டீச்சருங்கன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
ஆமாம். எங்கள நாலாம் வகுப்பில் ஆங்கிலத்தில் கடைசிக் கேள்வி கட்டுரைக் கேள்வி. அதுவும் குறிப்புகள் (ஹிண்ட்ஸ்) கொடுத்து இருப்பாங்க. அதை வைத்து கட்டுரை எழுதனும். எல்லா மக்களும் கிளாஸ்ல எழுதின கட்டுரைங்களை உருவேற்றி எழுத நான் மட்டும் கூலாக அந்த ஹிண்டஸை டெவலப் பண்ண்ணி கதை எழுதி வைப்பேன்.
ஆரம்பத்தில அந்தக் கட்டுரையைப் படிச்சு மண்டையைப் பிச்சுகிட்டு ருக்மணி டீச்சர் லஞ்ச் டயத்தில கூப்டு, என்னடா எல்லாம் ஒழுங்கா எழுதி இருக்க, இந்தக் கட்டுரையை ஏண்டா இப்படி குதறி வச்சிருக்கன்னு கேட்க.. நான் திருட்டு முழி முழிச்சேன்..
அடுத்த முறை ஒழுங்கா படிச்சு எழுதனும், 500 க்கு 492 எடுத்திருக்க, இந்தக்கட்டுரையை ஒழுங்கா எழுதியிருந்தா முழுசா எடுத்திருக்கலாமேன்னாங்க.. அப்பயும் தலையைக் குனிஞ்சிகிட்டு கொறப்பார்வை பார்த்து அப்ப எதுக்கு ஹிண்ட்ஸ் குடுக்கறீங்கன்னு முனகினேன்.. என்ன.. என்னடா சொன்னேன்னு கேட்டாங்க.. ஒண்னுமில்லை டீச்சர் அப்படின்னேன்
சரி உனக்கு நீயா எழுதனும் அவ்வளவு தானேன்னு ஒரு 10, 15 கொஸ்டின் பேப்பர் குடுத்து, எல்லாக் கட்டுரையும் எழுதிகிட்டு வான்னு சொல்லிட்டாங்க.
நான் எழுத அவர் திருத்த, நான் எழுத அவர் திருத்த ஆங்கிலம் கொஞ்சம் வசப்பட்டது.. சில சமயம் தப்பான அர்த்தம் பண்ணிகிட்டு நான் எதெதோ எழுதி இருப்பேன்.. அப்ப சொல்லிக் குடுப்பாங்க.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. நான் பரிட்சையில இந்த மாதிரி செய்யக்கூடாது..
ஒரு வார்த்தையில ஒரு பத்தி எழுத புத்தி தயாராயிட்டது அப்பவே!!..
4, 5, 6, 7 வகுப்புகள், வருஷம் ஒரு பேச்சுப் போட்டி, எல்லாத்திலயும் முதல் பரிசு.. வகுப்பு மட்டுமில்ல ஸ்கூல்லயும் முதலாம் இடம்.. என்னைப் பார்த்து பொறாமைப்பட்ட பெண்கள் கூட்டம் அதிகம். வழக்கமா எதாவது சண்டை.. எல்லாத்துக்கும் கடைசியில இவன் பேசியே டீச்சரைக் கவுத்துர்ரான்னு கமெண்ட் ஒளிஞ்சு இருக்கும்.. (டீச்சர்னா 100 / 100 போட்டுருவாங்க.. இந்த வாத்தியாருங்க ஒண்ணு ரெண்டு மார்க்கு கஞ்சம் பிடிச்சிருவாங்க)
இந்த கால கட்டத்தில் தான் நான் என் முதல் குருவைச் சந்தித்தேன்..
குருன்னா ஒரு வாத்தியார், எனக்குத் தமிழ் பாடம் நடத்தினவர்னெல்லாம் தப்புக் கணக்குப் போடாதீங்க.. ஓ அந்த வீதியில இல்லை ஏரியாவில என்னைக் கூப்பிட்டு எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்னும் தப்புக் கணக்குப் போடாதீங்க..
