழமையான செந்தமிழ்த் தேனைக் கண்டோரில் உண்டோர் அமரத்துவம் பெறுகின்றனர்,

உண்ணாதோர் இருப்புக் கொள்ளாமல் அமரமுடியாமல் தவிக்கின்றனர். உண்ணுதல் வேண்டி அலைகின்றனர்.

இன்னும் கருத்துக்கள் பின்னர் தருகிறேன். இது நேரிடையான கருத்து..

கருத்தினுள்ளே இருக்க வேண்டியது உட்கருத்தாயிற்றே.. அந்த உட்கருத்தை அறிய பொழிப்புரை அதாவது கவிஞன் எந்நிகழ்ச்சியை சொல்லுகிறான் என அறியவேண்டும்..

பொழிப்புரை

வெண்ணிறமுகம், வெட்கத்தில் சிவந்து செந்நிறமாக, மலர்ந்து, அந்த முகத்திலிருக்கும் இதழ்களில் இருந்து தேன் போன்ற தமிழ் கசிகிறது.
இப்படி செந்தமிழ் எனத் தமிழுக்கு சிவப்பு நிறம் ஏற ஆதி - அதாவது மூலம், காரணம் கண்டோரில், கேட்டோர் சோமபானம் உண்ட தேவர்கள் போல மயங்கிக் கிடக்கின்றனர். கேட்காதவர் எப்போது கேட்போமோ எனத் துடிக்கின்றனர்.

பதவுரைக்கும் பொழிப்புரைக்கும் வித்தியாசம் பாருங்கள்,

பதவுரையில் நேரடியான அர்த்தம் மட்டுமே கண்டோம். ஆனால் சில வார்த்தைகளுக்கு இடையே இருக்கும் அந்தப் பிணைப்பு, கவிஞன் கண்ட அந்தக் காட்சியை நாம் காணுதலால் மட்டுமே முடிகிறது. அதாவது

ஒரு பெண் நாணி முகம் சிவந்து, தேன் குரலில் பாடுகிறாள். அதைக் கண்டோர், இருவகை,

1, அருகில் உள்ளோர், அவர்களால் பார்க்கவும் முடிகிறது இசையைக் கேட்கவும் முடிகிறது. கேட்டோர் மயங்கிக் நிற்கின்றனர்.

2. தொலைவில் உள்ளோர் அவர்களால் அவளைப் பார்க்க முடிகிறது. மற்றவர்கள் கானத்தில் மயங்கி சிலாகிப்பதைக் கேட்க முடிகிறது. கேட்கத் துடிக்கிறார்கள்..


பொருள் - 2

இதே கவிதையைக் கொஞ்சம் திரும்பப் பார்ப்போமா!!!

ஏன்னா, நாம படிச்ச பாடத்தின் படி, அது என்ன பாவகை, அதன்,கருத்து, பொழிப்புரை, உட்கருத்து எழுதிட்டு, அப்புறம் சொல்நயம், சந்த நயம், எதுகை மோனைச் சிறப்புகள், அணி நயம் என உள்ள புகுந்திடுவோம்..

ஒரு கவிதையில இருக்கிற நயத்தை சொல்ல அந்தக் கவிதையை திருப்பி திருப்பிபடிக்கணும். லிட்டரலா திருப்பி கூட படிக்கலாம்.. எப்படின்னா

கண்டார் ஆதிச் செந்தமிழ்

அதாவது செந்தமிழ் என்பது முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ்
அதைக்கண்டவர்களில்

உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே

உண்டார் அதை அனுபவிப்பர்கள் அதின் அமிழ்தான சுவையை உண்பதால் அமரர்களாகி விடுகின்றனர். தேன் உண்ணார், அப்படி அதன் சுவையை பருக இயலாதவர்கள், அமரார், தம்மொழி இப்படி இல்லையே என இருக்க முடியாமல் பரிதவிப்பர்.

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

அப்படி வண்டுகள் மொய்க்கும்படி இனிய தேனை தமிழ் வார்த்திட


வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

வெண்தாமரைகள் தம்மில் அச்சுவைமிகு தேனில்லையே என வெட்கமடைந்து முகம் சிவந்து செந்தாமரையாகி மலரும்.


இவ்வளவுதானா அர்த்தம்??

பொருள் 3

கண்டார் ஆதிச் செந்தமிழ்

அதாவது செந்தமிழ் என்பது முதன்மையான மொழி.. ஆதிச் செந்தமிழ், அதைக்கண்டவர்களில்

உண்டார் அமரர்தேன் உண்ணார் அமரரே

உண்டாரும், உணர்ந்து அனுபவித்தவர்களும் அமிர்தம் உண்ட மாதிரி தேவர்களாகின்றனர். உண்ணாமல், அதாவது புரிந்து அனுபவிக்காமல் வெறுமனே கேட்டவர்களும், அதன் இனிமையில் அமரத்துவம் அடைகின்றனர். அமிர்தம் உண்டால் மட்டுமே அமரத்துவம் தரக்கூடியது. தமிழோ, புரிந்தாலும் சுவைதான் புரியா விட்டாலும் சுவைதான்.

