Wednesday, December 2, 2009

கிரிக்கெட் பாடங்கள் : தோனியின் நிர்வாகவியல்

தோனி தலைமைப் பண்பு மிக்கவர்..

தோனி அதிர்ஷ்டம் மிக்கவர்

தோனி புத்திசாலி இப்படி ஆளாளுக்குச் சொல்லிக் கொண்டே போகிறார்கள். தொட்டதெல்லாம் துலங்குகிறது தங்கக் கை.. இந்திய அணியைக் கரை சேர்க்க வந்தத் தோணி - தோனி என புகழ்மாலைகள் குவிகின்றன.

வாழ்வில் ஒவ்வொருவரிடமிருந்தும் கற்க எதாவது இருக்கும். என் மனதில் நான் விதைத்து உரமிட்டு வளர்க்கும் நிர்வாக் இயல் சூத்திரங்கக்கும் கோட்பாடுகளுக்கும் தோனி மிகச் சிறந்த உதாரணமாக விளங்குவதை நான் கண்ட காட்சி நீ காணவில்லை என கண்ணதாசன் போல பாடிப் புகழ எண்ணுகிறேன்.

கிரிக்கெட் ஒரு சூதாட்டம். கிரிக்கெட் ஒரு நாடகம். கிரிக்கெட் ஒரு செட்டப் என்போரே மன்னிக்க. வாழ்க்கையைப் பற்றியும் சிலர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த விவாதத்தை இந்தத் திரியில் தவிர்க்க. இது கல்விக்கான திரி.

முதல்பாடம்:

உங்களுக்கு நன்கு நினைவிருக்கும் என்னுடைய பொன்மொழிகளில் ஒன்று.

முடிவெடுத்தால் 50 சதவிகிதம் தவறாகச் சாத்தியம் இருக்கிறது. முடிவெடுக்கா விட்டால் 100 சதவிகிதம் தவறாகத்தான் முடியும். (லொள்ளு வாத்தியாரின் நான் பிரதமரானால் திரி)


அச்சுப் பிசகாமல் அப்படியே வாழ்ந்து காட்டுகிறார் தோனி.எந்தச் சூழ்நிலையிலும் ஒரு தெளிவான பாதை குழுவிற்கு இருக்கிறது. இன்று என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான நோக்கத்தோடு களத்தில் இற்ங்குகிறது அணி. திட்டங்கள் தவறாய்ப் போகும் பொழுது எதன் மீதும் பழி சுமத்தப் படுவதில்லை. ஐபிஎல் இறுதிப் போட்டியில் கூட கடைசி ஓவரின் கடைசி பந்து வரை வியூகங்கள் வகுக்கப் பட்டுக் கொண்டேதான் இருந்தது. பொத்தாம் பொதுவாக உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்ற அறிவுரை தராமல் இது குறிக்கோள். இத்தனை ஓட்டங்கள் எடுக்கப் பட வேண்டும் இத்தனை விக்கெட்டுகள் எடுக்கப் பட வேண்டும். இத்தனை ஓட்டங்களுக்குள் எதிரியை மடக்க வேண்டும் எனத் தெளிவாக ஒவ்வொரு வீரரும் இருக்கிறார்.

ஆக அணிக்கு மைல்கற்கள் தெளிவாகத் தெரிகிறது. தலைவனுக்கு சேர்விடம் தெளிவாகத் தெரிகிறது. வெற்றிகரமான பயணத்திற்கு இதை விட என்ன தேவை?



பாடம் இரண்டு:

முழுத் திட்டம் என்றும் மனதில் இருக்கட்டும்.

சூடான விஷயம் இந்திய ஆஸ்திரேலிய ஐந்து நாள் போட்டியில் நேற்று இந்தியா விளையாடிய விதம். ஆஃப் சைடில் எட்டு வீரர்கள். லெக் சைடில் ஒருவரே ஒருவர். ஆஃப் சைடில் ஸ்டம்பிற்கு தூரத்த்தில் செல்லுமாறு மட்டுமே பந்துகள் வீசப்பட ஓட்டங்கள் குறைந்தன.

இது பலரின் மனதில் தடுமாற்றத்தை எழுப்பி விட்டது. என்னடா இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ஆஸ்திரேலியா காப்பு ஆட்டம் ஆடுகிறது என்று சொன்னார்கள். இன்று யார் காப்பு ஆட்டம் ஆடுகிறார்கள் பார் அப்படின்னு ஆஸ்திரேலிய வீரர்கள் மனதில் இனம்புரியாத சில உணர்வுகள். சைமன் கடிச் வெகுவாகவே எரிச்சலடைந்தார். இயான் சேப்பல் இப்படிப் பட்ட வியூகங்களை ஐசிசி தடைசெய்ய வேண்டும் எனக் குரல் எழுப்புகிறார்.

