Thursday, December 10, 2009

ஒரு கல்யாணத் தூது!!!



அந்த
தந்தக் கால்களின்
சொந்தக்காரி..

அவள்தான்
தழுவத் துடிக்கும்
என் இதயத்தின் சொந்தக்காரி

அந்த
தங்க வண்ண உயிரோவியம்
காதல்
ததும்பி நிற்கும் பொன்னோவியம்
அவள்தான்
காமனவன் கணைகளினால்
என் இதயத்திலே
எழுதப்பட்ட என்னோவியம்

மின்மினிப் பூச்சியாய்
இமைச் சிறகடிக்கும்
அந்த
இரு விழிகள்

புல்லாங் குழலிலே
புகுந்து புறப்பட்ட
அவளது
வார்த்தைச் சங்கீதம்

ஒரு
முத்துப் புதையலை
தன்னுள்
ஒளித்து வைத்திருக்கும்
அந்தப்
பவளக் கதவுகள்

அந்தக்
கோமள வள்ளிக் கொடியிலே
கனிந்து நிற்கும்
கன்னக் கனிகள்

இவையெல்லாம் தான் நண்பா
என்னை அவள்பால்
ஈர்த்து விட்டன..

ஆம் நண்பா..
என் இதயத்தை
இரும்புக் கம்பிகளுக்குள்தான்
சிறை வைத்திருந்தேன்..

அந்த
மல்லிகைக் கொடியோ
அந்தக் கம்பிகளையே
கொம்புகளாய் மாற்றி
படர்ந்து விட்டது..

என்னக் கண்டாலே
பட்டாம் பூச்சியாய்
படபடவென
இமைச் சிறகடிக்கும்
அந்த இரு விழிகள்

என்னைப் பார்த்தாலே
விடியற்காலை பனித்துளியாய்
அந்த ரோஜா முகத்திலே
வியர்வை முத்துக்கள்..

என்
கண்ணைக் கண்டாலே
மண்ணை காணும்
அந்த விழிகள்

நான் அருகிருந்தால்
பட படக்கும்
அந்த இதயம்

அவள் கைகள்
சடையைப் பின்னலிட
அவள் கால்கள்
நடையில் பின்னலிடும்.

இதுவரை
அவள் பின்னழகை
நான் கண்டதில்லை
ஏனென்றால்
நான் பார்க்க
அவள்சென்றதில்லை

இவையெல்லாம் தான் நண்பா..
என்னை அவள் பால்
ஈர்த்து விட்டன..

நான் மட்டும் என்னவாம்..
சூரியனைத் தொடரும்
சூரியகாந்தியாய்
அவள் முகத்தை தொடரும்
என் கண்கள்..

அவள் மணம் வீசினால்
விட மறுக்கும் சுவாசம்..

அவள் பெயரை
உச்சரித்து உச்சரித்தே
இனித்து விட்ட உதடுகள்..

அவள்
காதல் நிறைந்த
கோதலுக்காகவே
காத்துக் கிடக்கும்
என் தலை முடி

அவளைக் கண்ட போதெல்லாம்
சிலிர்த்தெழுந்து
சல்யூட் அடிக்கும்
ரோமச் சிப்பாய்கள்

அந்த லட்சுமியின்
பாதம் பட்டு
பூத்து நிற்கும்
என் இதயத் தாமரை

இப்படித்தான் நண்பா
மெல்ல மெல்ல
நான் அவளின்றி
வாழ விரும்பாதவனாகிப் போனேன்..

இந்த
காந்தள் விரல்களைக்
கோர்த்துக் கொண்டுதான்
என்வாழ்க்கைப் பயணத்தை
தொடர நினைக்கிறேன்

இந்த
அன்புக் கடலில்தான்
என் வாழ்க்கைப் படகை
செலுத்த நினைக்கிறேன்

என்
காதலுக்குத் தூதாய்
காற்றினை விட்டேன்
நிலவினை விட்டேன்
மேகத்தை விட்டேன்
கிளியினை விட்டேன்
ஏன்
கவிதையை கூட விட்டேன்

ஆனால்
கல்யாணத் தூதாய்
நான் அனுப்பிய யாவும்
தோற்றே திரும்பின..

ஆம் நண்பா !!
காற்றுக்கும்
நிலவிற்கும்
மேகத்துக்கும்
கிளிக்கும்
புரிந்த காதலின் மொழி
என் தந்தைக்கு மட்டும்
புரியவில்லை..

இவைகளுக்கும் தான்
என் தந்தையின் மொழி
புரியவில்லை.

அதனால் தான்
அவர் உள்ளத்திலே
ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
உன் வார்த்தைக் கற்களை
அடுக்கி
ஒரு மண்டபத்தைக் கட்டு
என்கிறேன்..

அதையே"கல்" யாண மண்டபமாக்கி
என் இதயத் தலைவியை
இல்லத் தலைவியாக்கிக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment