Tuesday, December 1, 2009

மழை!

கானாங் குருவியெல்லாம் காச்சுமூச்சு சத்தமிட்டு
கூட்டுக்குள்ள ஒளியுதடி ; அடி
மானங் கருத்துகிட்டு மையிருட்டு ஆகுதடி
மழை கொட்ட போகுதடி

தாவார முத்தத்தில நெல்லுகொட்டி காயுதடி
தண்ணி பட போகுதடி ; இப்போ
நாவாரேன் வெரசாக நீயும் கொஞ்சம் பதுசாக
நெல்லக் கொஞ்சம் அள்ளிவைய்யடி.

பட்டணத்தில் வாங்கிவந்த எட்டுமுழ வேட்டிதுணி
பாலியெஸ்டெர் சட்டையடி ; உனக்கு
சிட்டுபணம் சேத்துவச்சு சிங்காரமா வாங்கியாந்த
செவத்த பட்டுச் சேலையடி

பொட்டுத்தண்ணி படாம சட்டுண்ணு எடுத்துவச்சி
பொட்டியை மூடிவைய்யடி ; அங்கே
கட்டுகட்டா கொட்டிவச்ச கருவேல விறகையெல்லாம்
கவனமாத்தான் போத்தி வைய்யடி

சலசலன்னு பெய்யும்மழை சாரல்வந்து நனையாம
சன்னல்கதவு சாத்தி வைய்யடி ; கொஞ்சம்
மளமளன்னு பொருளையெல்லாம் மழைத்தண்ணி ஒழுகாத
மூலையில எடுத்து வைய்யடி

ஆடிமழை அடிக்குதடி அடிவயிறு கலங்குதடி
இந்த வீடு பழையதடி ; இப்போ
சூறைக் காத்தடிச்சி கூரை பறக்குதடி
சுவரெல்லாம் விரிசலடி

மழைவந்தா வீடுகஷ்டம் மழையில்லா பாடுகஷ்டம்
மனுஷங் கஷ்டம் முடியாதடி ; இந்த
ஏழைக் குடும்பத்துல எதுதான் கஷ்டமில்ல
எல்லாம் அவன்விட்ட வழிதானடி

.

No comments:

Post a Comment