நிற்க... கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம். ஒரு நாலு நாள் முன்னர்தான் கில்கிறிஸ்ட் தன் சுயசரிதைப் புத்தகத்தில் நம் தங்கக் கண்மணி முரளிதரன் விஷயத்தைப் பற்றி எழுதி இருந்தார். சுழல் பந்து வீசும் பொழுது முரளிதரன் முழங்கை ஏழு டிகிரிகள் வளைகிறது என்றும்... ஆனால் சிறிது காலத்தில் சுழல் பந்து வீசும் பொழுது பத்து டிகிரிகள் வரைக் கைகள் வளையலாம் என விதிகள் மாற்றப்பட்டன எனவும் எழுதினார். விதிகளை வளைப்பது என்பது கோழைத்தனமான செயல் என்று சொன்னார். தயவு செய்து அந்தப் புத்தகத்தின் பிரதியை இயான் சேப்பலுக்கு அனுப்பவும். (இப்படி கவாஸ்கர் சொன்னாலும் சொல்வார்..)

இது மட்டுமல்ல. இந்தியாவிற்கு இருந்த இரண்டு நீண்ட அவப்பெயர்களை மாற்றி இருக்கிறார் இந்தத் தொடரில்.

1. இந்தியா போன்ற உபகண்ட நாடுகளில் ஆடுகளத்தைச் சுழல் பந்துக்குச் சாதகமாகத் தயாரிக்கிறார்கள். வேகப் பந்து வீச்சாளர்களினால் அதில் பிரகாசிக்க முடியாது.. எல்லா ஆடுகளமும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும்.

இதைச் சொன்னதும் அதே ஆஸ்திரேலியர்கள் தான். அதே இந்தியாவில் அதே போன்று சுழல் பந்துக்குச் சாதகமான ஆடுகளத்தில் இன்று வேகப் பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மாவையும், ஜாகீர் கானையும் பார்த்து மிரள்கிறார்கள் ஆஸ்திரேலியர்கள். தவற விட்ட வாய்ப்புகளைக் கணக்கிலெடுத்தால் வேகப்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகள் வரை பறித்திருக்கக் கூடும். ஆக ஆடத் தெரியாதவள் கூடம் கோணலென்றாளாம் என்று இந்திய அணி தற்போது தைரியமாகச் சொல்லலாம் இல்லையா?

ஆமாம் ஆமாம் என்று வல்லுனர்கள் சொன்னபோதிலும் தோனியின் நம்பிக்கை, அவரின் திட்டங்கள் இந்த நிலையை உண்டாக்கி உள்ளன.

ரிவர்ஸ் ஸ்விங்:: இன்று ஆஸ்திரேலியா வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் இது. நீண்ட நாட்களுக்கு முன் பாகிஸ்தான் இதை தனது பரம்பரைச் சொத்தாக வைத்திருந்தது. இதை இந்தியர்கள் பரீட்சை செய்தாலும் இவ்வளவு சரியாக உபயோகிப்பது இதுவே முதல் முறை. முதல் போட்டியிலேயே இந்த ரிவர்ஸ் ஸ்விங் ஆஸ்திரேலியாவை சற்று பயமுறுத்தினாலும் தோனி தலைமையேற்ற இரண்டாவது போட்டியில்தான் ஆயுதமாக உபயோகப்படுத்தப் பட்டது.

இதன் மூலம் தோனி என்ன முயற்சித்து இருப்பார்?

சற்றே நிதானிக்க, ஆடுகளம் என்னதான் சுழல்பந்துக்கு ஆதரவாக இருந்தாலும் அடித்து ஆடுவதற்கு ஏற்றதாய் இருக்கிறது. முதலிரண்டு நாட்கள் இந்தியா ஆடியது வேகமாகத்தான். ஆனால் இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் யோசிக்க வைத்தது.

வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் மடத்தனமாக சுவரில் போய் முட்டிக் கொள்ளாமல் தோனி யோசித்து இருக்கிறார். ஆஸ்திரேலியா மிகப் பெரிய ஸ்கோரை எட்டினால் வெற்றி எட்டாக்கனி. ஆகவே ஓட்ட வேகத்தைக் குறைக்க வேண்டும். அதே சமயம் மூன்றாம் நாளுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்டவேண்டும். எப்போது விக்கெட்டுகள் கிடைக்கும்? மட்டையாளர்கள் நிதானமிழக்கும் பொழுது. ஆகவே வியூகம் வகுத்தார். செயல்படுத்தினார். இதே அணுகுமுறை ஐந்தாம் நாள் இருக்காது. இன்று இந்திய அணி எடுக்கும் ஓட்டங்களைக் கொண்டு நாளைய வியூகம் மாறும்.

ஆக ஒரே காரியத்தில் பல விஷயங்களை அழகாகக் கோர்த்துச் செல்கிறார். பலருக்கு இவை புரிவதில்லை.

ஆக கிரிக்கெட் என்பது ஆடுகளத்தில் மட்டுமல்ல.. மூளையிலும் ஆடப்படவேண்டிய விளையாட்டு என்பதை வெகுத் தெளிவாக காட்டி இருக்கிறார் எப்படி விளையாடுவது என்றும் காட்டி இருக்கிறார்.

