Wednesday, December 2, 2009

பழைய நினைவுகள் - 2

1978 ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது இது. சேலத்திற்கு குடி வந்த முதல் வருடம்... எங்கள் வீட்டில் கோழி வளர்க்கும் வழக்கமுண்டு.

நான் பிறந்தது முதலே கோழிகளை வளர்த்து வருகிறோம்.. சில நேர்ந்து விடப்பட்டவை. சூரியனுக்கு, நாகருக்கு, புதுப்பட்டி துளுக்கச் சூடாமணி அம்மனுக்கு, மோகனூர் நவலடியானுக்கு என வருடத்திற்கு நான்கு பலிக்கோழிகள்... பெட்டைக் கோழிகள் (முட்டைக்காகவும், இனவிருத்திக்கும் மற்றும் முட்டைக் கோழி (எச்சில் ஊறுதே) )எனவும், சில பலச் சேவல்கள் என நிறையக் கோழிகள் வளர்த்தது மாறி, சேலத்தில் ஒரு சேவல், ஒரு கோழி மட்டும் வளர்த்தோம்..

கோழி முட்டைகளைச் சேகரித்து அடைகாக்க வைத்து குஞ்சும் பொறித்தாயிற்று.. மொத்தம் 10 குஞ்சுகள்.

மரவண்ணம், கருவண்ணம், செவ்வண்ணம் என பல வண்ணக் குஞ்சுகள் தாயுடன் இறை பொறுக்கித் திரியும். கழுகுகள் காக்கைகள் வானத்தில் பறந்தவாறே நோட்டமிட, தாயின் காலைச் சுற்றியே சென்று திரும்பும் குஞ்சுகள் சிலமுறை வீடு வந்து சேர்வதற்குள் திக் திக் தான்.

ஒரு முறை ஒரு காக்கை எப்படியோ ஒரு குஞ்சைக் கவர்ந்து விட நான்கைந்து சிறுவர்களாகக் காக்கையை விரட்ட, அது "ச்சீ நீங்களே வச்சுக்குங்கடா உங்களது கோழிக்குஞ்சை" எனக் குஞ்சைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போனதும் உண்டு.. அது அல்ல கதை...

அன்று மாலை பள்ளியில் இருந்து திரும்பி வந்தேன். கதவு திறந்துதான் இருந்தது.. கோழிகள் எல்லாம் வீட்டில்தான் இருந்தன,

சரி நேரமாயிடுச்சி. புடுச்சி கூடையில் அடைக்க வேண்டியதுதான்..

சாதாரணமா அம்மாக் கூடவே இருக்கிற குஞ்சுகளுக்கு வீட்டுக்குள்ள வந்துட்டா எகத்தாளம் அதிகமாயிடும்.. அவுத்து விட்ட கழுதை கணக்கா அதது இஷ்டத்துக்கு மேயும்.. பிடிக்கப் போனா வெளியக் கூட ஓடிடும்..

போய்ச் சட்டுன்னு முன் கதவைச் சாத்தினேன்..

கீச் கீச் என்றச் சத்தம் கேட்டுப் பதறிப் பார்த்தா..

கதவுக்கும் நிலவிற்கும் மத்தியில ஒரு குஞ்சுத் தலை மாட்டிகிச்சு..

கதவைத் திறந்து குஞ்சை எடுத்துப் பார்த்தா, குஞ்சோட தலை தொங்கிப் போச்சு.. அழுதுகிட்டே வீட்டுக்குள்ளப் போனேன்..

அம்மா வந்து பாத்தாங்க.. கொஞ்ச நேரம் முறைச்சிட்டு, குஞ்சை எடுத்துகிட்டுப் போய் அறுத்துச் சுத்தம் பண்ணி மிளகு வறுவல் பண்ணிக் கொடுத்தாங்க..

நீதானே கொன்னே.. நீதான் இதைச் சாப்பிடணும் (கொன்னாப் பாவம் தின்னாப் போச்சு - என்பதை எப்படி அர்த்தம் பண்ணி வச்சிருக்காங்கப் பாருங்கய்யா )

ஒரு முழுக் கோழிக்குஞ்சு மிளகு வறுவல்.. அறியாமல் செய்த தவறுக்குத் தண்டனையாக!...

எத்தனையோக் கோழிகளை வளர்த்து சந்தோசமாய் உறவு கூடி அறுத்துச் சாப்பிட்டிருக்கோம்..

வாழ்க்கையில அழுதுகிட்டே கோழிக்கறி சாப்பிட்ட நாள் அது ஒண்ணுதான்,,

சாப்பிடும் போது என் அண்ணனும் அக்காமார்களும் ஏதோ ராஜத் துரோகியைப் பார்க்கிற மாதிரி பார்த்தாங்களே ஒரு பார்வை.. குறுகிப் போயிட்டேன்..

ஓவியாவோட மன்றம் விட்டுப் போற வைராக்யம் மாதிரி அந்தச் சின்ன மனசுக்குள்ளயும் ஒரு வைராக்யம்.. இனி கோழிக்கறி சாப்பிட மாட்டேன் என...

அடுத்தக் கோழி வீட்டில அறுக்கிற வரை.. அதுவும் அதேக் குஞ்சோட அம்மாக் கோழி. அடுத்த முட்டை வைக்கும் பருவத்திற்கு வந்த பின்னால்.

அப்பா அறுக்கும்பொழுது என்னைத் தான் இறக்கை கால்களை இறுகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார்..

குஞ்சு செத்தப்ப எடுத்த வைராக்யம் அம்மாக்கோழியை அறுத்துச் சாப்பிட்டுக் காணாமல் போச்சு..

பல சமயம் நம்ம மனசையே நம்மால புரிஞ்சுக்க முடிவதில்லை.. இல்லையா? ஹி ஹி

No comments:

Post a Comment