Monday, December 7, 2009

உயிர் உகுத்தவளுக்கு கண்ணீர் உகுக்கிறேன்!!

காலச் சுருக்கில்
தன்
காலத்தைச் சுருக்கிக் கொண்ட
மொட்டுக்கு மலரஞ்சலி

உன் நீண்ட தூக்கம்
சிலருக்கு விழிப்பைத் தரட்டும்..

நீ படமாக இருக்கிறாய்
பாடமாகவும்
யார் சொன்னது
உன்னால் படிக்க முடியவில்லை என்று

விழிகள் வியந்து
விரிந்த கனவுகள் தொலைத்து
விழிகள் வியர்த்து அழுகிறதே

விழி தொலைத்த இமைகளாய்
இருண்ட பெற்றோர்
உன் நினைவுகளை ஊன்றிக் கொண்டு
மெல்ல நடக்கப் பழகட்டும்,
அமைதி தேடிய உன் மனம்
அடையட்டும் ஆத்ம சாந்தி


கல்வி என்னும் சாலையை மட்டுமேக் காணுமாறு கண்மறைத்துக் கட்டிய வண்டிக் குதிரைகள்..

பெற்றோர்கள் பெரியோர்கள் மீதும் அதிகமானத் தவறு இருக்கத்தான் செய்கிறது.. இதைத் தவிர வாழ வேறு வழியே இல்லை என மூளைச் சலவை செய்பவர்கள் அவர்கள்தானே.

நல்ல நண்பர் குழாம், உலகத்தின் மீதான தெளிவான பார்வை இவை இரண்டும் தான் இந்த மாதிரியான கொடுமைகளை மாற்ற உதவும்.

வாழ்க்கைப் பயணத்தில் பேருந்தில் அமர்ந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது சன்னல் வழியே செல்லும் வழியைக் கவனிக்காது, இருண்ட தார்ச் சாலையை மட்டும் பார்த்துக் கொண்டு செல்கிறோம்...

ஒரு பள்ளமோ, மரம் சாய்ந்திருந்தாலோ, மாற்றுப் பாதையில் போகிறோமே தவிர பயணத்தை நிறுத்தி விடுகிறோமா என்ன?

தற்கொலை செய்து கொள்ள மூன்று முக்கியக் காரணங்கள்

1. தன்னம்பிக்கை இன்மை.. கல்வி, காதல், தொழில் போன்றவற்றில் தோல்வி கிட்டும் பொழுது, இருட்டில் தொலைந்ததே வாழ்க்கை, இனி எப்படி வாழ்வது என வாழ்க்கையைச் சட்டென முடித்துக் கொள்வது. சிலர் பழி பாவங்களுக்கு அஞ்சியும் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

2. பழிவாங்குதல் : தன்னை கஷ்டப்படுத்தியவர்களை ஏமாற்றியவர்களை, மறுத்தவர்களை கஷ்டப் படுத்தப் போவதாக, குற்ற உணர்ச்சிக்குத் தள்ள, அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்த வெறியுடன் எடுக்கும் முடிவு

3. வெறுமை : இனி என்ன இருக்கிறது வாழ்க்கையில்.. என்ற வெறுமை. ஒதுக்கி வைக்கப் பட்ட முதியவர்கள், காதலைத் தொலைத்த காதலர்கள், கண்காணா இடம் சென்று அனாதையாய் இறப்பவர்கள்...

செத்துப் போவது என்பது ஒரு மயக்கம் மட்டுமே.. அதனால் அதற்குப் பிறகு என்ன நடந்தாலும் அது நமக்குத் தெரியப் போவதில்லை என்ற ஒரு குருட்டுத் தைரியம் தான் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தூண்டுகிறது..

செத்தவுடன் வாழ்க்கை முடிவதாய் எண்ணிக் கொண்டு விடாதீர்கள்.. வாழ்க்கை ஒரு ரிலே ஓட்டம் மாதிரி தொடரும்.. நல்ல வாழ்க்கைகள் அடுத்தடுத்த தலைமுறைகளால் தொடரப்படுகின்றன.

வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வதாய் வாழும் மக்கள் ஒருபக்கம்..
சின்னச் சின்னத் தோல்விகளை மிகப் பெரிதாய் கற்பனை செய்து கொண்டு துவண்டு போகும் மக்கள் ஒருபக்கம்..

வாழ்க்கையைச் சற்றுத் தள்ளி நின்று பார்த்தால் பயணங்கள் புரியும்..

கல்வி என்பது மதிப்பெண்களால் மதிப்பிடப்படுவதில்லை.. அறிவுக்கும் மதிப்பெண்ணுக்கும் அதிகச் சம்பந்தமில்லை..

அறிவு, சாமர்த்தியம், புத்திசாலித்தனம் என ஒவ்வொன்றும் தனித்தனி..

ஒரு வகையில் சொல்லப்போனால் சமூகம் மெதுவாய் உடைந்து கொண்டிருக்கிறது.. தனி மனித எண்ணம் மேலோங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் தனிமனிதனுக்கு தனக்கான அடையாளம் தேடச் சொல்லி ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டிருக்கிறது..

சின்ன உதாரணம், ஒரு தமிழன் தோற்றால் மற்ற தமிழர்கள் அவனை உற்சாகப் படுத்துகின்றன்ர். அவன் வெல்ல, இல்லையென்றால் அதே காரியத்தை இன்னொரு தமிழன் வெல்ல...

தனிமனிதனாக இருப்பவனுக்குத் தான் தோல்வி என்பது பேரிடியாக அமைகிறது.. வாழ்க்கையின் மீது அவனுக்கு இருக்கும் பிடியை நழுவச் செய்கிறது..

ஒரு குடும்பத்தில் இருப்பவர்க்கு ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து சுமைபகிர்வதால் வெறுமை, தன்னம்பிக்கை இன்மை போன்றவை குறைகின்றன.. நம்மை மனதளவில் நாம் தனியாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே இம்மாதிரிச் சோகங்களைத் தடுக்கும் வழியாகும்..

சிலருக்குச் செவிகொடுப்போம்.. சிலருக்கு மொழிகொடுப்போம்.. சிலருக்குத் தோள்கொடுப்போம்.. சிலருக்கு அன்புப் பார்வையும் புன்னகையும்..

நாம் இருக்கும் ஏரியா பக்கமே இந்தத் துயரம் தலை வைத்துப் படுக்காது

..

No comments:

Post a Comment