Wednesday, December 9, 2009

விமர்சனம் செய்வது எப்படி?



ஒவ்வொரு எழுத்தும், செயலும், அசைவும், விமர்சனமே!

அட, பயபுள்ள எப்பொழுதும் போல பினாத்த ஆரம்பிச்சுட்டானே, என்று மனசில நினைச்சுகிட்டு தலையில கை வச்சீங்களே இப்போ, அதுதாங்க விமர்சனம்.

மூலமாய் எழுதிய கவிதை கூட உங்களில் தோன்றிய ஒரு விமர்சனம் தான்,

அந்த நிலவைக் காணவில்லை கவிதையைப் பாருங்கள்..

அது அந்தக் காதலியின் குளுமையான அழகைப் பற்றிய விமர்சனம் தானே!

எதிர் வீட்டுக்காரி புதுப்புடவை எடுத்தால், கணவன் வதைபடுவது கூட விமர்சனம்தான்.

ஒரு கண்சிமிட்டல், புருவ நெளிப்பு, உதட்டுப் பிதுக்கல், பெருமூச்சு, சுருங்கிய கண், குவிந்த இதழ்கள், விரலசைப்பு, தலைசாய்ப்பு, விரல்கோலம், தாளம் என விமர்சனங்கள் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன..

ஆனால் நேருக்குநேர் காண முடிய இணையதளத்து எழுத்தில் விமர்சனம். கொஞ்சம் வித்தியாசமானது தான்.

இதில் புரிந்துணர்வு இருபக்கத்தாருக்கும் இருக்கத்தான் தேவை இருக்கிறது.

விமர்சிப்பவருக்கும், விமர்சிக்கப்படுவதைப் படைத்தவருக்கும்..

தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் வயிறும் வேறடா...

கவிஞர் கண்ணதாசன் அழகாகச் சொல்லி இருப்பார்..

நாம் படைத்தவற்றை, நாம் எழுதியதை, நம் விமர்சனத்தை நாம் நாமாக நினைக்கிறோம். அது அப்படித்தான். தாய் தன் குழந்தையைத் தானாக நினைத்தல்.

எண்ணங்களால் வாழ்கிறோம். எண்ணங்கள் நாமாகிறோம். நம்மை விட்டுப் பிரிந்து விழுந்த எண்ணங்களையும் நாம் நாமாகவே எண்ணுகிறோம்.

விமர்சனத்தில் முக்கியமானது மனிதர்களை எழுத்துக்களிடமிருந்து பிரித்து விடல்.

தாமரை எழுதி இருக்கிறார்.. அமரன் எழுதி இருக்கிறார். சாம்பவி எழுதி இருக்கிறார், நமக்குப் புரியவில்லை என்று என்று எழுத்துக்களின் மீது மனிதனைச் சுமத்தாதீர்கள்.

ஏனென்றால் அவை பிறப்பித்தவரை விட்டுத் தனியே வாழத் துவங்கி விட்டன. திருக்குறளை தெருவோரக் குடிமகன் எழுதி இருந்தாலும் சரி, ராஜராஜ சோழன் எழுதி இருந்தாலும் சரி.

திருக்குறளை வைத்துதான் நாம் வள்ளுவனை அடையாளம் காணுகிறோமே தவிர, வள்ளுவனை வைத்து திருக்குறள் அல்ல.

இளசின் விமர்சனம் என அடையாளப்படுத்தியது யார்.. இளசா அவரின் விமர்சனங்களா?

இளசின் விமர்சனத்திற்கு சரியான விமர்சனம் பென்ஸ் எழுதும் விமர்சனங்கள். அவரின் சாயல் படிந்து காணப்படுவது.

விமர்சனங்களில் பலவகை உண்டு.. பல நோக்கங்கள் உண்டு. எதையும் மிகச் சரி என்று சொல்ல முடியாது. எதையும் தவறானது என்றும் சொல்ல முடியாது..

எல்லாமும் சரிக்கும் தவறுக்கும் இடைப் பட்டவையே.

தேவை உணர்ந்து அளிக்கப்படும் விமர்சனம் - விமர்சனம் உணர்தல்

இரண்டுமே மிக அத்தியாவசியமாய் தேவை.

பலவகை விமர்சனங்களில் தேவை உணர்ந்து அளிக்கப்படும் விமர்சனம் மிகச் சிறந்தது.

தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதற்கும் பொதுவான ஒரு இடத்தில் விமர்சனம் செய்வதிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. பொது இடமான இதைப் போன்ற இடங்களில் விமர்சனம் செய்யும் பொழுது அந்த விமர்சனம் விமர்சிப்பவர், விமர்சனம் செய்பவர் இருவரையும் தாண்டி பலருக்கும் போய்ச் சேருகிறது.

என் கவிதையை இளசு விமர்சிப்பதை மனோ படிக்கிறார். இதனால் என்னைப் பற்றியும் இளசுவைப் பற்றியும் மனோ மனதில் ஒரு தாக்கம் ஏற்படுகிறது.

விமர்சனம்

குறைகளை அடுக்குவதாய் இருந்தால் இளசு கீழே இறங்குகிறார்.

குறைகளை மறைப்பதாய் இருந்தால் நான் கீழே இறங்குகிறேன்.

நிறைகளை அடுக்குவதாய் இருந்தால் இளசு மேலே ஏறுகிறார்.

நிறைகளை மறைப்பதாய் இருந்தால் நான் மேலே ஏறுகிறேன்

படைப்பு ஒரு மூலையில் ஏனென்றால் முழுதாய் விமர்சிக்கப்படவில்லை. படைப்பாளி விமர்சிக்கப்படுவதால்.

விமர்சிப்பவன் விமர்சன நாகரீகமாய் ஆதவன் சொன்ன வழிகளைக் கையாள்கிறான், நல்ல விமர்சகன் என்றப் பெயரும் பெறுகிறான். அதாவது

1. கவிதையின் சிறப்பு
2. கருவைப்பற்றிய ஒரு பார்வை (உங்களுக்கு என்ன தெரியுமோ அது..) (சிறப்புகளை விவரித்தால் போதும்)
3. கவிதையில் ஏற்பட்டுள்ள தவறுகள்.
4. பாராட்டுக்கள்.

விமர்சிக்கப் பட்டவன் ஊக்கமோ அல்லது தாக்கமோ பெறுகிறான். நல்லபடைப்பாளி எனப் பெயரும் எடுக்க விழைகிறான்.

இப்படி ஒரு மாதிரியான அமைப்பு அமைந்த பிறகு நம் மன்றத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியைச் சொல்லவேண்டியது என் கடமையாகிறது


எழுதுபவர்கள் : இவர்களால் ஏற்படும் மாறுபாடுகள்தான் மிக அதிகம், சிலர் மிக புத்திசாலிகள்,, இவர்களை எப்பொழுதுமே புகழ்ந்துகொண்டே இருக்க முடியாது.. விமர்சனத்தின் தரத்தைக் கொண்டு எழுதுபவர்கள் உண்மையாய் விமர்சிக்கிறார்களா இல்லை பொய்யாய் விமர்சிக்கிறார்களா என்று அறிந்து பொய் விமர்சனங்களுக்கு சம்பிரதாய நன்றியும், உண்மை விமர்சனங்களுக்குச் சில உண்மை நன்றிகளையும் உரித்தாக்கி விமர்சனத்தை விமர்சிக்கும் மக்கள் நம் மன்றில் மிகவும் அதிகம்.

ஒரு கவிதையைக் கண்டேன்.. முதலில் ஒருவர் ஒரு பொருள்படுவதாகச் சொல்லி ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்திருந்தார்..சூப்பர், சரியாப் பிடிச்சீங்க என்று அவருக்குத் தாளம் போட்டு பதில் இருந்தது. இன்னொருவர், இன்னொரு விதமாய்ச் சொல்லி அதுதான் சூப்பர் என்றுச் சொல்லி இருந்தார். அதற்கும் இன்னொரு விதமாய் பாராட்டி விமர்சனம் எழுதியதற்கு நன்றி சொல்லப்பட்டிருந்தது..

என்றோ ஒரு நாள் அதே கவிதை என் கண்ணில் பட்டது. கவிதையைப் படித்து விட்டு, விமர்சனங்கள், பதில்கள் எல்லாவற்றையும் படித்து விட்டு கவிதையை மனசில் அலசிக் கொண்டிருக்கும் பொழுது சில நெருடல்கள் தெரிவது போலிருந்தால், தெரிந்த நண்பராக இருக்கும் பட்சத்தில் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு முரண்களை விவாதித்தேன், அவர்களின் சிந்தனையில் எப்படி அந்த நெருடல்கள் காணப்படவில்லை என அறிந்து கொள்ள..

