Wednesday, December 9, 2009

வெயில் கவிதைகள்!!!

மழைக்கு லட்சக்கணக்கில கவிதை இருக்கு. பனிக்கும், வசந்தத்திற்கும், ஏன் இலையுதிர்காலத்துக்கும் கூட எத்தனையோ கவிதை இருக்கு.


ஆனால் வெயிலுக்கு என்று கவிதைகள் மிகக் குறைச்சல்தான்.. என்னவோ ஆதவா இந்தவருஷம் இந்தத் தலைப்பை ஆரம்பிச்சு வச்சாரு,. நானும் எழுதினேன்...


வெய்யிலை ரசித்து எத்தனைக் காலமாச்சு.. வறண்டு கொண்டிருக்கும் கண்மாய் கரையில் இருக்கும் காய்ந்த மரத்தடியில் லுங்கியோடும் துண்டோடும் கும்பலாய் கதைத்து (ஸ்டடி லீவில் படிப்பதாய் பேர் பண்ணி) பிறகு கண்மாயோரம் உள்ள கேனியில் குளித்துக் குளிர்ந்து ஆடிய ஆட்டங்கள்..


வெயிலின் ரசிகன் நான்.


கான்கிரீட் காட்டினில் வெய்யில் தீண்டத்தகாததாய் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதுதான் வருத்தம்.


வெய்யிலில் மனம் போன மாதிரி நடந்து விட்டு வந்தேன்..


எங்க பாட்டி வீட்டில சிட்டுக் குருவி கூடு இருக்கும்.. தாவாரத்தில் சோளம் கம்பு கேழ்வரகு இப்படி எதையாவது ஒரு தானியத்தை இறைத்து ஒரு தட்டில் தண்ணீர் வைத்து விடுவோம்..


குருவிகள் கீச் கீச்சென்று மகிழ்ச்சியாய் அதைச் சாப்பிட்டு தண்ணீரை அலகிலெடுத்து அண்ணாந்து குடிக்கும் அழகிருக்கே...


அதையெல்லாம் ஞாபகப் படுத்திய இந்த வெய்யில் கவிதைகளில்


உச்சி வெய்யிலில் ஒரு சாவகாசமான நடை பயணத்தில் கூடவே அழைச்சுகிட்டுப் போயிட்டு வரலாம் என்று எழுத ஆரம்பித்தேன்,,


அடிக்கிற வெயிலில் மூளையே உருகிப்போயிரும். அதான் இங்க வழிஞ்சிருக்கு...


இதை வேறு எதோடும் இணைத்து என்னை பின்னாடி திட்டக் கூடாது மக்கா..

குளிர்பதன அறைக்குள் இருந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன்
வெயில் கவிதைகளை.


இரவெல்லாம் உழைத்துழைத்து
காற்றைச் சுத்தப்படுத்தி
வியர்த்து நிற்கும் புற்களின்
நெற்றி துடைத்து முத்தமிட்டது
சூரியக் கதிர்!



வீச்சமில்லா நீர் குளித்து
வருடங்களாகின்றன

முலையுண்ணும் மகவு
இரத்தமுறிஞ்சியது போல்
ஆல்துளைக் கிணறுகளில்
செந்நீர்

கங்கையும் கழுவ முடியா பாவத்தை
வெயிலே உன்னால் மட்டும்தான்
கழுவ முடியும்

உக்கிரமாய் எரிந்து
அத்தனை நீரையும் ஆவியாக்கி
சுத்த நீரை கொடு..
மழையாய்.

என்ன வெயிலடித்தாலும்
மாடி வீட்டு மகராசர்களுக்கு
வியர்க்காது
உள்ளுக்குள்
ஈரம் இருந்தால்தானே!
ஏழையின் கம்மங்கூழை
பணக்காரனை குடிக்க வைக்கிறாய்.

