Thursday, December 3, 2009

சொற்சிலம்பம்...- பாகம் 2

மெல்லக் கவியென்று
இவ்விசைகொண்டு விசைப்பலகையொற்றி
ஒத்தி யெடுத்த பிரதிகள்
கவியா இல்லையா?

கவியே தான்
கவிழ்ந்தாலும் கமழ்ந்தாலும்
கவி கவிதான்... !
கரும்பில்
அடிக் கரும்பென்ன
நுனிக்கரும்பென்ன
பாகம் பார்த்து ருசிக்க
பட்டணத்து பட்டினத்தாரா
யாம்... !

-----சாம்பவி

பட்டு இனத்தார் தான்
மெல்ல மெல்ல
இழைபின்னி
கூடுகட்டும்
பட்டினத்தார்தாம்
பட்டும் படாமல்
இருந்தாலும்

பட்டினத்தார் பகட்டுதானே,
பட்டிழைத்த பட்டு...
இழைத்ததைக் கவர்ந்த உழைத்தவன்...
உழைத்தவன் இழைத்த பட்டு... பகட்டு...
ஆனால், படுகின்றது,
இழைத்ததும் உழைத்ததும்...

------அக்னி
பட்டு
பகட்டு
பதினெட்டு
புதுமொட்டு
தொட்டு
பொட்டுடிட்டு
கட்டு
கால்கட்டு

பசியாறுவது பெரும்பாடில்லை
ருசியாறுவது தான் பெரும் பாடு

பட்டு பட்டு தான்
பட்டுப் போனோமே...
பட்டிலென்ன பகட்டு.... !
ஒரு வேளை பசியாற
படும் பாடு பெரும்பாடு....!!
ஒருவேளை ....
ஒரு வேலை கிடைத்தால்
தீர்ந்திடுமோ ....
எம்பாடு... !


கால்கட்டு
போட்டுட்டு
சொல்லிட்டு
போயிட்டு
பொட்டிட்டு நானிருக்க*
விட்டுட்டு போனதெங்கே.... !

-----சாம்பவி

விட்டு (ஹ்யூமர், நகைச்சுவை) போனதடி வாழ்க்கையில்
விட்டுப் போனதடி
உன கால்பிடித்து
மெட்டிப் போட்டேன்
நீயோ உன் காலின் கீழ்
மெட்டிப் (மிதித்துப்) போட்டாய்
தினம் நீ வைக்கும் பொட்டில்
வியர்வையாய் வழிந்த என்
இரத்தத்தின் நிறமுண்டு அறிவாயா?

என் பொட்டில் நீ இருக்க*
பொட்டில் தான் அடித்தனரோ
பொட்டென்று போனீரோ...
என் பொட்டெடுத்துப் போனீரோ... !

கொடி காத்த குமரனின் மனைவியின் புலம்பல் இப்படித்தான் இருந்திருக்குமோ... !

----சாம்பவி

என் பொட்டில் அடித்த அடியில்
பொறி கலங்கிப் போனது
ஆங்கிலேயனுக்குத் தான்

இப்படி அடி பட்டு பட்டு
சிந்தி விழும் இரத்தத்துளிகள்தான்

நாளை
பாரதத் தாயின் முகத்தில்
வெற்றிப் பொட்டு

சுதந்திரம் எனது உயிர்
இன்று என் உயிருக்குச் சுதந்திரம்
நீயும் எனது உயிர்
உனக்கும்தான் சுதந்திரம்


-- கொடி காத்த குமரன் இப்படித்தான் பதில் சொல்லி இருப்பாரோ!!!

அடித்த அடியில்
பொறி கலங்கியது...
ஆங்கிலேயனுக்கு.... !
அடிக்கும் வேகத்தில்
கணிப்பொறியும் கலங்கியது.... !
ஆங்கிலத்தில்.... ! ( buffer overflow).... !!!!