ஆக வெற்றி, அல்லது குறைந்த பட்சம் டிரா என இரு திட்டங்கள். ஒவ்வொரு நாள் இறுதியில் இந்த நிலை இருக்க வேண்டும் என்ற திட்டங்கள் தோனி மனதில் இருந்து கொண்டே இருப்பது நாள் முடிவில் தோனி தரும் பேட்டிகளில் தெரிந்து கொண்டே இருக்கிறது. பலரது அனுபவங்களை உத்திகளைத் தெளிவாக அறிந்து வைத்திருப்பது தெரிகிறது. திட்டம் தெளிவு. இலக்கு தெளிவு.. ஐந்து நாட்களில் என்ன சாதிக்க வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. இன்று என்ன சாதிக்க வேண்டும் என்றத் தெளிவு இருக்கிறது. இந்த 2 மணி நேரம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கிறது. இந்த நிமிஷம் என்ன செய்யலாம் என்ற திட்டம் யோசிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தத் தெளிவு தான் தலைமைப் பண்பின் மிகப் பெரிய பலமாகும்.


பாடம் மூன்று:

எதையும் உடனே செய்து விடவேண்டும் என்று அவசரப்படக் கூடாது. ஒவ்வொன்றிற்கும் தகுந்த காலம் வரும், அந்தக் காலம் வரும் வரைக் காத்திருக்கவேண்டும். அதுதான் அறிவுடைமை

சந்தர்ப்பங்கள் வரும் என்று காத்திருக்கக் கூடாது. சந்தர்ப்பங்களை உருவாக்க வேண்டும். இல்லையெனில் காத்திருப்பிலேயே காலம் கழிந்துவிடும். இது ஆற்றலுடைமை.

ஆனால் புத்திசாலித்தனம் என்பது இதில் எதை எப்பொழுது உபயோகிப்பது என்பதில்தான் இருக்கிறது.

ஐ.பி.எல் லின் ஒரு போட்டி. ஒரு மட்டையடி வீரர் விளாசிக் கொண்டிருக்கிறார். போட்டி இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்புறம் புதிதாய் வந்த வீரர். பந்து வீசப்பட்டது. பேட்டிங் செய்பவர் பந்தை தொட்டாரா இல்லையா தெரியவில்லை. ஆனால் ரன்னராக நின்றவர் ஓடி வந்து விட்டார். பந்து பந்துவீச்சாளருக்கு கொடுக்கப் பட்டு விட்டது.

ரன்னராக இருந்தவர் மனம் தளர வெளியேற அவரைத் தட்டிக் கொடுக்க பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியே வருகிறார்..

இன்னும் ஸ்டம்புகள் தக்ர்க்கப் படவில்லை, தோனியின் கைகள் பின்புறமாய் பொறு என்பது போல் விரிந்து காட்சி அளிக்கிறது.

இரு ரன்னர் பேட்ஸ்மேனை கடந்த உடன் தோனியின் கைகள் அசைகின்றன. ஸ்டம்புகள் எகிற கூச்சல்.. தோனி நடுவரிடம் எதோ சொல்ல.. பேட்ஸ்மென் அவுட் ஆகிறார். ரன்னர் திருப்பி அழைக்கப் படுகிறார்.

இதை யாரும் தூற்றத் துணியவில்லை. தோனியின் பொறுமை.. திட்டம் ஆகியவை துல்லியமாய்க் காட்டிய ஒரு நிகழ்ச்சி. எப்படியும் அவுட் ஆக்குவதைத் தவற விடப் போவதில்லை என்ற உறுதியான நம்பிக்கை. அடுத்து என்ன நடக்கலாம் என்ற யூகம்.. அதில் இருக்கும் நன்மை தீமைகளைப் பற்றிய தெளிவு.. தன் குழு உறுப்பினரைக் ஜாடையாலே ஆட்டி வைத்த புரிந்துணர்வு.. இத்தனையும் ஒவ்வொரு தலைவனௌக்கும் இருக்க வேண்டியது அல்லவா? இந்த ஒரு சின்ன செயல் அந்தப் போட்டியைச் சென்னைக்கு பரிசாக அளித்தது என்று சொன்னால் அதில் கொஞ்சமும் தவறில்லை..

அதே தோனி.. மைக்கேல் ஹஸ்ஸி ஆடிக்கொண்டிருக்க, சுரேஷ் எறிந்த பந்து ஸ்டம்பை விட்டு விலகிச் செல்லும் என உண்ர்ந்த உடன், பந்தை பிடித்து ஸ்டம்ப் செய்யாமல், பந்தை ஸ்டம்புகளின் மீது தட்டி விடுகிறார். மயிரிலையில் ஹஸ்ஸி ரன் அவுட் ஆகிறார். அந்த நேரத்தில் அதுதான் சரி. ஆட்டத்தின் தரமல்ல,

இரண்டையுமே தோனி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் செய்வதும், அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்காமல் இருப்பதுமே அவர் எவ்வளவுத் தெளிவாக் இருக்கிறார் என்பதற்கு அடையாளங்கள்.

