Friday, December 4, 2009

கலக்கல் கவுண்ட் டவுன் - தசாவதாரம் கமல்

தசாவதாரம் திரை விமர்சனத்தை பலரும் தங்கள் பார்வையில் விமர்சிக்கிறார்கள்.. என் விமர்சனத்தை கொஞ்ச நாள் கழித்துப் போடலாம் என இருக்கிறேன். ஆனாலும் 10 க்குள்ள சப்பாணி யாரு சண்டியர் யாருன்னு பார்க்கலாமேன்னுத் தோணித்து..

10 கேரக்டரை உருவாக்கிச் செதுக்கி மெனக்கெட்டிருக்கிறார் கமல்.. அந்தப் பத்தை என் ரசனைக்கேற்றவாறு நான் வரிசைப்படுத்தி இருக்கிறேன்..



இப்போது 10 வது இடத்தைப் பிடித்த கதாபாத்திரத்தைப் பற்றி எழுதுகிறேன்.
10. கலிஃபுல்லா :


காலியா? ஃபுல்லா? எனக் கமலாலேயே கிண்டலடிக்கப் படும் கமல். உயரம் 6 அடி 8 அங்குலம்.. மாவு முகம், அப்பாவி...


கமலின் அப்பாவி முகப் பாவனைகளை மாவுக்கட்டு வெளிப்படுத்த இயலாமல் தடுமாறுகிறது.. உயரமாய் இருக்கவேண்டுமென மாவு மெனக்கெடப்பட்டிருக்கிறது.. அவரது கன்னக்கதுப்பு, தாடை போன்றவை நடிப்பை வெளிப்படுத்த இயலாமல் குமுறுவதை காமிராவின் துல்லியம் கச்சிதமாய் படம் பிடித்திருக்கிறது. ஒருவேளை உயரமானவராக கிராஃபிக்ஸ், மற்றும் தோற்றப்பிழைகளைக் கொண்டு காட்டி இருக்கலாமோ என எண்ண வைக்கிறது.. அல்லது கமலை மிக உயரமானவராகக் காட்டாமல் சராசரி முஸ்லீமாக விட்டு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ!!!

இந்தக் கேரக்டரின் வசனங்கள் இயல்பு நடிப்பும அளவு..

இந்தக் கமலை விட ரேட்டிங்கில் தாழ்ந்த அடுத்தக் கமலை கமல் தன் புத்திசாலித்தனத்தால் ஒரு படி உயர்த்தி இருக்கிறார். யார் அவர்..?

9. ஜார்ஜ் புஷ்..





ஜார்ஜ் புஷ்ஷை எல்லோருக்கும் தெரியும். அவரின் மேனரிஷம், பேச்சின் ஆழம், முடிவெடுக்கும் இன்ஸேன் ஜீனியஸ்னஸ் இதையெல்லாம் கமல் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். ஆஸ்காருக்கு அனுப்ப வேண்டும் என எண்ணமிட்டதாலோ என்னவோ அமுக்கி வாசித்திருக்கிறார்..

பலர் மனசில் ஒரு கேள்வி, NaCl சோடியம் குளோரைடு, சாதாரண உப்பு என்பது பலருக்கும் தெரியுமே.. விஞ்ஞானிகள், ஜனாதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் என எல்லோரும் புரியாமல் தவிப்பது ஏன்? அதுவும் இந்தியாவில் நம்ம சிலபஸை படித்த 7 வது மாணவனுக்குக் கூடத் தெரியணுமே..

இதைக் கமல் பார்வையில் பார்க்கலாமா?

NaCl ..படித்துப் பாருங்கள்.. நக்ல் --> நக்கல்...

ஆக மிகப் பெரிய ஆபத்துக்களை தடுக்கக் கூடிய வழிகளை நக்கலாக சொல்லி இருக்கிறார், புஷ்ஷிற்கு இந்த நக்கல் புரியாது, புரியக்கூடாது என்பதற்காகவே NaCl அடித்திருக்கிறார்...

வைரஸை அழிக்க "Could we Nuke them?" என்று கேட்பது தான் இவரை நம்ம கலிஃபுல்லாவுக்கு மேலே உயர்த்தி இருக்கிறது.. புஷ்ஷின் கேரக்டரில் இழையோடி இருக்கும் NaCl.. பத்தோடு பதினொன்றாய் இல்லாமல் அந்தப் பாத்திரத்தை இந்த எண்ணாய் உயர்த்தி இருக்கிறது.. (இது என் NaCL ங்கோ!!!)