கொஞ்சம் ஏழைக்கும்
மிச்சமிருக்கட்டும்
இற(ர)ங்கிவிடேன்


நுங்கும் தர்பூஸூம்
வெள்ளரியும் எலுமிச்சைச் சாறும்
கம்மங்கூழும், நீர்மோரும்
நீயில்லா விட்டால் ருசிக்காது
என் காதல் வெயிலே!

என் வீட்டுக் கூரை
ஓட்டைகளை காட்டிக் கொடுத்து
சரிசெய்யச் சொல்கிறது வெயில்
அடுத்த மழை வரும்முன்பு.


தார்ச்சாலை முத்தங்கள் பட்டு
நிலங்கள் போலவே
கால்களும் வெடித்துக் கிடக்கின்றன

மழைநீரோ குடிநீரோ
காத்துக்கொண்டிருக்கிற
சடங்கள் இரண்டும்

தூரத்தெரிகிற கருநிறம் கண்டு
அல்ப ஆசையை வளர்த்துக் கொள்கின்றன
முகிலோ தண்ணீர் லாரியோ என்று!


காய்ந்து வெடித்த கருவேல மரத்தின்
முட்கள் சிதறிக் கிடக்கின்ற
கண்மாய் காத்திருக்கிறது
என்னைப்போலவே

ஆளில்லா வண்டித்தடத்தில்
தண்ணீர் வண்டி சிந்தியதால்
முளைத்து வறண்ட
புற்களை தின்னும் ஆடாக
நீ கடந்த பொழுது
எனக்குள் துளித்தவைகளை
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

சுற்றிலும் வெம்மை
உள்ளுக்குள் வெறுமை
கருத்த முகத்தில் துளிர்த்த வியர்வையாய்
அவ்வப்போது நம்பிக்கை துளிர்க்கும்
மெயின் ரோட்டில் எதாவது பேருந்து

நின்று செல்லும் பொழுதெல்லாம்.



நாங்கள் கரி பூசினோம்
நீயும் கரி பூசினாய்

உச்சந்தலையிலும்
பிடரியிலும்
உன் அனல் முத்தங்கள்..

எங்கள் உடல் கறுத்து
வியர்க்கிறது..
உன் உடல் கறுத்து வியர்க்க
நாங்கள் விடும்
உஷ்ணப் பெருமூச்சுகள்
வெய்யிலே


நெளிகின்ற கானலில்
காலை நனைத்துக் கொண்டு
நெடுந்தூரம் நடக்கிறேன்..

சுள்ளென்ற முதுகும்
கொப்புளித்த பாதங்களும்
எரியும் உச்சந்தலையும்
வியர்த்து வழியும்
முகமும் தோள்களும்

இன்னும் எத்தனை வலிகள்
இத்தனை எரிச்சல்களும்
இனிமையானவை எனக்கு
வயிற்றை பசி
எரிக்கும்பொழுது..



உச்சி வெயில் முத்தமிட்ட
உப்பு முத்தக் கறைகளை
கேணித் தண்ணீரில்
கழுவிக் கொண்ட காலங்கள்

கண்களை இடுக்கி
தண்ணீர் லாரி நோக்கி
நெற்றியில் கைவைத்து
நோக்கும் நேரத்தில்
எழுவதை
தவிர்க்க முடிவதில்லை.


மாடுகள் மேய்ச்சலை மறந்து
காய்ந்த வேப்பமரத்தின் கீழ்
சோர்ந்து படுத்திருக்கின்றன

பழஞ்சோறும் வெங்காயமும்
பசியடக்கி தந்த குளுகுளுப்பில்
மேய்ப்பனும் தூங்குகிறான்

காக்கைகள் கூட
இரைதேடலை
மாலைக்கு ஒத்தி வைத்து
கூடுகளில் போடுகின்றன
குட்டித் தூக்கம்..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கரிசல் மண்ணும்
முட்செடிகளும்
அசையாமல் தூங்குகின்றன

சுழன்று எரிகின்ற சூரியனே
நீயும் கொஞ்சம்
உறங்கி ஓய்வெடு..

