Monday, December 21, 2009

தாமரை பதில்கள்.

அன்புத்தோழரே! விவாதத்திறமை, அறிவுப்பூர்வமான கண்ணோட்டம் எல்லாம் நான் மட்டுமல்ல எல்லோரும் அறிந்ததே. தற்போதைய இலங்கை, ஈழத்தமிழர்களின் சூழ்நிலையை மாற்றி அமைக்கும் பொறுப்பும், அதற்கான கட்டளையை உலக நாடுகள் ஏன், கொடியவன் ராஜபக்சேவே உங்களிடம் கொடுத்தால், என்ன செய்வீங்க? விரிவான பதில் வேண்டும்.


ரொம்ப கஷ்டமான கேள்வியை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கேட்டிருக்கீங்க பரம்ஸ்.. இன்னும் இரண்டு மாசம் மன்றம் வருவதே பெரிய காரியம் என்ற நிலையில் மிகப் பெரிய பதில் எழுத நேரமில்லை.

இருந்தாலும் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்...

சாக்கு சொல்லுதல், பழி போடுதல் இவற்றைத் தள்ளி வைத்து விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உடனே ஆராய்ந்து செயலில் இறங்குதல் முக்கியத் தேவை என உணரவைப்பேன்.

அன்றைய நிலையில் அது சரி, இன்றைய நிலையில் இது சரி... ஆக காரணங்களைப் பற்றி யோசிக்காமல், பழியை வேறு எதாவது ஒன்றின் மேல் தள்ளி விட முயற்சிக்காமல் உடனே தேவையான முயற்சிகளில் இறங்குவேன்.ட்

1. இலங்கை முழுதுக்குமான அமைதி அவசரச்சட்டம் ஒன்று பிறப்பிப்பேன். அதன்படி அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். வன்முறையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களைத் தனித்தீவிற்கு அனுப்பி வைப்பேன். (இதுக்காக அந்தமான் பகுதியில் ஒரு தீவை ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவிடம் கேட்பேன்.)

2. நாடு முழுதும் முன்பிருந்த குடியிருப்புகளைச் சீர்ப்படுத்த, உலக நாடுகளின் உதவியை நாடுவேன். அவரவர் அவரவரின் சொந்த ஊரில் தன்னுடைய இருப்பிடம் சேர வழிவகை செய்வேன்

3. இதோடு சில குழுக்கள் அமைப்பேன். இந்தக் குழுக்களுக்கு தனித்தனிப் பொறுப்புகள் தரப்ப்படும்.

அ) உலக சுற்றுப்பயணக் குழு: இராஜபக்ஷே, பிரபாகரன் உள்ளிட்ட இப்பிரச்சனைகளில் சம்பந்தப்பட்ட பலம் வாய்ந்த தலைவர்களை, உலகத்தின் இருநூற்று சொச்ச நாடுகளுக்கும் ஒவ்வொரு வார காலம் தங்கி, பண்பாடு, அரச சாசனங்கள், வாழ்க்கை முறை, மனிதம் என பலவகைகளையும் ஆராய்ந்து எல்லாவற்றிலும் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து இலங்கையின் எதிர்கால அரசியல் சாசனத்திற்கு உலகிலேயே சிறிந்த மானுடம் என்ற பெயர் வருமாறு ஒரு நல்ல அரசியல் சாசனத்தை வகுத்து வரச் சொல்வேன். (இவர்கள் ஒரு முடிவுற்கு வருவதற்குள், இலங்கை விழித்துக் கொள்ளும்...)

ஆ) காரியக் கமிட்டி: இவர்களின் வேலை, இலங்கையின் இயற்கை வளங்களைக் கொண்டு ஒரு வரைபடம் தயாரித்தல். அதைக் கொண்டு இலங்கையின் இயற்கை வளங்கள் என்னென்ன, என்னென்ன தொழில்கள் எந்தப் பகுதிகளில் முக்கியமானவை? அந்தத் தொழில்களுக்கு தேவையான முதலீடுகள், திறன்கள், அறிவு இப்படி பல விஷயங்களைத் திரட்டி, அவற்றைத் திட்டங்களாகச் சமர்ப்பித்தல். இதைக் கொண்டு ஸ்வர்ண லங்கா - அதாவது தங்க இலங்கை என்ற ஒரு திட்டமாகக் கொண்டுவந்து சமர்ப்பிப்பேன். இத்திட்டங்களை இலங்கை அரசு, இலங்கை மக்கள், உலகவங்கி, ஐ.நா சபை, மற்றும் உலக நாடுகளின் உதவியோடு நிறைவேற்ற ஆரம்பிப்பேன்.