அப்பொழுது அவர் எழுத நினைத்ததே வேறு கரு என்றும், அதை நேரிடையாகச் சொல்லாமல் உருவகமாகச் சொல்லப் புகுந்ததால் பிசிறுகள் தட்டி வந்ததையும் அறிந்தேன்

ஆக என்ன கரு என்பதும் புரியாமல் படைப்பாளிக்கு உற்சாகமூட்டும் விதமாக சிறப்புகளை எடுத்துச் சொல்லி விமர்சிப்பது என்பது இது போன்றச் சில சம்பவங்களுக்குப் பிறகு படைப்பாளிக்குச் சலித்துவிடுகிறது.


விமர்சனத்தின் நோக்கம் என்பதை இதனால் தெளிவுபடுத்தப் பட வேண்டியதாகிறது.

விமர்சனம் பின்கண்ட விதங்களில் பலரூபமெடுக்கும். எல்லாவற்றிற்கும் ஒரே அளவுகோல் என்பது பொருந்தாத ஒன்று.

1. புதிய எழுத்தாளர்
2. பழகிய எழுத்தாளரின் புதிய முயற்சி..
3. இந்த இடத்திலேயே மூத்தோர்
4. சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கொண்ட படைப்பு
5. அனைவரும் ஒத்துக் கொள்ளக் கூடிய பொதுவியலான படைப்பு
6. வித்தியாசமானப் புது நோக்கு, சிந்தனை
7. பொழுது போக்கு அம்சம் நிறைந்தது
8. பயனுள்ள கருத்துக்கள்
9. கற்றுக் கொள்ளும் முயற்சி
10. சரியான / தவறான விமர்சனங்கள் (ஆமாம் விமர்சனங்களே விமர்சிக்கப்படுவது நம் தளத்தில் உண்டு)

இப்படி விதவிதமான கலவை கொண்டது.

ஒரே கவிதை ஒரே மனிதரால் பல வேறுவிதமான சமயங்களில் வெவ்வேறு விதங்களாக பார்க்கப்படுகிறது.

விமர்சிப்பவனுக்கு எப்படி அடிப்படையில் சில குணாதிசயங்கள் தேவையோ விமர்சனம் எதிர்நோக்குபவனுக்கும் அதேபோல் சில அடிப்படை குணாதிசயங்கள் தேவைப்படுகின்றன, ஏனென்றால் பொதுஇடத்தில் தன் படைப்பை பார்வைக்கு வைப்பவர் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறார் என்பது அறிவதற்கு இயலாத ஒன்று..

படைத்தவன் தான் மிகச்சிறியவன் என்றும் தான் எழுதியதை மற்றவர் அங்கீகாரம் செய்வார்களா என்றும் அச்சத்தில் இருப்பான்.. சிவாஜி, ராகவன், பிரதீப், பூமகள் போன்றவர்களின் பின்னூட்ட வகை இவர்களுக்கு மிகவும் பயன் கொடுக்கக் கூடிய ஒன்று.


படைத்தவன் தான் மிகச் சிறந்த கருத்தைச் சொல்லியதாக, மிக அழகான கவிதையை எழுதியதாக பெருமையில் இருப்பான். அவர்களுக்கு இளசு, பென்ஸ், அமரன், ஆதவன் (லிஸ்ட்ல சேக்கலாமா?), ராகவன், சாலை ஜெயராமன் போன்றோரின் பின்னூட்ட வகை ஊக்கம் சேர்ப்பதாக இருக்கும். முதல் வகையினரை விட இரண்டாம் வகையினர் இவர்களின் பின்னூட்டங்களை மிகவும் ரசிப்பர்.

முதல்வகையினருக்கு இவர்கள் இரண்டாம் வகையினருக்கு பின்னூட்டம் அளித்துப் பாராட்டப்பட்டதால், தம்மைப் பாராட்டும் பொழுது மகிழ்ச்சி பன்மடங்காகிறது.


ஷிப்லியின் கருத்தில் சிலவற்றில் நான் மாறுபடுகிறேன், காரணம் இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட மனநிலையில் இருந்து பார்த்தால் மட்டுமே புரியும் எழுத்துக்கள்.. பிண்ணனி தெரிந்தால் மட்டுமே புரியும் அழுத்தங்கள்..

