லொள்ளு வாத்தியார் பதில்
சுமார் 2000 ஆன்டுகளுக்கு முன்பு லொள்ளபுரி என்று ஒரு வளம் கொழிக்கும் நாடு கூவம் கரையோரம் இருந்தது அனைவரும் அறிந்ததே. அந்த தேசத்தை ஆட்சி புரிந்தது மாவீரன் லொள்ளுவாத்தியார் ஆவார்.
பக்கத்தில் கன்னபுரி என்று ஒரு நாடு இருந்தது. கன்னபுரி தேசத்தை கண்மணி என்று கொடுங்கோல் ராணி ஆட்சி புரிந்து வந்தார். கண்மணியின் கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்ற நமது மாவீரன் லொள்ளுவாத்தியார் படை எடுத்து சென்றார்.
இந்த செய்தி கேள்விபட்டவுடன் கண்மணி அவர்கள் தொடை நடுங்கினார். இருந்தாலும் மாவீரன் லொள்ளுவாத்தியார் படையை சமாளிக்க பல மைல் தூரத்திலிருந்து தனது படைகளை நிறுத்தி வைத்திருந்தார். படைவீரர்கள் போர்களத்தில் இருக்க இவர் அரண்மனை கதவுகளைச் சாத்தி விட்டு அமர்ந்திருந்தார். போர்களத்திலிருந்து அவ்வபோது என்ன நடந்து கொன்டு இருக்கிறது என்ற ஒற்றர்கள் மூலம் அறிந்து அதற்க்கேற்ப்ப போர் திட்டங்களை வகுத்து வந்தார். எப்படி வகுத்தார் என்று பார்ப்போம்.
முதல் செய்தி : அரசியாரே 5 மைல் தூரத்துக்கு அப்பால் நாம் நிறுத்தி வைத்திருந்த படை மாவீரன் லொள்ளுவாத்தியாரிடம் தோற்று விட்டது.
கண்மணி உடனே 3 ஆவது மைல் தூரத்துக்கு அப்பால் இருந்த படையை வரவழைத்து கோட்டையை காவல் புரிய வைத்தார்
சிறிது நேரம் கழித்து அடுத்த செய்தி : அரசியாரே 4 மைல் தூரத்துக்கு அப்பால் நாம் நிறுத்தி வைத்திருந்த படையும் மாவீரன் லொள்ளுவாத்தியாரிடம் தோற்று விட்டது.
கண்மணி உடனே அரன்மனை கதவுகளை இழுத்து பூட்டி வைக்க சொன்னார், அகழி பலகைகளை எடுக்க உத்தரவிட்டார்.
சிறிது நேரம் கழித்து அடுத்த செய்தி : அரசியாரே 2 மைல் தூரத்துக்கு அப்பால் நாம் நிறுத்தி வைத்திருந்த படையும் மாவீரன் லொள்ளுவாத்தியாரிடம் தோற்று விட்டது.
கண்மணி உடனே சிம்மாசனத்திலிருந்து எழுந்து அரண்மனைக்குள் ஒளிந்து கொன்டார்.
விரைவாக வந்த அடுத்த : அரசியாரே நமது அனைத்து படையும் தோற்று போய் மாவீரன் லொள்ளுவாத்தியார் கோட்டையை முற்றுயிட்டு விட்டார்
கண்மணி உடனே தனது உடமைகளை மூட்டை முடிச்சாக கட்டி தயார் நிலையில் வைத்திருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்த செய்தி: அரசியாயே கோட்டை கதவுகளை உடைத்து லொள்ளுவாத்தியார் படை உள்ளே புகுந்து விட்டது.
உடனே, கன்னபுரி கொடுங்கோல் ராணி மூட்டை முடிச்சுகளும் அரண்மனை பின் கதவு வாசல் இருக்கும் இடம் நோக்கி போனார். அங்கு மாட்டு வண்டிகள் தயார் நிலையில் இருந்தது.
சிறிது நேரம் கழித்து "எங்கே கொடுங்கோல் ராணி கண்மணி எங்கே என்று ஒரு சிம்ம கர்ஜனை கேட்டது. அது மாவீரன் லொள்ளுவாத்தியாரின் குரல் என்பதை கண்மணி அறிந்து கொன்டார். இதை கேட்டவுடன் வேகமாக பின்கதவு வழியாக குதித்து வண்டியில் ஏறி மூட்டை முடிச்சுகளுடன் ஓடி போய் விட்டார்.
