Tuesday, December 22, 2009

வாரிசு அரசியல் சரியா? தவறா?



அரசியலில் அடிக்கடிச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு வாரிசு அரசியல். இது தவறு என்போர் சிலர். தகுதி வாய்ந்தவர் என்றால் சரியே என்பவர்கள் சிலர்.

கவனிக்க வேண்டிய விஷயங்களும் உண்டு.


தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருக்கச் செயல்


என்ற வள்ளுவனின் வாக்கும் மகனை லைம் லைட்டிற்குக் கொண்டு வருவது தந்தையின் கடன் என்கிறது.

அரசியல் என்பது மிகப் பெரிய கடல். அதில் ஒரு கட்சியை வளர்ப்பது என்பது ஒரு தனி மனித முயற்சி அல்ல. இலட்சக் கணக்கான தொண்டர்களின் முயற்சி. தகுதி உள்ளோரின் வாய்ப்பு தட்டிப் பறிக்கப் பட்டால் அது நாட்டின் நன்மைக்கு பங்கமாகும். அந்தக் கட்சியின் வலிமைக்கும் பங்கமாகும்.

தலைவனாக உருவெடுப்பது என்பது புதிதாய் ஆரம்பித்த கட்சியில் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஏனென்றால் தலைவனை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே அக்கட்சியில் இணைகிறார்கள். அடுத்த அடுத்த தலைவனாக வருபவன் பலராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவனாக இருக்க வேண்டும். அப்படியானால் அதற்குரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.

ஒரு தலைவனின் கடமைகளில் ஒன்று தனக்கு பின் யார் என்பதை அடையாளப் படுத்துவது மட்டுமல்ல, அவரை அந்த ஸ்தானத்திற்குத் தயார்ப்படுத்தலும்தான், ஆக தலைமைக்கு என்று சிலரை அடையாளம் காணுதலும் அவர்களுக்கு உரிய வாய்ப்புகளும் பயிற்சிகளும் தருதலும் அவர்களில் ஒருவரைக் கட்சித் தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு உறுதுணையாக இருக்கும் உளப்பாங்கை வளர்ப்பதுமாகும்.

இப்படி நடக்காத போது கட்சி உடைந்து வலிமை குறைந்து மீண்டும் ஒரு தலைவன் தலையெடுத்து வரும் வரை தடுமாறி விடுகிறது. யாரும் தலையெடுக்காவிட்டால் அக்கட்சி அழிந்தே விடுகிறது.

இதில் வாரிசுகள் கட்சிப் பெரும்பான்மையோரால் ஒப்புக் கொள்ளப்படுபவரில் ஒருவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பயிற்சிக்கென்று வாய்ப்புகள் எளிதாக்கப்படுவதை எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் என்று தூற்றத்தயங்குவதில்லை,

இதற்கு அடிப்படைக் காரணம் கட்சித் தலைமை இராஜதந்திரமாக பிறரை தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொள்வதில் தட்டி வைப்பது ஆகும்.

இப்படி ஆழமாய் சிந்திக்க சிந்திக்க வாரிசுகளுக்கு அரசியலில் அதிகப்படியான வாய்ப்புகளை ஏற்படுத்துவது முற்றிலும் தவறு என்று சொல்லவும் முடிவதில்லை..

இன்னும் கொஞ்சம் ஆழமாக...

கட்சிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு என்பது குறுகிய அளவில் இருப்பதால் தலைமை ஏற்றல் என்று வரும் பொழுது அவர்களின் பரந்த செல்வாக்கில்லாமை வெளிப்பட்டு விடுகிறது.

வாரிசில்லாத தலைவர்களின் மறைவின் போது கட்சிகள் அடைந்த நிலைமையை ஆராய்ந்து பார்த்தால்...

ஸ்தாபன காங்கிரஸ், அதன் தாய்கட்சியோடு இணைந்தது. கொள்கை மாறுபாடுள்ள கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அடுத்த தலைவர்களை அடையாளம் கண்டது. அ.தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்களும், அனுபவம் இல்லா வாரிசும் மறைந்து செல்வாக்கு பெற்ற ஜெயலலிதாவின் பின்னால் நின்றது..

கட்சிகளின் அடிப்படைக் கொள்கை, ஆளுமைத் தன்மை உள்ள அடுத்த தலைமுறை இரண்டும் இல்லாக் கட்சிகள் காணாமல் போய்விடுகின்றன.

