நம்ப ஊர்ல பெரியவா(ல்)ளெல்லாம் கோலெடுத்தா குரங்காடும்ன்னு சொல்லுறாங்க..!! நிஜமாலுமே "கோலெடுத்தா குரங்காடுமாங்க...??" - சுகந்தப் பிரீதன்
ம்ம ஓவியாக்கா இல்லை ஓவியாக்கா. அவங்க ஒரு நடன பயிற்சி நிலையம்.. அதாங்க ஒரு டான்ஸ் கிளாஸ் ஆரம்பிக்கணும்னு யோசிச்சாய்ங்க.. யொசிச்சாய்ங்க.. ரூம் போட்டு யோசிச்சாய்ங்க.. என்ன யோசிச்சாய்ங்களா? விளம்பரத்திற்கு ஒரு பஞ்ச் லைன் வேணும்னுதான்...
அதுக்கு யோசனைச் சொல்லச் சொல்லி மொக்கை மதிகிட்ட யோசனை கேட்க அந்தத் தம்பி ரொம்ப நேரம் ரோஷனை பண்ணிட்டு, அக்கா ஆடுற ஸ்டைலையும் இணைச்சு ஒரு விளம்பரம் சொன்னாரு..
"கோலெடுத்தா குரங்காடும்"
அதாவது நட்டுவாங்க கோலெடுத்தா குரங்கைக் கூட நடனமாட வச்சிருவாங்க அப்படின்னு அக்காவைச் சமாதானம் கூடப் பண்ணிட்டாரு..
ஆக்சுவலா அந்த ஐடியா அவருக்கு எப்படி வந்துச்சுன்னா! ஃபிளாஷ் பேக்..
அதுக்கு முந்தின நாள் விஜய் டீவில "ஸ்நேக் இன் மங்கீஸ் ஷேடோ" அதாங்க "பாயும் அடி பாம்படி, குதறும் அடி குரங்கடி, கராத்தே அடி தர்ம அடின்னு" தமிழ்ல கூட ரிலீஸ் ஆச்சே அந்தப் படம் தான் பார்த்துகிட்டு இருந்த போதுதான் ஓவியாக்காவோட நடன ஸ்டைலே அவருக்குப் பிடிபட்டது..
அந்த நடிகர் குரங்கு ஸ்டைலை ஏன் தேர்ந்தெடுத்தார்?
அதுக்கும் ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு...
அவர் உலகத்தில வேற எதுக்கும் பயப்பட மாட்டார். இரண்டே விஷயத்திற்குத்தான் பயப்படுவார். ஒண்ணு குரங்கு.. இன்னொன்னு குரங்கு ஸ்டைல்லயே பிச்சுப் பிடுங்குற மனைவி..
அதனால உலகத்திலேயே பயங்கரமான குங்க்ஃபு ஸ்டைல் குரங்கு ஸ்டைல்தான் என்று முடிவு கட்டி அதைத் தீமா வச்சார். (தீமையை தீமாக்கிய தீஞ்சிந்தனையாளர்..
அந்த அம்மா ஏன் அப்படிப் பிச்சுப் பிடுங்கறாங்க?
அதுக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கு..
அவங்க இளைஞியா இருந்தப்ப பலர் அவர் பின்னால இளிஞர்களா இருந்தாங்க.. அவங்க பல்லைக் காட்டுறதும், தலையைச் சொறியறதும் அப்படியே அவங்களுக்குக் குரங்கைத்தான் நினைவூட்டும்..
அவங்கத் தொல்லையே பெருந்தொல்லை.. ஒருத்தனுக்கும் உருப்படியான வேலை கிடையாது.. ஒரு பொண்ணு அழகா இருந்தா பின்னாலயே சுத்துவாங்க..
இதைச் சமாளிக்க அந்த இளைஞி அவங்களுக்கு அவங்களையே காட்டினப்ப தான் அவங்க தலை தெறிக்க ஓடினாங்க,,,
அந்த இளைஞர்கள் அப்படி இருக்க ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கு..
கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வர்ரேன் பொறு தம்பி..
-----
அந்த இளைஞர்கள் ஒரு திண்ணைப் பள்ளிகூடத்தில் படிச்சவங்க. அந்தப் பள்ளிக்கூட வாத்தியார் கிட்ட ஒரு பழங்கால ஓலைச்சுவடி இருந்தது. அந்த ஓலைசுவடில "கோலெடுக்க குரங்காடும்" என்றத் தலைப்பில ஒரு கவிதை. அதைத்தான் அந்த வாத்தியார் அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவர் கோலெடுத்தால் இவர்கள் குரங்குகள் ஆக ஆடவேண்டும்னு.
அந்தக் கவிதைக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கு. அதுக்கு 1000 வருஷத்துக்கு முன்னால் அதிரடி அரசனின் அரசவைக்குப் போகணும்.