உச்சி வெயிலில் குச்சி ஐஸ்
விற்றுக் கொண்டு போகிறான்
வியர்க்க வியர்க்க

காசுள்ளவன் வாங்கி
காசில்லாத நண்பனுக்கு
காக்கா கடி கொடுக்க

ஆதவனுக்குப் பொறாமை வந்து
இன்னும் கொஞ்சம் எரிகிறான்
அது ஒரு வெயில் காலம்

வெயிலை உள்வாங்க
குறைக்கப்பட்ட முடி
குறைக்கப்பட்ட ஆடை

புழுதி பறக்கும்
செம்மண் சாலையில்
குதிரை வீரனாய் கற்பித்துக் கொண்டு
நாங்கள் விரட்டிச் செல்லும்
சைக்கிள் டயர்கள்

வற்றி விட்ட ஏரியில்
மிச்சமிருக்கும் சிறிது நீரில்
துண்டு போட்டு பிடித்த
அயிரை மீன்கள்

முள்ளுச் செடிகளில்
தலைதூக்கும் ஓணான் சிங்கங்களை
கவட்டை வில்கொண்டு
வேட்டையாடிய வீர சாகசம்

கல்லெறிந்து பறித்த மாங்காயா
நெருப்பு எறும்புகளைத் தாண்டி
மரமேறி பறித்த மாங்காயா
எது ருசி என
உப்பு மிளகாய் கலவையில்
முக்கி ருசித்தது

வேப்ப மரத்தடியில்
கயிற்றுக் கட்டிலில்
வானத்து நட்சத்திரங்களில்
எனக்கென்று ஒன்றை கண்டு
பெயரிட்டு மகிழ்ந்தது

மொட்டைமாடியில்
கயிற்றுக் கட்டிலில்
கூடாரம் போட்டு
வீடு கட்டி வாழ்ந்தது

இன்னும் இன்னும்
எத்தனையோ நினைவுகள்
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்
கான்கிரீட் சிறையில்

வெயிலே
எங்கள் விளையாட்டுத் தோழனே
உன்னுடன் விளையாடத்தானே
விடுமுறை

பாட்டி வீட்டுக் கேணியில்
பாதாளத்தில் கிடக்கும் குளிர்நீரும்

கமலாலயக் குளத்தில்
தேங்கி நிற்கும் பச்சை நீரும்

நேரு பூங்காவின்
சிமெண்டு பெஞ்சுகளும்

மாரியம்மன் பண்டிகைக்கு வாங்கிய
மண்குதிரை பொம்மைகளும்

உன்னுடன் மட்டுமே
எனக்குப் பரீட்சயம்.

அவைகளெல்லாம் அடையாளம் துறந்து
என்னை விட்டுப் போனாலும்

வா பேசிமகிழ்வோம்
பழைய நினைவுகளை.
வெக்கை தாங்கல
ஏ.சி குளிரில்
வெயில் கவிதைகளைப் படிக்க

மதிய வெய்யிலில்
மெரீனா மணலில் அமர்ந்து
படிக்கக் குளிரும்
மதி...


மணல் பரப்பி
நீர் பிடித்து வைத்த
சிங்க முகப் பானையின்
வாய் வழி வழிந்த
குளிர் நீரின் சுவைக்கு
குளிர்பானம் தொடும் நேரமெல்லாம்
நாக்கு ஏங்குகிறது.