அ.தி.மு.க வின் கொள்கை கலைஞர் எதிர்ப்பு. ஜனதாதள் கொள்கை காங்கிரஸ் எதிர்ப்பு..ம.தி.மு.க வும் அப்படித்தான், ஆக வைகோ விற்குப் பின்னால் ம.தி.மு.க - தி.மு.க அல்லது அ.தி.மு.க இரண்டிலும் கலந்து விடும். இப்படி இன்னொருத்தரை எதிர்ப்பதற்காகவே உண்டாகும் கட்சிகளுக்கு ஆளுமை நிறைந்தவர்கள் இல்லாத போது அந்தக் கட்சி அதன் ஒத்த கொள்கை உள்ள கட்சியுடன் கலந்து விடுகிறது.

ஆக கொள்கை அளவில் வித்தியாசம் குறைவாக இருக்கும்பொழுது வாரிசுகள் இல்லா விட்டால் கட்சி - காணாமல் போகக் கூடிய வாய்ப்பு அதிகம்.

ஆனால் வாரிசுகள் அராஜகம் என்பது வேறொரு பகுதி. அதை எதிர்ப்பதுதான் வாரிசு அரசியலை எதிர்ப்பதாக திரிந்து விட்டது என்று எண்ணத் தோன்றுகிறது..

வாரிசுகள் வளர்வதால் பிரச்சனை அதிகம் இல்லைன்னே தோணுது..

ஆனால்

வாய்ப்பு கிடைக்காமல் திறமை எப்படி வெளிவரும்? என்னதான் பிரதமரின் மகன் என்றாலும், மக்கள் ஓட்டளிக்காமல் மக்களவைத் தேர்தலில் ஜெயிக்க முடியாது. அடுத்த பிரதமரும் ஆக முடியாது. எஸ்.வி. ஜானகி அவர்களால் எம்.ஜி.ஆரின் வாரிசாக நிலைக்க முடிந்ததா? இல்லையே.

அரசியலில் வெகுப் புதிதாய் நுழைபவர் வேறு, அரசியல் குடும்பப் பிண்ணனியுடன் நுழைபவர் வேறு. இராகுல் காந்தி கட்சி விளம்பரங்களை ஒட்டி, பொதுக்கூட்டங்களில் பார்வையாளராக கைதட்டும் வீர்ராக பொது வாழ்க்கையை ஆரம்பிக்க முடியுமா என்ன?

அரசியலில் பதவிகள் பெற முக்கியமானவை செல்வாக்கு, செல்வம், ஆளுமை, திறமை போன்றவை. இதில் முதல் மூன்றும் வாரிசுகளுக்கு எளிதில் கிடைத்து விடுவதால் அவர்களால் சட்டென்று உயர்ந்து விட முடிகிறது.

ஜனதாதள் என்ற கட்சி என்ன ஆனது? துண்டு துண்டாய் உடைந்து விடவில்லையா? முலாயம் சிங்கிற்குப் பின்னால் சமாஜ்வாடி கட்சியின் கதி? வைகோ விற்குப் பின்னால் ம.தி.மு.க?

இது சுதந்திரப் போராட்டக் காலமல்ல. அரசியலில் பங்கேற்பது முக்கியம் பலன் எதிர்பார்ப்பது முக்கியமல்ல என்றுச் சொல்வதற்கு, நான் மாவட்டச் செயலாளர் பதவிக்குத் தகுதியானவன் என தனக்குள் 20000 பேர் எண்ணிக் கொண்டிருக்கலாம், ஆனால் இருக்கும் பதவிகள் எத்தனை? 50?

எல்லோரும் வரிசைப் படிதான் வரவேண்டும் என்றால், அதாவது அடிப்படை உறுப்பினர், வார்டு மெம்பர், பஞ்சாயத்துத் தலைவர், நகராட்சித் தலைவர், எம்.எல்.ஏ, மந்திரி, முதன்மந்திரி என வந்து சேருவதற்குள் தொண்டு கிழமாகி விடமாட்டார்களா என்ன?

அடிப்படை உறுப்பினர் அ- சொன்னால் ஒரு நாலு பேர் கேட்பார்கள். ஆனால் அரசியல் வாரிசு அடிப்படை உறுப்பினராக சேரும் அன்றே அவர் சொல்வதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் தயாராகி விடுகிறார்கள். அப்படியென்றால் வாரிசுக்கு வாய்ப்புக் கொடுப்பது முக்கியமாகி விடுகிறதல்லவா?

தகுதியில்லா வாரிசை திணிப்பதின் மூலம் ஒருவர் தனது கட்சியை அழித்துக் கொள்கிறார் அல்லவா? வாரிசு பதவி பெறுவது என்பது எளிது, ஆனால் அதிலே நிலைப்பது என்பது அவரின் கையில் அல்லவா இருக்கிறது?

