Tuesday, December 1, 2009

எங்கள் கல்லூரியில் நடந்தது நினைவுக்கு வருகிறது..

எங்களுடைய 3 ஆம் ஆண்டு துவங்கிய காலமது. வருட ஆரம்பத்திலேயே 2 ஆம் ஆண்டு மாணவர்களில் சிலர்,"நாம் சீனியர் ஆகி விட்டோம், இனி எவனுக்கும் பணிய வேண்டிய அவசியமில்லை" என திரிந்தனர்.

ஒரு புதன்கிழமை மதியம், கேண்டீனில் மதிய உணவிற்காக 3 மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த 2 ஆம் ஆண்டு மாணவன் ஒரு சேரை எடுக்கப் பார்க்க, வை ஆள் வரும் என ஒரு மாணவன் சொன்னான்,

வந்த பின்னாடி பாக்கலாம் என்று அவன் மீண்டும் எடுக்கப் பார்க்க சின்ன வாய்த்தகராறு.

அன்று மாலை, 7 மணிக்கு அந்த 2 ஆம் ஆண்டு மாணவனின் ஒரு நண்பனை அழைத்த 3 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர், கிரவுண்டுக்கு வரச் சொன்னார்கள். கிரவுண்டில் ஒரு 30/40 பேர் இருந்தனர்..

அந்த நண்பன் நேராய் வார்டனிடம் போய், கிரவுண்டில் மக்கள் கூடியிருப்பதை சொல்லி என்னவோ நடக்கப் போகுது என்று வத்தி வைத்தான். வார்டன் கிரவுண்டுக்கு வந்து எல்லோரும் ரூமுக்கு போங்க என சொல்லி கூட்டத்தை கலைத்தார். வார்டன் முன்னே செல்ல, பெருமிதமாய் அந்த 2 ஆம் ஆண்டு மாணவன் நடக்க

"பளார்" என் அறையும் சத்தமும்..."அய்யோ செவுளு பிஞ்சு போச்சே" என்ற அவன் அலறலும் கிரவுண்டில் எதிரொலித்தன.

என்ன் என்ன என்று ஓடி வந்த வார்டன் அனைவரும் ரூமுக்கு போக கட்டளை இட்டார்.

அடுத்த நாள் காலை... கல்லூரிக்குச் செல்லும் வரை எல்லாம் அமைதியாகத்தான் இருந்தது.. காலை நோட்டிஸ் போர்டில், 5 மாணவர்களை கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்து இருப்பதாகவும் 3 மாணவர்கள் ஹாஸ்டலை விட்டு டிஸ்மிஸ் செய்வதாகவும் ஒட்டப்பட்டிருந்தது.

இருவர் டே ஸ்காலர்கள். ஒருவன் ஸ்பாட்டிலேயே இல்லை (திருச்சி சென்றிருந்தான்.. ) குபுக்கென்று பற்றியது நெருப்பு...

ஹாஸ்டலை விட்டு மூட்டை முடிச்சுடன் ரோட்டிற்கு வாருங்கள்.. உடனடி மீட்டிங்.. 3 ஆம் ஆண்டு மாணவர்கள் (64 பேர்) உடனே பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினோம்.

எங்களுக்கு யார் தலைவர்? தெரியாது..
எப்படிப் போராடப் போகிறோம்? தெரியாது..
போராட்டத்திற்கு யார் யார் ஆதரிப்பார் தெரியாது..

போனா காலேஜுக்கு வராத மாதிரி செஞ்சுருவேன் போன்ற எச்சரிக்கைகளையும் மிறி பெட்டி படுக்கைகளுடன்.. காலேஜ் காம்பவுண்டிற்கு வெளியே வந்தோம்...

இங்கே யாரும் நிற்கக் கூடாது போங்கடா... என உருமிய டைரக்டருக்கு...

கோபப் பார்வைகளும்.. "காலேஜ் அங்கயே முடிஞ்சு போச்சு.. நீங்க வெளிய வந்தா... என்ற மிரட்டலும் பதிலாக கிடைக்க...

உள்ளுக்குள்ளேயே ஒடுங்கினார் அவர்..

இனி .. இனி என்ன?

