Wednesday, December 9, 2009

புதுமையான புதுக்கவிதை !

இருக்கிறதென்று
இல்லாதது கருதப்படவேண்டி..

வார்த்தை மாலைகளும்
வானவில் கவிதைகளும்
கோடிகோடியாய் கொட்டப்பட்டன...
கடலில்!

கரையோர அலைகளின் ஆர்ப்பரிப்பை
கரகோஷமாய் எண்ணிப்
புளகாங்கிதமாய்!

ஆழ்கடலோ அமைதியாக!!!


--------------------------------------------------------------------------------------------------

வார்த்தை மாலைகளும்
வானவில் கவிதைகளும்
கோடிகோடியாய் கொட்டப்பட்டன...
கடலில்!

கடல் என்பது கடல் அல்ல.. வேறு ஏதோ ஒன்று கடல் மாதிரி..

இருக்கிறதென்று
இல்லாதது கருதப்படவேண்டி..

அதாவது இல்லாத ஒன்று இருக்கிறதென்று தோற்றம் உருவாகும் படி..

கவிதைகள், கதைகள் எழுதிக் குவிக்கப்படுகின்றன.. கடலில்.. எந்தக் கடல்? தமிழ்க் கடலா? இணையக் கடலா? இல்லை காகிதக் கடலா?

கரையோர அலைகளின் ஆர்ப்பரிப்பை
கரகோஷமாய் எண்ணிப்
புளகாங்கிதமாய்!

கரையோரம் இருக்கும் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன. எதற்கு? கொட்டப்பட்ட கதைகளுக்கு.. அப்படியானால், கடல் என்பது என்ன என மறுபடி ஆராய்வோம்..

இல்லாதது இருக்கிறதென்று பொய்யாய் புனைச்சுருட்டாய் கவிதைகள் கதைகள் கடலில் கொட்டப்பட்டன.. ஆராவாரித்துக் கொண்டு இருக்கும் கரையோர அலைகளைக் கண்டு கடல் பாராட்டுகிறதென்று எண்ணம் கொண்டு!!

ஏன் கவிதைகளைக் கொண்டு போய் கடலில் கொட்ட வேண்டும்? அலையோசையை கரவோசையாய் ஏன் தவறாய் எடுத்தக் கொள்ள வேண்டும்?

அப்படியென்றால் அது என்னக் கடல்? அது என்ன புனைக(வி)தை?

ஆழ்கடலோ அமைதியாக என்பது எதையோ கொட்டி சுட்டிக் காட்டுகிறது..

சொல்லும் புனைக்கதைகளும் கவிதைகளும் கடலில் கரைத்த பெருங்காயம்..

அலைகளும் கைதட்டவில்லை
ஆழ்கடலிலும் மாற்றமில்லை

ஆதலால் பொய்க்கதை புனையாதே

என்று சங்கேதமாய்


உட்கருத்து -- சும்மா ரீல் விட்டுகிட்டே போகாதே.. இங்க யாரும் நம்பலை என்பதா???

வார்த்தை மாலைகள் - வானவில் கவிதைகள்.

என்ன வித்தியாசம் இருக்கு முரணா?

மாலைகள் மற்றவரைப் போற்ற, புகழப் போடப்படுபவை.. ஆக துதிபாடல்கள்..

வானவில் கவிதைகள் - வானவில்லின் குணங்கள் என்ன? அந்நேரத்து அதிசயம், ஒரு நிறப்பிரிகை, அதாவது இருக்கும் ஒரு வெள்ளொளியை (ஏற்கனவே இருக்கும் ஒரு கருத்தை) பிரித்து ஜாலம் காட்டும் சிறு கவிதைகள்.. அதாவது வசீகர வார்த்தைகள்..போட்டு ஏற்கனவே இருப்பதை மேக்கப் போட்டு காட்டும் கவிதைகள்.. அதாவது அலங்காரச் சொற்கள்.. அதாவது வாய்ஜாலங்கள்

துதி பாடுவது, வாய்ஜாலங்கள் என ஆயிரக்கணக்காய் வார்த்தைகள் கொட்டப் படுவது அரசியல் மேடைகளில்..

அப்போ ஆராவாரிக்கும் அலைகள், பிரியாணிப் பொட்டலத்திற்கு அழைத்து வரப் பட்ட கூட்டமோ?

ஆழ்கடல் வாக்காளரோ?

அப்போ மேடைப் பேச்சிற்கு கிடைக்கும் கைதட்டல்களும் உண்மையில்லை,
வாக்காளனின் மனமும் ஆழமான அமைதியில்

மேடையில் பொன்னாடை. மாலை, சோடா, வாய்ஜாலம்..

இப்படி அரசியல் பிண்ணனியில் ஒரு அர்த்தம் எடுக்கலாமே!!!

அதுசரி கொஞ்சம் போலிச்சாமியாருக்கும் போகலாமே!!!


இல்லாத சக்திகள் இருக்கிறது எனச் சொல்லி, துதி பாடி, வர்ணஜாலமாய் பாடல்கள் பரப்பி விளம்பரங்கள் செய்து

கூடி வரும் கூட்டத்தின் ஆரவாரம் கண்டு அதை மிகச் சிறந்த பாராட்டாய் எடுத்துக் கொண்டு, தன்னை கடவுளாக, சக்திபடைத்தவராக எண்ணிக் கொண்டு

மிதப்பில் இருப்பவர்களுக்கு..