ஓவியன் கொஞ்ச காலத்திற்கு முன் குறிப்பிட்ட காலத்தில் எப்படி அதிக வேலைகளைச் செயவதெனக் கேட்டிருப்பார். இங்கே இருக்கிறது உதாரணம். புரிந்து கொண்டால் வெற்றி உங்கள் கையில்


பாடம் 4:

தலைவனுக்கு அந்த ஒரு காரியத்தின் ஆதி முதல் இறுதி வரையான ஒவ்வொரு கட்டத்திற்கான திட்டமும் வரைமுறைகளும் தெளிவாகத் தெரிய வேண்டும். என்ன என்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன, விதிகளின் இண்டு இடுக்குகள், எது மிக முக்கியமான குறிக்கோள் போன்றவற்றில் தெளிவு இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்பதற்கான தெளிவு என்ன வழிகள் கைவசம் இருக்கின்றன என்பதற்கான தெளிவு வேண்டும்

முதல் 20/20 போட்டியிலேயே அதை எந்த அளவு புரிந்து கொந்திருக்கிறார் தோனி என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். டை பிரேக்கருக்கான 5 பந்து வீச்சாளர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் இராபின் உத்தப்பா. இவரை எப்படிக் கண்டு பிடித்தார்? பயிற்சியின் போது இதற்கென தனியாய் நேரம் ஒதுக்கிக் கண்டுபிடித்திருக்கிறார்.

அந்த ஐபிஎல் ரன் அவுட் விஷயத்திலும் விதிமுறை அவரின் மனதின் ஓரத்தில் இருந்தே இருந்திருக்கிறது. அப்போதையத் தேவை அடித்து ஆடும் பேட்ஸ்மேன் ஆட்டமிழப்பது. அதற்கான வாய்ப்பு இருப்பதை ஒரு கணநேரத்திற்குள் அறிந்து பந்து வீச்சாளரைக் கட்டுப்படுத்தினார் என்றால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான தெளிவானப் பார்வை உள்ளது என்றுதானே அர்த்தம்.

பேட்டிங் வரிசையை முடிவு செய்வதிலாகட்டும், பந்து வீச்சாளர்களுக்கு மட்டையாளர்களின் தடுமாற்றங்களைச் சொல்லித் தருவதிலாகட்டும்.. எப்பொழுது விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டும், எப்பொழுது ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும், எப்பொழுது அதிரடி தேவை, எப்பொழுது நிதான ஆட்டம் தேவை என்பதற்கான தெளிவான திட்டங்களை வைத்திருப்பது மிக ஆச்சர்யமான ஒன்று. தனிப்பட்ட வீரர்களை விட குழுவாக அவருக்கு வெற்றிகளைத் தேடித்தந்த தருணங்கள் அதிகம்.

அதற்குக் காரணம் இருக்கிறது. அது நானும் லியோ மோகனும் வெள்ளிக்கிழமை சந்திப்பு நடந்து ம்திரும்பிக் கொண்டிருந்த பொழுது விவாதித்த நிர்வாகவியல் கோட்பாடு..

பாடம் 5:

குழு ஒருங்கிணைப்பு:

குழுவை வழி நடத்துவதில் ஒரு மிகச் சிறந்த பண்பு இருக்கிறது. குழு உறுப்பினர்கள் வேலை செய்கிறார்கள். ஊதியம் பெறுகிறார்கள் என்ற உணர்வு..

அந்த உணர்வு குழுவினரிடையே அறவே இருக்கக் கூடாது. அதாவது பணியிடங்களில் குழுவினர் வேலை செய்யக் கூடாது.

பின்னே என்ன செய்வது என சுகந்தபிரீதன் மண்டையைப் பிய்த்துக் கொள்வது தெரிகிறது. பொறுமை.

அவர்கள் பணியிடத்தில் வாழ வேண்டும். அதாவது இது என் வீடு. இது என் கடமை என்ற உரிமை உணர்வு வரவேண்டும். அது எப்போது வரும் தெரியுமா?

குழுவில் இருக்கும் அனைவரிடமும் திறந்த மனப்பான்மையும், குழுவின் எதிர் நிற்கும் கடமை என்னென்ன.. யார் யார் எதில் திறமை வாய்ந்தவர்கள், யார் யார் என்ன செய்யப் போகிறோம் வெற்றி என்பதின் பொறுள் என்ன என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வேண்டும். அவரவருக்கு இதுவெல்லாம் எங்க ஏரியா நாம பாத்துக்குவமில்ல என்ற பொறுப்புணர்வு வரவேண்டும். இதற்கு குழுவை ஒரு குடும்பமாக மாற்றல் மிக இன்றியமையாதது.

இதைத் தனியாக லியோ மோகன் சந்திப்புத் திரியில் பார்ப்போம்.

இதை தோனி செய்திருக்கிறாரா என்றால் ஆமாம்.

விக்கெட்டே வீழ்த்தாத வீரர், ரன் எடுக்க முடியாத வீரர், கேட்ச் தவற விட்ட வீரர் யாரையாவது அவர் குறைத்துப் பேசி பார்க்க முடியாது. யாராவது தோண்டித் துருவிக் கேட்டாலும் அதை எப்படித் தவிர்ப்பது என்று தெரியும். ஆடும் வரை போராடு என்பதை அந்த வீரருக்கு அறிவுரையாய்த் தருவார்.

இறுதி ஓவர்களை வீசிய பந்து வீச்சாளர்களைப் பாருங்கள்.

