Thursday, December 3, 2009

சொற்சிலம்பம் - பாகம் 3

இரவில் விழித்திருந்தேன் .... !
இரவல் விழி திறந்தேன்.... !


முதல் வரி ..... before operation
இரண்டாம் வரி... after operation... !

-----சாம்பவி

விழி இறக்காதவரை,
விழி இருக்கும்வரை,
விழித்து இருக்கலாம்...

விழிநிலையுணர்ந்து
இரவில் விழித்திருந்தால்,
இரவல் விழி தேவையில்லை...

-----அக்னி

இரவல் பெற்றால் திரும்பத் தர வேண்டும்
இரவிலும் இரவலும் திறந்த விழி
இருந்துமா இல்லை திறந்த வழி?

மூடா விழி, விழித்தாலும் தேடா வழி...
ஆனால்,
மொழி தேடி மூடா விழி.., மூடா விழியல்ல...
தீரா தமிழ் மொழி தேடும் வழி...

-----அக்னி


கண்ணப்பன்
கண்ணப்ப
கண்ணப்பரானாரோ.. .!

----சாம்பவி

முக்கண்ணனுக்கு
முதல்கண்
கண்ணப்பன் தந்தது
இரண்டாம் கண்
செருப்படி பட்டது
மூன்றாம் கண்ணோ
மூடிக்கிடந்தது

என்னப்பர்
என்னையப்ப
என்னப்பனானாரோ..
சும்மா...சும்மா....

----அமரன்



சும்மா சும்மா சும்மாடு தாங்கி
சின்ன சின்ன சிறுவாடு சேர்க்க*...
அப்பனவனப்பியதென் சிறுவாடு
ஆச்சுதவன் சைட்டிஷ்ஷுக்காய் கருவாடு.... !

----சாம்பவி




அப்பனவன் சிறுவாடு சேர்க்க
அப்பியவன் கருவாடு கேட்க
தப்புமா இரவோடு
தந்திடுமோ திருவோடு!



திருவோடு திரு, நீர் இருக்க*
திருவோடு நானேனேந்த....!
திருவோடும் திருநீரும்
திருவாளருக்கே..... !
மீனாட்சி திருவாளருக்கே.... !

-----சாம்பவி

திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க
திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்
திருவும் திருத்திருமோ
திருத்திருவும் திரிந்திடுமோ
திருவும் ஓட
திருவோடு தானும் ஓட
அன்னம் பூரணமாக்கி
அம்மையானாள் அப்பனுக்கு!

திருதிருன்னு இத்தனை திரு...
சந்தேகமேயில்லை...
"திரு"வாளரே தான்....


உள்ளப்படி உள்ளபடி
உள்ளப் படியில் உள்ளபடியே
கொலுவிருக்கும் பதிக்குப்
படியளக்க எதற்கிப்படி
மண்டகப்படி... !

மண்டகப்படி........... உற்சவ மூர்த்தியை, மண்டபத்திற்கு அழைத்து வரும் வைபவம்.... வேறே எதுக்கு பூசைக்கு தான்.... அப்பா வைதாலும் பூசை தான்.....

ஆக... மண்டகப்படி.... வைதல் − ஒன்றுமில்லாததுக்கெல்லாம் தையா தக்கானு குதிக்கறதும் மண்டகப்படி தான்.... ராத்திரி முழுக்க தூங்காம இப்படி மன்றத்துல உக்கார்ந்திருந்தா மறுநாள் நடக்கறதும் மண்டகப்படி தான்... உங்க வீட்டுல தினமும் நடக்குமே... அதே அதே... .... அதே தான் ஐயா....

----சாம்பவி

மண்டு அகப் படியில்
காத்திருப்பாளென்றுதான்
மண்டகப்படி


மண்டூகம்....
மண்டும் அகம்....
மண்டகப்படி
சர்வ நிச்சயம் .... !

----சாம்பவி

மண்டு(டின்) ஊகம் சரியல்ல
மண்டு அகப் படி இருந்தாலும்
(படி)அளப்பவன் பரமனல்லோ!

படி அளப்பவனுக்கும்
படிய*ளப்பவளுக்கு.....
படியாதிருந்தால் எப்படி....

-----சாம்பவி

படி அளத்தல் எமக்கெளிது
அதனிலும் எளிது
வெறுமனே அளத்தல் (அதனாலேயே படிக்கு பிராக்கெட் போட்டேன்)

படியாதிருந்தால் அனலாய் பறக்கும்
படியாதிருந்தால் அனலா பறக்கும்
படித்தோன் படியோன் ஆயின்
படும்படி படுமடி படிப்படி ஆக்கும் பொடிப்பொடி

அகப்படி அடியினில் இல்லை தினப்படி
டிவியடி அவளின் நுகத்தடி

அளப்பதில் மன்னனோ....
அடி பிடி இல்லா படியில் அளக்குறீரே.... !



ஒவர் அளப்பு ஒடம்புக்கு ஆகாதுங்கோ.....

அடியடி... !
பொடி வைத்து நிறுத்துவேன் அடுப்படி... !
அப்புறம்...
மாடிப்படி தான் உங்கள் குடி... !
நிர்கதியாய் உங்கள் கதி... அதோ கதி.... !

----சாம்பவி

அடி முடி தேடி
அளக்க முடியா அரன்
அளப்பதிலென்ன முரண்

அடியில்லை எனச் சொல்லுவோமோ தவறு
பிடியில்லை எனச் சொல்லுவோமா நாம் களிறு
அடியும் பிடியும் அடுப்படியிலே சேர்ந்திருக்க
படித்தேன் அளத்தல் படித்தேன்

பொடியில் தானின்று அடுப்படி
மாடிப்படி குடி பின் பாதிப் படி
பிறமடி குடியேறும் பாதிப்படி
நிர்கதி அதோகதி தெரியுமே உன்சங்கதி

பாதிப்பு எனக்கோ.... !
பதிப்பு நாடி கொதிப்படக்க ( publicize பன்னிடுவேனாக்கும்.... ! )
நாடிக் கொதிப்படங்கி
பாதித்திப்பு தருவீரே....

நல்ல வேளை புதுசா வந்த குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தைப் பத்தி தெரியலை.. பிழைத்தேன்.

பா திரும்பாதா எனப்
பார் திரும்பிப் பார்த்திருக்க
பாதி இரும்பா பாதிக் கரும்பா என
இறுக்கமும் இனிமையும் பிணைந்துவர
பாவும் பாவியும் பாவையும் பாவின்
ஊடே ஊடையாய் ஊடலும்
நெய்யும் அணி


---சாம்பவி


தேடியவன் பொய்யுரைக்க...
தேடி அதுவும் பொய்யுரைக்க...
அடிமுடி தெரியாமல் போயிற்று
ஆயின்...
அவளுக்குத் தெரியாமல்
என்ன... அடி... முடி....
அடிமுதல் முடிவரை
அவள் வரை.... !

----சாம்பவி

அவளொரு வரைதான்
வரையறை இல்லா வரை(மலை)
மெட்டியிட்டு அம்மி மிதிக்க அடிகண்டான்
மாலையிட்டு தலைகுனிய முடிகண்டான்

இராப் போழுதில்
குடுமி பிடித்தாட்டி
முடிகண்டான்
இராப்பொழுதில்
கால்பணிந்து
அடிகண்டான்

அவளுக்கிது எளிதாமோ
குடும்பம் கூட்டுக் களிதாமோ!

No comments:

Post a Comment