Thursday, December 10, 2009

நானும் தமிழும் - பாகம் -3 : முளைச்சு மூணு இலை விட்ட கதை

என்னவோ இதுக்கு முன்னால தமிழே படிக்காம எழுதாம இருந்த மாதிரி +2 வில இருந்து எழுதறானேன்னு யோசிக்காதீங்க. தமிழுக்கும் எனக்குமான பந்தம் ஆரம்பிச்சது 3 ஆவது வயசில.

ஹீரோ எண்ட்ரி ஒரு பரபரப்பா இருக்கட்டுமேன்னு தான் +2 ல ஆரம்பிச்சேன்.

எனக்கு தமிழ் எழுதப் படிக்க கத்துக் கொடுத்தது என் அக்காக்கள். பள்ளிக்கு போறதுக்கு முன்பே கதை படிக்கிற அளவிற்கு தமிழ் தெரியும்.

எங்க அப்பா பெங்களுர்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. வாரம் ஒருமுறைதான் வீட்டுக்கு வருவாரு. வரும்பொழுது அம்புலிமாமா, பொம்மைவீடு, பாலமித்ரா, கல்கண்டு, முத்து காமிக்ஸ் இப்படி எதாவது புத்தகம் வாங்கிட்டு வருவாரு.

அவர் வந்து சாப்பிட்டு உறங்கிய உடனே மிகப் பெரிய சண்டையே நடக்கும். யாரு முதல்ல புத்தகம் படிக்கறதுன்னு. அக்காக்கள், படிச்சு சின்ன அண்ணன் பொம்மையெல்லாம் பாத்தப்பறம்தான் என் கைக்கு வரும்.

நான் முதன் முதலா அம்புலிமாமா படிச்சப்ப அதில் மஹாபரதம் தொடர், விக்கிரமாதித்தன் வேதாளம் தொடர், மந்திரத் தடாகம் என்கிற தொடர், போதிசத்துவர் கதைகள் என நிறைய இருக்கும். முத்து காமிக்ஸ்ல இரும்புக்கை மாயாவி, வேதாள மாயாவி, லாரன்ஸ்/டேவிட், மந்திரவாதி மாண்ட்ரேக் இப்படி பல ஹீரோக்கள்..

என்னுடைய கெட்ட பழக்கம் என்னன்னா, புத்தகத்தை எடுத்தா படிச்சு முடிக்காம கீழே வைக்க மாட்டேன். நான் 1 வது முடிக்கும் நேரத்தில் தான், மஹாபாரதம் முடிந்து வீர அனுமான் தொடர் ஆரம்பித்தது அம்புலிமாமாவில்..

மூணாவது படிக்கும் போதுதான் திடீர்னு நான் ஒரு மாதிரி படிப்புன்னா என்ன என்பதைப் புரிஞ்சுகிட்டேன். ஒரு செல்ஃப் ரியலைசேஷன்.. மூணாவது வகுப்பு காலாண்டுத் தேரிவில தான் முதல்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினேன். படிக்கிறது இவ்வளவு ஈஸியாங்கற மாதிரி ஒரு ஃபீலிங். அதே சமயம் நல்லா படிச்சிகிட்டு இருந்த எங்க அண்ணன் மார்க் குறைய ஆரம்பித்தது. 3 ஆம் வகுப்பு படிக்கும் போது வேப்பம்பட்டி புதூருக்கு போய் ஒரு வருஷம் இருந்தோம்.

அனுமான் என் ஃபேவரைட் ஹீரோ.. நான் அனுமான் என்று கற்பனை செய்து கொண்டு ரிப்பன் வால் வச்சுகிட்டு டயலாக் பேசின காலம் அது. இப்படி குழ்ந்தைகள் புத்தகம் படிச்ச நான் 4 வது படிக்கும் போது சேலம் வந்தேன்.

நான் 4 ஆம் வகுப்பு புதூரில் கொஞ்ச நாள், அப்புறம் காடையம்பட்டி (நம்ம சாமக் கோடங்கி ஊர்) கொஞ்ச நாள் படிச்சும் முழு ஆண்டுத்தேர்வு எழுதாத காரணத்தினால சேலத்தில் வீரலட்சுமி வித்யாலயத்தில் 4 ஆம் வகுப்பிலேயே சேர நேர்ந்தது.

ருக்மணி டீச்சர் என் நினைவில் நிற்கிற டீச்சர், இதற்கு முன்னால எந்த டீச்சர், எந்த வாத்தியார் பேரும் நினைவில்லை. பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த சில நாட்களிலேயே என்னைப் புரிஞ்சிகிட்டார். அவர் பாடம் நடத்தும் போது அதெல்லாம் நான் ஏற்கனவே நான் படிச்ச பாடங்கள் என்பதால் அதிகம் கவனிக்க மாட்டேன். என் கவனத்தை ஈர்க்கணும்கறதுக்காக கஷ்டமான கேள்வி கேட்பார். பாராட்டுவார்..
என்னை மைக் முன்னால முதல் முதல்ல நிக்க வச்சதும் அவர்தான்.