----சாம்பவி

ஆங்கு இலத்தில்(இலவம் பஞ்சு மரம்) காத்த கிளி
ஆங்கிலத்தில் கதைத்த மொழி
தேங்கிப் போய் தொங்கினாலும்
தேனாய்த் தமிழ்

இலவு காத்தது எமாந்தது
கிளி மட்டும் தானா....
உன் வரவு காத்து
நானும் தான்... !
எட்டாக் கனியாய்
வேலை உனக்கு
முட்டாள் கன்னியாய்
நானெதற்கு உனக்கு....

----சாம்பவி

வரவு இல்லை என்பதால்
வசவு வரவென்பதால் தானே
வரவு நின்றது
வேலை எட்டாக்கனி
காயல்லவே!
கனிந்து விழ இன்னும் சிறிது காலம்
இல்லையெனில் நான்
வளர்ந்து பறித்து வர
இன்னும் சில காலம்
மரம் ஏறப் பழகிவர
இன்னும் சில காலம்
காலங்கள் செலவு
கனிகள் வரவு
பொறுமைகள் செலவு
பொன்குவைகள் வரவு


அடிமேல்
அடியெடுத்து
அடி பிசகாது
அடித்ததில்
அடித்தது யோகம்
வெற்றியாக....!!

----- ஓவியன்

யோகம் என்ன உமது மனைவி பெயரா????

அடி - இது முதலடி - என்னிடம் தைரியம் ஒன்றே முதலடி
அடி - இது இரண்டாமடி - இந்தத் துணியை நீ இரண்டா மடி
அடி - இது மூன்றாமடி - பசுவிற்கு நாலா மூன்றா மடி?
அடி - நான்காமடி - இதை எழுதும் நான் காமடி

காமடியாய் நான்காம் அடி
காம நெடியாய் மூன்றாம் அடி
அடிதடியாய் முதலிரண்டடி....
அடி தடியாய் (bold) ஈற்றடி.... (signature) !

---- சாம்பவி

இரண்டா மடி என்றாலே அடிதடியென்றால்
தடித்து கை உப்புமா இல்லை தடித்தது கை ஒப்பமா?

ஆம் ஒப்பவில்லை... !
வாழ்க்கை ஒப்பவில்லை... !
அவன் ...
கை ஒப்ப வில்லை
உடைக்கும் வரை ...

------சாம்பவி

உடைக்கும் எடைக்கும்
அடைக்கும் கதவுகள்
நடைக்கும் படைக்கும்
திறக்கின்றன


அடைக்கத் தானே கதவு
திறக்கத் தானே கோல்... !
கன்னக் கோல் வைத்து
கன்னமிடு.... !
இல்லையேல்........
கன்னத்தில் கை வைத்து
கன்ன விடு.... !
என்னை .........
கன்னியாய் விடு... !

-----சாம்பவி

அடைத்த நெடுங்கதவம்
திறந்ததும் தமிழ்
மீண்டும் அடைத்ததும் தமிழ்
தமிழமிழ்திழமிந்தமிழ்ந்து
கசியும் இதழமிழ்தமிழினால்
கன்னக் கோலின்றி
கன்னத்தில் கன்னமிட்டு
திறப்போம் கனவுக்கதவம்

இதழமிழ்தில்லை.... !
தமிழமிழ்துண்டு.... !
இதழமிழ்துண்ண தடா... !
அமிழ்ந்ததும்பும் தமிழமிழ்துண்ண
நேரங்காலமேதடா... !

----சாம்பவி

நேரங்காலமே தடா...
தமிழமிதுண்ண
இரவில் விழித்திருந்தால்,
இதழமுதுண்ண
நேரங்காலமேதடா..?

----அக்னி

கன்னமிட்டுத் தான் பாரேன்...
கன்னம் இற்று விடும்படி தாரேன்... !
நேற்றுத் தான் வாங்கினேன்
மிதியடி... !
நாளைக்கும் வாங்க வா ....
மீதி அடி... !

