Thursday, December 3, 2009

சொற்சிலம்பம்...- பாகம் 1

ஓவிக்குப் பிடித்த (ஓவியைப் பிடித்தவல்ல) ஆவிக்கு காலில்லை என்கின்றார்களே உண்மையா?
- அமரன்

முக்காலும் உண்மை, மீதிக் கால்??. முழு உண்மையே இப்படி என்றால்??

ஆவி(ற்)க்குச் சுழிதான். ஓவிக்கு பிடித்திருக்கிறதே.(அ வை சுழித்தால் ஆ)அது கூட தலைக்கு அருகில் கையைச் சுழித்துதான் காட்டுவார்களாம்.


முக்கால் உண்மையுடன் அகரத்திற்கு கால் போட்டால் என்ன வரும். - அமரன்

அகரத்திற்கு கால்போட்டாலா??

ஆமாம் நம்பர் என்ன?

தமிழில் இரண்(டு)டாவது.. - அமரன்

அகரத்துக்கு தாமரையின் முக்கால் உண்மையின்கால் கால்போட்டால் ஆகரம்.
ஆ தமிழில் இரண்டாவது என நினைக்கின்றேன்.
அ உச்சரிப்பு ஒன்றாயின் ஆ உச்சரிப்பு இரண்டுதானே. - அமரன்

உமக்கு ஆகாரம் பத்தலைன்னு நினைக்கிறேன்
இதைத்தானே சொல்லி இருக்கிறேன். அ விற்கும் கால் கிடையாது... ஆ விற்கும் கால் கிடையாது. உயிரெழுத்துக்களுக்கு கால் கிடையாது. ஏனென்றால் உயிர் என்பது ஆவி.. என்ன ஓவி....


ஆவி(ற்)க்குச் சுழிதான். ஓவிக்கு பிடித்திருக்கிறதே.(அ வை சுழித்தால் ஆ)அது கூட தலைக்கு அருகில் கையைச் சுழித்துதான் காட்டுவார்களாம்.

ஆகரத்துக்கு இச் கொடுத்தால் என்ன வரும். - அமரன்

ஆ - பசு

ஆ கரத்திற்கு இச்சிட்டால்
நான்கிலொன்றுகிடைக்கலாம்.. ஒருக்கால்

உதை
பால்
சாணம்
கோமியம்

அப்போ ஆ கரத்திற்கு இச் இட்டால் சாவும் வரலாம் இல்லையா.- அமரன்

அது நம்ம கையில் இல்லை. ஆவின் காலில் இருக்கிறது..! - இதயம்

ஆச்சா?

அச்சா! (ஹிந்தி) - ஷீ-நிஷி

அச்சுதான் (தமிழ்) அசல்தான்..
அச்சு அசல்தான் நகல்..


ரசிக்கவைத்த ந(க்)கல்! - ஷீ-நிஷி

ஆச் "சா"

அமரன் அவர்களே

அகரம், ஆகாரம் , இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம், எகரம், ஏகாரம், ஐங்காரம், ஒகரம், ஓங்காரம், ஔகாரம்..

ஆகரம் என்பது தவறானப் பிரயோகம்.

அதே போய் மெய்யில் உயிரேறும் என்பது புணர்ச்சி விதி. இச் சுடன் ஆகாரம் ச்+ஆ = சா. ஆகாரத்துடன் இச் ஆ+ச் = ஆச்.

ஓவிக்குப் பிடித்த ஆவியை
இந்த மன்றில் பதித்த பாவியை
காசிக்குப் போய் காவியை
உடுக்க வைத்த மேதாவி யாரோ?. - ஓவியன்

ஒவ்வொரு மே மாதமும் அடுத்த வகுப்புக்குத் தாவுவதால் மாணவர்களை "மே"தாவி எனலாமே..

ஆமாம் ஓவியா காவி உடுத்தி காசி போனாரா இல்லை காசிக்குப் போய் காவி உடுத்தினாரா?