வீரலட்சுமி வித்யாலயத்தில மாணவர் மன்றம் உண்டு. அது நடுநிலைப் பள்ளி. எட்டாம் வகுப்பு வரை. 8 வதில் சிறந்த மாணவன் தான் மாணவர் மன்றத் தலைவர். அவருக்கு என்ன வேலைன்னா, திங்கள் கிழமை பிரேயர் அசெம்ப்ளியில் கொடியேத்தணும். தமிழ்த்தாய் வாழ்த்து, ஒருமைப்பாட்டு உறுதி மொழி, தேசியகீதம் படிக்கணும் (கூடவே கோரஸா மத்த மாணவர்கள் பாடுவார்கள். அப்புறம், மாதம் ஒரு முறை பேச்சுப் போட்டி வகுப்பு வாரியா நடக்கும். அதை நடத்த வேண்டியது இப்படி.

ருக்மணி டீச்சர் நான் சென்ற சுற்றுலா என்கிற தலைப்பில என்னைபேசச் சொன்னாங்க. பழனி தவிர வேற எங்கயும் சுற்றுலா போயிருக்காத நான் (காணமல் போன கதை படிங்க.. ) எங்க அண்ணாவைக் கெஞ்சிக் கூத்தாடி எழுதித்தரச் சொல்ல அவர் ஏற்காடு பத்தி எழுதிக் கொடுத்தார். முதல் பரிசு.. கிடைச்சது..

அதன் பின் தமிழ் வேகமாய் படிக்கும் போட்டிகள் நடக்கும். எப்பயுமே நான் எல்லோத்தையும் ஒரங்கட்டி ஜெயிப்பேன். அந்த வருஷ ஆண்டுவிழாவிற்கு இருபது அம்சத் திட்டம் பற்றி ஒரு நாடகம் போடறதா இருந்தது.

�ஏலே ராசாமன்னாரு! என்னலே இம்புட்டு குஷி� என்று திருநெல்வேலி பாஷையில் ஆரம்பிக்கும் என்னுடைய பாத்திரத்தை கஷ்டப்பட்டு ரிகர்ஷல் எல்லாம் செய்தால் தேர்தல் வந்து அம்மையார் தோற்று எங்க நாடகத்தை அரங்கேற விடாமல் செய்து விட்டார்.

விட்டுருவமா சோதனை வந்தா! நானே நாடகம் எழுத ஆரம்பித்தேன் எங்க பக்கத்து வீட்டு ஓபுளி, மகாலட்சுமி, தேவராஜ், உமா மற்றும் எங்க சின்ன அண்ணன் சிவா உதவியோட நானே நாடகம் எழுதி நடிக்க ஆரம்பிச்சேன்.

சும்மா நம்ம மயூ வோட கதையை ஒரு உதாரணத்துக்கு கற்பனைப் பண்ணிக்குங்க.. அப்படித்தான் இருக்கும் எங்க நாடகங்கள்.. பாண்டிய நாட்டு மன்னன் விருந்துக்கு தயார் செஞ்ச முறுக்கை சமையல் காரர் சாப்பிட்டு விட, முறுக்கு விக்கற கோவலனுக்குத் தண்டனை.

கண்ணகி வந்து அரிசிமாவு முறுக்குக்கும், கடலை மாவு முறுக்குக்கும் வித்தியாசம் காட்டி வாதட, முறுக்கு தொண்டையில் சிக்கி மன்னவன் செத்துடுவாரு,, அப்பக் கூட கடிகள் உண்டு..


அதோ அங்க கவுந்து படுத்திருக்காங்களே அதாருன்னு கோவலன் கேக்க, அதாங்க கவுந்தியடிகள்னு கண்ணகி பதில் சொல்லுவா! இப்படி சிலப்பதிகாரம் படாத பாடு பட்டது..

அப்புறம் திருவிளையாடல்.. ஒருத்தர் ஒருமனைவிக்கு மேல கட்டலாம்னு சிவன் வாதாட நக்கீரர் கூடாதும்பார். சிவன் ஒவ்வொரு கடவுளா காட்டி அவருக்கு அத்தனை பொண்டாட்டி இவருக்கு இத்தனைப் பொண்டாட்டி ன்னு சொல்ல அவங்க அப்படி நிறைய கல்யாணம் கட்டினதால பட்ட அவஸ்தையை நக்கீரர் சொல்ல அதி பயங்கர விவாதம் நடக்கும்.

ம்ம்ம்.. அதெல்லாம் ஒருகாலம். இந்த காலத்தில்தான், மாயாஜாலக் கதைகளை அதிகம் படித்தேன். இன்னிக்கு வார்த்தைகளை வச்சி கதை சொல்றேன்னா அதுக்குக் காரணம் நாலாவது படிக்கும் போது நான் ஆங்கிலத்தில் செய்த பிராக்டீஸ்னா நம்ப முடியுதா?

தொடரும்
.

No comments:

Post a Comment