ஆரம்பக் காட்சிகளில் புஷ் புஷ்வாணம்தான் என்றாலும் லிமோசினில் செல்லும் காட்சியில் கொஞ்சம் உயர்ந்து விட்டார்.

வைரஸ் டெவலெப்மெண்ட் நடக்கும் பொழுது மருந்துக்கு கூட யாருமே இந்த வைரஸூக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென பேசவில்லை,,

உண்மையாய் சொல்லப் போனால் அமெரிக்க அரசாங்கம் பல வைரஸ்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறது. அவை ஆய்வுக்காக எனச் சொல்லப்படுகிறது. ஆந்த்ராக்ஸிற்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என ஆந்திராக்ஸ், பெரியம்மை திரும்ப வந்தால் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கவென பெரியம்மைக் கிருமிகள் எனப் பல வைரஸ்கள் பாதுகாப்பாய் வைக்கப்பட்டிருக்கின்றன.

அழகாய் இதைக் கையாண்டிருக்கும் கமலுக்கு ஒரு சபாஷ். புஷ் வேடம் போட்டதினால் கமல் தவறு செய்து விட்டாரோ? சிவாஜியில் ரஜினி வெள்ளைக்காரராய் தோன்றியதற்குப் போட்டியோ என்ற எண்ணங்களையெல்லாம், கமல் சொன்னால்தான் சில விஷயங்களின் கோணங்களைச் சிந்திக்கத் தோன்றுகிறது என்பது முட்டுக் கொடுத்து நிற்க வைக்கிறது...

8. சிங்கேன் நரசாஹி:


இவருடைய பேரைக் கண்டுபிடிப்பதற்குள் இவர் வரும் காட்சிகள் முடிந்து விடுகின்றன..




பாத்திரப் படைப்பு பார்த்தால் பழைய சைனீஸ் குங்க்ஃபூ பட ஹீரோக்கள் போலத்தான்..

தங்கையும் மச்சானும் விபத்தில் உயிரிழக்க, கொன்றவனைத் தேடி வருகிறார். இவர் டைரக்டாக டைரக்டர் கிட்டயே எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்குவார் போல இருக்கு, ராவோட ராவா பல்ராம் நாயுடு பின்னாலயே போனா கோவிந்தைப் பிடிச்சிடலாம்னு பின் தொடர்வது காமெடி.. (படத்தில காமெடி இல்லீங்க.. காட்சி அமைப்பில, நாம இப்படி ரா அதிகாரி பின்னால சுத்தினா பெண்டு எடுத்திற மாட்டாங்க..)

மேக்கப் கொஞ்சம் முகபாவனைகளை காட்ட அனுமதிக்கிறதுங்கறதைத் தவிர, தங்கை மச்சான் ஆகியோர் இறந்ததால் வரும் சோகம், கோபம் போன்ற உணர்ச்சிகளைக் கொஞ்சமாத்தான் காட்டுது... (ஜென் துறவியோன்னு சந்தேகம் கூட வருதுன்னா பாத்துக்கங்களேன்)..

கடைசி சண்டைக் காட்சியில் மட்டும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கார். ஹிரோஷிமா நினைவிருக்கா என ஃபிளெச்சர் கேட்க, முத்துத் துறைமுகம் (பியர்ல் ஹார்பர்) நினைவிருக்கா என இவர் கேட்பது நறுக்.. (அப்பதான் ஜெட் விண்ட்ஸ் பத்தி அமெரிக்கா காரங்களே தெரிஞ்சுகிட்டாங்க, தெரியுமா, இதைக் கமல் சொல்லலை.. நான் சொல்றேன்)..

மேக்கம் பரவாயில்லை ரகம். பாடி லேங்க்வேஜ் போகப் போக நல்ல முன்னேற்றம். ஆரம்பக் காட்சிகளில் ஜப்பானியர்களுக்கே உள்ள சுறுசுறுப்பு இல்லை.. .. (இதை எண் 5 ல் மறுபடி விவாதிப்போம்..)

இறுதிக் காட்சியில் ஜப்பானியராவே மாறிவிடுகிறார் கமல்... அதனால 2 இடத்தை ஜம்ப் பண்ணி 8 ல வந்து நிக்கிறார்...

