Tuesday, December 1, 2009

லாவணிக் கவிதைகள் - I

கண்ணிமையை காற்றோடு
அற்புதமாய் அசைத்து -
கால்கொலுசை சத்தமிட்டு,
கலுக்கென்று சிரித்து -

ஏதோ சொல்கிறாய்
என்பது புரிகுதடி,
என்ன சொல்கிறாய்
என்பதுதான் புரியவில்லை-

நிமிடம் ஒருமுறை
நின்றெனைப் பார்த்து -
நகங்களுக்கு நோகாமல்,
நாணத்தோடு கடித்து -
ஏதோ நினைக்கிறாய்
என்பது தெரிகுதடி,
என்ன நினைக்கிறாய்
என்பதுதான் தெரியவில்லை -

பூம்பாதம் நிலம்படாது -
நுனிவிரலால் நடந்து,
உள்ளங்கையில் முகம்புதைத்து
கனியிதழ்தான் சிவந்து,
ஏதோ உணர்த்துகிராய்
என்பது தெரிகுதடி,
என்ன உனர்த்துகிராய்
என்பதுதான் புரியவில்லை

என்னவோ சொல்ல வந்தேன்..
என்னவென்று புரியவில்லை...
இமைக்கும் இருதயத்துக்கும்
ஒரு போட்டி,
யார் வேகமாய் சிற்கடிப்பார் என்று,
இமையா இதயமா என்றுதான்
யார் ஜெயித்தார் என்பது போலத்தான்
என்னவோ சொல்ல வந்தேன்
எப்படியென்று புரியவில்லை....

சிரித்ததா சிணுங்கியதா
யாரறிவார் கால்கொலுசை...
மெட்டி துணை கேட்டு
கொஞ்ச நாளாய் அடம்பிடிக்கும்
அது போல் எதையோதான்
உங்களிடமும் கேட்டிருக்கும்...
நீங்களே கேளுங்கள் எனத்தான்
என்னவோ சொல்ல வந்தேன்...
எப்படியென்று புரியவில்லை...

நிமிடத்திர் கொருமுறை
நின்றும்மைப் பார்த்தேனா...
இதென்ன அபாண்டம்...
இன்னும் ஒருமுறையே
முழுதாகப் பார்க்கவில்லை..

நகமும் கடிக்கவில்லை
நாணமும் படவில்லை...
கைப்பட்ட வேம்பு
இனிக்குதென்று யாரோ சொன்னார்
நிஜமா என சோதித்து
என்னவோ சொல்ல வந்தேன்
எப்படியென்று புரியவில்லை..

நான் நடக்கும் பாதையிலே
பூக்களைத்தான் யார் விரித்தார்
செக்கச் சிவந்திருக்கும்
அது பூவா இல்லை
பூத்த இதயமா?
தவறிக் கால்பட்டு..
துடி துடித்து போகுமென
தத்தி தத்தி நடந்தேன்...
தவறென்ன கண்டு விட்டீர்..

என் கை என் முகம்..
புதைப்பதுவும் என்னிஷ்டம்...
பெண்ணிதயம் புரியாமல்
புதிராய் பார்ப்பவரே
இதழ் சிவந்தாலென்ன..
விழி சிவந்தாலென்ன
உமக்கெதற்கு என்றுத்தான்
என்னவோ சொல்ல வந்தேன்
என்னவென்று புரியவில்லை..

எதிர்பார்த்த எண்ணங்களேனோ
ஏட்டிலெங்கும் இல்லையடி
இமைக்கும் இதயத்துக்கும் போட்டியாம்!!
இல்லையென்று சொல்லவில்லை-
சிறகடிக்கும் போட்டிதான்,
சற்றுமதில் ஐயமில்லை-
யாரைக்கன்டு போட்டி??-
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

சத்தமிட்ட கொலுசு
கேட்டது மெட்டியென்கிறாய்-
கால்கொலுசின் காதலில்
கால்பங்கு உனக்கிருந்தால்
கண்களால் கேட்டிருக்கலாம்
கவிதையாய் கூறியிருக்கலாம்-
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

கைபட்ட வேம்பு
இனிக்குதென்று யாரோ சொன்னாராம்-
சொன்னது நான்தான்
சொன்னவனை மறந்தது
முதல் குற்றம்-
சொன்னவனிடம் கொடுதிருக்க வேண்டும்
உன்கையை சோதித்துப் பார்க்க-
இது இரண்டாவது குற்றம்;
மன்னிப்பாவது கேட்டிருக்கலாம் மறந்ததற்க்கு-
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