இவற்றைத் தாங்கி நிற்க வேண்டியவை நாம் எழுதிய எழுத்துக்கள் அல்லவா? மறைபொருளாய், வஞ்சப்புகழ்ச்சியாய் எழுதும் பொழுது இவை புரியாமல் இருக்கட்டும் எனக் கவிஞனாக நினைத்து எழுதினாலொழிய நல்ல படைப்புகள் உருவாவதில்லை,

விமர்சிக்கப்படுபவை படைப்புகள் தானே தவிர படைத்தவர் அல்ல. இந்த மனநிலையை விமர்சனம் எதிர்நோக்குபவர் கண்டிப்பாய் கொள்ளவேண்டும்..


பொதுமன்றத்திலான விமர்சனத்தில் இருக்கவேண்டிய 10 விஷயங்கள்

1. பண்பாடு
2. நான் என்ன புரிந்து கொண்டேன்
3. சிறப்புகள்
4. மாற்றுக் கருத்துகள் (குறைகள் அல்ல கவனிக்கவும்)
5. இதைப் போன்ற ஒத்த, மாறுபட்ட கருத்துகள்
6. எது அழகு
7. எது திகட்டல்
8. எது நெருடல்
9. படைப்பில் என்ன மேலோங்கி நிற்கிறது
10. படைத்தவருக்கு நன்றி

(இதையெல்லாம் நான் செய்கிறேனா? ம்ம் அதான் நான் விமர்சனமே செய்வதில்லையே விவாதமில்லையா செய்கிறேன். )

விமர்சிப்பதில் இருக்கவேண்டிய இன்னும் சில விஷயங்களும் இருக்கின்றன,

1, கரு
2. சொல்லாடல், வெளிப்படுத்திய விதம்

இவை இரண்டும் தனித்தனி. கருவில் ஒப்புமை இருக்கலாம் வேற்றுமையும் இருக்கலாம். கருவை ஒப்புக் கொள்கிறோமா இல்லையா என்பதை தெளிவாகச் சொல்லுதல் மிக முக்கியமாகிறது, கருவை விட்டுவிட்டு ஒருசில வார்த்தையழகை மட்டுமே விமர்சித்தல் தவறாகிறது. கருவை விமர்சிக்க பல கோணங்களில் கருவைக் காண வேண்டும்.

சில கவிஞர்கள் ஒரு கோணத்தில் மட்டுமே ஒரு கருவை கிரகித்துப் பிரசவிக்கின்றனர். உதாரணமாகநம் இறையனாரின் பாடலுக்கே வருவோம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீஅறியும் பூவே

கவிதையில் காதல் சுவை சொட்டுகிறது.. காதல் மயக்கம். தலைவியின் கூந்தல் மணம் தலைவனைப் பித்துகொள்ள வைக்கிறது. ஒரு காதலனின் பார்வையில் கவிதை மிகச் சரி..

ஆனால் உலகியலுக்கு வரும்பொழுது கூந்தல் மணம் எனத் தவறான ஒரு அடிப்படையைத் தருவதால் பிரச்சனை எழுப்பப்படுகிறது.

அந்த அளவு கூர் நோக்கங்கள் தேவையில்லை. ஆனால் .....

சில கவிதைகளைக் கண்டால், இரு தனிப்பட்ட உருவகங்களை இணைக்க முயன்றிருப்பார்கள். இரண்டும் தனித்தனியே சரியாக இருப்பதாய்த் தோன்றும். ஆனால் ஒரே கவிதையில் இணைக்கப்படும்பொழுது

இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்.

இரண்டு பின்னூட்டங்களுக்குப் பிறகு இதுதான் கரு என்று கவிஞரே விளக்கி இருப்பார்.

இதற்குப் பின்னர் அந்த ஒட்டாமல் போனது ஏன் என்ற கேள்வி மறக்கப்பட்டு விடுகிறது. கவிஞரும் தன் கவிதையை மற்றவர்களுக்குப் புரிந்து கொள்ளும் திறனில்லை என்ற மயக்கத்துடன் விட்டு விடுகிறார்.

இந்த விமர்சனங்களால் என்ன பயன்? ஒன்றுமில்லை. கவிஞரின் நடையிலும் மாறுதலில்லை. விமர்சகனின் பார்வையிலும் மாற்றமில்லை.

உருவகம் சரிதான். கோர்வை இப்படி இருந்தால் தெளிவுபடும் என்று சொல்லுவதால் எழுதியவருக்கு மீள்பார்வைச் செய்ய ஏற்புடையதாய் இருக்கும். பலர் சொல்லுவதில்லை.