=============================================================================================

ஹாஸ்டலில் இருந்து வெளியேறிய எங்களுடன்.. மூன்றாம் வருட மாணவ மாணவிகள் அனைவரும் கூடினர்.. முதல் வருட மாணவர்கள் கிலியுடன் என்ன நடக்குமோ என பயப்பட.. மெதுவாய் கிளம்பி விட்டனர்.

1. 2 ஆம் வருட மாணவர்கள் தங்களுடைய பெட்ஷீட் போன்றவற்றை கொண்டு வந்து தந்தனர்.

2. தலைவராக M*** என்பவரைத் தேர்ந்தெடுத்தோம்.

3. ஒரு கும்பல் இரவு டிஃபன் கொண்டு வர கீரனூர் கிளம்பியது

4. சில பேர் திருச்சி சென்று போஸ்டர் தயார் செய்தனர்.
(மூகாம்பிகை கல்லூரி முதல்வரின் அராஜகம் பாரீர்.. ரோட்டில் படுத்திருக்கும் 64 மாணவர்கள் கதி என்ன.. போல வார்த்தைகளுடன்)

4. 4 பேர் கீரனூர் போலீஸ் ஸ்டேஷன் சென்று, கல்லூரியில் காரணமின்றி 5 பேரை சஸ்பெண்ட் செய்துள்ளதால் மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் பாதுகாப்பு தேவை என புகார் பதிவு செய்து இரண்டு போலீஸ்களுடன் திரும்பினர்.


முதல்சுற்று பேச்சு வார்த்தை : 10 மாணவர்களும் சில ஆசிரியர்கள் மற்றும் டைரக்டர் இடையே நடந்தது..

டைரக்டர் மசிந்து கொடுக்கவில்லை.. மக்கள் திட்டமிட்டு அடிதடியை நடத்துவதாகவும், சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் ரவுடிகள் என்றும் அடுக்கிக் கொண்டே போனார்.. கல்லூரித் தாளாளருக்கும் செய்தி போக அவரும் வந்து பிரச்சனைகளைக் கேட்டார்..

பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது..

இரவு .. கீரனூரில் இருந்து இட்லி, உப்புமா என பார்சல் வர எல்லோருக்கும் தரப்பட்டது..

மாண்வர்களுக்கு நெருக்கமானவர்கள் என்று எண்ணிக் கொண்ட சில ஆசிரியர்கள் மாணவர்களை அணுகி,, இப்படி செய்தால் கேரியர் பாதிக்கும் எனப் பூச்சாண்டி அட்வைஸ் செய்து அலட்சியப் பார்வைகளையும். சிகரெட் புகைகளையும் வாங்கிக் கொண்டனர்.

போஸ்டர் வரவும், ஒவ்வொரு வாகனமாய் நிறுத்தி போஸ்டர் ஒட்டி அனுப்பப்பட்டது. போஸ்டர் திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை என அருகில் இருந்த நகரங்களிலும் கிராமங்களிலும் ஒட்டப்பட்டது..

மாணவர்களின் கட்டுப்பாட்டை பார்த்து வியந்து களமாவூர், மேலப்புதுவயல், பள்ளத்துப் பட்டி என பல கிராமங்களில் இருந்து மக்கள் வந்து மோர், டீ என அளித்து விஷயம் கேட்டு ஆறுதல் சொல்லிச் சென்றனர். (ஒரு வாரம் முன்னதாகத் தான் சண்முகா கல்லூரி மாணவர்கள் 2 பஸ்களை அடித்து நொறுக்கி இருந்தனர்..)

இரவு கழிந்தது....

மறுநாள் காலை..

3 ஆம் ஆண்டு மாணவர்கள் எல்லாம் கல்லூரி வாசலில் கூடினர். முதலாம் ஆண்டு மாணவர்கள் பல பேர் வரவே இல்லை.. 2 ஆம் ஆண்டு மாணவர்களும் வகுப்புகளுக்கு செல்லவில்லை.

ஆசிரியர்கள் 2 ஆம் ஆண்டு மாணவர்களையும் முதலாண்டு மாணவர்களையும் சமாதானப் படுத்தி (உங்களுக்காகத் தான் நாங்க இவ்வலவு செய்யறோம்..) வகுப்பிற்கு கொண்டு செல்ல முயன்றனர்.. தாசில்தார், கலெக்டர், எஸ்.பி எனப் பெரிய தலைகள் எல்லாம் கூடினர்..
இரண்டாம் நாள் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது..