---சாம்பவி

இதழும்(பூவிதழ்) தமிழும் அமிழ்தூறி
தாமரையில் ததும்பும் தேன்துளி
அடுக்கடுக்காய் இதழிருக்க
கடுகடுப்பாய் ஏன் இன்னொரு இதழ்?

தமிழ் சுவைக்க தடையாகுமா? வண்டுறங்க மலர் மூடினால் மாமபழத்து வண்டாய் மனதைக் குடையாதோ?

அடிதடி மிதியடி
இன்னுமென்ன மீதியடி?


இன்னும் எட்டடி இருக்குதடா..... ( ஏழடியா எட்டடியா... ?? )
இணையாக எடுத்து வைக்க.... !
பணயமாக பணம் கேட்டால்
இணைய வேண்டாம் போடா போ.... !

-----சாம்பவி

பணயத் தொகை என்பது
பணம் தந்து விடுதலை பெற..
சிறைபட அல்ல.

எட்டி நின்றவளே
ஏழடி என்றால்
ஆறடி இங்கே
அஞ்சு வார்?
நாலும் பார்த்து,
மூன்றும் உணர்ந்து
இரண்டும்
ஒன்றாய் பின் என்ன
ஒன்றுமில்லை நம்மிடையில்

ஒன்றுமில்லை நம்மிடையில்.... !
ஒன்றியிருக்க ஒன்றுமில்லை ... !
ஒன்று இருக்க ஒன்று இல்லாதிருக்க,,,,.
நிதம் ஒரு காரணத்தால்
சிதம்பர ரகசியமாய் ஆகிப் போனதோ
நம் உறவு.... !

------சாம்பவி

எஸ்.ஜே சூர்யா காப்புரிமை கொண்டாடுவாரோ? ஒண்ணு இருந்தது ஆனா இல்லை வசனத்திற்காக?

இருப்பும் இல்லாதிருப்பும்
விருப்பம் இல்லா திருப்பம்
ஒன்றுமில்லை என ஆண் சொன்னால் ஒன்றுமே இல்லை எனப் பொருள்
ஒன்றுமில்லை எனப் பெண் சொன்னால் ஒன்றவில்லை எனப் பொருள்
ஒன்றுமில்லாமல் ஒன்றுவதா? ஒன்றாமல் ஒன்று மில்லாமல் போவதா?
ஒன்றேன்? நீதான் சற்று ஒன்றேன்!

ஒன்றத்தான் வந்தேனே மாமனாரே.... நீரும்
ஒற்றனாகி போனீரே மாமனாரே...
பற்றோட பற்ற வைத்த அடுப்பு..... என்னையும்
பற்றித்தான் போனதேனோ நெருப்பு......

-----சாம்பவி

அனிருத்தை எச்சரிச்சு வைக்கணும். ஹி ஹி

எச்சரித்து வைத்தாலும்
எச்சமெரிந்து வைதாலும்.....
எச்சமாகாது எம்முறவு.... !
என் மடி அவன் மெத்தை.... நான்
எண்மடி கட்டிய அத்தை.... !

----சாம்பவி

அடுப்பு ஊதி ஊதி களைத்தாள் அன்றைய மருமகள்
அடுக்காய் ஊதி ஊதி கொழுத்தாள் இன்றைய மருமகள்
பூனை உறங்கும் அடுப்புகள்
இல்லை இந்த வீட்டில் மருமகளே!

வசதியாய் தான் போயிற்று.... !
அசதியாய் நான் தூங்க
ஏஸி அறை இருக்கோ....
ஏசி அறை விடாதிருப்பீரன்றோ...
வேளைக்கொரு புடவை...
வேலைக்கொரு அகவை....
இது போறுமே....