உலகியிலை உரசிப் பார்க்கும் கருக்கள் விமர்சனத்திற்கு உட்பட்டவையே, கருவில் தெளிவு பெற விமர்சகர்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை. கருவை விமர்சிக்காத விமர்சனங்கள் வெறும் பின்னூட்டங்களே!.

கருவைத்தான் - தன் கருத்தைத்தான் ஒரு எழுத்தாளன் பார்வைக்கு வைக்கிறான். அந்தக் கருவே விமர்சிக்கப்படாமல் போவது தவறு.
அதேசமயம் விமர்சனம் எதிர் நோக்குபவர் கருவில் பிழையுண்டு என்று அறியப்பெற்றதும் உணர்ச்சிவசப்படுகின்றனர். நான் சொல்ல வந்தது புரியவில்லை அதனால்தான் இப்படிச் சொல்கின்றனர் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் அதுதாங்க தப்பித்து விடுகின்றனர்.

ஆனால் எந்தக் கோணத்தில எந்த வார்த்தைகளால் அது தவறாகப் பட்டது என திருப்பிப் பார்ப்பதில்லை, இதனால் கருவை அலசுவோர் ஒரு அளவுடன் நின்று விடுகின்றனர். சொல்லப் போனால் நம் மன்றத்தில் கூடக் கருவை அலசுதல் என்பது குறைவுதான்.


அடுத்து சொல்லப்பட்ட முறை. ஒரு கருத்திற்கு பலமுகங்கள் உண்டு. எந்தக் கோணத்தில அந்தக்கருவை அணுகி இருக்கிறார், அப்படி அணுகினால் அந்தக் கரு எப்படிச் சரி என்று தோன்றுகிறது என்பது தெளிவாகத் தெரிதல் வேண்டும். அது ஒப்புக் கொள்ளும் படியாகவும் இருக்க வேண்டும்.

இங்குதான் நம் மன்றத்தில் மிகப்பெரிய சறுக்கல் இருக்கிறது. எழுத்தாளரின் கோணம் என்ன என்பதை படிப்பவர்களில் பலபேர் பார்ப்பதுமில்லை. அந்தக் கோணத்தில் பார்த்தால் கரு சரிதானா? அவர் சொல்வது சரிதானா என்றும் கவனிப்பதில்லை. கருவை விமர்சிக்க கொள்ளும் ஆர்வத்தில் பாதி கூட பார்வைக் கோணத்தை அறிந்து கொள்வதிலும் வேறுபட்டப் பார்வைகளில் அதே கரு எப்படித் தெரிகிறது என்பதும் மறக்கப் பட்டு விடுகிறது.

வார்த்தை அழகுகள் - அழுக்குகள்.. சில சமயம் இதுசரிதான் என்று நாம் நம்பிக் கொண்டிருப்பவை தவறு எனச் சிலர் சொல்லும்பொழுது ஏற்படும் அதிர்ச்சியை விட, நாம் எழுதிய வாக்கியம் தவறான அர்த்தம் தருகிறது என்பதைப் பலரால் ஜீரணிக்க முடிவதில்லை.

வாக்கிய அமைப்பிலேயே தவறுகள் இருக்கும் இந்தக் கவிதையின் விமர்சனத்தை எப்படிச் செய்வது?

அதே கவிதையைத் திருத்தி திருப்பி அதாவது சொற்களைச் சரிப்படுத்தி எழுதுவதின் மூலம் நாசூக்காய்ச் சொல்லலாம்.

அந்தக் கோணத்திலும் அதே கருவை வரவழைத்துக் காட்டலாம். இதைத்தான் பென்ஸ், இளசு போன்றவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டிருக்கிறார்கள். குற்றம் சொன்ன மாதிரியும் இல்லாமல் விமர்சனமும் செய்து.. இடித்துரைக்காமல் எடுத்துரைத்து..

கரு, சொல்லப்பட்ட விதம் இரண்டு மட்டும்தானா? இன்னும் இருக்கிறது..

நுணுக்கங்கள்.. வேலைப்பாடுகள்.. மாநிறமயில் போன்ற புதுமைகள் இவற்றிலும் சிறிது அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இவற்றைத் தொட்டால் நேரடியாக எழுதியவனின் இதயத்தையேத் தொடலாம்.