அடுத்து 7 ல் யாரு (கேது ன்னு யாரோ சொல்றது காதில விழுந்திருச்சி.. அப்புறம் கவனிச்சுக்கறேன்,,)

நோட்ஸ் எல்லாம் ஒண்ணுமில்லக்கா.. கண்ணில் நோக்கியா மனசில மோ(மா)ட்டராலா சில டெக்னிக்கை எல்லாம் சொல்லக் கூடாதுங்க்ககா!!!


7. ஃபிளெச்சர்:


பலபேருடைய லிஸ்ட்ல ஃபிளெச்சர் இன்னும் மேன்மையான இடத்தைப் பிடிச்சி இருக்கலாம்.. ஆனால் என் கவுண்ட் டவுன்ல ஃப்ளெச்சர் பிடிச்ச இடம் ஆறாவது...



ஃபிளெச்சருக்கு நடிக்க கிடைச்ச வாய்ப்பு கொஞ்ச நஞ்சமில்லை.. ஆனால்.. ஆனால்...

அந்த முகம் மறுபடியும் நடிப்பை மறைக்குதே!!

எக்ஸ். C.I.A. Agent.. இதுதான் ஃப்ளெச்சர். கவர்மெண்ட் ஸ்பான்ஸர் பண்ணி நடக்கற வைரல் டெவலப்மெண்ட் ப்ரோக்ராம் தலைவர் சேதுவோட (சேது எப்படிப் பாலமா இருக்காருன்னு பாத்தீங்களா?) மனசை பணத்தால அடிச்சி வைரஸைக் கைப்பற்றி அதன் மூலம் மிகப் பெரிய திட்டமெல்லாம் வச்சிருக்கார்...

வயசானாலும் வேகம் குறையாத உருவம்.. தலை மட்டும் சோத்தில் இருக்கிற கல்லு மாதிரி நெருடுதுங்க.. கூட இருக்கும் சுரேஷ் சேது போன்றவர்களைப் போட்டுத் தள்ளும் நயவஞ்சக நரியின் கண்கள் குழிக்குள் இருந்து பரிதாபமா பார்க்குதுங்க.

கமலை முகமாற்றம் செய்யாமல் இந்தக் கேரக்டரைச் செய்ய வைத்திருந்தால் நம்பர் 1, 2 3 க்கு போயிருக்க வேண்டிய பாத்திரம் 7 ல் சறுக்கி விழுந்திருக்கிறது..

அமெரிக்காவில அனுமதியில்லாம பிரைவேட் ஹெலிகாப்டர் ரெஸ்டென்ஸியல் ஏரியாவில காரைத்துரத்துற அபத்தத்தையும் கமல் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பியடித்திருக்கக் கூடும்.. 9/11 நிகழச்சிக்குப்புறம் அங்க ரெஸிடென்ஸியல் ஏரியாவில இப்படிப் பறந்தா F17 வந்து போட்டுத் தள்ளிருமாம்...

இந்தியாவில அவர் சுதந்திரமா துப்பாக்கியோடச் சுதந்திரமாச் சுத்தறது, கைக்கெட்டுற தூரத்தில் கமல் இருந்தாலும் பிடிக்க முடியாதது என்பவை கதை அபத்தங்கள் என்றால் மல்லிகா ஷெராவத் மாதிரி ஒரு சித்தினி கூட இருக்கும் போது கமல் முகம் கமல் முகமாவே இல்லை..

நடிப்புன்னு பார்க்கப் போனா வேகம் வேகம் இதைத்தவிர உணர்ச்சி வெளிப்பாடுகள் வெளிவராம முகத்தோட ஃபெவிகால் போட்டு ஒட்டிட்டாங்க. வில்லன் கமல்.. வேஸ்டட் ஆப்பர்சூனிட்டி!!!

6. அவ்தார் சிங்



இதுவரைச் சொத்தைகளையும் சோடைகளையுமே கண்டு வந்த உங்கள் கண்களுக்கு அவ்தார் சிங் வழியாக தசாவதாரத்தின் பாஸிட்டிவ் பக்கம் அவதாரமெடுக்கிறது..




