Tuesday, December 1, 2009

சும்மா திட்டாதீங்க! நான் சொல்லும் படி வைக்காதீங்க!!

தலைப்பு கடைசிலதாங்க வந்து ஒட்டும். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருந்தாக்கா நல்லது..


புள்ளையார் சதுர்த்திக்கு சன் டி.வி.ல ஒரு பட்டிமன்றம். இறுதி வரைக்கும் கூட வருவது உறவினர்களா?  நண்பர்களா? நல்லா பேசினாஙக..ஆனா என்னமோ ஒண்ணு கொறைஞ்ச மாதிரி இருந்தது.


ஒரு கப் ஸ்ட்ராங்கான டீயை கொஞ்சம் கொஞ்சமா குடிச்சபடி யோசிக்க ஆரம்பிச்சேன்..


என்னடா ஒரு நல்ல நண்பன் அப்படிங்கறாங்களே.. அந்த நண்பனுக்கு அப்பா அம்மா அண்ணன் தம்பி அக்கா தங்கை மாமன் மச்சான் அப்படின்னு யாருமே இருக்க மாட்டாங்களா?


இப்படித் தன் குடும்பமாய் அமையற உறவினர்களை உதாசீனப் படுத்த நண்பணை மட்டுமே உயர்வாய் கருதுபவன் ஒரு நல்ல நண்பனா? அப்படிப்பட்ட உதவியை எதிர்பார்க்காமல் நட்புடன் இருக்கும் நண்பணின் கடமை அதை இடித்துரைத்து நண்பனுக்கு நல்லது சொல்வதுதானே?


கேள்வியை ஆரம்பிச்சு வச்சுட்டேன். இப்படி ஆரம்பிச்ச மனசுக்குள்ள நடந்த அலசல் தான் இந்தக் கட்டுரை.


ஒரு நண்பனோ, தந்தையோ, தாயோ ஏன் நல்லவர்களாகவே இருக்க முயற்சி பண்ணறாங்க? அதே மனுஷங்க மற்ற கேரக்டர்ல ஏன் சோடை போறாங்க. இதாங்க கேள்வி..


பேசினவங்க எல்லோருமே தன்னைச் சுற்றிப் பார்த்தாங்களே தவிர தன்னுள் சுற்றிப் பார்த்தவங்க யாருமே இல்லைங்கறது தாங்க மிஸ்ஸிங். ஒருத்தர் கூட நான் நல்ல நண்பன், நண்பனுக்காக அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்றோ, நான் நல்ல தகப்பன், நல்ல சகோதரி, இல்லை நல்ல மாமனார், நல்ல மருமகள் என ஒரு பார்வையை என்னிக்குமே யோசிக்கறதுமில்லை. அதை முன் வைப்பதுமில்லை, பேசுவது எல்லாமே மூணாவது மனிதரைப் பற்றித்தான்.


உறவினர்கள் தொல்லை எனப் பேசறவங்க யாருமே நான் என் மாமனுக்கு இப்படித் தொல்லை கொடுப்பேன். மாமனாருக்கு இப்படித் தொல்லை கொடுப்பேன்.. அப்பாவுக்கு இப்படித் தொல்லை கொடுப்பேன்.. அம்மாவுக்கு இப்படித் தொல்லை கொடுப்பேன் எனச் சொல்வதும் இல்லை.


அதே மாதிரி நண்பர்கள் மோசம் என்றுச் சொல்பவர்கள் நான் இந்த நண்பனுக்கு இப்படித் துரோகம் செய்தேன், ஆனால் வருத்தப்படவே இல்லை தெரியுமா? இட்ஸ் ஆல் இன் த கேம் என்றுச் சொல்பவர்கள் யாருமே இல்லை.


ஒரு கேரக்டரா தன்னையேப் பார்க்கத் தயங்கும் இவர்கள் ஏன் மற்றவர்கள் ஏற்றுக் கொண்ட கேரக்டர்களை விமர்சிக்கிறார்கள்? இவர்கள் மட்டும் என்ன ஆதி, அந்தம், பாச, பந்தம் என எல்லாவற்றையும் கடந்தவர்களா? மத்தவங்களைப் பற்றியே பேசும் இவர்கள் தம் கருத்துக்களைப் பற்றிப் பேசும் பொழுது தங்களைப் பற்றியும் அல்லவா சொல்ல வேண்டும். நான் ஒரு நல்ல நண்பன், கெட்ட மாமன், நான் ஒரு நல்ல அத்தை, கெட்ட தோழி.. இப்படியல்லவா சொல்லணும்..