ஆமாம் நீங்களும் தாவியதால் தானே தாமரை ஆனீர்கள்!! - ஓவியன்

அவர் தாவியதால் தாமரை
தாம் அரையோ - அமரன்

தாவிய தா மரை
தா விய தாம் அரை
தாவியதாம் அரை
மற்றதெல்லாம் மறை

எங்கே கொண்டு சென்று போய் மறைப்பது செல்வன் அண்ணா? - ஓவியன்

மறை என்றால் வேதம் என்றும் அர்த்தம் உண்டு.

தா விய தாம் அரை தாவியபின் மற்றதெல்லாம் வேதம்.


தா = கொடு
விய = விஷம்
விஷம் கொடுத்த பாம்புதான்(தாம்) அரையில்(இடையில் அரைஞாணாக) தாவிய கதை தெரியாதா?


கூட்டு என்பது இனிமையானது எனத் தெரியும். அதில் தொக்கு சுவையா அல்லது தொகை(துவையல்) சுவையா எனத் தெரியலையே?
(கருத்தூண்டிய பேராசிரியர் நன்னனுக்கு நன்றி) - அமரன்


தொக்கு என்பது ஊறுகாய் வகை (தக்காளித் தொக்கு, மாங்காய்த் தொக்கு). தொக்கில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

துவையல் என்பது சட்னி வகை (தேங்காய்த் துவையல்). சட்டென்று செய்ய முடிவதால் சட்னி. துவையல் அரைப்பார்கள்.

சமையலானந்தாவுக்குச் சவாலா?

அவரை(க்) கடலை(பருப்பு) போட்டு செய்யும் கூட்டில், தொக்கி நிற்கும் காரமும் மணமும் எவ்வளவு தொகை என்றாலும் தரலாமே!

யாரோ
கண்ணடித்ததால் அவள்
கண்ணடியில் உதித்த துளி
கண்ணாடியில் பட்டு-மீள
கண் நாடி எங்கும் தெறித்தது. - ஓவியன்


கண்ணடித்தது கண்டு
கண் நடித்தது
கண் அடி மை யழகில்
கண் அடிமை யானவன்
கண் அடியிட்டது
காதல்

காதலுக்குப்பின் கண் அடிமை யானவன் கண் அவன் ஆனானா? - சிவா.ஜி

கண் அடிமை ஆனவன்
கணவன் ஆகலாம்
மரியாதை இழந்து
"டா" சேர்த்து
கண்டவனும் ஆகலாம்

கண்ட அவனும் கனவன் தானே
கனவனை 'டா' போட்டு அழைப்பது அந்யோந்யத்தால் என்று பலர் நினைத்திருக்க நீங்கள் உண்மையை உடைத்து விட்டீரே - சிவா.ஜி

இதுக்குத்தான் வெயிட்டைக் குறைக்கச் சொல்றது.

வெறும் டா போட்டு அழைத்தால் பரவாயில்லை
அண்டா குண்டா தூக்கிப் போட்டு அழைக்கிறார்களே!

தாமரை அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி.

நிகழ் காலத்திற்கு விதிகளான ஆநின்று கின்று கிறு வின் படி

வந்தாநின்றான்
வருகின்றன்
வருகிறான்

எதிர்காலத்திற்கு ப்.வ் படி

வருவான்

ஆனால் சில பத்திரிக்கைகளில் கண்டது :

ஜூலை 2 மாநாட்டில் தலைவர் கலந்து கொள்கிறார். என்று போட்டிருக்கிறது..

இது எதிர்காலம் தானே? எப்படி கிறு வருகிறது? - ஆதவா

இது மக்களுக்கு ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தர எழுதப்படுகிறது., அதை விடுங்கள்.. எப்ப கேட்டாலும் தலைவர் வருகிறார் வருகிறார் என்றுதான் சொல்லுவார்களே தவிர வருவதற்குள் விடிந்து விடுமே!