கவிதைக்குச் சொல்லழகு போல இன்னும் சில சிறப்புகள் உண்டு. புதுக்கவிதை உலகில் அவை மறக்கப்பட்டாலும் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த நுட்பங்களைத் தொட்டவரே மிகச் சிறந்த விமர்சகராகக் கருதப்படுகிறார். என்னதான் கருவை ஆழமாக அலசினாலும் வார்த்தை வார்த்தையாக விமர்சித்தாலும் அந்தக் கவிதைக் கென்று இருக்கும் ஒருத் தனித்தன்மையை அடையாளம் காட்டுதல் என்பதுதான் விமர்சனத்திலேயே உச்சம். இதுதான் விமர்சிக்கப்படுபவருக்கு, விமர்சிப்பவருக்கு மற்றும் வாசிப்பவருக்கு ஆகிய அனைவருக்கும் ஒரு ஈர்ப்பினை தரக்கூடியதாகும்.


சிறப்பானச் சொல்லடுக்குகளை எடுத்துக் காட்டி சிலாகிப்பது. சிறப்பில்லாதச் சொற்களுக்கு மாற்றுச் சொற்களில் பதிலளிப்பது.. இவற்றின் மூலமே சொற்களின் அழகை விமர்சிக்கிறார்கள்..

விமர்சனம் பெறுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நுணுக்கம் இது..

விமர்சிக்கப்படுபவரின் தேவை அறிந்து விமர்சித்தல்..

சிலபல பின்னூட்டங்களுக்குப் பிறகு படைப்பாளியின் எண்ணம், பார்வை, கோணம், என்ன முயற்சிக்கிறார், எந்த ஸ்டைலில் எழுதுகிறார் எனப் பல நுணுக்கங்கள் புரிந்து விடுகின்றன, (உண்மையிலேயே விமர்சனக் கண்ணோட்டத்தில் அவர் படைப்பை அணுகி இருந்தால்).

ஒவ்வொருவருக்கும் தன் படைப்பு இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு கனவு இருக்கும். விமர்சனத்திற்கான பின்னூட்டங்களிலும் அடுத்தடுத்து வரும் படைப்புகளிலும் அவரின் இந்த ஆர்வம் தன்னாலேயே வெளிப்படும். பின்னூட்டங்களுக்கு அவர்கள் கொடுக்கும் பதில்களில் அந்த ஆர்வம் ஆழப் புதைந்து கிட்க்கும்.

எனவே விமர்சனம் செய்தாயிற்று முடிந்தது என்று விட்டு விடாமல் அதற்கானப் பதில்களைப் படித்துப் புரிந்து கொள்ளுதல் மிக அவசியமாகிறது.

அதாவது

படைப்பு விமர்சிக்கப் படுகிறது - அடுத்தப் படைப்பு உயர்வடைகிறது
விமர்சனம் விமர்சிக்கப் படுகிறது - அடுத்த விமர்சனம் உயர்வடைகிறது.
விமர்சனம் உயர்வடைகிறது - படைப்பும் உயர்வடைகிறது
விமர்சனம் செய்தவர் ஆர்வத்தால் படைக்கத் தொடங்குகிறார் (பென்ஸ் உங்களைச் சொல்லலை )
படைத்தவர் உற்சாகமாய் விமர்சிக்கக் கற்கிறார்..

இப்படி இரண்டறக்கலத்தல்

இதுதான் விமர்சனம் - படைப்பு இரண்டிற்கும் பெருமை..

இத்துடன் என் நீண்ட உரையை முடித்து வாய்ப்புக் கொடுத்தவர்களுக்கு நன்றி கூறி அமர்கிறேன்..

(இவ்வளவு சொன்ன பிறகு என் விமர்சன எதிர்பார்ப்பை நீங்கள் கஷ்டப்படாமல் அறியத் தராமல் இருப்பேனா?. நான் எனக்கு அளிக்கப்படும் விமர்சனங்களில் மிகவும் ரசிப்பது என்ன தெரியுமா? கேள்விகளைத்தான்!)

3 comments:

  1. ஹா.. இது ரொம்ப நீளம்..

    ( இது என்ன வகை விமர்சனம்? )
    :))

    ReplyDelete
  2. உண்மையான மனம் திறந்த விமர்சனம்

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை தோழரே... படித்தேன் ரசித்தேன்... நாகரிகமாக விமர்சனம் செய்வதைப் பற்றிச் சிறப்பாக எழுதியுள்ளீர்கள்... இப்பயனுள்ள கட்டுரையை (உங்கள் தளௌரல் மூலமாக) முகப் புத்தகத்தில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    நன்றி
    மன்னார் அமுதன்

    ReplyDelete