வெற்றியில் முடிந்தது : ஜோகிந்தர் சர்மா, இர்ஃபான் பதான்
தோல்வியில் முடிந்தது : பாலாஜி

இவர்கள் தோனியைப் பற்றி என்ன சொன்னார்கள்.. தோனி ஜெயித்தே ஆக வேண்டும் என இவர்களை விரட்டவில்லை.. மிரட்டவில்லை. மாறாக உன்னால் முடியும். டென்ஸனாகாதே. என்று ஊக்கப் படுத்தி இருக்கிறார். பாலாஜியின் வைடுகள் ஆட்டத்தை பலி வாங்கினாலும் அவரை மட்டம் தட்டவில்லை.

அணியில் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்கிறார்கள். கூர்ந்து கவனித்தால்

கம்பீர் - சேவாக், டெண்டுல்கர்-லக்ஷ்மண் தோனி-கங்கூலி, சர்மா-கான் என ஜோடி ஜோடிகளாக வெற்றிகரமாக செயல்படுவதைக் கவனிக்கிறீர்கள் தானே..

ஆக குழுவில் யாருக்கும் மனக் கசப்பு இல்லை. யாருக்கும் கிட்டாத வாய்ப்புக்கு வருத்தம் இல்லை. ஒருவர் வெற்றியை இன்னொருவர் கொண்டாடுகிறார்கள்.. இவை எல்லாம் ஒரு நல்ல குழு ஒருங்கிணைப்பின் அடையாளங்கள். இதை மிகத்திறமையாக தோனி வெளிக்காட்டி இருக்கிறார்.


பாடம் 6

திட்டத் தெளிவு

இந்தத் தொடரில் கவனித்துப் பார்த்தால் ஒரு வித்தியாசம் பளிச்செனப் புலப்படும். ஆஸ்திரேலியா ஒவ்வொரு நாளும் அனைத்து ஓவர்களையும் முடிக்கக் கஷ்டப் பட்டுக் கொண்டே இருக்க, இந்தியா அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லாமல் இருக்கிறது. தோனி முயன்ற அதே மாதிரி வியூகத்தை 8-2, 7-3 எனச் சிறிது மாற்றம் செய்து பாண்டிங் உபயோகித்தாலும் தெளிவாய் சேவாக் எப்படி அடித்து விளையாடுவது என்று பாடம் எடுக்கிறார்.

6 விக்கெட்டுக்கள் விழுந்த நிலையிலும் ஹர்பஜனை ஓவர் ரேட் குறைவாக இருக்கிறது. எனவே கவனமாய் ஆடினால் ரன்கள் குவிக்கலாம் என பொறுப்பாய் ஆட வைக்க இயல்கிறது. இந்த சூழ்நிலையில் இதைத்தான் பாண்டிங் செய்வார் என்னும் யூகம் வியக்க வைக்கிறது.

உலகின் முதல்தர அணி எனக் கூறப்படும் ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியின் யுக்திகளை அவற்றின் வெற்றிகளைக் கண்டு காப்பியடிக்க முயற்சிக்கிறது. அதாவது அதை யாரும் கீழிறக்கவில்லை. அவர்களை அறியாமல் அவர்களே தங்கள் இருக்கையிலிருந்து குப்புற விழுந்து கிடக்கிறார்கள்.

அடுத்த நாளைக்கான திட்டத்தையும் நேற்றே கோடி காட்டி இருக்கிறார். முதல் இரண்டு மணி நேரம் அப்படித்தான் மிகவும் வைடாகத்தான் வீசுவோம். ஜெயிக்கணும்னு ஆசை இருந்தால் ஆஃப் சைடிற்கு வேகமாய் நகர்ந்து லெக் சைடில் அடித்து ஆடட்டும் என்று சொல்லி இருக்கிறார்.
மூன்றாம் நாளின் போது ஆரம்பத்தில் வேகப் பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தினார். ஓவர் வேகத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஒரே நோக்கம் பந்து பழையதாக வேண்டும். அதன் பின் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தலாம். இன்றும் அவரது வியூகத்தில் ஒரு தெளிவான அணுகு முறையைக் காணலாம்.

அவருடைய தடுப்பு வியூகத்தையும் எவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார் பாருங்கள்.

"Ek Chhoti sa baat bolna chahunga. Mahabharat main bola gaya tha ki pakshi jo hoti hai us pakshi ki aankh dekho. Border-Gavaskar trophy jo hai who pakshi ki aankh hai aur hum sirf us par concentrate kar rahe hai and kya strategy se aayegi us par hum zyada concentrate nahi kar rahe hai. (In the Mahabharat, there was a saying which said concentrate on the eye of the bird. Similarly, for us, the Border-Gavaskar trophy is the bird's eye and we are concentrating only on winning it and not on what strategy we are using.)"

ஒரு சின்ன விஷயம் சொல்வேன். மஹாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பறவையின் கண்ணைக் குறிவைப்பவனுக்கு பறவையின் கண் மட்டுமே தெரிய வேண்டும். அதன் மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டு. பார்டர் கவாஸ்கர் கோப்பைதான் அந்தப் பட்சியின் கண் நமக்கு. அதன் மீது மட்டும் தான் எங்கள் கவனம் இருக்கிறது. அது எந்த வகையில் வெல்லப் படவேண்டும், அதற்கான யுக்தி முறைகள் என்னென்ன என்பதைப் பற்றி அதிகம் நாம் அதிகம் கவலைப் படக் கூடாது.