இதுமட்டுமா வேறுபட்ட அர்த்தம்.... இன்னும் இருக்கிறதே!!!

பொருள் - 4

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர

பயத்தில் வெளிறி வெண் தாமரையாக இருந்தவர், காதலன் சில்மிசத்தால் வெட்கிச் செந்தாமரையாக சிரித்துச் சிவக்க

வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட

வண்டுகள் மொய்க்கின்ற(வண்டார்) தேன் சுவை தமிழை பொழியும் காதலியின் இதழ்கள் பொழிய


உண்டா ரமரர்தேன் உண்ணா ரமரரே

பருகிய அமரர் தேன் சுவையற்றதென கருதி தேனை உண்ண மாட்டார்

கண்டாரா திச்செந் தமிழ்....

பழமையும் செழுமையும் மிகுந்த அந்த செந்தமிழ் ருசி கண்டவர்.


அதாவது நாணத்தில் சிவந்த காதலியின் உதடுகளில் கசியும் செந்தமிழ் ருசி கண்ட கணவர், தேனை ஒரு போதும் உண்ண மாட்டார்.

பொருள் - 5

அதுசரி, இப்படி ஒரு கவிதையில் பல்வேறு விதமான விஷயங்கள் வரும்பொழுது எப்படி உண்மை உட்கருத்தை கண்டறிவது?

இதற்குத்தான் திணை பயன்படுகிறது? இது அகத்திணையா? புறத்திணையா? எழுதியது காதலியின் தேன்சொட்டும் மொழிகளைப் பற்றியா? இல்லை தமிழின் இனிமை பற்றியா?

அகத்திணையில் இது குறிஞ்சித் திணையின் பாற்படும் - கூடலும் கூடல் நிமித்தமும் அல்லவா?

புறத்திணையில் இது பொதுவியல் திணையாம்..


இது குறிஞ்சித் திணை, ஆமாம், தேனிருக்கு, வண்டிருக்கு, காதலி இருக்கிறாள், தேனுண்ட மயக்கம் இருக்கு, ஆனால் நெருடுவது

காலம் - யாமம், தாமரை மலர்வதோ காலை, இது மருதத் திணை காலம்
மலர் - தாமரை இதுவும் மருதத்தின் மலர், குறிஞ்சி, காந்தள் போன்ற குறிஞ்சித் திணை மலர்கள் இல்லை

ஆனால் மருதத்தின் கருப்பொருளோ - ஊடலும் ஊடல் நிமித்தமும்..

கவிதையில் ஊடல் பொருளும் உண்டோ???

இருக்கிறதே!!! கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

க்ளூ தரட்டுமா? இதுவரை ஒரு ஆண் சொல்வதாக இருந்த இந்தக் கவிதையை, ஒரு பெண் சொல்வதாக எண்ணிப் பாருங்கள்


கல்யாணமாகி நாளாச்சு, நம்ம தலைவனுக்கு மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் முடிஞ்சு, தமிழ் மன்றத்தில வந்து உட்கார்ந்து இதைப் படிச்சுகிட்டு இருக்காரு,,

இது காட்சி,

தலைவி சொல்றாங்க

வெண்டா மரைவெட்கிச் செந்தா மரைமலர
வண்டா ரருந்தமிழ் தேனிதழ் வார்த்திட
உண்டா ரமரர்

அதாவது, புதுப்பெண்ணாய், அறியாப்பெண்ணாய் பயத்தில் வெளுத்திருந்த வெண்தாமரை அவள், அவள் வெட்கிச் சிவந்து செந்தாமரையாய் ஆகி, வண்டுகள் மொய்க்கும் தேன் போன்ற இனிய குரலில் தமிழ் பேச உண்டார் என் தேவன்.. அது ஒருகாலம்..

தேன் உண்ணா ரமரரே
கண்டாரா திச்செந் தமிழ்.

அந்தத் தலைவன் இப்பொழுது அந்த பழைய சிவப்புத்தோல்காரி தமிழைக் கண்ட பின் இந்தத் தேனை உண்ண மாட்டேனென்கிறார்..

ஊடலாய், மன்றத்தில் தமிழ் படித்துக் கொண்டிருக்கும் தலைவனைப் பார்த்து அங்கே என்ன பழைய பஞ்சாங்கத்தை புரட்டிக்கொண்டிருக்கிறீர்கள், இங்கு இருக்கும் தேன் உண்ணாமல் எனக் கேட்கிறாள்..!!!