தகுதியில்லா ஒருவரைத் திணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதன் காரணம் என்ன என்று ஆராய வேண்டும். ஏனென்றால் மக்களுக்கு வேறு சாய்ஸ்கள் இல்லை என்பதுதானே அர்த்தம். மு,க.அழகிரி தகுதி இல்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். வீரபாண்டி ஆ.ராசா தகுதியில்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். என்.கே.கே.பி.ராசா தகுதியில்லாதவர் என்று கருதினால் மக்கள்தான் அவரை நிராகரிக்க வேண்டும். நீ நிறுத்திய வேட்பாளர் சொத்தை என மக்கள் நிராகரிப்பதுதான் சரியான முறையாகும்.

50 வருடம் கட்சி கட்சி என உழைத்த என் மகனும், நேற்றுதான் கட்சியில் சேர்ந்து அரசியல் என்பதை அறியத் தொடங்கிய இன்னொருவனும் சரிநிகர் சமானம் என்றால் எந்தக் குடும்பத்தாரும் அந்த அரசியல்வாதியை கூடச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

ஆக அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆரம்பத்தில் இருந்தே தங்களை நிரூபித்துத்தான் மேலே வரவேண்டும் என்றால் அது தவறுதான்.

ஒரு நடிகர் அரசியல் கட்சியில் இணைகிறார் என்றால் அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு ஏற்ப உடனடியாக பதவியும் பொறுப்பும் கிடைக்கிறது, ஒரு தொழிலதிபர் இணைந்தால் அவருக்கு இருக்கும் செல்வம், செல்வாக்கிற்கு உரிய பதவியும் பொறுப்பும் உடனே கிடைக்கிறது. வாரிசுகளுக்கும் அதே போல் செல்வம், செல்வாக்கு இருக்கிறது.. பதவியும் உடனே கிடைக்கிறது.

அதற்கு மேல் நிலைத்திருப்பதற்கு அவர்கள்தான் கஷ்டப்பட வேண்டியதிருக்கிறது. வாரிசு வளர ஒரு அரசியல்வாதை பலிகடா ஆக்குவது தனது செல்வாக்கையும், தனது கட்சியையும்தான் என்பதை நன்கு உணரவேண்டும். நிராகரிக்கும் உரிமை மக்கள் கையில் இருந்து கொண்டே இருக்கிறது அதை உபயோகிக்காமல் வாரிசு அரசியல் தவறு என்று புலம்புவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது?

கள்ள ஓட்டு, வன்முறை மூலம் ஒருவர் திணிக்கப்படுகிறார் என்றால் ....

அங்கே வாரிசா? இல்லையா? என்பது பிரச்சனை அல்ல..

இவற்றை எதிர்ப்பதும் களைவதும் தான் முக்கியம். மக்கள் ஆதரவு பெற அடுத்த கட்சியினர் தவறும்பொழுது மட்டுமே இவை பலிக்கும் என அறியவேண்டும்.

பின்கதவு வழியே வாரிசை நுழைப்போரும் உண்டு. அதை அப்புறம் பார்க்கலாம். ஆனால் வாரிசுகளை நிராகரிக்கும் உரிமை மக்கள் கையில் இருக்கத்தான் செய்கிறது. அதை உபயோகிக்காமல் வாரிசு அரசியல் தவறு என்று புலம்புவதில் என்ன பிரயோசனம் இருக்கிறது?

அரசியல் வாழ்க்கைக்கு தகுதிகள் தேவையில்லாமல் போய்விட்டதன் காரணம் யார்? ஓட்டுப் போடுபவர்களா? இல்லை அரசியல் கட்சித் தலைவர்களா? நாமதானே ஓட்டுப் போடறோம், நாம தகுதி பாக்காம தராதரம் பாக்காம ஓட்டுப் போடுவதால்தானே இந்தப் பிரச்சனை. இலட்சிய தி.மு.க துணைத்தலைவர் யார் என்று யாராவது கவலைப் படப் போறீங்களா இல்லை கொள்கைப் பரப்புச் செயலாளர் யார் என்று யாராச்சும் கவலைப்படப் போறீங்களா? இல்லைதானே.

வாரிசுகளை வளர்ப்பது என்பது வேறு, திணிப்பது என்பது வேறு. அன்புமணி கேபினட் மந்திரி ஆனதற்கும் அழகிரி மதுரையில் வென்றதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவரே வாரிசுகளை முன்னால் கொண்டுவரமுடிகிறது. சுப்ரமணிய ஸ்வாமி ஜனதா கட்சியின் தலைவராக அவருடைய மகனை அறிவிக்கலாம். யாரும் கவலைப் படப் போவதில்லை.