இ) கலை-பண்பாட்டுக் குழு: இதில் சகல இன, மத,கலை வல்லுனர்கள் இருப்பார்கள். இவர்கள் இலங்கை முழுதும் பயணிப்பர். ஒவ்வொன்றிலும் இருக்கும் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து அவற்றை நடனமாக, நாடகமாக, இசையாக பலவேறு வகைகளாக மக்களுக்கு சென்று சேருமாறு செய்வேன். இதனால் மக்கள் அனைத்து பண்பாடுகளையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இயலும்

ஈ) மதக் குழு: மதத்தின் மீது தீவிர பற்றுகொண்டு மக்களை வழிநடத்தும் மதப்பெரியவர்களை கொண்டதாக அமையும் இதில் நானும் பங்குகொள்வேன். மதங்கள் மக்களைப் பாதிக்காமல் இருக்க விவாதங்கள் இங்கு நடத்தப்படும். மதங்கள் மக்களை மதம் பிடித்தோராக மாற்றாமல் இருக்கும் பொருட்டு, மனம் விட்ட கலந்தாய்வுகள் மேற்கொள்ளப்படும். மக்களைப் பிரிக்கும் மத வாதங்களை நீர்த்துப் போகும் வண்ணம் இங்கு நடக்கும் விவாதங்கள் இருக்கும். இதன் வழியாக மத துவேஷங்கள் குறைக்கப் படும்.

உ) செயற்குழு: நாட்டில் திட்டமிடப்பட்ட திட்டப்பணிகளை முன்னின்று நிறைவேற்றும் குழு. கட்டமைப்புகளைச் சீர்செய்தல், மனித வள மேம்பாடு, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, போன்ற பல துறைகளிலும் இவர்களின் பணி மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு உறுதி செய்யும் வண்ணம் அமையும்.

ஊ) வெளியுறவு: சிறந்த ராஜதந்திரிகளாக அடையாளம் காணப்படும் நால்வர் குழு அமைக்கப்பட்டு இலங்கை - ஒரு உதாரண நாடு என்பதை அடையாளப்படுத்தும் வகையில் நல்லுறவு வளர்க்கப் பாடுபட வைப்பேன். ஆயுதங்கள், படை பல உதவி போலல்லாது தொழில்நுட்பங்கள், மருத்துவம் போன்ற பயனுள்ள துறைகளில் மட்டும் உறவுகள் மேற்கொள்ளப்பட வகை செய்வேன். இலங்கை ஒரு சமாதானத் தூதுவன் என அறிவித்து அனாவசியப் பாதுகாப்புச் செலவுகளைக் குறைப்பேன்.

4. இலங்கையைப் பற்றிய அனைத்துத் தகவல்கள், குடிமக்கள், சொத்துவிவரங்கள் என அனைத்தையும் கணினி மயமாக்கி அரசு எந்திரத்தின் வேகத்தை அதிகப் படுத்துவேன். லொள்ளுவாத்தியார் பிரதமரானால் பகுதியில் சொல்லி இருக்கும் பல திட்டங்களை செயல்படுத்துவேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12144

5. புலம் பெயர்ந்தோர் திரும்பி வர அழைப்பு கொடுத்து அதை உலக மானுட தினமாக அறிவிக்க வைத்து அனைவருக்கும் சிறந்த வரவேற்பு கொடுப்பேன்.


6. உலகம் சுற்றி வந்த தலைவர்களின் பரிந்துரைகளை விவாதித்து புதிய அரசுக் கொள்கைகளை வரையறுக்க விவாத அரங்கு அமைக்கவேண்டும்.. இலங்கையின் இறையாண்மைக் கொள்கைகள் இங்கு வரையறுக்கப்படும்.

ஆனால் இவர்கள் திரும்பி வரும் முன்னரே இலங்கை ஏற்கனவே மாறிப்போயிருப்பதால் இலங்கை மாற்றத்தில் முக்கிய பங்கு கொண்டு குழு உறுப்பினர்களுடனான முதல் கட்ட ஆலோசனை இருக்கும். அதன் பின் இலங்கை முழுதும் ஓராண்டுக்கு இக்குழு பயணப்பட்டு தங்களுடைய திட்டத்தில் தேவையான மாற்றக் குறிப்புகளுடன் வரும்.

7. விவாத அரங்கில் இலங்கையின் புதிய அரசியல் சாசனம் படைக்க என்னுடைய தலைமையில் விவாதங்கள் ஆரம்பிக்கப் படும். உலக நீதிமன்றம், ஐ.நா சபை போன்ற பார்வையாளர்கள் இங்கு பங்கு கொள்வார்கள். தங்க இலங்கை அரசியல் சாசன கட்டமைப்பு இங்கு அமைக்கப்படும். இங்கு வரையறுக்கப்படும் அரசியல் சாசனப்படி, அதன் உட்பிரிவுகள், சட்டங்கள் முதலியவை அமைக்க சட்ட வல்லுனர் குழு அமைக்கப்படும்.

புதிய அரசியல் சாசனம், சீரமைக்கப்பட்ட நாடு, உழைக்கும் மக்கள், தெளிவான கண்ணோட்டம், உயர்ந்த நோக்கு.

இலங்கைப் பிரச்சனையா? அப்படின்னா என்னங்க?

No comments:

Post a Comment