ஆக
முதல் கருவில் தமிழ்,
இரண்டாம் கருவில் காதலியின் இனிய மொழி,
மூன்றாவது கருவில் தமிழ் மேல் காதலி கொண்ட பொறாமை


இவ்வளவுதானா இந்த நான்கு வரிகளில்? இன்னும் இருக்கு..

பொருள் - 6

கவிதை பிறந்த சூழ்நிலைக்கும் கவிதையின் பொருளுக்கும் தொடர்பு இருக்கும் ..

அப்படி என்ன சூழ்நிலை இருந்தது? இக்கவிதை எழுதும் பொழுது கவிஞன் கண்டதென்ன நிஜத்தில்??

ஆதி ஒரு கவிதை எழுதினார் :


எழுத்துக்களில் நீயமர்ந்து இருக்க வேண்டும் - உனை
எழுதாத கவிதையினி இறக்க வேண்டும்
பொழுதுகளை உனையெண்ணிப் போக்க வேண்டும் - என்
புன்னகையும் உன்நினைவில் பூக்க வேண்டும்
விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்
கொழுந்துதீயாய் என்னில்நீ எரிய வேண்டும் - தமிழ்
கொட்டும்மே கமாய்என்நா மொழிய வேண்டும்

அதற்குப் பின் சாம்பவி அதற்கு பதில் எழுதினார்


வேண்டுமென கேட்டால் நான்
வந்திடுவேனோ... !
கொழுந்தீயினில் நானுந்தான்
வெந்திடுவேனோ.... !

நானில்லா உன்கவிதை
வேண்டாமென்றாயே... !
நானிருக்க என்னிருக்கை
வெண்டாமரையே... !


இந்த இரண்டு கவிதைகள் படித்து முடித்த உடன் இதன் தொடர்ச்சியாய் இக்கவிதை வெளிப்பட்டிருக்கிறது..

அப்படியானால் இது இன்னொரு கோணத்தில் பார்க்கப் பட வேண்டியது..

இது நான்காவது கோணம் நண்பர்களே!!!

ஆதி என்ன சொல்கிறார்? சாம்பவி என்ன சொல்கிறார்?


கவிதைகளில் இருக்கும் எழுத்துப் பிழைகள் வேண்டாம், நெருடல்கள் மட்டும் சொல்கிறேன்
ஆதியின் கவிதையைப் படித்தால் அவர் தமிழ் பித்து கொண்டு தமிழ் மட்டுமே எழுத வேண்டும், தமிழ் மட்டுமே வாழ வேண்டும், தமிழினைத் துணை கொண்டே தன் பொழுதுகள் போகவேண்டும், தன் உதட்டில் உதிர்க்கும் புன்னகை கூட தமிழ் சுவை கண்டு மகிழ்ந்ததால் இருக்க வேண்டும் தமிழ் அவருள் விழுது விட்டு வளர, தமிழ் தாகத்தில் அவர் அலைய, தமிழ் அவருள் கொழுந்து விட்டு எரிய அவர் மழை போல் பலகவிதை பொழிய வேண்டும் என கூறுகிறார்..

ஆனால், கவிதையை ஊன்றிக் கவனித்தால் சட்டென தெரியும் வித்தியாசம்..



விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

இதுவரை உன்னை, உன்னை என்ற ஆதி, இப்பொழுது தமிழ் எனப் படர்க்கையில் போகிறார். அப்படியானால் உன்னை என முன்னிலையில் அவர் வைத்தது யாரை என கேள்வி போகிறது..


கொழுந்துதீயாய் என்னில்நீ எரிய வேண்டும் - தமிழ்
கொட்டும்மே கமாய்என்நா மொழிய வேண்டும்

ஆக மீண்டும் இவ்வரிகளில் பாடப்படும் பொருளும், தமிழும் இரண்டாய் பிரிகிறது

அப்படிப் பார்க்கப் போனால் மூன்றாம் வரியில் உள்ள

விழுதுகளாய் என்எண்ணம் விரிய வேண்டும் - தமிழ்
விரகத்தில் நானேங்கி திரிய வேண்டும்

என்ற வரியில் உள்ள தமிழ் என்ற வார்த்தை மாற்றப்பட்டது கண்கூடாய் தெரிகிறது..

அவசரகதியில் எழுதிய கவிதையில் இப்படி முரண்கள் வருவது சகஜம்..

ஆதியின் கவிதையின் உட்கருத்து ::

நான் தமிழ் பைத்தியம்.. தமிழ் தமிழ் தமிழ் இது மட்டுமே!!

அதற்குச் சாம்பவி என்ன சொல்கிறார்?

தொடரும்.

...

No comments:

Post a Comment