டைரக்டர் குண்டு போட்டார்,...

"சார், அந்த கேஸ்ட் மக்கள் எல்லாம் சேர்ந்து தாழ்த்தப் பட்ட மாணவனை அடிச்சுட்டான்"

உடனே அந்த குண்டு பிசுபிசுத்துப் போனது.. ஏனெனில் மாணவகள் சார்பில் சென்ற 10 பேரில் 3 பேர் தாழ்த்தப்பட்டவர்கள்...

டைரக்டர் என்ன என்னவோ சொல்ல, மாண்வர் குழுவினர் ஒருவன் ஸ்பாட்டிலேயே இல்லாததையும் இரு மாணவர்கள் டே ஸ்காலர் என்பதையும், கல்லூரி சில மாணவர்கள் கேள்வி கேட்காமல் இருக்க தட்டி வைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தான் 5 பேரை சஸ்பெண்ட் செய்ததாகவும் எடுத்துச் சொல்லி வாதாட.. போராட்டத்திற்கு பரவலாகவே ஆதரவு இருப்பதைக் காட்டி நியாயம் மாணவர் பக்கம் என்று சொல்லி முடிப்பதற்குள் மாலை ஆகி விட்டது..

இன்று விட்டு விட்டால் 2 நாட்கள் விடுமுறை.. சனி ஞாயிறு.. போராட்டம் சற்று சுதி இறங்கிவிடும். மக்கள் கல்லூரிப் பக்கமே வராமல் கூட போகலாம்.. கேட்டின் வெளியே படுக்க மனது கஷ்டப்படலாம்..

எனவே அதிரடி முடிவு எடுக்கப் பட்டது..


=========================================================================================

முக்கிய முடிவு.. முடிவு தெரியாமல் கல்லூரியை விட்டு யாரையும் னகர விடக் கூடாது என்பதுதான்.

3 ஆம் ஆண்டு மாணவிகள் 20 பேரும் மெயின் கேட்டின் முன் அமர்ந்தனர். ஒன்றுமில்லாத பிரச்சனையை பெரிதாக்கும் கல்லூரியை எதிர்த்து கோஷமிட்டனர்.

3 ஆம் ஆண்டு மாணவர்கள் அனைத்து வழிகளையும் மறித்து அமர்ந்தனர்..

2 ஆம் ஆண்டு மாணவ, மாணவியரும் நிலைமையை அறிந்து கல்லூரி வாசலில் அமர்ந்தனர்.

கல்லூரி மாணவ மாணவியரின் வீடுகளிலிருந்து கல்லூரி அலுவலகத்திற்கு விடாமல் போன் வரத்துவங்கியது..

இரண்டாம் ஆண்டு மாணவர்களே போராட்டத்தில் குதித்ததும் நிர்வாகத்தின் முகத்தில் கரி பூசியது போல் ஆயிற்று.

கலெக்டரும், தாசில்தாரும் எதுவும் செய்ய இயலவில்லை. நிர்வாகத்தை பணியச் சொன்னார்கள்.

நிர்வாகமும் பணிந்து அனைத்து உத்தரவுகளையும் நிபந்தனையின்றி வாபஸ் பெற்றது. கல்லூரிக்கு காலவரையறையற்ற விடுமுறை அறிவித்தது..

அனைவரும் ஊருக்கு கிளம்பினோம்.. 1 வார விடுமுறை கழித்து வந்ததும்..

.....

....

.....

மறுபடியும் கல்லூரி களைகட்டியது... எலக்ஷன் அறிவிக்கப் பட்டது.

தண்டிக்கப்பட்ட மாணவர்கள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்..

அது இன்னொரு ஆரம்பம்..

அதன் பிறகு.. கலந்து கொண்ட அனைத்து கலாச்சார விழாக்களிலும் வெற்றி வாகை சூடி 4 கேடயங்களை வென்று சாதனை படைத்தது ...
பாடம் கற்றுக் கோண்ட மாணவர் அணி...

No comments:

Post a Comment