தலைவர் வருவார் என்றால் வரமாட்டார் என்று அர்த்தம். இதுக்கெல்லாம் தனி அகராதியே இருக்குங்க,

தலைவர் வந்தார் என்றால் தலைவர் இறந்துவிட்டார் / இல்லை என்று அர்த்தம்
தலைவர் வருகிறார் என்றால் தலைவர் வருவார் என்று அர்த்தம்
தலைவர் வருவார் என்றால் வரமாட்டார் என்று அர்த்தம்

அரசியலின் அரிச்சுவடி இது.

அரசியலை அரிக்கும் சுவடும் இதுதானோ - அமரன்

அரிக்கும் கை
பணம்தேடி
அரிக்கும் கால்
கார்கள் தேடி
அரிக்கும் உடல்
உடல் தேடி
அரிக்குமா மூளை
அட
அது இருந்தால்தானே!!!

பொதுமக்களுடன் சேர்த்து
அரிசியையும் ஒதுக்குகின்றார்கள்
அரசியல்வாதிகள்
வேறு வேறு இடத்தில்
அரியாசனம் கையில்
அறியா சனம்
கையில் இருப்பது
அறியா சனம்
--- அமரன்

அதெப்படி அமரா சேர்த்து பின் வேறு வேறு இடங்களில் ஒதுக்க முடியும்?

அரியாசனத்தின் கையில் அறியா சனமா இல்லை அறியா சனத்தின் கையில் அரியாசனமா?

எனக்கென்னவோ

அறியா சனத்தின் கையில்
அரியாசனம்
அவர்
அறியாமல் ஏறிவிடும்
நரி ஆசனம்.

அறியா சனம்
இருந்திடும் நிலைவரைக்கும்,
அரியாசனம்
எங்கள் தலைமுறைக்கே!
------ஷீ-நிஷி

அங்கேயும் ஒரு
முறைமாமன்
முறைத்துக் கொண்டே


அரியாசனம் பிடிக்க,
அரிசியும் சாசனம்...
அரியாசனம் பிடித்ததும்.,
ஆறிடும் சாசனம்...
இலவசங்கள் பார்த்து
இலவு காத்த கிளிகளாய்..,
மக்கள்.
வெடித்துப் பறந்தது பஞ்சே...
பஞ்சமல்ல...
-----அக்னி

அரிசி இலவசமா
யார் சொன்னது
எங்களது ஓட்டுகளும்
ஐந்தாண்டு வாழ்வும்
அங்கே அடகு வைக்கப்பட்டது
உங்களுக்குத் தெரியுமா?

வட்டி எப்படி?
கந்துவட்டிதானே?
-----அக்னி

கந்து வட்டிக்கு
வட்டமும் மாவட்டமும்
ஒன்றியத்துடன் ஒன்றி
வார்டு வார்டாய்
வலம்

வலம் வந்ததால்
கிடைத்தது
மாவட்டமோ?
மா வாட்டமோ?
-----அக்னி

மக்களுக்கு கிடைத்தது
மாவட்டம் தான்

ஆமாம் ஆமாம்
மிகப்பெரிய பூஜ்யம்

ராச்சியம் பூச்சியமானது இப்படித்தானோ - அமரன்

பூச்சியமானதா என்று தெரியாது!
மக்களை அரிக்கும்
பூச்சியானது!
- ஷீ-நிஷி


கரையான் என்று
சொல்லமென்றிருந்தேன்
ஆணி வேரையே
அரித்து விடுவதால்
ஆனால் இரும்பையே அரித்துவிடும்
இவற்றை
என்னவென்று சொல்ல!

கரையான்
அவன் கரையான் தான்!
தன் சொத்தை
கரைத்துகொள்ளாமல்,
எல்லாவற்றையும்
கரைப்பான்!
அரசில் வியாதி!
-----ஷீ-நிஷி

கரைப்பான் என்று சொல்லலாமோ?

கரைப்பான்கள்
கரைப்பட்டுக்கள்
கறைப்படும்
அரசியல்...
----அக்னி

கறையின்
கரையில் கரைப்பான்.
கரைவார் கரைவார்
கரையோர் கரையின்
கரைந்தோர் பதவி!

