Monday, December 7, 2009

அர்த்தநாரீஸ்வரர்!!



மீரா அவர்களின் அர்த்தநாரீஸ்வரர் கவிதையும், அதற்கான என் பதில் கவிதையும்...


சொந்தங்களின்
சொல்லம்புகள்
சாட்டையாய் சுழல..

பிறந்த மண்ணைவிட்டு
வேற்று மண்ணில்
முகமறியா முகங்களோடு
முகம் தொலைக்க...

பண்பட்ட மனம்
புண்பட்டு நின்றது
சக மனிதர்களின்
விலகல் கண்டு
கோபத்தின் உச்சத்தில்
குழந்தைகள் கூட
கொடியவர்களாய் தெரிய....

திடம் மனதிலும்
வலிமை உடலிலும் இருக்க
தன்மானம் விற்று
கடைகளில்
கையேந்திய பொழுது
கூனிகுறுகிய மனதை
நிமிர்த்த வழியின்றி..

வஞ்சித்த வாழ்வை
வலிகளோடு சுமந்து...

விடையறியா கேள்விகளை
விதியென்று ஏற்பதா??
விடைகாண முயற்சிப்பதா??

அறிந்தும் அறியாமல்
உலகிற்கு இந்த கேள்வி

கடவுளின் கலவை
அர்த்தநாரீஸ்வரராய்
கௌரவிக்கபடுமானால்..

அவன் படைத்த
எங்களின்
நிலை மட்டும்
காட்சி பொருளோ??????????
__________________ மீரா

திருமங்கை மகனு(ளு)க்கு தாயின் ஆறுதல்...பதில் கவிதை!!!


நீயாய் நீயிருக்க
தீயாய் ஊரிருக்க
தாயாய் இருப்பதாரோ
தங்க மகளே!

தட்டிய கையொலி
காதில் விழும்பொழுதெல்லாம்
நெஞ்சில் இறங்குதடி
இடி

உன் நளினம் கண்டபோது
என் நளினமும் நாணமும்
தொலைத்து விட்டேன்
சுமந்த வயிறு
சுமந்த மனது
உன்னைப் பிரசவித்த பொழுது
லேசானது
நீ பரிதவித்த போது
கனத்தது

உணர்வையும் உடலையும்
இடம் மாற்றி வைத்துவிட்டு
என்ன விளையாட்டு இது
அந்த பிரம்மனும் தான்
குடித்திருந்தானோ
உன் அப்பனைப் போல்

பாவியடி நான் மகளே!
நள்ளிரவில் விட்டுச் சென்றாய்
நாடோடியாக
இங்கே தாயை விட்டு விட்டு
உலகெல்லாம் யாரையடி தேடுகிறாய்
வா மகளே
என்கட்டை மண்ணில் சாயும்வரை
உழைத்துத் தருகிறேன்
என் பாலருந்தி வளர்ந்தவளே
பால் மயக்கத்துடன்
பரிதவித்துச் சென்றவளே
உண்டு நமக்கும்
இருகைகள்
ஒரு வாழ்வு
வா.

....

No comments:

Post a Comment