அரிதார தடையின்றி கமலின் முகம் காணக் கிடைக்கும் போது அவை காட்டும் உணர்வுகள் தான் எத்தனை.. (ஆமாம் கமல் இதுவரைக்கும் ஒரு 10 படத்தில இரத்த வாந்தி எடுத்திருப்பீங்களா? உங்க ஜோடி ஜெயப்ரதா நினைத்தாலே இனிக்கும்ல இரத்த வாந்தி எடுத்தாங்க நினைவு இருக்கு... அதே ஜோடியை மேடையில் பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் வருவதைத் தடுக்க முடியலை..)

அவ்தார் சிங்.. ஆர்ப்பாட்டமில்லாத பாப் பாடகன்.. (பஞ்சாபி.. அந்தத் துள்ளல் கொஞ்சம் மிஸ்ஸிங்) கமலின் டச்சிங்குகள் இந்தப் பாத்திரத்தில் தெரிகிறது. இதைப் பார்க்கும் பொழுதுதான் மச்சம் வச்சால் வேற ஆள், தாடி வச்சா வேற ஆள் அப்படிங்கற எம்.ஜி.ஆர் கான்சப்டே தேவலையோன்னு தோணுது!.. (ஸாரி கமல், டிஸ்கரேஜ் பண்ணறதா நினைக்காதீங்க.. உங்க உடல் தோலின் நடிப்பை நாங்க மிஸ் பண்ணறோம்னு இப்பவாவது புரியும்னு நினைக்கிறேன்)

மனைவியிடம் காட்டும் அன்பு, கூட்டத்துடன் ஜோக்கடிக்கும் ஜாலி மனிதர், பாட்டா, உயிரா என வரும்பொழுது உயிரைத் தேர்ந்தெடுக்கிறார்.. மனைவிக்காக..

ஆறு மாசம் வாழ்க்கைப் பாக்கி இருக்கும் போதே இப்படி இரத்த வாந்தி வருமா தெரியவில்லை.. வலியைத் தாங்கிக் கொண்டு தனது கடைசி நிகழ்ச்சியில் பாடும் பொழுது, கமலின் நடிப்பு வெளியே தெரியாத அளவுக்கு மேடையில் குரூப் டான்ஸர்கள் கூட்டம்..

பஞ்சாபிகளுக்கே உரிய உரத்த குரலில் பேசி நடிக்க கமல் மறந்துட்டாருன்னு நினைக்கிறேன். மற்றபடி நடிப்பில் இது பரவாயில்லை,..

நான்கு சீன்கள் ஒரு பாட்டு.. இந்த சின்ன வாய்ப்புதான் இந்த கேரக்டருக்கு. இருந்தாலும் நம்ம கமல் என்ற உண்ர்வை ஏற்படுத்துகிறார்.

அடுத்து ஐந்தாவது இடம் யாருக்கு?



5. கோவிந்த ராமசாமி

பி.ஹெச்.டி இன் பயோடெக்னாலஜி, அந்தக் கம்பெனி பேரு கூட கூகுள் என்கிற பேரை உல்டா பண்ணி வச்சப் பேருதான். ..(அடுத்த வழக்கு ரெடியாத் தெரியலை.. நாராயண நாராயண)




மீசை இல்லாத இளமைக் கமல். கதையின் நாயகன், கமல்! எடுத்த உடனே கவுக்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? உங்கப் படத்தோட ஆரம்ப சீனே அதுதான். கோடிக்கணக்கான மனிதர்களை அளிக்கும் சக்தி வாய்ந்த பயலாஜிக்கல் (அடடா என்ன பெயர் பொருத்தம் பாருங்கள், பயமூட்டக்கூடிய லாஜிக்கலான) சேம்பிளை தீயவர்கள் கையில் சிக்காமல் அழித்ததற்காக ஒரு விழா. அதில புஷ், கலைஞர், மன்மோகன்சிங் எல்லோரும் கலந்துக்கறாங்க..

ஆனா லாஜிக்கலா புஷ் இப்படிச் செய்வாரான்னா, மாட்டார், விஷயத்தை அப்படியே பூசி மெழுகிடுவார் இல்லையா? நாங்க பயலாஜிக்கல் வெப்பன் செஞ்சோம் அப்படின்னு தைரியமா அடுத்த நாட்டு மேடையில சொல்ல மாட்டங்கப்பா!!!