கறையின் - அழுக்கு, வண்ணம்
கரையில் - வேட்டியின் ஓரம் ..

அதாங்க கறைபடிந்த கட்சியின் கரை வேட்டிக்காரங்க

கரைப்பான். - கரைப்பார்கள், பேசியே மனதை மாற்றுவார்கள்
கரைவார் கரைவார் - மனம் மாறுபவர்கள் மாறிவிடலாம் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது

கரையோர் கரையின் -- மனம் மாறத்வர்கள் விட்டுச் செல்லுவது போலிருந்தால்

கரைந்தோர் பதவி! - அழைத்துப் பதவி கொடுப்பார்கள்

என்னங்க சித்தர் பாடலே பரவாயில்லைன்னு தோணுதா!!!

சித்தர் பாடலே பாரவாயில்லை என்றுபடவிலை..சித்தரோ என நினைத்தேன்..பாடம் சொல்லித்தருவதுக்கு நன்றிகள் கோடி. தொடருமா..., - அமரன்

மா தொடராது.. வாழைதான்.. வாழையடி வாழையாய்..

வாழையும் மாவுமுமிருக்கே பலா எங்கென விழித்திருக்கும் மனம்..

முக்கனியாய் ஏன் வாழை, மா, பலா மட்டும் சொன்னார்கள்? அதிலென்ன சிறப்பு? ஏன்?

இந்த மூன்று கனிகளுமே வருடத்தின் முழு நாட்களிலும் கிடைக்கக் கூடியன......

மற்றவை அந்த அந்த காலத்திற்கு மட்டும் உரியவை.....
--ஓவியன்


மாம்பழ சீசன் கோடைக்காலம் மட்டுமே!
வருடத்தில் எல்லா நாட்களுமே முழு நாட்கள்தான்
அரை நாட்கள் கால் நாட்களேல்லாம் கிடையாது


மா.பலா,வாழை...இவை மூன்றும்தான் அந்த இலக்கியகாலத்தில் இங்கே கிடைத்துக்கொண்டிருந்த பழங்களில் அதிக சுவையுள்ளதாக இருந்ததாலா..?
---சிவா.ஜி


வாழை மருத நிலத்தைக் குறிக்க..
மா முல்லை நிலத்தைக் குறிக்க..
பலா குறிஞ்சி நிலத்தைக் குறிக்க..


அப்போ நெய்தலையும் பாலையையும் குறிக்க.........?- ஓவியன்


நெய்தலின் கனி − மீன்
பாலையில் கனியும் இல்லை கன்னியும் இல்லை..(குறிஞ்சியும் முல்லையும் முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்)

இல்லையே இங்கே பாலையில் கனியும் இருக்கு, கன்னியும் இருக்கே.....!- ஓவியன்


கனி, கன்னி, பார்த்துக் கணி.. இல்லைன்னா கண்ணிதான்

கன்னி யை சரியா கணிக்கா விட்டால் கன்னம் கன்னி கனியாயிடும்.
சரியா கணிச்சு கண்ணி வச்சா கன்னி கனிந்து கண்ணாளம் ஆகும்


அப்போ கண்ணாளத்த்துக்கும் கன்னம் கன்னியாகிறதும் கணிக்கிற விதத்திலே தான் கனிந்து வரும் எங்கிறீங்க............!

அப்ப சரி..........
ஆனா நம்மளுக்கு எப்போதும் சரியாண கணிப்பு, கனிந்து வாறது கானல் நீராச்சே........!
----ஓவியன்

கணிப்பு தவறுகிறது என்றால் கவனிப்பு தவறுகிறது என்று அர்த்தம்.
கவனிப்பு தவறுகிறது என்றால்.. காதல் வருகிறதென்று அர்த்தம்..
காதல் வருகிறதென்றால்.... காலம் வருகிறதென்று அர்த்தம்..(அது நல்லதா கெட்டதான்னு தெரியாது)

திரிந்தது பாலை
திரிகின்றது பால்(பருவம்)
திரிவது பால் (பால் கெட்டுப் போவதை திரிந்து போதல் என்பர்)
திரி திரிப்பதால் உண்டானால்
இராத்திரி எப்படி உண்டாகிறது..?