ஆழ்கடலாய் கடவுள் அமைதியாய் இருப்பது புரிவதில்லை..


இதைக் கவிதை என்று சொல்வதை விட ஒரு ஃப்ரேம் வொர்க் எனச் சொல்லலாம்..

பொய்யை உண்மையாக்க முயற்சி, வீண் ஆடம்பரம், முகஸ்துதி, உண்மை

இந்த நான்கு டொமைன்கள்.. அவற்றிற்கு உள்ள தொடர்புகள்..

இதுவே கவிதையாய் வெளிப்பட்டிருக்கிறது..

உதாரணத்திற்கு ஒரு தலைக் காதல்

அவள் தன்னைக் காதலிக்கிறாள், அவளிடம் காதல் இருக்கிறது என்று இல்லாததை இருப்பதாய் காட்ட,

வார்த்தைகளால், கவிதைகளாய் அவளுக்காய் கோடியாய் கொட்ட

அதைக் கேட்ட நண்பர்கள் பொழுது போக்காய் ரசிக்க, அவன் போலி மயக்கத்தில்.. அந்தப் பெண்ணோ அமைதியாய், இவை எதனாலும் பாதிக்கப் படாமல்..

இதையே இருதலைக் காதலில்லா காதல் என்றால்

தங்களுக்குள் காதல் இருக்கிறது எனக் காட்ட, காதலர்கள்னா அப்படித்தான் இப்படித்தான் என உணர்ச்சி பூர்வமாய் வசனம் பேசிக் கொள்ளும் காதலர்கள்,,. சுற்றி இருக்கும் ஜால்ராக் கூட்டத்தின் கேலிகள் கிண்டல்கள்..

உண்மைக் காதலோ அமைதியாய்.. இவர்களுக்கு மத்தியில் காதலும் இல்லை. நண்பர்களும் இதை ஒரு டைம் பாஸ் என்று அறிந்தே இருக்கிறார்கள்.. காதலும் அலட்டிக் கொள்ளவில்லை..

சும்மா நம்ம வெங்கடாஜலபதியை எடுத்துக் கொள்வோம்..

அவர் கடல்.. கோடிக் கோடியாய் அவருக்கு ஸ்ரீவாரி உண்டியலில் கொட்டவும் தான் செய்கிறார்கள்.. அதைக் கண்டு பக்தர்கள் ஆஹா ஓஹோ என்று ஆரவாரம் செய்யத்தான் செய்கிறார்கள்..

ஆனால் அப்படி கோடிக் கோடியாய் கொண்டு வந்து கொட்டுபவனிடம் பக்தி இருப்பதில்லை அவன் பக்தனாக காட்டிக் கொள்கிறான்..

அவன் கோடிக் கோடியாய் கொட்டியபோது ஆராவாரித்த கூட்டத்திற்கும் உண்மையில் அவன் பக்தி மேல் அக்கறையில்லை..

நம்ம வெங்கடாஜலபதியோ பட்டை நாமத்திற்குப் பின் மறைந்து அமைதியாய் ஆழ்கடலாய்..


ஆக இது ஒரு ஃபிரேம் ஒர்க்,

வெறுமனே ஒரு ஃபிரேம் ஒர்க் போட வேண்டிய அவசியம் என்ன? ஒரு கவிதை ஒன்றுக்கு மேற்பட்டவைகளை குறி வைக்கும் பொழுதோ அல்லது சங்கேதமாய் யாருக்கோ எதையோ சொல்ல நினைக்கும் பொழுதோ மட்டுமே இது போன்ற ஃபிரேம் ஒர்க்குகள் கொடுக்கப் பட்டு விடுகின்றன.. இக்கவிதையின் அடுத்த முனையில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து கவிதையின் அர்த்தம் வேறுபடுகிறது..

ஆக இந்தக் கவிதை ஒரு ஆவி.. ஆன்மா மட்டுமே!.. எந்தக் கூட்டுக்குள் நுழைகிறதோ அதாக ஆகி விடுகிறது..

சும்மா ஜாலிக்கு டைட்டானிக் கப்பலை கருப் பொருளா எடுத்துக்குவோம்

இது மூழ்கவே மூழ்காது ... பொய்யான உத்திரவாதம்

அதற்காக எத்தனை விளம்பரங்கள்.. கதைகள்..

அதை நம்பினார்களோ இல்லையோ உலகின் மிகச் சொகுசான கப்பலில் பயணம் செய்யும் ஆர்வத்துடனும், முடியாவிட்டாலும் பரவாயில்லை எனப் பார்க்கும் ஆர்வத்துடனும் மக்கள் அலைகளின் ஆரவாரம்..

ஆனால் ஆழ்கடல் அமைதியாக இருந்தது... அதில் ஒரு பனிமலை தன் தலையை சற்றே வெளிக்காட்டியபடி நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது..

அடுத்த சில நாட்களில் நடந்தது அனைவருக்கும் தெரியும்..

பல நாடோடிப் பாடல்களில் இப்படி சங்கேதமாய் மாமனுக்குச் சேதி சொல்லும் மயில்கள் உண்டு
..

No comments:

Post a Comment