கோட்டையை கைபற்றி மாவீரன் லொள்ளுவாத்தியா மீண்டும் "எங்கே கன்னபுரி கொடுங்கோல் ரானி கண்மணி " என்று வினவினார். கன்மனி ஓடிபோய் விட்டார் என்ற செய்தியை தெரிய படுத்தினர். எப்பொழுது என்று கேட்ட போது கண்மணி அமைச்சர்கள் "லொள்ளபுரி சக்ரவர்த்தி, மாவீரன் லொள்ளுவாத்தியார் அவர்களே நீங்கள் இந்த இடத்தில் இருந்து கண்மணியை கூப்பிடும் போது அந்த சத்தத்தை கேட்டவுடன் ஓடி போய் விட்டார்."
மாவிரன் லொள்ளுவாத்தியார் அந்த இடத்திலிருந்து பின்கதவு வரை இருக்கும் தூரத்தை அளந்து பார்த்தார், அது 560 விறகடை தூரம் இருந்தது. இந்த அளவுகோல் என்று சரியாக சொல்ல முடியாததால் 560 விறகடை தூரத்தை மாவீரன் லொள்ளுவாத்தியார் கண்மணியை கூப்பிட்ட தூரம் என்று அழைக்க ஆரம்பித்தனர்
பிற்காலத்தில் அது கண்மணியை கூப்பிட்ட தூரம் என்று அழைக்க பட்டு
தற்பொழுது அது கூப்பிடற தூரம் என்று மருவி விட்டது.
கண்மணி போதுமா இந்த கிறுக்கு பதில் இல்ல இன்னும் விளக்கமா சொல்லனுமா.
பிகு: கூப்பிடற தூரம் என்பது தற்போதுய மெட்ரிக் சிஸ்டம் படி 8 மீட்டர், 46 சென்டி மீட்டர், 6 மில்லி மீட்டர் அளவு ஆகும்.
வாத்தியார் கேள்வி :எங்கப்பன் குதுருகுள்ள இல்லைங்கற கதையா போச்சு இந்த பழமொழிக்கு கிறுக்கு தனமான பதில் தேவை
கண்மணி பதில் :
ம்ம் விதியாரை விட்டது? வாத்தியாரை விட! இப்படித்தான் எடுத்துக் கொடுக்கோணும்.. நீங்க ஆரம்பித்த கதையை நான் தொடரட்டுமா!!!
கன்னபுர மகராணி கண்மணியின் அரண்மணையை ஆக்ரமித்த வாத்தியாருக்கு மாபெரும் அதிர்ச்சி..!!!
மறுநாளே போர்முரசு சத்தம் கேட்டுத் தொடையெல்லாம் நடுநடுங்கி விட்டார்.
தளபதி ஓவியன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தார்.
அரசே ஏமாந்துவிட்டோம்.. கண்மணி மிகப் பெரிய சதித்திட்டம் தீட்டி இருந்தார் போலிருக்கிறது. எந்தப் போருக்குப் போனாலும் நாம் கில்லி போல் தப்பித்து ஓடுவதை அறிந்து கொண்டு, நம்மைப் பிடிக்க வேண்டுமென்பதற்காகவே ஓடுவது போல் ஓடி இப்பொழுது இதே அரண்மனையில் நம்மை சிறையாக்கி விட்டார்கள்.. ஓடுவத்ற்கு எந்தப் பக்கத்திலும் வழியில்லை. மாட்டிக் கொண்டோம் எனக் கோவென்று அழ ஆரம்பித்து விட்டார்.
வாத்தியார் திரு திரு வென விழிக்க ஆரம்பித்தார். எந்தப் பக்கம் ஓடுவ்தென்றே புரியவில்லை. தன்னுடைய அரண்மனையில் என்றால் எலிப்பொந்துகள் போல ஆயிரம் சுரங்கங்கள் உண்டு தப்பிக்க. இங்கே எங்கப் போனாலும் முட்டுச் சுவரா இருக்கே ஒளிந்து கொள்ள வாகாய் ஒரு இடமும் இல்லையே என யோசித்தவருக்கு எதிர்பட்டது தானியங்களைக் கொட்டி வைக்கும் குதிர். ஆகா ஒளிந்துக் கொள்ளவும் முடியும் பசிச்சா அப்படியே தானியத்தை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று உள்ளே புகுந்து ஒளிந்து கொண்டார்...