அதே சமயம் தி.மு.க வில அண்ணாவிற்குப் பிறகு என்று பார்த்த பொழுது கலைஞர் எழுந்து நின்றார். வென்றார். நெடுஞ்செழியன் மூத்தவர்தான். ஆனால் அரசியல் சாணக்யம் இல்லை.

அதே எம்.ஜி.ஆர் இறந்த போது ஜானகியை வாரிசாக்கினர் சிலர். நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோர் நால்வரணி அமைத்தனர். ஜெயலலிதா தனிப்பட்டுப் போனார். யாரிடம் ஆளுமைத் திறமை இருந்ததோ அவர் வென்றார். அரசியலில் மிகவும் இளையவரான ஜெயலலிதா வென்றார்.

ஸ்தாபன காங்கிரஸ் காமராஜ் இறந்தபின் இந்திரா காங்கிரஸூடன் இணைந்தே விட்டது. ஏன்? தலைவர்கள் வளர்க்கப்படாததால் தானே.

ஆக வாரிசை திணித்தாலும் ஆளுமைத் திறமை உள்ள அரசியல் சாணக்கியர்கள்தான் தலைமை பொறுப்புக்கு வரமுடியும். வாரிசு சரியில்லையென்றால் அந்தக் கட்சியே கவிழ்ந்துவிடும்.

தெலுகுதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். என்.டி.ராமாராவ் என்ன ஆனார்? சாணக்கியர் சந்திரபாபு நாயுடு லஷ்மிபார்வதி விஷயத்தில் ராமாராவையே மண்ணைக் கவ்வ வைக்கவில்லையா?

ஒரு கட்சியில் வாரிசு திணிக்கப்படுகிறார் என்றால், அங்கு உள்ள அரசியல் முதிர்ச்சி உள்ளோருக்கு ஆளுமைத் திறமை குறைச்சலாக இருக்கிறது என்றுதானே பொருள். அது மக்கள் பிரச்சனை அல்லவே. ஏன் கலைஞரை சட்டசபைத் தேர்தலில் தோற்கடித்து கண்டிக்கலாமே மக்கள்.

வாரிசு வளர்க்கும் தலைவரின் வலிமை, தன்கட்சியில் யாருக்கும் பரவலான செல்வாக்கு இல்லாமல் இருப்பதே ஆகும். நெடுஞ்ச்ழியன் போல பழுத்த அரசியல்வாதியாக இருந்து 514 ஓட்டுகள் வாங்கினால் அதை வைத்துக் கொண்டு எப்படி கட்சி நடத்த முடியும்?

தன் செல்வாக்கை தன் மகனுக்கு கடன் கொடுக்கிறார் தலைவர். மகன் ஜெயித்தால் அவர் செல்வாக்கு அதிகரிக்கிறது. இல்லாவிட்டால் அவர் செல்வாக்கு சரிந்து விடுகிறது. அவர் செய்த தவறுக்கு மக்கள் தண்டனை அளித்து விடுகிறார்கள். எனவே படப் போவதும் அவர்தான்.

தன் வாரிசுகளை அரசியலில் நுழைக்காமல் இருப்பது சரியா தவறா என்பது பார்க்கும் கோணத்தில் இருக்கிறது.

சரி என்பதற்கும் உதாரணங்கள் உண்டு. தவறு என்பதற்கும் உதாரணங்கள் உண்டு.

யார் யாரை நுழைத்தாலும் கடைசியாக அதை "அப்ரூவ்" செய்யும் அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது,

1. அடுத்த கட்டத் தலைவர்களை உருவாக்குதல்
2. அடுத்த கட்டத் தலைவர்கள் உருவாதல்

இரண்டும் வெவ்வேறுதானே.

அறிவியல் ரீதியாக ஜீன்களின் வழியே வாரிசுகளுக்கு சிலபல தகுதிகள் உண்டுதானே?

பாஜாக, பல தலைவர்கள் உள்ள கட்சிதான், வாஜ்பாய், அத்வாணி, வெங்கைய்யா நாயுடு, நரேந்திரமோடி இப்படி பல அடுக்குகள் கொண்டதுதான். ஆனால் சூட்சுமக் கயிறு?

தலைவனாகும் தகுதியை வளர்த்துக் கொள்வது அரசியலில் ஈடுபடுவோரின் கடமை அல்லவா? அவரும் அதில் ஈடுபாட்டைக் காட்டி வளரவேண்டும். மக்கள் விரல்நீட்டும் திமுக வில் மூன்று முறை பிளவு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் தனிக் கட்சி ஆரம்பித்தார் வென்றார். அவர் இருந்த வரை கலைஞரால் முதல்வர் கனவு மட்டும்தானே காண முடிந்தது. ஆக எம்.ஜி.ஆர் தகுதியானவர். தள்ளி வைக்கப்பட்டபொழுது உயரமுடிந்தது என்பது நிரூபணம் ஆகிறது. வாரிசு திணிப்பு மு.க.முத்து எடுபடவில்லையே!

