Wednesday, December 2, 2009

நண்பர்களைப் பற்றிய கவிதைகள்!!!

தலை "மணியா"

தமிழ்க் காதலில் ஒருதலை
வார்த்தைக் கொள்ளியில் இருதலை
காய்களில் இவரின்னும் முத்தலை
அசோகர் ஸ்தூபி நாற்தலை
சிங்கமாய் அறுத்தாய் அஞ்சுதலை
தேடுவோர் உன்னிடம் ஆறுதலை
தேடினோர் புரிவார் எழுதலை
முயன்றே வெற்றியை எட்டுதலை
தலையில் தினமும் நவதலை (ஒன்பது தலை, புதியதலை-அறிவு)
உம் பதிவுகள் இங்கே பத்(து)தலை




பிரதீப்

நண்பருள் நன்பொருள்
செய்வதோ மென்பொருள்
இருக்கையில் இருக்க
கட்டியது இரு கை
காலியானது கிளாஸ்
இவர்
காலியாகாத "Class"

--------------------------------------------------------------------------------

ஆதவருக்கு ஒரு கவிதை



கவிதை என்பது இயல்-ஆதவரே
கண்மூடி நடக்க இயலாதவரே
கவிக்கு அழகு இசை-ஆதவரே
கேடுகள் செய்ய இசையாதவரே

ஆடலும் பாடலும் கலை-ஆதவரே
ஆசைகள் வந்து கலையாதவரே
ஊடல்கள் கூடல்கள் இல்-ஆதவரே
ஊக்கத்தில் குறைவு இல்லாதவரே

உணர்வுகள் இல்லாதது கல்-ஆதவரே
உண்மைக்கு ஒவ்வாதது கல்லாதவரே
மணக்கும் மல்லிகை மலர்-ஆதவரே
மயக்கும் புகழ்ச்சிக்கு மலராதவரே

மொழிகளின் தொடக்கம் சொல்-ஆதவரே
மெய்யினை அன்றி சொல்லாதவரே
அழியும் உயிர்முதல் செல்-ஆதவரே
அல்லது பக்கம் செல்லாதவரே

ஆமையிடம் தோற்றது முயல்-ஆதவரே
அடுக்காய் தோற்பர் முயலாதவரே
பூமியை காத்தல்நம் பணி-ஆதவரே
புல்லர்கள் யார்க்கும் பணியாதவரே

அணிவதில் உயர்ந்தது உடை-ஆதவரே
அன்பன்றி எதற்கும் உடையாதவரே
மனிதம் உயர்ந்தது அறிவில்-ஆதவரே
மனிதம் மறந்தோர் அறிவில்லாதவரே


இணையத் தோழி செல்வி!

அலைகள் அறைந்தறைந்து
மொட்டையாய்ப் போன
மனத்தின் மோனத் தவம்

அறைந்து எழுந்த
அலைகளின் அழகு
தலைக்குப் பின்
வர்ணஜாலம் காட்டி
மதியும் ரவியும்
எழுந்து விழும்
அழகு என

நிழற் படங்களாய்
அதன் பிம்பங்கள்
சுவர்களை அலங்கரிக்க

சலனமின்றி
மொட்டைப் பாறையின்
மோனத்தவம்

No comments:

Post a Comment