தெருவோரப் பானைக் கடையெல்லாம்
தேடுகிறேன்
பெட்டிச் சிறைக்குள்
அடைக்கப்பட்ட நீரின்
சுதந்திரம் வேண்டி..
சுருக்கங்கள் விழுந்த கரங்கள்
சுருள் முடியைக் கோதி
உருண்டைச் சோறெடுத்து
ஊட்டிய தருணங்களில்
எரிந்தான் சூரியன்

பனைவிசிறிகள்
அசையாமல் நின்ற
காற்றுக்கு
நடனம் சொல்லித்தந்து
ஆடவைத்ததில்
இன்னும் கோபம் கொண்டு
உக்ரமாய்
எரிகிறான் சூரியன்


நீ விசிறி விடு

அவன் எரியட்டும் பாட்டி

வெயில் காலத்து விடுமுறையும்
பாட்டி வீடும்
ஆகஸ்ட் பதினைந்தை
மிட்டாய் நாளாக்கி
கேலி செய்கின்றன.
மதிய உணவு முடிந்து
மெல்ல நடக்கிறேன்
நீளமாய் சோம்பி உறங்கும்
கருநாகச் சாலை அரவின் மீது..

இத்தனை வருடங்கள் தொலைத்து விட்ட
வெய்யில் சகவாசத்தை
ஆதவன் சுட்டு உணர்த்த
அசை போட ஆரம்பிக்கிறேன்,,

முதுகும் உச்சந்தலையும்
சுள்ளென சுட
மனது மட்டும்
சில்லென்று இருக்கிறது..

நாற்புறம் மட்டுமல்ல
வானத்தையும் அண்ணாந்து பார்க்கிறேன்..

வியர்த்து வழிந்த சூரியன்
முகம் துடைத்துப் போட்ட
கைக்குட்டை வெண்மேகம்

பறவைகளே இல்லா வானம்
முகம் வெளிறிக் கிடக்கிறது..

மரங்களெல்லாம் அசையாமல்
இழந்து விட்ட இயற்கைக்கு
மௌன அஞ்சலி செய்து கொண்டிருக்கின்றன

அவசர அவசரமாய்
கரியாய் இருமிக் கொண்டு
வாகனங்கள்
விரைந்து கொண்டிருந்தன,..

வெளியில் தெரிந்தவை எல்லாம்
வேகங்கள் சோகங்கள்

ஆழ மூச்சிழுத்து
பெயர் தெரியா மொட்டை மரத்தடியில்
உள்ளுக்குள் எனை வாங்கி
நானறிந்த வெயில் காலங்களை
தேடிப் பார்த்து
குளிர்ந்து போகிறேன்..

மீண்டு(ம்) மெல்ல நடக்கிறேன்
உச்சிச் சூரியன் வெப்பத்தை
உள்ளிருந்து வந்து நீர்
தணித்துக் கொண்டிருக்கிறது...

உதடுகள் உப்புக் கரிக்கின்றன..
கைகால்கள் பிசுபிசுக்கின்றன
வெற்றுக் கால்களால்
நடக்க ஆசை என்றாலும்
இயலாமையினால்
குறுகித் தலைகுனிகிறேன்

தூரத்துக் கானல் நீரில்
வாகனங்களின் பிரதிபலிப்புகள் கண்டு
எத்தனை ஆண்டுகள் ஆகின்றன
அசை போடுகிறேன்..

சாக்கடை நீரை ஒரு குருவி
தயங்கித் தயங்கி அருந்துவதைக் கண்டு
சட்டென
உறுதி எடுத்துக் கொள்கிறேன்

நாளை முதல் ஒரு வாளித் தண்ணீர்
பால்கனியில் வைத்திட வேண்டும்..
சட்டெனப் தோன்றியது
வெய்யிலின் பிரஹாசம்
உள்ளிருந்தும்...

வெப்ப ஆற்றில் நீந்த
தெரிந்திருக்க வேண்டும்..
ரசனை நீச்சல்


தன் வீட்டுக் கிணற்றில்
தண்ணீர் வற்றி விட
என் வீட்டு வழியே
குடமேந்திச் செல்லும்
அத்தை மகள் பார்வை

குளிர்பார்வைத் திசை கண்டு
கொதிக்கும்
பங்காளிப் பார்வை

அவள் விட்டுச் சென்ற சுவடுகளை
வெற்றுப் பாதத்தால் முத்தமிட்டுத் தொடர்கிறேன்
எரியும் சூரியனையும் அவனையும்
அலட்சியம் செய்கிறேன்..

