இதுக்கு பின்னாடி ஆண்டு விழாவிற்கு மத்த கிளாஸ் மக்கள் எல்லாம் குட்டி நாடகங்களை (அப்பல்லாம் பிரபலமான சில சினிமாக் காட்சிகளே உல்டா செய்யப்பட்டு நாடகமாக்கப்படும்,, அதாவது கள்ள லாட்டரி வச்சிகிட்டு தருமி பிரைஸ் கேட்கறது.. இந்த மாதிரி) தயார் செய்ய எங்க கிளாஸ் மக்கள் என்னை எதாவது எழுதச் சொல்ல
கீசகவதம் வில்லுப்பாட்டு ரெடியாச்சு.. அதில பலப்பலப் பாடல்கள் இருந்தன..
அண்டரண்டமெலாம் கலங்கிட கலங்கிட
உண்ட சோறெலாம் செரித்திடும் செரித்திடும் வீரன்
படா படா படா சூரன்
சமையல் கார மச்சானே! அவன்
கண்ணை என் மேல் வச்சானே
மசயன் மாதிரி நின்னிருந்தா அவன்
நாமம் போட்டுட்டு போயிடுவான்
இந்த மாதிரி பல உற்சாகமூட்டும் பாடல்களைக் கொண்ட வில்லுப்பாட்டு எழுதப்பட்டது.. அதே சமயம் பேக்கப்புக்காக இன்னும் இரண்டு நாடகங்கள் எழுதினோம்.. ஏன்னா இந்த வில்லுப்பாட்டில எங்களுக்கு தெரிஞ்ச அத்தனை வாத்தியார்களுடைய பட்டப்பேரும் வரும். வாத்தியாருங்களுக்கும் அந்தப் பேர் தெரியும்கறதினால இதைக் கண்டிப்பா தள்ளுபடி செய்வாங்கன்னு எதிர்பார்த்தோம்.. இரண்டாவது நாடகம், பரமேஸ், குரமேஸ், ஸாரி பமரேஸ், குமரேஸ், ஸாரி பரமேஸ், குமரேஸ் (அதாங்க நம்ம ஈஸ்வரனும் முருகனும்) பூலோகம் வந்து சினிமாப் புகழுக்கு மயங்கி நடிப்பு சான்ஸ் வாங்க அலையற கதை.. மூன்றாவது நாடகம், ஒரு பைத்தியம் பைத்தியக்கார ஆஸ்பிடலை விசிட் செஞ்சு அங்கிருக்கற வைத்தியரை பைத்தியமாக்கற கதை (விசு எங்ககிட்ட இருந்து காப்பி அடிச்சுட்டார்)
மூணும் வாத்தியாருங்களுக்கு முன்னால ரிகர்சல் செய்யப்பட்டு, வில்லுப்பாட்டும், பைத்தியம் வைத்தியம் பைத்தியம் நாடகமும் அரங்கேறின.
ஸ்கூல்ல தமிழ்ல எனக்கு ஆராய்ட்சி ஆர்வமெல்லாம் கிடையாது.. சும்மா எழுதிகிட்டு இருந்தேன். ஸ்கூல் முடிஞ்சு ஆர்ட்ஸ் காலேஜ்ல பி.எஸ்.ஸி மேத்ஸ் எடுத்தேன்.
முதல் மாதமே ஒரு பேச்சுப் போட்டியில ஆர்வமா கலந்துகிட்டேன். மாவட்ட அளவிலான போட்டி.. கீதை காட்டும் பாதை.. பகவத் கீதையில எனக்குத் தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான்.. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே!
ஆனால் எனக்கு முன்னால் பேசியவர்களின் பேச்சைத் தொகுத்து பார்வையை மாற்றி புது கோணத்தில் பேச..
மாவட்ட அளவிலான மூன்றாம் பரிசு கிடைச்சது..
மூணுமாசம் தான் ஆர்ட்ஸ் காலேஜ். அப்புறம் எஞ்ஜினியரிங் சீட்டு கிடைச்சது. ஆரம்பத்தில் அங்க மௌனமாத்தான் இருந்தேன்..
புத்தாண்டு வந்தப்ப தான் எதாச்சும் செய்யறியான்னு கேட்டப்ப சரின்னு ஒரு கவிதை எழுதினேன்.. படித்தேன்
புத்தாண்டு வருக புதுவாழ்வு தரவே
பொன்னான நாளே வருக - எந்தன்
பூவான நெஞ்சில் தேனான நினைவில்
புதைந்தாடி இனிக்கும் சுவையே வருக
சத்தான அறிஞர் சதிராடும் நாவில்
சன்மானம் பெற்றே வருக - வாழ்வில்
வித்தாகி அறிவு விளக்காகி என்னை
அறங்கேற்ற வந்த குருவே வருக
-இதுதான் மேடையில் படிக்கப்பட்ட எனது முதல் பாட்டு..
இப்படி செய்யுள், பாட்டு கூத்துன்னு இருந்த என்னோட தமிழ் புதுக்கவிதைக்கு டிராக் மாறினது அந்த ஆண்டில்தான்.
தொடரும்
.
No comments:
Post a Comment