Tuesday, December 1, 2009

காணாமல் போன காதை...!


1973 டிசம்பர் மாதம்..

விடியற்காலையிலேயே புறப்பட்டது அந்த வெண்ணிற அம்பாசடர் கார்.

இளம்பிள்ளையிலிருந்து 40 வயது குடும்பத் தலைவர், அவரை விட சற்றே அதிகம் வயதான தலைவி, தமது 5 குழந்தைகளுடன்.  சமயபுரம், திருவானைகாவல், ஸ்ரீரங்கம் சென்று பிறகு பழனி சென்று வரத் திட்டம்.

வருடா வருடம் கார்த்திகை மாதம் கடைசி சோமவார விரதத்திற்கு முன் பழனி சென்றுவந்து விரதம் முடிப்பது அவர்களது குடும்பப் பழக்கம். இம்முறை மூத்தமகளுக்கு சமயபுரத்தில் முடிகாணிக்கை வேண்டுதல் இருந்ததால் இந்த மாறுதல் திட்டம்.

5 வயதிலும் 7 வயதிலும் இரு சிறுவர்கள், 12 வயதிலும் 14 வயதிலும் இரு மகள்கள் மற்றும் 18 வயதி மூத்த மகன் என்று கிளம்பிய அவர்கள் வழியில் தலைவரின் நண்பரின் தாயையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

சமயபுரம் முடிகாணிக்கை இனிதே முடிய திருவானைக்காவலில்தான் அது நடந்தது.

ஜம்புகேஸ்வரரை தரிசித்து முடித்து பின்னர் அகிலாண்டேஸ்வரி அன்னையையும் தரிசித்து அன்னையின் கருவறையை வலம் வரத் தொடங்கினார்கள். இனி அந்தச் சிறுவன் வாயாலேயே கேட்போம்...

"அங்க இருந்த சாமி படமெல்லாம் ரொம்ப நல்லா இருந்திச்சி. ஒவ்வொரு சாமியும் கையில என்ன வச்சிருக்கு, உக்கார்ந்திருக்கா நின்னுகிட்டு இருக்கா, எதை வச்சு என்ன சாமின்னு எப்படி கண்டு பிடிக்கிறது ..(காமாட்சின்னா கரும்பு,, மீனாட்சின்னா பச்சை கிளி.. இப்பிடி) அப்படின்னு பாத்துகிட்டே வந்தேன்..

திடீர்ன்னு சுத்து முத்தும் பாத்தா அம்மா, அப்பா, அண்ணன் அக்கா, பாட்டி யாரையும் காணலை.ரொம்ப நேரமாயிடுச்சோ.. காருக்கு போயிருப்பாங்களோ.. வேக வேகமா வெளிய வந்தேன்...

ஆஆஆ அந்தப் பூக்கடை பக்கம்தானே கார் நின்னிருந்தது.. அம்பாஸடர் கார்.. வெள்ளைக்கலர் காணோமே.. ஒருவேளை மறந்து விட்டுட்டு போயிட்டாங்களா.. ? அய்யோ கோவில் கதவையும் சாத்தறாங்களே,,,,

அழுதிகிட்டே அந்தத்தெருவில் மெதுவா நடந்தேன்.. அங்க ஒரு அக்கா(ஆண்டியா அப்படின்னா என்ன?) துணி துவைச்சுகிட்டு இருந்துச்சு.. அங்கயே நின்னேன். ஏன் தம்பி அழுவறேன்னு அக்கா கேட்டதும் அழுகை அழுகையா வந்திச்சி. அப்பா அம்மா காணோம். உட்டுட்டு போயிட்டாங்க அப்படின்னு அழுதேன்.

அந்த அக்கா அந்தக் கல்லு மேல என்ன உக்கார வச்சுட்டு ஒரு அண்ணனைக் கூப்பிட்டு கோவில்ல யாரும் கொழந்தையைக் காணோம்னு தேடறாங்களான்னு பாத்துட்டு வான்னு சொல்லிட்டு உம்பேரு என்ன கண்ணுன்னு கேட்கவும் "ஆஜூ" அப்படின்னு சொன்னேன்.

உங்க ஊரு என்னன்னு தெரியுமான்னு கேட்டுச்சு..ம்ம்ம் இளம்பிள்ளி அப்படின்னு சொன்னேன்.. அது எங்க இருக்கின்னு கேட்டிச்சு அந்த அக்கா. ரொம்ப தூரம்... வேம்படிதாளம் பக்கத்துல,.. ன்னேன்.

அண்ணன் போனவன் மூச்சிறைக்க ஓடி வந்தான். அவங்க கோயில்ல தான் இருக்காங்க வாங்க வாங்க என என்னைத் தூக்கிக் கொண்டு போனான்.

இந்தக் கோயில்ல என்ன கதவுல இன்னொரு குட்டிக் கதவு?? அதுவழியா அக்காவும் அண்ணனும் என்னத் தூக்கிகிட்டு போனாங்க.. அங்க ஆனை பக்கத்தில அம்மா. அப்பா, அண்ணன், அக்கா எல்லாரும் இருந்தாங்க"......

தலைவர் அந்தப் பெண்ணை என்ன பையன கடத்தப் பாக்கிறியான்னு திட்ட

இல்லைப்பா, அவங்க தான் பத்திரமா என்னைக் கூட்டிகிட்டு வந்தாங்கன்னு சொல்லி சமாதானப் படுத்தினான்..

பல ஆண்டுகள் கழிந்தன் .. 1985 ஆம் வருடம் அக்டோபர் 23. அதே சிறுவன் வளர்ந்து அதே கோயிலுக்கு தன் தந்தையுடன் போனான்.

பழைய நினைவுகள் திரும்ப வர.. இங்க தானே .. இங்கதானே.. என்று நினைத்துப் பார்த்து சந்தோஷப் பட்டான்,. தனது கல்லூரி திருச்சியில் அமைந்ததை எண்ணி மகிழ்ந்தான்.. இம்முறை வேறுமாதிரி காணாமல் போகப் போவதையும் அப்புறம் அவன் வேறு ஆளாகவே மாறப்போவதையும் அறியாமல்..

தன் பெயர் தாமரை செல்வன் என்று அறிந்த அவன்....
.

No comments:

Post a Comment