ஓடி கொண்டே இருக்கும் கமல்.. இந்த கேரக்டர் சூட்டிங்கை கடைசியாச் செய்திருக்கிறார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. கதையை தூக்கிப் போடுங்க அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.. இந்தக் கமலின் நடிப்பைப் பார்ப்போம்.. ஸ்பெஸிமனை எடுத்துக் கொண்டு தப்பிக்கும் பொழுது அமெச்சூர் திருடனுக்கு உண்டான சிறு பதட்டம், நண்பன் கைக்கூலி எனத் தெரியும் பொழுது அதிர்ச்சி, உலகத்தைக் காப்பாற்ற வேண்டுமே (காப்டன் உங்க சீட்டு போச்சு!) என்ற பதைபதைப்புடன் கூடிய அவசரம். 911 க்கு ஃபோன் செய்தாலும் தகவல் சொல்லாத மதிநுட்பம், ராயுடுவின் முன்னால் கூனிக் குறுகும் போது (தமிழ் பற்றிச் சொல்லும் பொழுது) அவமானம், நான் இவங்களுக்கெல்லாம் எப்படி புரியற மாதிரி எடுத்துச் சொல்ல முடியும், இது ஹை டெக்னிகல் விஷயம் என உப்புக்கும் (NaCl ) பெறாத விஷயத்தைச் சொல்ல தடுமாறுவது என மெத்தப் படித்தவர்கள் செய்யும் சிறிய சிறிய முட்டாள்தனத்தையெல்லாம் செய்வது..

ராவிடம் இருந்து தப்பித்து, ஃபிளெச்சர் இடம் இருந்து தப்பித்து, பாட்டியிடம் போராடி, அசினின் டார்ச்சர் (ஹிஸ்டீரியா மாதிரி அசின் எரிச்சலைக் கிளப்பறார்.. ஒரு அளவுக்கு மேல ஒரு எழவாயிடுது.. அசின்! ரசிகர்களோட எரிச்சலை கொட்டிக்காதீங்க.. அடுத்த முறை இந்தப் படத்துக்கு நான் வரும் பொழுது அடக்கி வாசிங்க என்ன?)

மணல் கடத்தல் காரர்களிடம் மாட்டிக்கொள்ளுதல், ஜப்பானிய நண்பனால் கடைசியில் வில்லனிடம் இருந்து காப்பாற்றப்படுதல் என மிக அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர்...

படம் ஓடற ஓட்டத்தில கமலோட நடிப்பை நிதானமா விலாவரியா அலச முடியலை. அதனாலேயே இந்தக் கமலுக்கு மார்க் கொஞ்சம் குறைஞ்சு போச்சு.

ரசிக்க நேரம் பத்தல கமல்.. கொஞ்சம் நின்னு நடிங்களேன்.. அப்படின்னு கத்தணும் போலத் தோணித்து...

இந்தக் கமலுக்கு இதமான தென்றல் மாதிரி ஃப்ளாஷ் பேக்கும் கிடையாது.. கடைசிக் காட்சி சுனாமி ஓய்ந்த பிறகு தரைதட்டிய அரங்கநாதனின் அருகில் அசினும் கமலும் பேசிக்கும் போதுதான் கொஞ்சம் இதமா இருக்கு!!!
ஆக, இன்னொரு முறை பார்த்து சரியா இடத்தை நிர்ணயிச்சு சரியான சீட்டில் உட்காரும் வரை கோவிந்த இராமசாமி 5 வது இடம்..

இப்போ பாக்கி இருப்பது நாலு இடம்..

ஆகப் பத்தில 4 கேரக்டர் மெயின் ஹீரோவை ஓரங்கட்டி இருக்கு.. அப்ப சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டர் எனக் கமல் இந்த வருடம் விருது பெறலாம்...

அடுத்து 4 வது இடம்...

4. கிருஷ்ணவேணி - பாட்டி



பாட்டியின் மைனஸ் பாயிண்டை முதலில் சொல்லிடறேன்.. மேக்கப்.. பொக்கைவாய், சுருக்கம் விழுந்த முகம், கை கால்களுக்கு 1 இஞ்சில மாவுகட்டுன்னு போட்டு கொஞ்சம் ஓவர் மேக்கப்.




95 வயசுப் பாட்டி, பரபரன்னு சுத்தறதைப் பார்த்தா நரசாகிக்கு இருக்க வேண்டிய சுறுசுறுப்பு பாட்டிக்கு இருக்கோன்னு சந்தேகப் பட வேண்டி இருக்கு..

