Monday, December 7, 2009

நிலவுக்குப் போகலாம் வாருங்கள் !!!

லெனின் ராம் அவர்கள் எழுதிய நிலவிற்குப் போகலாம் வாங்க கவிதை:

பயணத்திற்கு முன் சில பயனுள்ள அறிவிப்பு:
---------------------------------------
-நிலவில் காற்று & நீர் கிடையாது. ஆக, நிலவில் (காற்று இல்லாத இடத்தில்) மனிதனுக்குக் காது கேட்காது.
-பூமியின் நிழல், நிலவின் மீது படுவதால் தான், வளர் பிறையும், தேய்பிறையும் நடக்கின்றன.
-சூரிய குடும்பத்தில் தற்பொழுது 8 கோள்கள் தான் இருக்கின்றன. புளுட்டோவை கோள் வரிசையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
-ஒரு பொருளின் எடை 1/6 தான் நிலவில் இருக்கும். அதாவது, பூமியில் 60 கிலோ, நிலவில் 10 கிலோ தான்.

பயணியுங்கள் இப்போது:
---------------------

முந்தாநாள் வரை முழுக்கறுப்பு - அமாவாசையாய்!
பதினைந்தே நாளில் பளபளப்பு - பவுர்ணமியாய்!
நிலவே, என்ன முகப்பசை உபயோகிக்கிறாய்?

எந்த முட்டாள் பயல்,
மொத்த மாவையும் ஒன்றாய் சேர்த்து, ஓரேஒரு லட்டு செய்து
அதையும் எல்லோருக்கும் எட்டாத தூரத்தில் தூக்கி எறிந்தவன்?

நிலவே,சொல்வதைக் கேள்!
எத்தனை முறை உலகத்தைச் சுற்றினாலும் உனக்குக் கிடைக்காது.
யானைமுகன் அந்த ஞானப்பழத்தை எப்போதோ சாப்பிட்டுவிட்டான்!

நாங்கள் உன்மேல் காலடி வைத்ததும் கத்தினாயா?
மன்னித்து விடு!
காற்றில்லா இடத்தில் மனிதனுக்கு காது கேட்காது!

உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?
உன்னுடம்பை தானே கொஞ்சம் கொஞ்சமாய்
நின்று நிதானமாய் தன் நிழல் வாயின் மூலம்
தின்று தீர்க்கிறது, இந்த திமிர் பிடித்த பூமி!
பிறகு ஏன் இதையே சுற்றிச்சுற்றி வருகிறாய்?

என்னது?
மனிதன் ஏதாவது தருவான் என்றா
உடல் தேய்ந்தாலும் பரவாயில்லை என்று
உலகத்தைச் சுற்றுகிறாய்?
அடப்பாவமே!
இவன் எச்சில் கையால் கூட காக்காய் விரட்டமாட்டான்!
உன்னிடம் வந்த பின்பும், அள்ளாமல் இருக்கிறானே!
அதற்கு ஆனந்தப் படு!

குருதி பாயும் இதயம் இருந்தும் இங்கே அரக்க குணம்!
ஈரமே இல்லாத உனக்கு எப்படித் தான் இவ்வளவு இரக்க குணமோ?
மனிதன் உதவி கேட்காமலேயே, ஒளி கொடுக்கிறாயே!

ஆம். நீ சொல்வது சரி தான்!
குடிகாரன் தான் அந்தக் கதிரவன்!
சாயங்காலம் ஆனால் போதும்,
சாராயம் குடித்துவிட்டு எங்கு போய் சாய்கிறானோ?
ஏதோ, நீ கொடுக்கும் வெளிச்சத்தில் தான்
பூமி பாதை மாறாமல் பயணிக்கிறதோ?

சரி, இரவில் உன் வீட்டில் தங்குகிறான் சூரியன் என்கிறாய்.
பகலில் எங்கு போய்கிறான் தெரியுமா, உன் ஏகபத்தினி விரதன்?
உன் சகக்கழுத்தி* பூமியோடு சந்தோஷமாய் இருக்கிறான்.
பொறு!
நீ கோபப்படுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.
உன்னைச் சேர்க்காமல், எங்களுக்குத் தெரிந்தே அவனுக்கு எட்டு மனைவிகள்!
இதை மானிடன் நான் ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும் என்கிறாயா?
அடுத்தவனைப் போட்டுக் கொடுப்பதில் எங்களுக்கு அலாதி சுகம்!