வெற்றிக்காக பல வியூகங்கங்கள் யுக்திகள் சேய்யப் படுகின்றன். அவற்றில் சில அனைவராலும் போற்றப்படலாம். சில போட்டித் தலைவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். எனக்கு முக்கியமானது அணி ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டும் என்பதே. ஆகவே மற்றவரின் குறைகூறல்களைப் பற்றி நான் கவலைப் படப் போவதில்லை. இன்று நாங்கள் வெற்று பெறுகின்ற வலுவான நிலையில் இருப்பதற்குக் காரணம் அந்த வியூகம். எனவே அதில் எந்தத் தவறும் இல்லை.

ஐபிஎல் அணியின் தலைவராக இருந்தபொழுது முதல் நான்கு போட்டிகளில் வெற்றி அடுத்த நான்கு போட்டிகளில் தோல்வி.

இந்த நிலையில் இவரது திறமையில் யாரும் சந்தேகப் படவில்லை. தோல்விகளை வரிசையாகச் சந்தித்த பெங்களூர் ஹைதராபாத் மும்பை அணிகள் மனம் தளர்ந்தன. ஆனால் சென்னை அணி எப்பொழுதுமே குறை சொல்லப்படவில்லை. இறுதிப் போட்டியின் பாலாஜியின் இறுதி ஓவர் வரை.

தோற்றாலும் அணியில் திறமை இருக்கிறது. இந்நிலை கூடிய விரைவில் மாறும் என்பதை மனங்களில் பதிய வைப்பது என்பது ஒரு தலைவனின் மிக முக்கியப் பண்பு. அணியின் மனம் சோர்வடையாமல் முன்னேற்றத்தை மட்டுமே நோக்கு நகர்வது அந்தப் போட்டிகளில் கண்கூடாய் காணக் கிடைக்கும்.

அணியின் பந்து வீச்சைப் பார்ங்கள். மக்கையா நித்னி வரும் வரை சிறந்த - அறிந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லை. மன்பிரீத் கோனி - ஜேக்கப் ஓரம் பழனி அமர்னாத் - ஜோகீந்தர் சர்மா முத்தையா முரளிதரன் - பாலாஜி.. பல்லில்லாப் பாம்பு என நினைக்க வேண்டிய இந்த கூட்டம் (முரளிதரனைத் தவிர) எப்படி ஜெயித்தது?

திட்டத் தெளிவு முக்கிய காரணம். திடீரென ஏற்பட்ட ஞானோதயம் தெளிவு என்றுச் சொல்லும் படி வெற்றி ஆகாயத்தில் இருந்து திடீரெனக் கூரையைப் பிய்த்துக் கொண்டு வரவில்லை. தன் கையின் பலம் பலவீனம் அறிந்து பலத்தை முறையாகப் பயன்படுத்தி பலவீனத்தை வெளிக்காட்டாமல் விளையாடுவது.

குருட்டாம் போக்கில் ஒரு யுக்தியை முயலாமல் திட்டமிட்ட கணக்குகளுடன் யுக்தியை அணுகுவது

இதற்கும் மேல் இன்னொரு மேலாண்மைத் துறையில் தோனி மின்னுகிறார். அதற்குப் பெயர் ரிஸ்க் மேனேஜ்மெண்ட். அதை அடுத்து பார்ப்போம்.

ரிஸ்க் மேனேஜ்மெண்ட்: (இடர் மேலாண்மை)

இது இரு வகைப்படும். ஒன்று திட்டமிடப்பட்ட முன்னேற்பாடான மேலாண்மை

இன்னொன்று சமயங்களில் தோல்வி முகத்தை வெற்றிமுகமாக மாற்றுவதற்காக உடனுக்குடன் எடுக்கப்படும் துணிகர முயற்சிகள்.

முதலாம் வகையை முதலில் பார்ப்போம்.

20/20 உலகப் கோப்பைப் போட்டியே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

டை பிரேக்கர் வந்தால் என்ன செய்வது?

முதல் ஆறு ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தால் என்ன செய்வது?

யாராவது ஒரு பந்து வீச்சாளர் சோபிக்காமல் போனால் என்ன செய்வது?

யாருடைய பந்து வீச்சு எதிரணியில் கவனமாக ஆடப்பட வேண்டும்?

யாருடைய பந்து வீச்சில் துணிந்து அடித்து ஆடலாம்?

அடித்து ஆட யார்?

நின்று ஆட யார்?

எந்த சூழ்நிலையில் தான் ஆடி நம்பிக்கைத் தரவேண்டும்
என்ன செய்தால் எதிரணியின் நம்பிக்கைத் தளரும்?

ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இவை ஆராயப்பட்டு கடை பிடிக்கப் பட்டது அந்த போட்டி விமர்சனங்களையும் அதன் பின்னான தோனியின் பேட்டிகளையும் பார்த்தால் புரியும்.

போட்டிக்கு முன்னரே இந்த மைதானத்தில் 6 ஓவருக்கு இத்தனை ரன், 10 ஓவருக்கு இத்தனை ரன் 15 ஓவருக்கு இத்தனை ரன் 20 ஒவருக்கு இத்தனை ரன் என்ற தெளிவும்.. அது நடக்கா விட்டால் எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகளும் தெளிவாக முன்னரே முடிவு செய்யப்பட்டது பேட்டிங் வரிசை மாற்றம், பந்து வீச்சு மாற்றங்களில் தெளிவாகத் தெரியும்.