இனியெல்லாம் நலமே. பாட்டி அவதாரத்தில் கமலின் குறும்பு மின்னுது. தோல்பாவைக் கூத்தில பாவைகள் தீ விபத்தில் நாசமாக தசாவதார நிழலா ஆக்ட் குடுக்கறதல ஆரம்பிக்கிறாங்க பாட்டி.. யார் பேச்சையும் காது குடுத்து கேட்காதது, தனக்குள்ளேயே தான் இழந்த (இழந்தது தெரியாத) மகனைப் பற்றிப் பேசிக்கிறது,, மகன் அனுப்பிய பார்சல் யாராச்சும் பிடுங்கிக்குவாங்கன்னு பீரோவில போய் ஒளிஞ்சுக்கறது.. மகனைப் பாக்கப் போலாம் வா என்று போலீஸ் சொன்னதும் கூட ஏன் எங்கன்னு கேட்காம ஏறிக்கிறது.. (ரொம்ப நேரம் ஆனதும் முட்டறதுடா படுபாவி எனக் கமல்தனமான வசனம்) அப்புறம் இறந்து கிடக்கும் பூவராகனை ஆராவமுதனாக எடுத்து வைத்துக் கொண்டு அழுவது...
பாட்டி சூப்பர்ப். குரலும் சூப்பர்ப். கமலேதான் பேசியிருக்கிறார், ஆக முதலிரண்டு மைனஸ் பாயிண்ட்ஸ் இல்லையின்னா பாட்டி பெருமாள் கிட்ட தோள் மேல ஏறிப் போன ,மாதிரி இரண்டாம் இடத்திற்குப் போயிருப்பாங்க...

அடுத்து பாக்கி இருப்பது முதல் 3 இடங்கள்..
3. நம்பிராஜன் - இராமனுஜ தாசன்


இது நம்ம ஆளு.. இது அசல் கமல்.. அப்ப ஹீரோ? அவர் கிடக்கிறார் விடுங்கோ. ஓபனிங் ல இவரது நடிப்புதான் படத்திற்கு பிரம்மாண்ட உணர்வை தருது...




யானை மேல குலோத்துங்கன் கம்பீரமா உட்கார்ந்திருக்கான், வேஷப் பொருத்தம் சூப்பர். நிதானமான அழுத்தமானப் பேச்சு. அதை எதிர்த்துப் பேசும் போது ...

கமலின் முகத்திலும் உடலிலும் உணர்வுகள் அனாவசியமாக கொப்புளித்து எழுகின்றன, சொல்லப் போனா கிருஷ்ணவேணிப் பாட்டிக்கும் இந்த நம்பிராஜனுக்கும் ஒரு லிங் இருக்கு, இவர் தன் பகவான் தொலையாம இருக்கக் கஷ்டப் படறார். பாட்டி மகனைத் தொலைச்சிட்டு அதே பகவான் வெளிய வரும்பொழுது தன் மகனைக் கண்டதா அழறார்,,,

(சும்மாக்கா நூல் விட்டுப் பாக்குறேன்)

இந்தக் கமல் நம்மச் சொந்தக் கமல். கமல் ரீசண்டா வரும் படங்களில் தன் உடல்கட்டைக் காட்டிக் காட்டி இளம் நடிகர்களை (பின்ன யாரு நம்ம மாப்பிள்ளை சார்களைத் தான்) வெறுப்பேற்றுகிறார்.

படமாக்கும் பொழுது எப்படி படமாக்கி இருப்பாங்கன்னு யோசிச்சுப் பார்த்தா நடிப்பின் பரிமாணம் இன்னும் அதிகமா தெரியுது. இல்லாத கோயில், பிரம்மாண்டம் தெரியாது.. அந்த சூழ்நிலையை மனக் கண்ணால் பார்த்து நடிச்சிருக்கார், அதாவது கமலின் மனதில் அந்த சுற்றுப்புறம் மிக அழகாக பதிந்து விட்டிருக்கிறது..

இது கமல் பார்த்து பார்த்து செதுக்கிய பாத்திரம். கமல ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரே முழுக்காட்சிதான்.. ஆனால் போஸ்டரில் முதலிடம்.. பாடல்களில் முதலிடம்.. இது கமல்.

ஆனால் ஏன் மூன்றாவது இடம். கேட்பது புரியுதுங்கண்ணா. என்ன செய்யறது. இதுல கமல் இயல்பா இருக்கிறார். அவர் கனவு கண்டு அவரா அவர் இருந்திருக்கார், இதுக்கு மேல இரண்டு பாத்திரங்கள் இருக்குன்னா அதில சம்திங் ஸ்பெஷல் இல்லையா?

