Thursday, December 10, 2009

நானும் தமிழும் - சும்மா கிடந்த சங்கு! - பாகம் 1
சும்மா நான் பாட்டுக்கு ஏதோ ஸ்கூல்ல ஒழுங்கா படிச்சுகிட்டு இருந்தேன். +2 படிச்சிட்டுகிட்டு இருந்தப்ப ஆண்டுவிழா போட்டிகள் வந்தது.

எங்க ஸ்கூல்ல G.A. கண்ணன். மு.பிரபு (முத்துப்பிரபு) இரண்டு பேரும் தனியா ஒரு புலவர் கிட்ட ட்யூஷன் படிச்சாங்க. எதுக்குத் தெரியுமா? பேச்சு, கவிதை, கட்டுரை இது மாதிரி போட்டிகளில் கலந்துக்கத் தான். இவங்க அ.தி.மு.க மேடையில் கூட பேசி விஜயலட்சுமி பழனிச்சாமி அவர்களிடம் பரிசு வாங்கியதுண்டு..

நான் கணக்கு டியூஷன் கிளாஸில் இருந்தேன்.. (டியூஷனா ன்னு கேட்கறது புரியுது)

எங்க கணக்கு வாத்தியாருக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். 9, 10, +1, +2 நாலுவருஷமும் அவர்தான் எனக்குக் கணக்குப் பாடம் எடுத்தார். நான் புத்தகமும் படிப்பதில்லை.. என் வழி தனி வழி என்று ஏதோதோ சம்பந்தமில்லா ஃபார்முலா எல்லாம் போட்டு கணக்குகளை தீர்த்து வைத்திருப்பேன்.

அதனாலேயே என்னை டியூஷனுக்கு ஃபிரீயாக வரச் சொல்லி இருந்தார். அவர் வைக்கும் தேர்வுகளை எழுத வேண்டும். அவர் கணக்கு சொல்லித்தரும் போது கவனிக்க வேண்டும் அவ்வளவுதான் கண்டிஷன். டியூஷன் முடிந்த பின் வாத்தியார்களும், மாணவர்களும் பால் பேட்மிண்டன் ஆடி விட்டு வீட்டிற்குச் செல்வோம்..

அன்று பிரபுவும் கண்ணனும் டியூஷன் கிளாசுக்கு வந்து கெஞ்சினார்கள். எதுக்குத் தெரியுமா?

பேச்சுப் போட்டிக்கு யாருமே பேர் கொடுக்கலையாம்.. இரண்டு பேர் மட்டும் பேர்கொடுத்ததால போட்டியை கேன்சல் பண்ணறதா தமிழையா சொல்லிட்டாராம்.. வந்து யாராச்சும் பேர் குடுங்க என்று காலில் விழாத குறையாய் கெஞ்சினார்கள். கணக்கு வாத்தியர் நாலுபேர் போய் பேர் குடுத்துட்டு வாங்க என அனுப்பினார்.. எங்க கிளாஸ் பசங்க நாலுபேர் பேர் கொடுத்தோம்.

குறளும் வாழ்வும் இதுதான் தலைப்பு. தலைப்பு கிடைத்த பத்து நிமிடத்தில் பேசணும். மத்தவங்க என்ன பேசினாங்கன்னு தெரியலை. நானும் எனக்குத் தெரிஞ்ச புது விளக்கங்களை எல்லாம் சொன்னேன். (புத்தகம் படிச்சாதானே நேர் விளக்கம் சொல்ல).

நீங்க எதிர்பாக்குறதும் நடந்தது. எதிர்பாக்காததும் நடந்தது.. அதாவது முதல் பரிசு எனக்குக் கிடைச்சது. இரண்டாம் பரிசு அண்ணாதுரைக்கு. பிரபுவும் கண்ணனும் தோத்துப் போயிட்டாங்க.

இதுக்குப் பின்னாடிதான் கண்ணன் கலைநிலவு அப்படின்னு ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பிச்சான். அதாவது கதை, கட்டுரை, கவிதைன்னு சேர்க்க வேண்டியது.. அதைப் பேப்பர்ல கையால் எழுதி சில பிரதிகள் எடுத்து ஆசிரியர்களுக்குப் படிக்கக் கொடுப்பது. அப்புறம் அந்தப் பிரதிகளை எல்லாம் கொண்டுபோய் பல லைப்ரரிகளில் போட்றது.

இதுக்காக என்னை எழுதிக் கொடுக்க நச்சரிக்க, நானும் வெண்பா, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா ன்னு நிறைய எழுதிக் கொடுத்தேன். எம்.ஜி.ஆருக்கு உடம்பு சரியாக எழுதின பாட்டு, இந்திரா காந்திக்கு இரங்கல் பாட்டு, கலைஞருக்கு வாழ்த்துப் பாட்டு இப்படி பாட்டும் செய்யுளுமாய் வாழ்க்கை மாறிச்சு.. தமிழுக்கு ஒரு தாலாட்டு, ஆசிரியருக்கு ஒரு ஆசிரியப்பா, பொதுவாழ்த்து, தங்கத் தலைவன் இப்படி மன்றத்தில் நான் பதிந்த செய்யுள்கள் பிறந்த காலம் அது. 1984-85. 20 வருஷம் கழிச்சும் வரி மாறாமல் ஞாபகம் இருக்கு.


தொடரும்

No comments:

Post a Comment