Tuesday, December 1, 2009

சமுதாயத்திலிருந்து சமுதாயத்திற்கு..



இலனென்னும் யெவ்வம் உரையாமை ஈதல் 
குலமுடையான் கண்ணே உள. 


கொடுத்தல் என்பது எளிது. அதை எப்படி கொடுக்க வேண்டும் எனக்கூறுகிறது இக்குறள்.

எவ்வம் என்றால் துன்பம். இல்லாதவன் என்னும் துன்பம். அதைச் சொல்லாமல் கொடுக்க வேண்டுமாம்.

எப்படி?

இல்லை என்ற சொல்லே எழக்கூடாது. குசேலன் முகம் கண்டு அவன் கேட்காமலேயே கொடுத்தானே கண்ணன் அதுவா?

குசேலனுக்கு தான் இல்லாதவன், கண்ணனிடம் பொருள் கேட்கப்போகிறோமே என்றோர் மனக்கலக்கம். கேட்கத்தயக்கம். இல்லாமை என்பதினால் வந்த துன்பம். அந்த துன்பத்தை உரைக்கும் முன்பே கொடுத்தான் கண்ணன்.

இக்குறளுக்கு மேலும் சில விளக்கங்கள் உண்டு.

இலன் என்ற சொல்லை யாசிப்பவன் மட்டுமல்ல, சில சமயங்களில் கொடுப்பவனும் சொல்ல நேரிட்டு விடுகிறது. கேட்ட பொருள் இல்லையென்றால் என்ன செய்வது?

கொடுக்கும் போது ஒருவனுக்கு மகிழ்ச்சி உண்டாகுமா?

பெயருக்கு (காக) கொடுப்பவனுக்கு மகிழ்ச்சி உண்டாகத்தானே செய்யும். கேட்கின்ற நிலையிலே மக்கள் இருக்கிறார்களே என்று நினைப்பவனுக்கு மகிழ்ச்சி வராது. வேதனைதான் வரும்.

துன்பத்தை தரக்கூடிய அந்த இல்லை என்ற சொல்லை எப்படி இல்லாமல் செய்வது?

தனிமனிதனுக்கு கொடுப்பதை நிறுத்தி சமுதாயத்துக்கொடு. எங்கிருந்து உனக்கு எல்லாம் வந்ததோ அங்கேயே திருப்பிக்கொடு. அப்போது இல்லை என்ற சொல் எழாது.

இரப்போர்க்கு ஈவதிலும் இரந்துண்டு வாழ்வதிலும் 
இன்பம் உண்டாவதில்லை என்தோழா 
அரியகைத் தொழில்செய்து அனைவரும் பகிர்ந்துண்டு 
அன்புடன் வாழ்வதின்பம் என்தோழா .

காலம் முழுவதும் கால்நடையாய், தோளில் சுமந்து ஆற்றைக் கடக்கச் செய்வதை விட ஒரு பாலம் கட்டு.

சமுதாயத்தின் எந்தப்பகுதி உன்னை உயர்த்திக்கொள்ள உதவியதோ அதை நீ உயர்த்து.

சமுதாயத்திலிருந்து வந்தாய். சமுதாயத்திற்கே தந்து விடு.
.

No comments:

Post a Comment