சரி அடுத்து இருப்பது இரண்டே இடங்கள். ஆமாம் ஆமாம் உங்கள் கணிப்பு சரிதான்.. ஆனாலும் கொஞ்சம் பொறுங்கள்..
2. வின்சென்ட் பூவராகன்
ஒரே ஒரு சீனுக்காக சின்ன ஒரு பாத்திரமாய் இருக்க வேண்டியவர். கமல் கொஞ்சம் கனவையும் சேர்த்து செதுக்கி இருக்கார்.




படிக்காத பாமரன், படிச்ச மேதைகளுக்குத் தலைவன்..
மணல் கொள்ளையைத் தடுக்க, மீடியோவோட எண்ட்ரி..
இவரோட எண்ட்ரியால ஆண்டாளும், கோவிந்தனும் காப்பாற்றப் பட வைரஸ் மறுபடி கோவிந்தன் கைக்கு வரணும்..
சின்ன பாத்திரத்தை ஒரு கனவுத் தலைவனா சித்தரிச்சு இருக்கார் கமல். கருத்த உருவமும் முகமும் சற்றே செயற்கையாய் தெரிந்தாலும், விரிந்த சிவந்த கண்கள் பேசுது,
ஒரு தலைவன் எப்படித் தொண்டர்களை அரவணைத்துப் போகணும், தவறை எப்படித் தட்டிக் கேட்கணும், தொண்டர்கள் விலை போனாலும் எப்படிக் கலக்கமில்லாமல் நிமிர்ந்து நிக்கணும். விரோதியே ஆனாலும் மனிதாபமானம் எப்படி இருக்கணும் என ஒரு பாடமே நடத்தி இருக்கார் கமல்.
ஆர்ப்பாட்டமில்லா நடிப்பு, கன்னக் கதுப்புகள் மட்டும் செயற்கையாய் இருக்கு,
ஒடுக்கப் பட்டவர் என சிம்பாலிக்காக காட்ட தோளைக் குறுக்கி நடித்திருக்கிறார் கமல், சுனாமி காட்சியில் காப்பாற்றப் போகும் போதும் சரி, பிணமாய் கிடக்கும் காட்சியிலும் சரி கொஞ்சம் கூட இழை பிசகாமல் அந்தக் கதாபாத்திரத்தை மட்டுமே காட்டி இருக்கிறார். அவரது வசனங்கள் நச், டயலாக் டெலிவரி சபாஷ் போட வைக்கிறது. விரோதிகளும் நேசிக்கும் தலைவனாக எப்படி இருப்பது என ஒரு பாடமே நடத்தி இருக்கிறார்.
மக்கள் மனசில் பச்சக் எனப் பதியும் பாத்திரம். புதிய அரசியல் தலைவர்கள் பார்த்து நோட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்..
இறந்த பின்னும் ஒரு தாயை அவருக்குப் பரிசளித்துக் கண்களை பனிக்க வைத்திருக்கிறார் கமல்.
அழகான தெக்கத்திச் சீமைத் தமிழ். அட்சரம் பிசகாம பேசி கலக்கி இருக்கிறார்,
உன்னால் முடியும் தம்பி. ஞாபகம் வருவதை தவிர்க்க முடியலை. சமூகச் சிந்தனையும் கமலின் இரத்தத்தில் ஊறி இருக்கு என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு..

கோபமாப் பேசறதை விட நிதானமா அழுத்தமா பேசற கேரக்டர்.
நச்.
அப்போ முதலிடம் பிடிச்சது யாருன்னு எல்லோருக்கும் புரிந்திருக்கும்...

ஆனால் ஏன் முதலிடம் என்பதைப் பார்க்கணும் இல்லையா?


1, பலராம் நாயுடு


பலராம் நாயுடு ஹீரோ இல்லைதான். வில்லன் இல்லைதான்.. எல்லாம் முடிஞ்ச பின்னால வர்ர போலீஸ் மாதிரியான ஒரு சாதாரணக் கேரக்டர்தான். ஹி ஹி...




சின்னத் தொப்பை, கொஞ்சமான முகமாறுதல், சுந்தரத் தெலுங்குத் தமிழ், பாதுகாப்புத் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே உரிய நிதானம், அழுத்தம், உறுதி நக்கல்.