என் வீட்டு வழி
எடுத்து வந்த நீரை
சொம்பு நிறைய மொண்டு கொடுக்க
குடித்து தாகமாகிறேன்

அம்மா அப்பா வீட்டில இல்லை
அவள் முணுமுணுக்க
மெல்லத் திரும்பி நடக்கிறேன்

வெப்பம் ஏறிக் கொண்டிருக்கிறது
தைக்கு காத்திருக்கும் மனதுடன்
தைக்கும் அவள் பார்வை முதுகில்

எனக்குள்
கோடை மழை

ஆதவன் எழுதிய
அழகிய கவிதை
வெயில்

உடலெங்கும் வியர்க்கிறது
இஸ்திரிச் சட்டைகள்
நனைந்து ஒட்டிக் கொள்கின்றன

செயற்கை மணங்களில்
மறந்து போன
சொந்தமணம்
நாசிக்குப் புரிகிறது

அக்னிக் காற்றும்
தென்றலாகும்
அற்புதம் நடக்கிறது..

முகிலன்
சமுத்திரச்செல்வம் மொண்டெடுத்து
பார் முழுதும்
இறைக்க விரைகிறான்

எதுவும் அறியாமல்
கண்ணாடிச் சுவர்களுக்கிடையில்
குளிர்பதன அறைக்குள்
பதப்படுத்தப்பட்டு
கெட்டுப் போன சில
உடல்கள் புலம்புகின்றன

ஐயகோ என்ன வெயில்!!

அகச் சிவப்பு
புற ஊதா
இராமனா, கிருஷ்ணனா
இந்த வெயில்..?


ஒவ்வொரு கோபிகையின்
தலையிலும் வெய்யில்
அவளுக்கேச் சொந்தமாய்
ஆம்
கிருஷ்ணந்தான் வெய்யில்

வில்லேந்தியவன் மழை மேகமல்லவா?
இவன்
சுற்றி எரியும்
சூரியச் சக்கரமேந்தியவன்
அதனால் இவன்
கிருஷ்ணந்தான்

அத்தனை ஆடைகளையும்
கவர்ந்து கொண்டு
குளமும் கிணறும் தேடி
கோபிகைகள் குளிக்கக் காணுமிவன்
எப்படி இராமனாவான்?

இராமனென்றால்
இவன்
கால்தொட்ட பாறைகள் எல்லாம்
பெண்களாக ஆகியிருக்குமே!

வெய்யில் கிருஷ்ணந்தான்
அவன் கீதையினால் வந்த ஒளியில்தான்
உலகம் புரிகிறது

அவன் உண்டதுதான்
உலகத்தின் வயிற்றை நிரப்புகிறது
மழையாக

மண்ணுண்ட வெயில்
வாய்திறந்து
உலகங்கள் காட்டும்

இவன் வேணுகானமதில்
உலகத்தோர்
நடனமாடுவர்

வெள்ளை மேகப் பசுக்களை
வானில் மேய்த்து
மழைப்பால் சுரக்க வைக்கும்
இடைக்குலச் செம்மல்

உலகமே கிருஷ்ணமயம்

நீலநிறத்தை உலகத்திற்கு தந்து
நினைவூட்டும் வெய்யில்
கிருஷ்ணன்

.

2 comments:

  1. //குளிர்பதன அறைக்குள் இருந்து
    எழுதிக் கொண்டிருக்கிறேன்
    வெயில் கவிதைகளை. //

    எனக்கு பிடித்த வரிகள்.. நான் எழுத நினைத்த வரிகள்..

    ReplyDelete
  2. nejan nakkitinga

    ReplyDelete