ஐபிஎல் போட்டியில் ஹெய்டனும் ஹஸ்ஸியும் ஜேக்கப் ஓரமும் இருக்கும் பொழுது அனைத்து போட்டிகளையும் வென்றாக வேண்டும். அடுத்து தென்னாப்பிரிக்க வீரர்கள் வரும் வரை தோல்விகள்தான் எனத் தெரிந்து அந்த நான்கு போட்டிகளையும் வென்ற விதம்..

அடுத்த 6 போட்டிகளில் வரிசையாகத் தோற்றாலும் சென்னை அவ்வளவுதான் என்று யாராலும் தள்ள முடியாதபடி அணியைக் கட்டுக் கோப்பாக வைப்பது எப்படி என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். அந்தச் சமயத்தில் இளம் வீரர்களைச் சோதித்து வித்யூத் சிவராமகிருஷ்ணனைக் கண்டறிந்தது..

முத்தையா நித்னி ஆகியோர் பெரிதாக பயமுறுத்தா விட்டாலும் அவரவர்க்கென்று தனித்தனிப் பொறுப்புகள். முத்தையாவின் வேலை ரன்களைக் கட்டுப் படுத்துவது.


இப்படி

என்ன தடைகள் -- அதை ஏற்படாமல் தடுக்க என்ன திட்டம்
முதல் திட்டம் சரிவராது என்பதை எப்போது தீர்மானிப்பது
அதற்கு என்ன மாற்றுத் திட்டம்?

இவை மூன்றும் தோனியிடம் திடமாக இருந்ததைக் காணலாம்.

இந்தக் கடைசி போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் திட்டம் முதல் இன்னிங்ஸில் 500+ ரன்களை ஒன்றரை நாட்களில் குவிப்பது.

கொஞ்சம் தடுமாற்றம் 441 ரன்கள்..

இரண்டாம் திட்டம் - இரண்டாம் நாள் முடிந்த வரை ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்துவது. இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்தன.

இப்பொழுது மாற்றுத் திட்டம் செயல்படுத்தப் பட்டது. ரன் வேகத்தை மட்டுப் படுத்துவது. இதனால் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அணி அடித்து ஆடும் முயற்சியில் விக்கெட்டுகளை இழக்கும் என்றக் கணிப்பு. இது தவறவில்லை.

நான்காம் நாள் இந்தியாவின் இலக்கு 360 ரன்களை ஆஸ்திரேலியாவிற்கு தரவேண்டும். அதிலும் சறுக்கல். ஆனாலும் தோனியின் கணிப்புப் படி பாண்டிங் தன்னுடைய பந்து வீச்சாளர்களை உபயோகிக்கத் தடுமாறியதில் ஹர்பஜனின் உதவியுடன் 382 இலக்காக அமைந்தது.

முதல் நாளே தோனி சொல்லிவிட்டார். பந்து பழையதானால் போதும். அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடலாம்.

உணவு இடைவேளை வரை 23 ஓவர்களே வீசப்பட்டன. முதல் 1 மணி நேரத்தில் 10 ஓவர்கள்தான் வீசப்பட்டன, தோனி பாண்டிங் போல பரபரக்கவில்லை. பந்தின் வித்தைகளை மட்டுமே கவனித்தார்,. எது சுழல்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வருவதற்கு ஏற்ற நேரம். இடையில் மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. 4 கேட்சுகள் தவற விடப்பட்டன. வர்ணனையாளர்களும் வேலை இல்லாத பழைய கேப்டன்களும் பாண்டிங்கை விட மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். பாண்டிங் போல தண்டனைக்குப் பயப்பட வில்லை.

பந்து தேவையான அளவிற்கு பழையதானதும் காட்சி மாறியது. சுழற்சியில் ஆஸ்திரேலியா சுருண்டது.

இலக்குகள் - இடர்கள் - திட்டம் - திட்டம் கை மீறிப் போவதை எப்படி அறிவது - மறுதிட்டம் - அதைச் செயல்படுத்த வேண்டிய நேரம், சூழ்நிலை என்ன?

இவை அனைத்தும் கொண்ட ஒரு முழுமையான ரிஸ்க் மேனேஜ்மெண்ட் தோனியின் போட்டிக்கு முன்பான பின்பான பேட்டிகளை தொடர்ச்சியாகப் படித்தால் இது புரியும்.

இரண்டாவது வகை துணிகர முயற்சி. இது இக்கட்டான நிலைகளில் எடுப்பது, இதற்கு உதாரணம் தேடி அலைய வேண்டியதில்லை.,

இறுதி ஓவர்கள்... இவை போதும் துணிவுள்ளவனை மட்டுமே வெற்றித் திருமகள் மாலை இடுகிறாள்..


தகுந்த பாராட்டுகள்


தோனி இன்று கங்கூலிக்கு கொடுத்த சில ஓவர் தலைமை!

இதற்குக் கிரிக்கெட் விதிகளில் இடமிருக்கிறதா?