கொக்கிப் போடும் கேள்விகள், அமெரிக்க FBI ஆட்கள் வந்திருந்தாலும் தன் வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மேலதிகாரியின் ஃபோன் வந்ததும் திட்டிக் கொண்டே போவது எனச் சலிப்பில்லாமல் ஒரு புதிய கமல்.

இவர் கேட்கிற கேள்விகளில் குற்றவாளியா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க சார்னு கால்ல விழுந்திடுவான்னு நினைக்கிறேன். அசத்தும் தெலுங்குக் காரர்களுக்கே உரிய மேனரிசங்கள்.. அய்யா கமல் இவரை ஹீரோவா போட்டு ஒரு படுமெடுங்கய்யா!!!!

ஃப்ளெச்சரும் ராயுடுவும் நேருக்கு நேர் மோதும் சந்தர்ப்பம் வரவில்லை.. இருந்தாலும் ஃப்ளெச்சரையும் கோவிந்தனையும் துரத்துகிறார், அவரிடமிருந்து ஓடிப் போகும் கோவிந்தனுக்கு அவரின் தேவை ஏற்படும் போது உதவ முடியவில்லை.. இதெல்லாம் கதையினால்.

கோவிந்தனுடன் விசாரணை, குரியர் சர்வீஸில் விசாரணை, சிதம்பரத்தில் பாட்டியுடன் விசாரணை அப்புறம் கலிஃபுல்லாவிடம் விசாரணை கடைசியா ஃப்ளெச்சரையும் கோவிந்தனையும் ஹெலிகாப்டரில் துரத்துவது.. இவ்வளவு தான் வேலை..

ஆனாலும் ரா அதிகாரியான அவர் ராவாக இல்லாமல் கலக்கி இருக்கிறார் 

இந்த பாத்திரம், மேக்கப் போட்டாலும் அதிகம் உறுத்தவில்லை. இந்தப் பாத்திரம் ஹீரோ இல்லை என்றாலும் தன் முத்திரையை நச் சென்று உச்சந்தலையில் கொட்டு வைத்து பதித்து இருக்கிறது.

இந்த பாத்திரத்தின் வாயிலாகவும் எக்கச் சக்க நக்கலடிக்கிறார் கமல்

1. தமிழ் பேசத் தமிழனை செய்யும் கிண்டல். (இந்தியாவில் இரண்டாவது பெரிய மொழி தெலுகு. அதைப் பேசற நானே தமிழ்ல பேசறேன். தமிழ் நாட்ல பொறந்த உனக்கு தமிழ்ல சரியாப் பேச வராதுன்னு சொல்றியே!!!)

2. ரா அதிகாரியாக் ஒரு கேஸ் கிடைத்த உடனேயே இவன் குற்றவாளிதான் இவன் சொல்வதெல்லாம் டூப்பு என அலட்சியம் செய்யும் போக்கு

3. மேலிடத்தை திட்டுவது

4. கலிஃபுல்லாவை தீவிரவாதியோ எனச் சந்தேகப் படுவது.
5. தீவிரவாதி என்றாலே முஸ்லீம் இயக்கங்களின் பெயரை மட்டுமேச் சொல்லி அதைச் சேர்ந்தவனா எனக் கேட்பது
என ஏகத்துக்கும் அரசையும் அதிகாரிகளையும் கிண்டல் செய்திருக்கிறார்..
ஆனால் அவையெல்லாம் வாழைப்பழ ஊசிகள்.. கத்தாழைக் கண்ணுக்கு மட்டும் பளீர்னு தெரியுது..
இந்தக் கமலைப் பார்க்கும் போதுதான், ரிலாக்ஸா படத்தைப் பார்க்க முடியுது... வாழ்க ராயுடு.
இதுவரை என்னோட ரவுசை கண்டுகிட்டவங்களுக்கும் கண்டுக்காம போனவங்களுக்கும் அப்பால கண்டுக்கறேன்னு போன்னவங்களுக்கும் நன்றி..

வர்ட்டா!!

!

2 comments:

  1. வஞ்ச புகழ்ச்சி அணியோ என்று நினைச்சேன்........ முதலிடத்தில் அசத்திட்டீங்க........

    ReplyDelete
  2. வஞ்சப் புகழ்ச்சியா? நல்ல விஷயங்களுக்கு அப்படி செய்ய முடியாதுங்களே...

    ReplyDelete