ஏகலைவன் மாதிரி தூரம் இருந்து இவரோட புராண, இதிகாச, பக்தி கதாகாலட்சேபங்களைக் கேட்டு வளர்ந்தேன்.. இன்றும் இவர் மேல் நான் இத்தனை மரியாதை வைத்திருக்கிறேன் என்று இவருக்குத் தெரியாது (கட்டை விரலைக் கேட்டுடுவார்னு பயமில்லை.. வெட்கம்.) அவருக்கு முன்னால நிக்கக் கூட எனக்கு ஒரு பரவச உணர்வு இருக்கும். தமிழுக்கும் வைணவத்துக்கும் மிகப் பாடுபட்டு பல நூட்கலள் எழுதி வைணவக்கடல் எனப் புகழப்பட்ட கிருஷ்ணமூர்த்தி அவர்கள்தான் அவர்.
வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ண மூர்த்தி.. கணீர் குரல் தெளிந்த ஞானம். மிகுந்த தெளிவு, கம்ப இராமயணத்தையும், வில்லிபாரத்தையும் இவர் குரலில் கேட்டோருக்கு வாழ்நாளில் என்றுமே மறவாது.. மார்கழி மாதம் எனக்கு மிகவும் கொண்டாட்டமான மாதம், அரையாண்டுத்தேர்வே வந்தாலும் கவலை இல்லை.
காலை 3:30 மணிக்கு எழுந்து, பச்சைத்தண்ணீரில் குளித்து விட்டு பால் வாங்க காசு வாங்கிக்கொண்டு புறப்பட்டால், காலை 4:00 to 6:00 கதா காலட்சேபம், காலையில் திருப்பாவை, திருவெம்பாவை, கந்தபுராணம், தேவிபுராணங்கள் இப்படி எதாவது இருக்க மாலையில் இராமாயணம், மகாபாரதம், இராமாயணச் சார்புக் கதைகள் (அரிச்சந்திரன், யயாதி, விசுவாமித்திரர் இப்படி) மஹாபாரதச் சார்புக்கதைகள் என வருடம் ஒன்றுக்கு இரு தலைப்புகளில் அவர் உரையாற்றுவார். மாலை 6:00 லிருந்து எட்டு வரை.. இவர் வழி கற்ற இவையே எனது புராண அறிவின் ஆதிமூலம்.
என்னுடைய மாயாஜாலக்கதை படித்தலும், இந்த மாதிரி பிரசங்கங்கள் கேட்டலும் மட்டுமில்லாமல், ரேடியோ படைப்புகளும் என் தமிழ் அறிவிற்கு விருந்தளித்தன. பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், உரைகள் என பலவற்றைக் கேட்டேன். எனது ஞாபக சக்தி அதிகரித்தது.. 80 பக்க புத்தகமானாலும் ஒரேமூச்சில் படித்து விட்டு அந்தக்கதையை முழுமையாக திருப்பி சொல்லும் ஆற்றல் பெற்றேன். என் அக்காமார்களும் எனக்குச் சளைத்தவர்கள் அல்ல. ஒரு சினிமாவை ஷாட் பை ஷாட்டாக கதை சொல்பவர்கள் சமர்த்தர்கள். எங்கள் வீதியில் இருந்த உமா, போன்றவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சினிமா கதை பேசிக் கொண்டே மாவரைத்து எடுத்துப் போவார்கள்.
ஞாபகச் சக்தி, பிரஸன்ஸ் ஆஃப் மைண்ட், போட்டி மனப்பான்மை, எதையும் திருப்பிப் பார்த்தல் இவையெல்லாம் என்னுடைய சொத்தாகின.
ஏழாவது முடிக்கும் பொழுது மாயாஜாலக்கதைகள் போய் நாவல்கள் படிக்க ஆரம்பித்திருந்தேன். தமிழ் வாணன், முதற்கொண்டு கையில் கிடைத்த தமிழச்சுகளை எல்லாம் படித்தேன். கடலைப் பொட்டலாமாய் இருப்பினும் அந்த ஒரு பக்கத்தில் உள்ள செய்திகள், துணுக்குகளைப் படிப்பேன்,. எதையும் விட்டு வைப்பதில்லை. சேலம் மாவட்ட நூலகத்தில் உறுப்பினன் ஆனேன்,
8வது படிக்கும் பொழுது மாணவர் மன்றத தலைவன் ஆனேன், பெருமையுடன் தேசியக்கொடி ஏற்றி சல்யூட் அடித்தேன்.
தொடரும்
.
No comments:
Post a Comment