அம்பயரிடமோ இல்லை கிரிக்கெட் நிர்வாகத்திடமோ அனுமதி பெற வேண்டுமா?

இதையெல்லாம் யோசித்தாரா இல்லையா தெரியாது. இந்த வெற்றியை இந்தியக் கிரிக்கெட்டிற்கு உங்களின் பங்களிப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் என்பதைச் சொல்லாமல் சொன்ன ஒரு சின்ன நன்முயற்சி..

இது போன்று உடனிருப்பவர்களைக் கௌரவிக்க இதுவரை யாருக்காவது தோன்றி இருக்கிறதா?

இது ஒரு சின்ன விஷயம் அணியை எப்படி உற்சாகப் படுத்துகிறது பார்த்தீர்களா? எழுதி வைத்துக் கொள்ளுங்கள், டெண்டுல்கர் தோனியின் கீழ் உற்சாகமாக ஆடுவார், தகுந்த சந்தர்ப்பத்தில் கொடுக்கப் படும் மரியாதையை விட விசுவாசத்தைத் சம்பாதித்துத் தருவது வேறொன்றுமில்லை.

இவையெல்லாம் தோனி கற்றுக் கொண்டது யாரிடமிருந்து? அவருக்குள் இந்த விதைகள் தூவப்பட்டது எப்பொழுது?

இவற்றை தோனி தெரிந்து செய்கிறாரா? இல்லை அறியாமலேயே?

எப்படி இருந்தாலும் பரவாயில்லை,, ஆனால் ஒன்று..

இவை சேமித்து வைக்க வேண்டிய பாடங்கள். என்றாவது அவர் மனச் சோர்வோ அல்லது காலத்தின் கட்டாயத்தால் அவர் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் இது அவருக்கு காட்டப் படவேண்டிய அவரின் குழந்தைப் பருவ ஆல்பம். அப்போது மன்மதன் சொன்னதைச் செய்யலாம்.

இனி அவ்வப்போது தோனி தரும் பாடங்களை இந்தத் திரியில் அலசலாம்.

முற்றும்

பிற்சேர்க்கை!!

இடர் மேலாண்மை இன்றைய பாடம்:


கான்பூர் போட்டி ஒரு சின்ன சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டச்வொர்த்-லீவிஸ் முறை அமல் படுத்தப்பட இருக்கிறது என காலையிலேயே இரு அணித் தலைவர்களுக்கும் தெரியும்.

49 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் இரண்டாம் அணியால் 49 ஓவர்களை முடிக்க முடியாது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று.

இந்திய அணி இரண்டாவதாக பேட்டிங் செய்யச் சென்ற பொழுது தோனியின் கைகளில் எத்தனை ஓவரில் எத்தனை விக்கெட்டுகள் இழந்திருந்தாலெத்தனை ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்ற சீட்டு இருக்கிறது.

மற்றவர்கள் எல்லாம் உணவு இடைவேளையை குறைத்திருக்க வேண்டும், மின்விளக்குகளை உபயோகித்திருக்க வேண்டும் அதைச் செய்திருக்கலாம் இதைச் செய்திருக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்க, கருமமே கண்ணாயினார் தோணி. யுவராஜ் சிங் அடித்து ஆடக் கூடிய நிலைமைக்கு வந்தவுடன் மூன்றாவது பவர் பிளே ஐ எடுத்தார். யுவராஜ் சிங்க் வீழ்ந்தாலும் யூசுஃப் பதான் அடிக்க, விக்கெட் விழுந்து விடாமல் காத்து போட்டியின் வெற்றிக்கனியைப் பறித்தார்.

இன்றும் விதிகள் தவறு என்றோ மாற்றப்படவேண்டும் என்றோ அவர் இன்னும் பேசவில்லை.. அதை கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் கவனித்துக் கொள்வார்கள் என அமைதி காக்கிறார். அதே சமயம் ஆடுகளம், ஆட்டக்காரர்கள், தட்பவெப்ப நிலை, இப்படி பல வித காரணிகளினால் மாறிக் கொண்டே இருக்கும் ஆட்டச் சூழ்நிலையை மட்டுமே கவனிக்கிறார்.

ஒரு அணியின் தலைவர் என்னும் முறையில் விதிமுறைகளைப் பற்றி அவருடைய கருத்தைத் தரவேண்டியது இருக்கும். அதை யாருக்குத் தரவேண்டுமோ எப்போது தரவேண்டுமோ அப்போது ஆய்வு செய்து தந்தால் போதும். இன்றைய தேவை, இன்றைய வரையறைகுள் நல்லமுறையில் விளையாடி போட்டிகளில் வெல்வதுதான்.

அவரிடம் டக்-வொர்த் லீவிஸ் முறையில் என்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால் இப்படிப் பதில் சொல்லக் கூடும்.

அதை இந்தத் தொடர் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம். 4 ஆவது ஆட்டத்தை வெல்ல வேண்டும். இதுதான் இன்று எனக்கு இருக்கும் ஒரு இலக்கு.

இடம் பொருள் ஏவல் மட்டுமல்ல காலமும் அறிந்து செயல்...

தோனியின் பலம்.

சரியாகத்தான் செயல்படுகிறார் தோணி.

No comments:

Post a Comment