-----சாம்பவி



ஏசி, ஏஸி என்று சொல்வதைக் கேட்டால்

எனக்கென்னவோ "நான் காத்துகிட்டிருப்பேன்" என்ற ஏசியன் பெயிண்ட் விளம்பரம் ஞாபகத்திற்கு வருது யோசித்த வேளையில்

வரி வரியாய் வரிச் சுமைகள்... !
வரிந்து கட்டி வரி கட்டி
வறிந்து போனது தான் மிச்சம்... !
வறியவரின் குரல் ஏறுமோ உச்சம்... !
----சாம்பவி


உச்சமிச்சமெச்சமெல்லாம்
வருமானத்திற்கன்றி
போகும் மானத்திற்கல்ல.

உருமானம் காக்க
வருமானம் வேண்டாமோ...
செக்கும் மாடாக (cheque)
செக்கு மாடனேன்... !

----சாம்பவி

வருமானம் தரும்
பகுமானம்
பரிமாணம் மாறியப்
பரிணாமம்

சிக்குமாடா
செக்கு மாடு

செக்கு மாடு சுற்றிச் சுற்றி வர
எண்ணை எடுத்தாயே
செக்குமாடாய் சுற்றிச் சுற்றி வருகிறேன்
என்னை எடுப்பாயா?

செக்கு மாடாய்
சுற்றுபவரிடம் ஜாக்கிரதையாய் இரு
செக் வைத்து
மாட்டி விடுவார்கள்


வருமானம் தரும்
பகுமானம்
பரிமாணம் மாறியப்
பரிணாமம்

சிக்குமாடா
செக்கு மாடு

செக்கு மாடு சுற்றிச் சுற்றி வர
எண்ணை எடுத்தாயே
செக்குமாடாய் சுற்றிச் சுற்றி வருகிறேன்
என்னை எடுப்பாயா?

செக்கு மாடாய்
சுற்றுபவரிடம் ஜாக்கிரதையாய் இரு
செக் வைத்து
மாட்டி விடுவார்கள்

ஏற்கனவே
சிக்கித்தான் சுற்றுகிறதே...
சிக்கும் சீக்குமாய்.... !

-----சாம்பவி

சிக்கென்று புக்ககம் வந்தவளை
சிக்கு புக்கு ரயில் என்று
சொல்லலாமா
பின்னே
அவள் பின்னே பாருங்கள்
எத்தனைப் பெட்டிகள்.

பெட்டிகள் வரவில்லையென்றால்
பெட்டிக்குள் அனுப்பிடுவீரே.... !
எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்
இந்த சேஃப்.... !

----சாம்பவி


ஓ!
சேஃப்டிக்கு பின்னால் வருவதால்
"சேஃப்டி பின்னோ"
ஆனால்
குத்துகிறதே
அப்புறம் என்ன சேஃப்டி?

புக்அகம் (நூலகம்) வந்தவளை
புக்ககம் வரச்சொன்னாலெப்படி.... !

---சாம்பவி

மாமனாரே என விளித்து
ஏஸி கேட்டு
வேளைக்கொரு புடவை கேட்டு
பின்னர்
புக்ககம் வராது
புக் அகம் சென்றால்
அகம் பிடித்தவள்
என்றல்லோ
அகம் சொல்லும்.

அகம் பிடிக்கவில்லை எனக்கு
அகம் தான் பிடிக்கவில்லை... ( ஏசுவதால்.... )

ஏஸி போட்டு
ஏசுவது மாமனாரோ
என் மாமன் ஆரோ....!
-----சாம்பவி



இல்லாள் அகத்திருக்க
இல்லாததொன்றில்லை
இல்லா அகத்திருக்க
இல்லாள் நகைத்திருக்க
வான்கூரை கீழ் வாழ்
வசதிக்கு ஒப்பாமோ
ஏசும் ஏஸியும்
எதேச்சதிகாரமும்?

இல்லா நகைக்கு
இல்லாள் நகைக்க*
இல்லாது போனதோ
உங்கள் நகை... !

---சாம்பவி

இல்லாள் நகைக்க
கொண்டோனுக்குண்டே நகை
நகைக்கும் இல்லாள்
பரவாயில்லை
அழுகிப் போன
அழுகை ஆயுதத்தை
எடுக்காத வரை.

No comments:

Post a Comment