அதே வைகோ, விஜய டி.ஆர் விஷயங்களில் வாரிசு வளர்ப்பு வென்றது. காரணம் அவர்கள் கட்டி இருந்த ஆகாயக் கோட்டை மணற்கோட்டை. விஜய டி ஆர் விஷயத்தில் வெறும் மனக்கோட்டை.

ஆற்காடு வீராசாமியோ, அன்பழகனோ என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவில்லை என்றே கூறலாம். எனவே அங்கு வெற்றிடமே நிலவுகிறது.

மன்மோகன்சிங் - சோனியா - இராகுல் காந்தி போல இருக்கவேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே சரி என்று சொல்ல முடியாது அல்லவா.

சோனியாவும் இராகுலும் அரசியலில் தலையிடாமல் இருந்திருந்தால் காங்கிரஸின் கதி?

1991 மே 21, இந்தத் தேதி இல்லாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க கதி என்ன ஆகி இருக்கும்? அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலில் தோற்று, காங்கிரஸின் நட்பை இழந்து அ.தி.மு.க உடைந்து காணாமல் போயிருக்க மிகப் பெரிய வாய்ப்பு இருந்தது ஞாபகம் இருக்கிறதா?

இரண்டாம் நிலைத் தலைவர்களை வளர்ப்பதில் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. அவர்களுக்கு ஆளுமைத் தன்மை இருக்க வேண்டும்.

தலைவனாக உருவெடுப்பவன் மிகப் பெரிய அறிஞனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தலைவனாக உருவெடுப்பவன் மிகச் சிறந்த உழைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தலைவனாக உருவெடுப்பவன் மிகச் சிறந்த வல்லுனனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இவர்கள் அனைவரையும் அரவணைத்து, ஒரு குறிக்கோளை நோக்கி நடைபோட வைத்து அதற்கு தகுந்த வாய்ப்புக்களை உருவாக்கித் தந்து உறுதுணையாக இருந்து பொதுமக்களின் ஆதரவைப் பெறவேண்டியவனாக இருக்கிறான்.

அதே தலைமைப் பண்பை,அரசியலில் அவனுடன் இருக்கும் பலர் பயிலாமல் போகிறார்கள். எல்லைகளைத் தாண்டிய அங்கீகாரம் பெறுவது என்பதில் அறிவாளிகளும், உழைப்பாளிகளும் கவனம் காட்டாததால் சார்புத் தன்மைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

இதனாலேயே சோனியா தலைமை ஏற்க வேண்டி வந்தது. இராகுல் உள்ளே வரவேண்டி இருந்தது என்பதை மறக்கக் கூடாது. இராகுல் மந்திரிப் பதவி ஏற்காதது கூட ஒரு தந்திரோபாயம் தான். இதனால் அவரின் செல்வாக்கு கூடுகிறது. அவரின் அரசியல் வாழ்க்கை ஸ்திரமாகிறது.


பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
வேதனையை பங்கு வச்சா சொந்தமில்ல பந்தமில்ல


என்பது அரசியலில் மிகமிகச் சரியான ஒன்று. தி.மு.க வில் ஆட்சி, அதிகாரம், பதவி பணம் இருப்பதால் பலப்பல உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் தன் எல்லையைத் தாண்டி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் மிகமிகக் குறைவு. அப்படிப் பார்க்கும்பொழுது கனிமொழியை மட்டுமே திணிப்பு என நாம் கூற இயலும். ஆனால் திணிக்க முடிந்ததா என்ற கேள்விக்கு பதில்?

இல்லை என்பதுதான்.


வாரிசுகளை கவனியுங்களேன்.


சரண்சிங்கின் லோக்தள் - வாரிசு > அஜீத் சிங் --> கட்சி எங்கே?

அ.தி.மு.க  வாரிசு - எஸ்.வி.ஜானகி -- என்ன ஆனார்?
தெலுகுதேசம் லஷ்மி பார்வ்தி - என்ன ஆயிற்று கட்சி?
தேவிலால் - கட்சி என்ன ஆயிற்று?