'உடற்பயிற்சி செய்யாமலேயே உடல்எடை குறைக்கலாம் வாருங்கள்'
என்று விளம்பரம் கொடுத்து எங்களை வலைக்கப் பார்க்கிறாயா?
முதலில் நீராலும், காற்றாலும் உன்னை நிரப்பு!
பிறகு பார்!
கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு வந்து கும்மாளம் அடிக்கிறோம்!

*சகக்கழுத்தி - சக்காளத்தி (நடைமுறைத் தமிழில்), ஒன்றிற்கு மேற்பட்ட தாரங்கள் (உரைநடை தமிழில்)

இப்பொழுது லாவணியாக அல்லிராணி எழுதிய பதிலுக்குப் பதில் :

முந்தாநாள் வரை முழுக்கறுப்பு - அமாவாசையாய்!
பதினைந்தே நாளில் பளபளப்பு - பவுர்ணமியாய்!
நிலவே, என்ன முகப்பசை உபயோகிக்கிறாய்?

எனக்கு மேக்கப் போடவும் கலைக்கவுமே நேரம் சரியாக இருக்கிறது...
ஒரு நாள் ஜொலிக்க 14 நாட்கள் மேக்கப், 14 நாட்கள் கலைப்பு..யாரோ கமலாமே 5 மணி நேரம் மேக்கப் போடுவதாகச் சொல்கிறீர்களாமே.. அவரெல்லாம் என் முன் தூசு.

எந்த முட்டாள் பயல்,
மொத்த மாவையும் ஒன்றாய் சேர்த்து, ஓரேஒரு லட்டு செய்து
அதையும் எல்லோருக்கும் எட்டாத தூரத்தில் தூக்கி எறிந்தவன்?

எந்த புத்திசாலி வானத்தில் வைத்த அந்த லட்டை மெதுவாய் மெதுவாய் கபளீகரம் செய்தது??? தின்பதாவ்து சிந்தாமல் தின்றானா? நட்சத்திரமாய் சிதறச் சிதற..

நிலவே,சொல்வதைக் கேள்!
எத்தனை முறை உலகத்தைச் சுற்றினாலும் உனக்குக் கிடைக்காது.
யானைமுகன் அந்த ஞானப்பழத்தை எப்போதோ சாப்பிட்டுவிட்டான்!

பழம் போனால் போகட்டும்.. கொட்டையாவது கிடைக்குமா என்றுதான்...

நாங்கள் உன்மேல் காலடி வைத்ததும் கத்தினாயா?
மன்னித்து விடு!
காற்றில்லா இடத்தில் மனிதனுக்கு காது கேட்காது!

நான் கத்தவில்லை.. உன் ஷூ நாத்தம் தாங்காமல் தூ எனத் துப்பினேன்.. நீ புழுதி என துடைத்து விட்டுக் கொண்டாயே..

உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?
உன்னுடம்பை தானே கொஞ்சம் கொஞ்சமாய்
நின்று நிதானமாய் தன் நிழல் வாயின் மூலம்
தின்று தீர்க்கிறது, இந்த திமிர் பிடித்த பூமி!
பிறகு ஏன் இதையே சுற்றிச்சுற்றி வருகிறாய்?

பழிக்குப் பழி வாங்கத்தான்.. சூரியனை மறைத்து கிரகணம் என்று கிறுக்குப் பிடிக்க வைத்ததை மறந்தாயோ???

என்னது?
மனிதன் ஏதாவது தருவான் என்றா
உடல் தேய்ந்தாலும் பரவாயில்லை என்று
உலகத்தைச் சுற்றுகிறாய்?
அடப்பாவமே!
இவன் எச்சில் கையால் கூட காக்காய் விரட்டமாட்டான்!
உன்னிடம் வந்த பின்பும், அள்ளாமல் இருக்கிறானே!
அதற்கு ஆனந்தப் படு!

மனிதன் தரமாட்டான் என்று உறுதியாய் தெரியும்.. திரும்ப வரமாட்டான் என்று உறுதியில்லையே! அள்ளி வந்தானே ஆர்ம்ஸ்ட்ராங்.. சந்திரப்புழுதி... மனிதனுக்காக ஒளி தரவில்லை..

குருதி பாயும் இதயம் இருந்தும் இங்கே அரக்க குணம்!
ஈரமே இல்லாத உனக்கு எப்படித் தான் இவ்வளவு இரக்க குணமோ?
மனிதன் உதவி கேட்காமலேயே, ஒளி கொடுக்கிறாயே!