இரவியார் கண்காணிப்பு அகன்றவுடன்
இருளும் குளுமையும் என
இரண்டு இழைகள் இணைந்ததால்
ஏற்படும் திரி − இராத்திரி!
----இளசு

ஈரிழை இணைந்தால் இரவா?
ஈரேழை இணைந்தால் ஒளியல்லவா?

ஈரமிட்டது எண்ணெயாய் இருப்பின்
இழைகள் ஒளிரும்..
வெறும் கண்ணீராய் இருந்தால்
இருளே நிரந்தரம்..!
----இளசு

ஏழைகளின் கண்ணீர் எரிக்கும்
ஆனால் இந்த
அரசியல்வாதிகள் புத்திசாலிகள்
தள்ளி நின்று
குளிர் காய்ந்து விடுகிறார்கள்...


எள்+நெய் = எண்ணெய்..

நல்லெண்ணெய் தான் தமிழ்நாட்டின் முதலெண்ணெய்.
நல்லெண்ணம் தான் தமிழனின் முதலெண்ண*ம்.

எண்ணெயில் விளக்கெரிய வேண்டும்

கண்+நீர் = கண்ணீர் மாசகற்றும்
கள்+நீர் = கண்ணீர் மாசாகும்


ஏழைகளின் கண்ணீர் எரிக்கும்,
ஆனால் கண்ணீர் வரவும்
தண்ணீர் இல்லாததால்.....
கண்களுக்குள்ளேயே கண்ணீர்
காய்ந்தல்லவா விடுகிறது........?
-----ஓவியன்

ஏழைகளின் கண்ணீரும்,
ஊற்றினுள்ளேயே காய்ந்துபோவதால்தான்,
பூமி.., தன்னில் பெரும்பகுதியை,
உப்புநீரால் நிறைத்து,
குறித்துக் காட்டுகின்றதோ..?
- ----அக்னி

உப்பு நீரால் கண் எரிகிறது
ஆனால் கண் எரிந்தால்
கண்ணீர் வருகிறதே
உப்பு நீராக...........!
------ஓவியன்

கடலில் மீன்கள்.
உண்மை
ஆனால்
மீனில் கடலிங்கு
ஆம்
அவள் அழுகிறாள்


கடலில் மீன்
அது யதார்த்தம்.
மீன்களில் கடல்
அது கவிதை..!!
அந்த
மீன் கொண்ட
கடலிலும் உண்டோ மீன்...??
என்றால் அது குறும்பா...??

------ஓவியன்

குறும் பா(திருக்குறள்)
காட்டாக் குறும்பா?

மீனில் கடல்பார்த்து
துடிக்கும் மீன்களாக
ஆண்கள்..

ஆண் மீன்களிலும்
கடலாக
கடன்பெற்ற கடல்..!
------அமரன்

(நீத்தார்)கடன் தீர்ப்பதும்
கடனே என இருக்கும்
கடலில்தானே!

நீந்தினோர் பலர்
(பிறவிக்) கடன் தீர்த்ததும்
கடல்தானே...!

நீந்துவோர் பலர்
(பட்ட) கடன் தீர்ப்பதும்
கடல்தானே...!

கடனே என இருக்கும்
கடலுக்கு எத்தனை கடன்
நிலுவையாக.


சிலுவைகள் விளைவோ..!
------அம்ரன்

அறைந்த சிலுவையில்
உறைந்த துளிகள்
உப்புக்கரித்தன
கடலின் கடனோ!

கண்ணீர்
கடலிடம் பட்ட
கடன் தானோ
உப்பு.....??
-----ஓவியன்

உறையாதிருக்க
போடுகின்றனர் உப்பு
உப்பிருந்தும்
உறைகிறதே ஏனப்பு?

உறைக்க உரைக்கலாமே..!

------அமரன்

உறைக்க நீர்
பாவிப்பதுண்டோ மிளகாய்பொடி..?