இதே போல் வென்றவர்களும் உண்டு


பிஜூ பட்நாயக் - நவீன் பட்நாயக்
நேரு குடும்பம்
கலைஞர் குடும்பம் - மு.க.முத்து தோல்வி, ஸ்டாலின் வெற்றி, அழகிரி வெற்றி, கனிமொழி -??
முரசொலி மாறன் - தயாநிதி மாறன் நல்ல பெயர் எடுத்தார்
தேவேகௌடா - முத்துக்குமாரசாமி - அப்பா அவுட் - மகன் இன்


ஓட்டப்பந்தயத்தில் முதலில் யார் ஆரம்பிக்கிறார் என்பது முக்கியமில்லை. கடைசியாக யார் முன்னால் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

வாரிசுகளை திணித்து அவர்களுக்கு சற்று முண்ணனி பெற்றுத் தருவதை அரசியல்வாதிகள் செய்கிறார்கள். அப்படிச் செய்யா விட்டால் அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல தியாகிகள்.

திருவள்ளுவரே சொல்லி இருக்கார்னு சொன்னனே கவனிக்கலையா?


தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருக்கச் செயல்

மகன்தந்தைக் காற்றும் உதவி யிவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்


அவரே மகனை அவைகளில் முக்கியத்துவம் தரத்தானே சொல்லி இருக்காரு...

வெள்ளென எழுப்பி சபைக்கு சீக்கிரம் போன்னு திருவள்ளுவர் சொல்லச் சொன்னதா நான் நினைக்கலை.

தனக்குத் தெரிந்ததை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்தலும் அவர்களுக்கு வாய்ப்புக்களை உருவாக்கித் தருதலும் ஒரு தந்தையின் கடமை என்பதை மறுக்க இயலாது அல்லவா?

தவறுகள் என்பது எல்லா இடங்களிலும் இருக்கு. தவறு இல்லா இடம் என்று ஒன்றைக்கூடச் சொல்ல முடியாது என்பது உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

தகுதியில்லா சில நபர்கள் திணிக்கப்படுகிறார் என்பதால் வாரிசு அரசியல் என்பதே தவறு என்பது எந்த விதத்தில் ஞாயம்?

குடும்பம் முழுதும் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல. அரசியலில் ஈடுபடுவதே சுரண்டத்தான் என்னும்பொழுது தனியா திருடுனா என்ன குடும்பத்தோடு சுரண்டினா என்ன?


உண்மை நிலையைச் சற்று ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

ஒரு கட்சி என்பது தலைவரின் சொத்தல்ல. பல லட்சம் தொண்டர்கள் இணைந்ததுதான் கட்சி. - இது தியரி.

அதை அதிமுக விஷயத்தில் நன்றாகவேப் பார்த்தோம் இல்லையா? நெடுஞ்செழியனுக்கு 500 ஓட்டு, திருநாவுக்கரசருக்கு ஒரு தொகுதி, சாத்தூராருக்கு ஒரு தொகுதி, வானளாவியவருக்கு ஒரு தொகுதி இன்னபிற முக்கிய உறுப்பினர்களுக்கு ஒரு தொகுதி கூட பூரணமாய் ஆதரவில்லை. ஒரு கட்சியின் தலைமைக்காகத் தான் நம் மக்கள் முக்கியமா ஓட்டுப் போடறாங்க. தலைவர் என்பது அப்படி ஒரு தனித்துவம் பெற்ற இடம். - இதான் பிராக்டிகல். ஆக இலட்சககணக்கான் உறுப்பினர்கள் இருந்தாலும் மக்கள் வாக்களிப்பது தலைமையை நம்பித்தான்.

துடிப்பும் தகுதியும் உள்ளவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து வெல்வதை யாரும் தடுக்கவில்லையே! தி.மு.கவில் இருந்துதான் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லையே.தலைவர் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி விட்டு தன் ஆதரவாளர்களுடன் வந்து தனிக்கட்சி நடத்துபவர்கள் இல்லையா என்ன? அவர்கள் தங்கள் திறமையை இராஜதந்திர்த்தைக் கொண்டு வென்று காட்டலாமே.. திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்பா இல்லை? இதைத்தான் சொன்னேனே செல்வாக்கு.. தன்வாக்கு - பேச்சு செல்லுபடியாவது அரசியலில் மிக மிக முக்கியம் என்று.

செல்வாக்குள்ள அரசியல்வாதிகள் தகுதியுள்ளவரை அரசியலில் பயிற்றுவிக்க வேண்டும். வாய்ப்புக் கொடுத்து, அனுபவம் வளர்க்க வேண்டும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. உறவினரோ இல்லையோ இந்த வகையில் செல்வாக்கை உப்யோகப்படுத்தாமல் இருப்பதுதான் தவறு.