ஏன் தன்னுள் பார்க்க, தன்னை வெளிப்படுத்த தயங்குகிறோம்.. இன்னும் கொஞ்சம் ஆழமா யோசிக்க ஆரம்பிச்சேன்..

அட அவங்களை விடுங்க.. நாம எப்படி யோசிக்கிறோம்னு நான் யோசிக்க ஆரம்பிச்சப்ப மணி 2:00 நல்ல பசி..படையலை முடிச்சிட்டு மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்து யோசிக்க ஆரம்பிச்சேன்..


ஆமாம் கெட்டதுன்னு தெரிஞ்சும் மனுஷ மனம் ஏன் அதை செஞ்சுகிட்டு இருக்கு. நல்லதுன்னு தெரிஞ்ச ஒண்ணை ஏன் செய்ய யோசிக்குது?


சிந்தனையில் தெளிவாத் தெரிஞ்சது இரண்டு விஷயங்கள்..


மனிதர்களில் இரண்டு வகை இருக்காங்க..


1. தெளிவான தலைமைப் பண்பு கொண்டவர்கள். நான் இப்படித்தான் இருப்பேன் என்று நினைச்சு அதே மாதிரி நடக்கறவங்க

2. ஆட்டு மந்தை போல சாயுற பக்கம் சாயற ஆட்டு மந்தை மனசு இருக்கிறவங்க..அமெரிக்கா போனா போக்கு வரத்து விதிகளை மதிப்பாங்க. இந்தியா வந்தா மிதிப்பாங்க. அந்த மாதிரி..


முதலாம் வகை நல்லவங்க, கெட்டவங்க என இரு வகையா பார்க்கிறோம். இரண்டாம் வகை மனிதர்கள் சாதாரண மனிதர்கள்.


இந்தச் சாதாரண வகை மனிதர்கள் எண்ணிக்கையில் மிக அதிகம்.


இவங்களால தான் இந்தக் குழப்பமே! ஆனால் எப்படி இவங்க கெட்ட காரியங்களை மனம் கூசாம செய்யறாங்க?


கூர்ந்து கவனிச்சா, ஒரு நல்ல வித்தியாசம் தெரியுது. ஒரு விஷயம் நல்லதோ கெட்டதோ, அதிகம் விவாதிக்கப்பட்டால் அதிகம் விளம்பரப்படுத்தப் பட்டால், அதிகம் குறைசொல்லப்பட்டால் அது ஒரு சகஜமான விஷயம் என்று இந்த சாதாரண மக்களின் மனசில் படிஞ்சிருதுங்க..


இலஞ்சம், வரதட்சணை இப்படி கெட்ட விஷயங்களும் சரி.. இல்லாதவங்களுக்குக் கொடுக்குறது, நண்பர்களுக்கு உதவுவது, கோயிலுக்குப் போவது இந்த மாதிரி விஷயங்களும் சரி,


அதைத் திட்டினாலும் சரி, இல்லைப் போற்றினாலும் சரி - தமக்குன்னு ஒரு வாய்ப்பு வரும்பொழுது நிறையபேர் செய்யறாங்க, அதனால இது சகஜமப்பா அப்படின்னு எடுத்துக்கிற மனப்பான்மை மக்க்ளுக்கு வந்திடுது. 

ஏன்னா இதைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்காங்க.


திட்டறவன் திட்டிகிட்டேதான் இருக்கான் ஆனா யாரும் ஒண்ணும் பண்ண முடியலையே அப்படிங்கறது அவங்களுக்கு எடுத்துக் காட்டா அமைஞ்சிருது, அதுக்கேத்த மாதிரி நாமளும் திட்டறதோட நம் அளவில கொஞ்சம் கட்டுப்பாடு காட்டமுடியுதே ஒழிய பெரிசா ஒண்ணும் செய்ய முடியலை. இதனால் விளைவது என்னன்னா, வேணாங்கற விஷயத்திற்கு விளம்பரம் மட்டுமே.