மாறாக
கறிக்கு முன் நின்று
உரைப்பது மட்டும் தான்
உம் கடனோ...??
உரைத்தால்
அதுவும் உறைக்குமோ...?

-----ஓவியன்

உப்பு உறைக்க
காரமும் உறைக்க
நானென்ன உரைக்க?
உரைக்கும் உறைக்கும்
தள்ளாடி
குத்திய முத்திரைகளின்
கருமை
முகத்தில் பூசியது கருமை!!

ஆதவன் உதிக்கவேண்டும்...
தாமரை மலரவேண்டும்..
அப்போதான் சாயம் வெளுக்கும்...!
----அமரன்

அமரசாயமெனில்
அது அமரமானதன்றோ
வெளுக்குமா...
வெள்ளை வெளுத்தாலும் வெள்ளையே!
-----சிவா.ஜி


உரை - சொற்பொழிவு! தலைவர் உரையாற்றுகிறார் என்று படித்ததில்லையா?
உறை - என்பது தற்போது பாக்கெட் சாராயத்தின் செல்லப் பெயர்.. அல்லது கவர் என்றும் கொள்ளலாம். (சிலேடையப்பா)

ஆக தலைவர்கள் ஆற்றும் உரையிலும், அவர்கள் கொடுக்கும் சாராயத்திற்கும் மயங்கி அவர்களின் சின்னங்களில் கரிய மை கொண்டு முத்திரை குத்தி அவர்களை பதவிகளில் அமர்த்தி விடுகின்றனர். ஆனால் அதனால் அவர்களின் வாழ்வில் ஒளி தோன்றுவதில்லை. தகுதியில்லாதோரை பதவியில் அமர்த்துவதின் மூலம் அவர்கள் முகத்தில் அவர்களே கரியை பூசிக் கொள்கிறார்கள்,

வெள்ளை வெளுத்தால்தான்
வெள்ளை
இல்லையெனில் போய்விடும்
கொள்ளை
சலவை -
கறைகளை அண்டவிடாமல்
காக்கும்
சத்திய சோதனை..
உன்னை அடிக்கடி துவைத்துக் கொள்
அதாவது
சோத்னைக்கு உள்ளாக்கிக் கொள்
இல்லையெனில்
நீ கெட்டுப் போய்விட்டது
உனக்கே தெரியாது.

சலவை
சத்திய சோதனை
மூளைக்கும் 'முடுக்கு'க்கும்..

கரையில்லா கறைகளுடன்
கரைகள் செய்யும் சலவை
சத்தியத்துக்கு சோதனை...!
------அமரன்

கரைகள் செய்யும் சலவை - மூளைச் சலவை
மற்றபடி அவர்களின்
இன்றைய கவலை
சலவை அல்ல
கலவை(கூட்டணி)

கலவைகள் பல
குருவி தலைக் கல்லாக..
தலைகளுக்கு
குறி தப்பாக் கல்லாக..

எப்படி ஆடினாலும்
ஆட்டத்தின் முடிவில்
கல்லின் தலையில்
குருவிகள்தானே..!
-----அமரன்

கல்லின் தலையில்
குருவிகளல்ல
காக்கைகளின் எச்சம்


குருவி இருக்ககூட
அருகதையற்றைவையோ
கல்லுகள்...!

எத்திப்பிளைக்கும் காக்கை
எச்சமிட்டு
கற்றுக்கொடுத்தாலும்
கற்றுகொள்வார்தான் யாருமில்லை..!
-------------------------------------------

கொல்லும் தனிமைத் தருணங்களை
கொல்லும் தருணங்களில்-தருணங்கள்
சொல்லும் மரண வாக்குமூலங்களே
மெல்லக் கவியா(க்)கின்றனவாமே.

மெய்யாகவே மெய்யா இது.
இல்லை மெய்யைபோல பொய்யா
அல்லது மெய்யுடன் உயிர்கலந்த நிலையா..!

----- அமரன்

No comments:

Post a Comment