ஆனால் இப்படிப் அடுத்தகட்டத் தலைவராக வருபவர் மரத்தை வெட்டும் கோடாரிக் கைப்பிடியாய் மாறாமல் இருப்பார் என்பதற்கு யாராலும் உத்திரவாதம் தரமுடியாது. கன்ஷிராம் மாதிரி ஆகிவிடாமல் இருக்கணுமே..

வாரிசு அரசியலை ஒத்துகிட்டோம்னா, சின்ன வயசில் இருந்தே அவங்களும் அரசியலில் ஈடுபட்டு அட்லீஸ்ட் கஷ்டப்பட்டு தலைவரா வருவாங்க.

இல்லைன்னாதான் இப்படி திடீர் திணிப்புகள் நடக்கும். திணிப்புகளுக்குக் காரணம் எதிர்ப்புதான். அன்புமணி திடீர்னு இராஜ்ய சபா மெம்பர் ஆகி மெம்பர் ஆனார்னா அதுக்குக் காரணம் வாரிசு அரசியல் தவறு என்று இருந்த எண்ணம்தான். செல்வாக்கை வளர்க்கும் தேவை இருந்த வரை வாரிசு அரசியலா? உவ்வே என்று சொல்லிவிட்டு செல்வாக்கு வளர்ந்தவுடன் குறுக்கு வழியில் மந்திரியாக்கியது,

இதுக்கு என் குடும்பத்தையே அரசியலுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றுச் சொல்லி ஆரம்பத்தில் இருந்து மனைவி, மச்சான் சகிதம் பாடுபடும் விஜய்காந்தின் வாரிசு அரசியல் எவ்வளவோ பரவாயில்லை. நாம வாரிசு அரசியலை தவறுன்னு சொல்லலைன்னா அட்லீஸ்ட் இப்படி உழைக்கவாவது செய்வார்களே. அதை முக்கியமா கவனிக்கணும். நீங்க தப்புன்னு சொல்றதாலதான் வளரும் காலத்தில் வாரிசுகளை அடக்கி வாசிக்க வச்சு, இப்படித் திடீர் திணிப்புகள் செய்யப்படுகிறது.

அழகிரியைப் பொருத்தவரை தேர்தலில் போட்டியிடவில்லையே தவிர பல ஆண்டுகளாக அரசியலில் துடிப்புடன் ஈடுபட்டு வருபவர்தான். அரசியலைப் பற்றி தெரியாதவர்கள் யாரிடமாவது முந்தா நேத்துதான் அவர் முதன் முதலா அரசியல் மேடையில் பேசினார் என்று சொல்லலாம். இதுவரை பல தேர்தல்களில் அவர் பணியாற்றி இருக்கிறார், ஏன் தி.மு.க ஆதரவில் சென்ற முறை வென்று, இன்று அழகிரியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற் மோகன் அவர்கள் சொல்லட்டுமே போன தேர்தலில் அழகிரி மோகனுக்காக களப்பணியாற்றவில்லை என..

அரசியல் அனுபவம் என்பது எம்.எல்.ஏ, எம்.பி., மந்திரிப் பதவி வகிப்பதில் மட்டுமே வருவதா என்ன? கட்சியில் பதவியே வகிக்கா விட்டாலும் பணியாற்றியவர்தான் அழகிரி.

வாரிசு அரசியலை அங்கீகரிப்போம். தகுதி இல்லா வாரிசுகளைத் நிராகரிப்போம் தகுதி இல்லாதவரை திணிப்பவரை தோற்கடிப்போம் என்பதே சரியான பார்வை.,

இந்த எண்ணம் வெளிப்பட்டு இருந்தால், நல்ல அரசியல்வாதிகளுக்கு இந்த உறுதியை நாம் அளித்தால் அவர்கள் தைரியமாக எதிர்காலத் தலைவர்களை பிரத்யேகப் பயிற்சி கொடுத்து தயாராக்குவார்கள், அன்புமணி போல திடீரெனத் திணிக்கப்படாமல் ஆரம்பத்தில் இருந்தே அரசியலில் அனைவரும் பங்குபெறுவார்கள்,


மற்றபடி வாரிசு அரசியல் தவறு என்றால் ----

அது நல்ல வாரிசுகளை அரசியலில் இருந்து விலக்கி வைக்க மட்டுமே உதவும். ஏனென்றால் இவர்கள்தானே தர்மத்தை, ஞாயத்தை மதிப்பவர்கள்.


அதை மதிக்காத வாரிசுகள் திணிக்கப்படுவதை தடுக்க முடியாமல் திராணியற்றவர்களாக இருக்கிறோம். அதாவது நல்லதை மட்டுமே தடுக்கிறோம்.