பாவம் சிற்றுயிர்கள் இவன் டார்ச் டார்ச்சரில் தாங்காதே எனத் தான்.. இதமான ஒளி.. ரத்தம் பாய்வதால்தான் ரத்த வெறி.. நான் பற்றற்றவன் எதையும் அதிகம் கவரமாட்டேன்..(நிலவிற்கு ஈர்ப்பு விசை குறைவு)
குருதி பாய்வதால்தானே இரத்த வெறி..

ஆம். நீ சொல்வது சரி தான்!
குடிகாரன் தான் அந்தக் கதிரவன்!
சாயங்காலம் ஆனால் போதும்,
சாராயம் குடித்துவிட்டு எங்கு போய் சாய்கிறானோ?
ஏதோ, நீ கொடுக்கும் வெளிச்சத்தில் தான்
பூமி பாதை மாறாமல் பயணிக்கிறதோ?

சரி, இரவில் உன் வீட்டில் தங்குகிறான் சூரியன் என்கிறாய்.
பகலில் எங்கு போய்கிறான் தெரியுமா, உன் ஏகபத்தினி விரதன்?
உன் சகக்கழுத்தி* பூமியோடு சந்தோஷமாய் இருக்கிறான்.
பொறு!
நீ கோபப்படுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.
உன்னைச் சேர்க்காமல், எங்களுக்குத் தெரிந்தே அவனுக்கு எட்டு மனைவிகள்!
இதை மானிடன் நான் ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும் என்கிறாயா?
அடுத்தவனைப் போட்டுக் கொடுப்பதில் எங்களுக்கு அலாதி சுகம்!'

கதிரவன் என் கணவனல்ல.. எனக்கு கடன் கொடுத்தவன்.. வசூலுக்காக அவன் துரத்த நான் ஓட அவன் அருகில் வர நான் மறைய.. இதெல்லாம் நான் சொல்லி உனக்கு விளங்க வேண்டுமா?

அவன் குடித்து விட்டு சாய்வதில்லை.. என்னைத் தேடித்தேடி பைத்தியமாய் உலகெங்கும் வலம் வருகிறான்..

அவன் என்னைத் தேடி முகம் சிவக்க கோபத்துடன் அலைவதை பார்த்து விஜய்காந்தைக் கண்ட ஜெயலலிதா போல் குடிகாரன் என்றீர்களே.. போங்கள் பொல்லாத ஆளு நீங்கள்...

பூமி கூடத் தள்ளாடுகிறது புரியுமா உங்களுக்கு (Wobling in the Axis)..
தள்ளாட்டதில் இருந்தால் தள்ளாட்டம் தெரியவா போகிறது?? (ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை)

சகக் கழுத்தி அல்ல சகக் கிழத்தி (கிழத்தி - மனைவி)..
எல்லாம் ஒரு போங்குதான்.. பூமியை நான் சுற்ற பூமி என்னைப் பார்க்க ஆசைப்பட்டு சுற்றிசுற்றி என்னோடு இணைந்து சூரியனைச் சுற்ற இதை அந்த எட்டுப்பேரும் சுற்றி சுற்றி வேடிக்கைப் பார்க்க.. சூரியன் தலைசுற்றி பால்வீதியில் பம்பரமாய் சுற்றி கருந்துளை நோக்கி நகர.. கருந்துளையும் சுற்றிச் சுற்றி அணுவைப் பிளந்து தன்னுள் அடக்க...
ஒளி வெள்ளத்திற்குப் பின் இப்படி ஒரு இருட்டான சரித்திரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.. வாயைப் பிளந்து கொண்டு பார்க்காதே உள்ளே ஈ சுற்றிச் சுற்றி வருகிறது...

உடற்பயிற்சி செய்யாமலேயே உடல்எடை குறைக்கலாம் வாருங்கள்'
என்று விளம்பரம் கொடுத்து எங்களை வலைக்கப் பார்க்கிறாயா?
முதலில் நீராலும், காற்றாலும் உன்னை நிரப்பு!
பிறகு பார்!
கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு வந்து கும்மாளம் அடிக்கிறோம்!

நீரும் வேண்டாம் நீரும் வேண்டாம்.. காற்றும் வேண்டாம் உங்கள் கழிவுகளும் வேண்டாம்.. நான் சலனமின்றி வாழ்கிறேன்.

..

No comments:

Post a Comment