Monday, December 21, 2009

தாமரை பதில்கள்

ஒவ்வொருத்தரை பற்றிய உங்களின் கணீப்பீடும் என்னைய ஆச்சரியப்படுத்தியிருக்கு... நீங்கள் ஒருத்தரை எப்பிடி எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்வீர்கள்....??

விவரமான கேள்விதான்.. விவகாரமானதும் கூட.. சரி கொஞ்சம் பழசை யோசிப்போம்!


நானா எத்தனை பேர்கிட்ட பேச ஆரம்பிச்சு இருக்கேன் யோசிச்சுப் பார்த்தால் மிகக் குறைவுதான்.


நான் எவ்வளவு தான் மிகப் பாசமாக, அன்பாக பேசினாலும் உங்களிடம் உங்க உண்மை பேர் என்ன? என்ன செய்யறீங்க? சொந்த ஊர் என்ன? என்ன படிச்சிருக்கீங்க இப்படி ஆழமா போய் உங்கள் தனிப்பட்ட விஷயங்களைக் கேட்பதில்லை..


சொல்லப் போனா யாரையும் அந்த அளவுக்கு துல்லியமா தெரிஞ்சிக்கணும்னு எனக்கு ஆவல் இருந்ததில்லை.. அப்படியும் தெரிந்து கொள்வதும் இல்லை. அவசியம் ஏற்பட்டால் மட்டுமே யாரையும் எடை போடுகிறேன்.


எல்லாமே என் மேல் நம்பிக்கை, மதிப்பு போல சில விஷயங்கள் ஏற்பட்ட பிறகு நீங்களாகச் சொல்பவை. நானும் பல விஷயங்களை சும்மா போட்டு வைத்திருக்கிறேனே தவிர எதையும் ஆழமாய் பதிந்து வைத்துக் கொண்டு யோசிப்பதில்லை.


உங்களின் எழுத்துக்களில் தொடர்ச்சியாகப் படிக்கும் போது அதில் உள்ளோட்டமாய் பதிந்திருக்கும் சில உணர்வுகளைப் படிக்கிறேன். என்னதான் கற்பனை செய்து எழுதினாலும் ஒவ்வொரு பதிப்பிற்கும் இடையே உள்ள ஒப்புமைகளை கூர்ந்து கவனித்தால் இவருக்கு என்ன வகை எண்ணவோட்டம் இருக்கிறது? இவரின் சிந்தனையில் மேலே இருக்கும் என்ன, அடிமனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணம் என்ன? என்ன வார்த்தையை போட்டுவிட்டு மறுபடியும் மாற்றி எழுதி இருக்கிறார்? இப்படி பல விஷயங்கள் தெரிய வரும்.. தங்கள் குணாதிசயங்களை அடிக்கடி மாற்றிக் காட்டுபவரிடம் நான் எச்சரிக்கையாகவே இருக்கிறேன்..


புதிதாய் வருபவர்களுக்கு நான் வரவேற்பு சொல்வதில்லை என்பது பலரின் ஆழ்மனதில் உள்ள குறைபாடு. என்ன செய்வது. நான் கண்காணிப்பு மனநிலையில் இருந்து அடுத்த மனநிலைக்கு வர பலரின் எழுத்துக்கள் விடுவதில்லை.


எல்லோரும் என் மனதில் 0 என்ற நிலையிலேயே உள்ளே வருகிறார்கள். அவர்களின் எழுத்துக்கள் செயல்கள் அவர்களை மேலேயும் கீழேயும் கொண்டு செல்கின்றன. சில சைக்கோக்களைத் தவிர யாவரும் தாம் செய்வது சரி என்பதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இருப்பதாலேயே செய்கின்றனர் எனத் தீவிரமாக நம்புபவன் நான். ஒருவர் ஒரு விஷயம் சரி என்று வாதிட்டும் பொழுது அது எந்தக் கோணத்தில் சரி என சரிபார்த்துக் கொள்கிறேன். தொடர்ச்சியாக ஒரு கோணத்தில் இருந்து அவர் பேசும் பொழுது அவரின் எக்ஸ்போஸர் என்ன? அவருக்கு எப்படி அந்த எண்ணங்கள் வந்திருக்கும் எனப் புரிய ஆரம்பித்துவிடுகிறது..


எல்லோருக்கும் நான் என் மனதில் புரொஃபைல் வைத்துக் கொள்வதில்லை. இதற்கு நான் நம்பி இருப்பது என் நினைவுத் திறனை, யாராவது திடீரென அவரைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம் என்றால் சும்மா மெமெரியில் ஒரு சர்ச் அடித்து எப்போதோ அவர் எழுதியதை வைத்து ஏற்பட்ட எண்ணத்தைச் சொல்லிவிடுகிறேன்.


மற்றபடி ஒருவரைப் பற்றி துல்லியமாகத் தெரிந்து கொள்ளும் ஆசையை விட எனக்கு பொதுவாக மனித இயல்புகளைப் பற்றியும் அதை உந்தும் காரணிகளைப் பற்றியும் அறிய ஆவல் அதிகம். கிடைக்கும் பல புள்ளிகளை இணைத்துக் கோலம் போடுகிறேன். அது பலசமயம் யாருக்குமே புரியாமல் வளையம் வளையமாக மக்களை குழப்பி விடுகிறது.

சரி எந்த அடிப்படையில் எடை போடுகிறேன்

1. எந்த அளவு தன் மனதை திறந்து வைத்திருக்கிறார்?
2. எந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்?
3. எந்த விஷயத்தின் பக்கம் தலையே வைத்துப் படுப்பதில்லை?
4. பொதுவாகவே வலியுறுத்தும் கருத்துகள் என்ன?
5. எந்த டாபிக்கை எடுத்தால் மருண்டு ஓடிவிடுகிறார்?
6. எந்த மாதிரி கருத்துகள் எதிர்க்கப் படுகின்றன?
7. அடிக்கடி படிப்பது ஆனால் பதிலே போடாத திரிகள் என்னென்ன?
8. ஒருவரின் பதிவுகளில் இழையோடி வரும் நோக்கம்.


இப்படிப் பல விஷயங்கள் உண்டு. ஆனால் எல்லாவற்றிற்கும் முதலாக எனக்குள் ஒரு உணர்வு எழவேண்டும்.. இந்த நபரை கண்காணிக்க வேண்டும் அல்லது இந்த நபருக்கு என் துணை தேவைப்படும் அல்லது இந்த நபர் ஒரு நல்ல வழித்துணை என்று..

மற்றவர்கள்?

என் மனிதவியல் ஆராய்ட்சியின் ஸ்பெசிமன்கள்.
ஆனாலும் ஒன்று.. என்னுடைய கணிப்பு தவறாக இருக்க அதே அளவு வாய்ப்பும் இருக்கிறது. யாரைப் பற்றிய கணிப்பு என்றாலும் என்னுள்ளேயே வைத்துக் கொள்வதாலும், அடிக்கடி ஃபைன் டியூன் செய்து கொள்வதாலும், பலர் தங்களைப் பற்றிய கணிப்புகளை தெரிந்து கொள்ளவே பயப்படுவதாலும் நான் தப்பித்துக் கொண்டு வருகிறேன்..

No comments:

Post a Comment