குதிரை மேல் கம்பீரமாய் கண்மணி அரண்மணையில் நுழைந்தார். படை வீரர்கள் அரண்மணை முழுவதும் சல்லடை போட்டு சலித்துத் தேட ஆரம்பித்தனர்.
அப்போதுதான் அந்த நிகழ்ச்சி நடந்தது..
லொள்ளுவாத்தியாருக்கு இரு மகள்கள் உண்டு. ஓவியா மற்றும் தென்றல். இருவரும் பன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். போர் நியதிப்படி குழந்தைகளை சர்வ மரியாதையுடனும் அன்புடனும் நடத்தியதால் பயமே இல்லாத அந்தச் இரு சிறு குழந்தைகளும் லொள்ளு வாத்தியாரின் குதிரையை வருடிக் கொடுத்து விளையாடினர். அப்பொழுது அந்தக் குதிரை அவர்களின் கையில் இருந்த பன்னைத் பறித்துத் தின்றுவிட்டது..
ஓவியாவும் தென்றலும் மண்ணில் விழுந்து புரண்டு புரண்டு அழுதனர். எங்க பன் வேணும் என்ற அவர்களின் அழுகுரல் லொள்ளுவாத்தியாரின் அவலக் குரலாய் இருந்தது...
குதிரையின் வாயிலகப்பட்ட பன்னைப் பெருமுயற்சி செய்தும் பிடுங்க இயலாமல் போகவே குதிரைக்கு விளக்கெண்ணெய் கொடுத்தும், உப்பு நீர் கொடுத்தும் பல வழிகளில் எதோ ஒரு வழியில் பன்னை எடுக்க முயற்சி எடுத்துக் கொண்டார் வாத்தியாரின் வைத்தியர் யவனிகா. ஆனால் அசகாய ஜீரண சக்தி கொண்ட வாத்தியாரையே மிஞ்சும் அளவிற்கு ஜீரண சக்தி கொண்ட அந்தக் குதிரை வெளிப்படுத்தியவைகளில் பன்னின் அடையாளமே இல்லாமல் போய்விட்டிருந்தன.
"எங்க பன் குதிரைக்குள் இல்லை. எங்க பன் குதிரைக்குள் இல்லை"
என்று ஓவியாவும், தென்றலும் பெருங்குரலெடுத்து அலறத் தொடங்க, அவர்களின் குரல் வளம் தாங்காமல் கண்மணி, தாரைத் தாரையாய் கண்ணீர் வடித்து அரண்மனைக் குதிருக்குள் இருந்து தானியம் எடுத்து அரைத்து சுடச் சுட ஆயிரம் பன்கள் செய்து தர்ச் சொல்லி அரண்மனைச் சமையல்காரர் அக்னியைப் பணைய.. அவரும் குதிருக்குச் சென்றார்..
குதிருக்குச் சென்ற அக்னி அங்கு கொறிக்கும் சத்தம் வரவே ஏதோ ஒரு வராகம் தான் உள்ளே நுழைந்து விட்டதோ எனப் படை வீரர்களை அழைக்க...
பதுங்கு குழியில் இருந்து பிடிபட்ட சதாம் ஹூசேனைப் போல லொள்ளுவாத்தியார் பிடிபட்டார்.
உடனே அக்னி ஓவியாவும், தென்றலும் கொடுத்த துப்பினால்தான்
"எங்க பன் குதிரைக்குள் இல்லை - அதாவது - எங்கப்பன் குதிருக்குள் இல்லை"
லொள்ளு வாத்தியார் மாட்டினார் என்றும்.. அதைக் கண்டு பிடித்தது தனது புத்திசாலித்தனம் என்றும் மார்தட்டிக் கொண்டு கண்மணியிடம் அளவற்றச் செல்வங்களைப் பரிசாக வாங்கிக் கொண்டார்.
முதன் முறையாகப் பிடிபட்ட லொள்ளுவாத்தியாருக்கு என்ன ஆனது?
அதுவும் வெளிப்படும். தகுந்த சமயம் வரும்பொழுது...
இப்படி எங்க பன் குதிரைக்குள் இல்லை என்பது மருவி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என அப்பனையே காட்டிக் கொடுத்த சுட்டித்னம் பின்னால் சொலவடையாக அப்பாவித்தனமாக மறைமுகமாக காட்டிக் கொடுப்பதற்கு உதாரணமாக வழங்கி வருகிறது.
..
No comments:
Post a Comment