ஒரு சட்டமோ தர்மமோ தீமை விளைவதைத்தான் தடுக்க வேண்டும். ஆனால் வாரிசு அரசியல் தவறு என்றுச் சொல்வதால் நாம் நன்மை விளைவதை தடுக்கிறோம். தீமை நடப்பதை தடுக்க இயலாதவர்களாக இருக்கிறோம் என்னும்பொழுது நல்ல வாரிசுகள் வர வழிவிடுவதுதானே தர்மம்,

பரம்பரை ஜனநாயகம் என்பது எந்தக்காலத்திலும் வராது. இயற்கைச் சமச்சீர் மாதிரி அளவு மீறிச் செல்லும்பொழுது தானாகவே கட்டுப்படும்.

நல்லதோ கெட்டதோ ஒரு அளவிற்கு மேல வளரமுடியாது. சமச்சீர் தானே வந்துவிடும். இதுதான் இயற்கை.

இதில நாம சில நாமதான் சும்மா கவலைப்பட்டு கோவப்பட்டு இரத்த அழுத்தத்தை உயர்த்திக்கிறோம்.

இலஞ்சத்தை, வாரிசு அரசியலுக்கு ஒப்பிடுவது தவறு. இலஞ்சம் என்பது குற்றம். வாரிசு அரசியல் குற்றம் ரேஞ்சுக்கு கிடையாதுங்க. அதில நல்லதும் நடக்கலாம்.. தீமையும் நடக்கலாம் என்பதை எல்லோருமே ஒத்துக் கொண்டு இருக்கீங்க.

வாரிசு அரசியலில் ஈடுபடுவதால் எந்த நன்மையும் எப்பவுமே நடக்கலை என்று யாராலும் சொல்ல முடியாது,

அப்படி இருக்க, வாரிசு அரசியல் தவறு என்று சொல்ல முடியாது, அதை அரசியல்வாதிகள் தவறா உபயோகிக்கிறாங்க என்று மட்டும் சொல்லலாம்,


ஒரு சுயநலத் தலைவனின் மோசமான வாரிசுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 

ஒரு நல்ல தலைவனின் நல்ல வாரிசிற்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.


இதுதான் வாரிசு அரசியல் தவறு என்பதன் மூலம் நாம் பெறக்கூடிய ஒன்று.

ஆகவே வாரிசு அரசியல் தவறில்லை. வாரிசுகள் தவறானவர்களா இருக்கக்கூடாது என்பது சரின்னு சொல்றேன்..


இதனாலும் மீண்டும் சொல்கிறேன்..


வாரிசு அரசியலை அங்கீகரிப்போம். தகுதி இல்லா வாரிசுகளைத் நிராகரிப்போம் தகுதி இல்லாதவரை திணிப்பவரை தோற்கடிப்போம் என்பதே சரியான பார்வை.,

.

2 comments:

  1. தகுதி என்றால்... குலத்தொழிலை எதிர்த்தவர்கள் தான் இன்று வாரிசு அரசியல் நடத்துகிறார்கள். கல்வியிலேயே சமச்சீரை வேண்டுகிறோம். ஜனநாயகத்தில் சமச்சீர் வேண்டாம்மா. காலமெல்லாம் அவர்கள் ஆண்டான்களாக... இவர்கள் ஓட்டு போட, பல்லக்கு தூக்க... மீண்டும் மன்னராட்சிக்கு வழி வகுக்கிறோம். வாரிசு அரசியல் ஜனங்களுக்கு திகட்டும் போது தானாகவே எதிர்ப்பலை கிளம்பும். அது எப்போது என்பது தான் கேள்வி

    ReplyDelete
  2. குலத்தொழில் என்றால் தந்தை செய்த தொழிலையே மகன் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதாகும். அந்த ஒரு வார்த்தை இருக்கு பாத்தீங்களா? கட்டாயம் என்று. அது மட்டும்தானுங்கண்ணா அங்க தப்பு.

    ஆளும் திறமை உள்ளவங்க மேல வரணும்னா இந்தப் போட்டி மிக மிக அவசியம்.

    யாரு கண்டது, வாரிசுகளே போட்டிகளில் இறங்கி அழிந்து போகலாம்..

    அதான் சொல்றேன், வாரிசு வளர்ப்பது அனுமதிக்கிறீங்களோ இல்லையோ, தவறான வாரிசுகள் வரத்தான் போறாங்க. நல்ல அரசியல்வாதிகளின் வாரிசுகள் மட்டுமே வரமாட்டாங்க, அப்படி ஒரு தடுப்பு தேவையா என்ன?

    ReplyDelete