பால்ய விவாகத்தை ஒழிச்சாங்க, சதியை ஒழிச்சாங்க.. அவங்கத் திட்டலையான்னு உடனே உங்க மனசில ஒரு கேள்வி இப்பத் தோணற மாதிரிதாங்க என் மனசிலும் தோணிச்சு. ஆனா யோசிச்சுப் பார்த்தா அவங்க பேச்சோட நிக்கலையே.. அதுக்கு அடுத்ததாய் போராட்டம் நடத்தி அதை ஒழிக்க முழுமுயற்சி செஞ்சாங்களே!..


வெறும் பேச்சில குறை சொல்வது என்ன ஆகிடுதுன்னா, யார் என்ன சொன்னா என்ன, ஒண்ணும் செய்ய முடியாது என்கிற எண்ணத்தை இல்லையா பரப்புது. அதே சமயம் செயல்படக் கூடிய ஒரு தலைவன் பேசினாலும் , இவங்க எல்லாம் வெறும் பேச்சுதான்.. காரியத்தில ஒண்ணும் கிடையாது அப்படின்னு அவங்களுக்கும் ஆதரவு கிடைக்கிறதைக் குறைச்சிருதே..


அங்கொண்ணும் இங்கொண்ணுமா பரவலா நடந்து கிட்டிருக்கிற சில தப்புகளை இப்படித் திட்டித் திட்டியே வளர்த்து விடறோமோ..?

நம்ம பாரதியே, அதுவும் சுதந்திரப் போராட்டக் காலத்திலயே நொந்து போய் பாடிய பாடல் நினைவுக்கு வந்திச்சு..


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.


கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ


ஆக முனை மழுங்கிய எதிர்ப்புகள் ஆகிய சும்மா திட்டுதல்கள் நாளாக நாளாக, மக்களோட மனசில அது சகஜம் அப்படிங்கற எண்ணத்தை உருவாக்குது..


கொடுமைக்கார மாமியார், மதிக்காத மருமகள், கண்டுக்காத மகன், காலை வாரிவிடும் சொந்தங்கள்.. கெடுக்கிற நண்பன், துரோகியான வாழ்க்கைத் துணை இவர்களை வெறுமனே திட்டித் திட்டியே இந்த எண்ணங்களைப் பரப்பி விட்டுட்டமோ? அதனாலதான் அது தவறு என்றாலும் சகஜம் என்ற எண்ணம் மக்கள் மனசில வளர்ந்து விட்டதோ?


இதுக்கெல்லாம் காரணம் நல்லதைப் பற்றி அதிகம் பேசாமல் இருந்ததுதானோ? நல்லவங்களுக்கு விளம்பரம் இல்லாம போய், கெட்டவர்களுக்கு விளம்பரமாய் இந்தத் திட்டுகள் அமைந்து விட்டனவோ?


தீயவை பார்க்காதே, தீயவை பேசாதே, தீயவை கேட்காதேன்னு மூணு குரங்கை வச்சு காந்தி ஒரு தத்துவம் சொன்னாரே! அது எவ்வளவு யதார்த்தமான ஒண்ணா இருக்குப் பாருங்க.


ஆக ஒரு தப்பைப் பார்த்தா அந்த இடத்திலேயே கண்டிக்கணும். அதை மாற்ற நடவடிக்கை எடுக்கணும். இல்லையென்றால் ஒரு புகார் மனுவாவது அனுப்பணும். இதையெல்லாம் விட்டுட்டு சும்மா திட்டிகிட்டே இருந்தோம்னா அந்த தப்பு மேலும் மேலும் புகழ் பெற்று மக்கள் வாழ்க்கையில் சகஜமா ஆகிடுது.


சும்மா சும்மா திட்டுவது நாம் பலவீனமடைவதைத் தான் காட்டுது. அதுக்கு பதிலா நாலு சின்னச் சின்ன நல்ல விஷயங்களைப் புகழ்ந்து பேசினால், அவையாவது வளருமில்லையா?


என்ன சொல்றீங்க?
.

No comments:

Post a Comment