Tuesday, December 1, 2009

பாட்டி சொன்ன உண்மைக்கதை!!!

என் அம்மாவின் அம்மா பார்வதிப் பாட்டியை எல்லாரும் செத்துப் பொழச்சவங்கன்னு சொல்வாங்க..

அப்ப நான் 4 வது படிச்சிகிட்டிருந்தேன்.. ஒருதடவை பாட்டிகிட்டயே கேட்டேன். என்ன பாட்டி நீங்க செத்துப் பொழச்சவங்களாமே அப்படின்னு... பாட்டியும் கதையச் சொல்ல ஆரம்பிச்சாங்க.

அப்போ உங்க அப்பாஅம்மாவுக்கு கல்யாணம் கூட ஆகலை. நாங்க ஒரு பொட்டிக் கடை வச்சிருந்தோம். தாத்தா எப்பவும் கடையிலதான் இருப்பாரு. நான் காலையில இட்லி சுட்டு கூடையில வச்சுகிட்டு ஊரெல்லாம் போய் வித்திட்டு வருவேன். சாயங்காலம் ஆனா வடை, பஜ்ஜி, முறுக்குன்னு சுட்டு கூடையில வச்சுகிட்டு ஊர் முச்சூடும் போய் வித்துட்டு வருவேன்..

அன்னிக்கும் அப்புடித்தான், வித்து முடிச்சுட்டு கொஞ்சம் வடை, பஜ்ஜியோட வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தன, சுடுகாட்டைத் தாண்டும் போது பார்வதி வடை குடுன்னு யாரோ கேக்கறா மாதிரி இருந்திச்சு, சுத்து முத்தி பார்த்தா ஒருத்தரையும் காணோம்.. நான் சரின்னு வேகமா நடக்க, பார்வதி வடை குடு பார்வதி வடை குடுன்னு கேட்டுகிட்டு பின்னாலேயே வந்தது.. நானு ஓடி வந்து வீட்டுல புகுந்து கிட்டேன்.

அடுத்த நாள்ல இருந்து எனக்கு பயங்கரக் காய்ச்சல். யாரோ என் நெஞ்சு மேல ஏறி உட்கார்ந்த மாதிரி பாரம். நான் படுத்திருந்த கட்டிலைச் சுத்தி குட்டிக் குட்டியா கருப்பா எதெதோ ஓடுது, எனக்கு பயமா இருந்தது. முனகறேன்.. பேசவும் முடியலை.. தொண்டையை அடைக்குது..

அந்தக் கருப்புச் சாத்தன்கள் கட்டிலைக் குலுக்குது. எனக்கு உடம்பு தூக்கித் தூக்கிப் போடுது. வாசல்ல கருப்பு தட்டற மாதிரி பெருசா கருப்பா தடிமனா யாரோ வந்து என் கையைப் புடிச்சி இழுக்கறாங்க.. அப்படியே ஒடம்பிலிருந்து என்னை உருவிகிட்டுப் போயிட்டாங்க.. எங்கப் பாத்தாலும் இருட்டு.. ஒரே இருட்டு.. என்னைச் சுத்தி சுத்தி இழுத்துகிட்டுப் போறாங்க.. எனக்கு அழுகையா வருது..

ரொம்ப நேரத்துக்குப் பின்னால ஒரு பெரிய கூடத்தில என்னை விட்டுட்டாங்க.. எனக்கு ஒண்ணுமே புரியலை.. அங்க யார் யாரோ இருக்காங்க.. எல்லாம் ஒவ்வொரு தினுசா..

ஒரு பெரிய ராஜா வந்தாரு.. அவரு கூட ரொம்பப் பெருசா தலைப்பாகை கட்டிகிட்டு ஒருத்தர் வந்தாரு..

தலைப்பாகை கட்டுனவரு ஒரு பெரிய புத்தகத்தைப் புரட்டி புரட்டிப் பாத்தாரு.. அப்புறம்.. அடப்பாவிகளா.. இந்த பிஞ்சை ஏண்டா கொண்டுவந்தீங்க.. அடுத்த தெருவில இருக்கற முத்தலைக் கொண்டுவராமண்ணு கேட்க.. அந்தக் கறுப்பு பிசாசுங்க என் கையைப் புடிச்சு தர தரன்னு இழுத்துகிட்டு பறந்துச்சுங்க..

எனக்குத் தலையைச் சுத்துது ஒண்ணுமே புரியலை.. கடைசியா எங்க வீட்டு வாசலுக்கு வந்த பின்னாடிதான் எனக்கு எல்லாமே அடையாளம். தெரியுது.. எல்லாரும் அழுதுக்கிட்டு இருக்காங்க.. வீடு நெறையக் கூட்டம் என்னை உள்ளெ இழுத்துகிட்டுப் போனதுங்க அந்தச் சாத்தானுங்க..

நடுக் கூடத்தில நான் செத்துக் கிடக்கறேன்.. தலை மாட்டில விளக்கைப் பொருத்திகிட்டிருந்தாங்க.. நான் ஓன்னு கத்தினேன்.. யாருக்கும் கேட்கலை போல இருக்கு யாரும் திரும்பலை.. தாத்தாகிட்ட யாரோ தேங்காய் கொடுத்து உடைக்கச் சொன்னாங்க..

அந்தப் பிச்சாசுங்க சீக்கிரம் சீக்கிரம் ஒடம்புக்குள்ள போ.. கட்டை விரலைக் கட்டிட்டா போக முடியாதுன்னு என்னைத் தள்ளிச்சுங்க..
நான் விசுக்குன்னு என் ஒடம்பு மேல விழ கால் கட்டை விரல் ஆடுச்சு..

பக்கத்து வீட்டு பால்காரம்மா கால் கட்டை விரல் ஆடுறதைப் பாத்துருச்சு. உடனே கட்டை விரல் ஆடுதுன்னு கத்திச்சாம்.. என்னோட மூச்சு திரும்ப வர எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்.. சும்மாவா பின்ன, செத்து 10 நிமிஷம் கழிச்சுப் பொழச்சிருக்கனே!..

அன்னிக்கு சாயங்காலம் பக்கத்துத் தெருவில பார்வதின்னு ஒரு கெழவி செத்துப்போனா!

பாட்டியைப் பார்க்க எனக்கு அப்ப பயமாத்தான் இருந்தது. இந்த விஷயம் நடந்த பின்னால பாட்டி கண்ணுக்கு காத்து கருப்பு நடமாட்டம் தெரிய ஆரம்பிச்சிருச்சாம். அதெல்லாம் இவங்களைக் கண்டால் ஒடி ஒளிய ஆரம்பிக்குமாம்..

No comments:

Post a Comment