அதிரடி அரசன் என்னத்தான் அழுகுணி ஆட்டம் ஆடினாலும், புலவர்களை ஆதரிப்பவன். அவனைப் பாராட்டி பாடுபவர்களுக்குப் பொரி கொடுப்பதும் எதிர்ப்பவர்களுக்குப் பொறி வைப்பதும் அவன் வேலை. பெண்கவியரசி பூமகள் அவனுடைய ஆஸ்தான கவிதாயினி.. அவள் அவனைப் போற்றிப் பாடிய செய்யுள் வரிகள் தான் அது. (வஞ்சப் புகழ்ச்சியில்)
"கோலெடுத்தால் குரங்காடும்" இந்த வரிகளைக் கேட்டதும் அவன் குதிச்சு எழுகையில் பூமகள் சொன்னால்
"மன்னா உன் செங்கோலை, நீதியை நிலைநாட்டும் அந்த நன்கோலை நீ எடுத்தால் கோ-அரங்கே - அதாவது அரசவையே அதிரும்" என்றுப் புகழ்ந்து பாடினேன் எனச் சப்பைக் கட்டு கட்ட, அரசன் மனமகிழ்ந்து அவரை தன் குருவாகவே ஏற்றுக் கொண்டான்.
ஆமாம் அந்தக் கோலெடுத்தால் குரங்காடும் என்பது பூமகளுக்கு எப்படித் தோன்றியது?
அதுக்கும் பிளாஷ் பேக் இருக்கு..
அது இராமாயணத்தில் மறைக்கப் பட்ட கறுப்புப் பக்கங்கள். வானர இனம் பூமியில் தோன்றிய கதை, அதை பழைய ஓலைச் சுவடிகள் மூலம் தெரிந்து கொண்டாள் பூமகள்.. அப்படியென்ன கதை அது?
கிஸ்கிந்தையில் வாழ்ந்த சுட்டிப்பையன் மயூ எனப்படும் மயூரேசன். அவன் அவன் ஆதவா முனிவரின் ஆசிரமத்தில் கல்வி கற்பவன். ரொம்பச் சுட்டி. முனிவர் தவத்தில் இருக்கும் பொழுது தொந்தரவு செய்து கொண்டே இருப்பான், அவர் கையை தண்டத்தில் ஊன்றி நிஷ்டையில் இருக்கும்பொழுது அந்த தண்டத்தை லபக் கென்று உருவி மண்டையில் டொம்மென்று அடித்து விட்டு ஓடிவிடுவான். இதனால் மனம் கொதித்த ஆதவா முனிவர் தண்டத்தை இனி அவன் எடுக்காதிருக்கும் பொருட்டு
கோலெடுத்தாய் குரங்காய் ஆடுவாய் எனச் சாபம் கொடுத்தார்.
இதை மதிக்காமல் ஒரு முறை மயூ தண்டத்தை எடுத்து விட அவன் குரங்காய் ஆகிவிடுகிறான். அவன் மூலம் தான் வானர வம்சமே ஆரம்பிக்கிறது..
ஆமாம் இராமயணம் எழுதிய வால்மீகிக்கு இப்படி ஒரு கற்பனை வரக் காரணம்? அதுவும் ஒரு உண்மை நிகழ்ச்சிதான். அதற்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகல் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
ஆதி காலம், குரங்குகள் கோலூன்றி நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த காலம். ஆதி மனிதன் ரூம் போடமுடியாமல் மரங்களிலும் குகைகளிலும் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த காலம்.
அப்போது அந்தக் குரங்குமமனிதர்கள் குச்சியின் உதவியுடன் நிமிரத் தொடங்கி இருந்தவர்கள், மனிதனுக்கும் குரங்கிற்கும் இருந்த வித்தியாசம் கோல்தான்.
அதைத்தான் சொல்லி வைத்திருந்தார்கள்.. கோலை எடுத்துவிட்டால் மனிதன் குரங்காய் மாறிவிடுவான் என்று..
யாரையாவது தண்டிக்க வேண்டுமென்றால் கோலைப் பிடுங்கி விட அவன் குரங்காகி பரிணாம பக்கங்களில் பின்னோக்கிப்ப் போய்விடுவான். அந்தக்கால நாட்டாமைத் தீர்ப்பு இதுதான்..
இவனின் கோலை எடுத்து குரங்காக்குங்கள்.."கோலெடுத்து குரங்காக்கு"
இதற்கு முந்தைய நிகழ்வுகளுக்கான டாக்குமெண்டுகள் ஆராய்ட்சியில் உள்ளன. கிடைத்ததும்.. பகிர்ந்து கொள்கிறேன்.
..
No comments:
Post a Comment