உன் பாதையெங்கும் பூத்திருப்பது பூவல்ல
இதயம்தான்
மென்பாதம் நோகாமல்
இருப்பதற்காக எங்கெங்கும்
இதயம் வைத்தது நான்தான்..
துள்ளித் தாண்டி
தொடாமல் பொனதால்
மிதித்துவிட்டாய் இதயத்தை-
"பாதையெங்கும் பூத்திருக்கும் உன்
காதல் இதயத்தில்
கால்படக் கூடதென்று
துள்ளினேன் என் தலைவா"
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

உன் கை உன் முகம்..
புதைப்பதுவும் உன்னிஷ்டம்...
உன்னிஷ்டத்தில் நீ புதைத்தது
உன் முகத்தையல்ல
யென் மனதை -

"நாணத்தின் நிறத்தை
நீங்கள் நோக்கக் கூடதென்று
நினைத்தே என்
முகம் புதைத்தேன்"
அதைத்தான் எதிர்பார்த்தேன்
அதுதான் ஏட்டிலில்லை.

இத்தனை கதைகளை
மொத்தமாய் தத்தை நீ
சத்தமாய் சொல்வதேனோ??
நித்தமுனை நினைத்ததற்கு
நீ கொடுக்கும் பரிசு
கட்டுக் கதைகளா ?????


எண்ணங்களை
ஏட்டிலே பதித்து விட்டு...
கன்னங்களை கையில் பதித்து
மோட்டு வளையில் முகம் தேடி...
வாட்டமாய் நிற்காமல்
வீட்டு வாசல் தெளிக்கயிலே
பாட்டு கலந்து தெளிக்கின்றேன்..
கேட்டவருக்கு புரியவில்லை..

ஏடெடுத்து தேடிவிட்டால்
எண்ணங்கள் புரிந்திடுமோ..

இமைகள் துடிக்கையிலே..
இதழ்கள் துடிக்கையிலே..
கரங்கள் நடுக்கத்திலே..
என்ன சொல்ல நினைத்தேன் என
ஏடெடுத்து தேடிவிட்டால்
என்னத்தான் புரிந்து விடும்..

இது
இதயத்தில் மையம் கொன்ட
பூகம்பம் என்று..

வீட்டு பாடமைய்யா..
விளக்கி சொல்ல யாருமில்லை...


என் இதயதை களவாடி விட்டு
"என் இதயத்தை" காலில் போட்டால்
கொலுசு தானே கொஞ்சிப் பேசும்..

கண்கள் வழி பாலமிட்டு
கவனமாய் அனுப்பி இருந்தால்..
கொலுசிக்கிந்த கொழுப்பு வருமா..


வேம்பு இனிக்குதென
வீம்பாய் பேசிவிட்டு...
குற்றமென்ன என்னிடம் கண்டீர்
நானென்ன கசந்தா விட்டேன்..

என்கையை நானேன் கொடுக்க..
என் இதயத்தை கேட்டு விட்டா எடுத்தீர்..
ஏடெடுத்து படித்தீரே..
என்னத்தான் படித்து விட்டீர்...


பாதையெங்கும் விரித்து வைக்க
எப்படி வந்தது
இத்தனை இதயம்..

அப்படியென்றால்..
என்னெஞ்சில் துடிப்பது
யாரிதயம்..

குற்றம் மேல் குற்றமாய்
கூசாமல் கூறிவிட்டு
மற்றுமென்ன தேடுகின்றீர்
இதயமில்லா ஏட்டினிலே..


இதயத்தை
புதைத்து வைத்தேன்..
திருடி கொண்டு விட்டீர்,
முகத்தை புதைத்து
வைத்தேன்..
நிமிர்துவதற்கு என்ன தயக்கம்..

ஏட்டுப் பாடம் படித்து படித்து
என்னவெல்லாம் மறந்து விட்டீர்...
வீட்டு பாடம் இருக்குதென்ற
எண்ணமும் நீர் மறந்தீர்..

புள்ளி வைத்தேன்
கோடிழுத்தேன்..
என் கோலமென்ன காட்டி விட்டேன்..
அள்ளி யெடுப்பதுவோ
அறியாமல் மிதிப்பதுவோ
பூசணிப் பூவிட்டு
பேரழகாய் பார்ப்பதுவோ
என்ன செய்வீர் இனிமேலும்
ஏடெடுத்து படிப்பீரோ
இல்லை வீடு வரை வருவீரோ..

..

No comments:

Post a Comment